Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

வல்லமையுள்ள 7 ஜெபங்கள்
   
தேவமாதாவிடம் நம் முன்னோர்கள் விசுவாசத்துடன் தினமும் மன்றாடிய வல்லமையுள்ள 7 ஜெபங்கள் மற்றும் தேவமாதா புகழ்மாலை.
குறிப்பு :-
( இந்த 7 ஜெபங்களை ஜெபமாலை ஜெபித்த பிறகு ஜெபித்த பலருக்கு தேவமாதா கட்சியளித்துள்ளார். பாவ சாப கட்டுகளிலிருந்து விடுதலை அளித்துள்ளார். எனவே தேவ மாதாவின் அருளை பெற்றிட நாமும் தினமும் இந்த 7 ஜெபங்களை நமது வீடுகளில் ஜெபிப்போம்.)
கிருபைதயாபத்து மந்திரம்

கிருபைதயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்.  இதுவன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும்.  கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னி மரியாயே!
- இயேசுக்கிறிஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள்
   பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக!
- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்.


ஜெபிப்போமாக:
                    சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும், நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.

 

புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்:

மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம். பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தைக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே -ஆமென்

 

ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சிஷ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். 

எங்கள் பேரில் இரக்கமாயிருந்து, எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். 

அருள்நிறைந்த மந்திரம் (மூன்று முறை)
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்.

 

தேவமாதாவை நோக்கி அனுதினம் வேண்டிக்கொள்ளும் செபம்.


தேவதூதர்களுடைய இராக்கினியே! மனிதர்களுடைய சரணமே! சர்வ லோகத்துக்கும் நாயகியே! நாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். எப்படியாகிலும் எங்களை இரட்சிக்கவேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.

தாயாரே! மாதாவே! ஆண்டவளே! உம்மை நம்பினோம், எங்களைக் கைவிடாதேயும். விசேஷமாய் நாங்கள் சாகும்போது பிசாசுகளுடைய தந்திரங்களையெல்லாம் தள்ளிப்போட்டு உம்முடைய திருக்குமாரன் சேசுநாதரிடம் நாங்கள் வந்து சேருமட்டும் தேவரீர் துணையாயிரும்.

இது நிமித்தமாக உம்முடைய திருப்பாதத்தில் விழுந்து உம்முடைய ஆசீரைக் கேட்கிறோம். இதை அடியோர்களுக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளும் தாயாரே! மாதாவே! ஆண்டவளே! ஆமென்.

 


பரிசுத்த பாப்பரசரின் கருத்துக்கள் நிறைவேறும் படியாக ஜெபிப்போமாக :
ஒரு பரலோக மந்திரம்,
ஒரு அருள் நிறைந்த மந்திரம்
ஒரு திரித்துவத் துதி சொல்வோம்.
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்.

 

நம் இல்லத்தின் ராணிக்கு செபம்


நம் இல்லத்தின் இராணியே! பரலோக பூலோக அரசியே வாழ்க!! நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே!!! மாசணுகாத் தேவதாயே!!!! உம்மை எம் வீட்டின் ஆண்டவளாகவும், எசமாட்டியாகவும் தெரிந்து கொள்கின்றோம். கொள்ளைநோய், மின்னல், இடி, நெருப்பு, புயற்காற்று, வெள்ளப்பெருக்கு, போர் அபாயங்கள், விரோதிகளின் பகை குரோதங்களில் நின்றும் இவ்வீட்டில் உள்ளவர்களைப் பாதுகாத்தருளும்.

மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிப்போரை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியே போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாய் இருந்து, சடுதி மரணத்திலும் சாவான பாவத்திலும் நின்று மீட்டு இரட்சித்தருளும். நாங்கள் சருவேசுரனுக்கு பிரமாணிக்கமாக ஊழியம் செய்து நித்தியத்திற்கும் உமது ஏக திருக்குமாரனின் மோட்ச தரிசனையைக் கண்டு களிக்கும் பாக்கியத்தை அடைய எங்களுக்காக மன்றாடியருளும், ஆமென்.

 

பாவிகளின் அடைக்கல ஜெபம்


பரலோக பூலோக இராக்கினியே ! பாவிகளுக்கு அடைக்கலமே ! இதோ நான் நாலாபக்கமும் துன்பப்பட்டு, அண்ட ஓர் ஆதரவின்றி, மோட்ச நெறியை விட்டு பாவச் சேற்றில் அமிழ்ந்து நிற்கிறேன். சூது கொண்ட பசாசு ஒருபக்கம் என்னை தொந்தரை செய்கிறது. பெரிய பூலோகம் தன் மாயையால் என்னை அலைக்கழிக்கிறது. விஷமேறிய உடலோ என்னை எந்நேரமும் சஞ்சலப்படுத்துகிறது. நான் உமது திருமகனுக்கு என் பாவத்தால் விரோதியானதால் என் இருதயத்தில் பயங்கரமுண்டாயிற்று. இப்படிப்பட்ட வேலையில் நான் எங்கே ஆதரவடைவேன் ?

என் பாவக்கொடுமையின் காற்றால் இழுக்கப்பட்ட தூசு போலானேன். அரவின் வாய்த் தேரை போலானேன். ஆலைவாய்க் கரும்பு போலானேன். அன்னையில்லாப் பிள்ளை போலானேன். புலியின் கைபட்ட பாலகன் ஆனேன். நான் பாதாளத்தில் ஒளிந்தாலும் அங்கேயும் ஆண்டவர் என் குற்றத்தைக் காண்கிறாரே, பூமியில் எந்த மூலையில் போனாலும் என் பாவம் என்னைத்
தொடர்வதால் எனக்குத் திகிலும் கிலேசமும் இன்றி வேறு என்ன உண்டு? இறைவனுடைய நீதிக்குப் பயப்படுகிறேன் . நீர் இறைவனுடைய தாயும் மனுக்குலத்திற்கு அரசியுமானதால் உமது அடைக்கலத்தில் ஓடி வந்தேன்.

என் பாவத்துக்காக அழுது வியாகுலப்பட்ட தாயே ! என் பேரில் இரங்கி நான் படும் துயரை மாற்றி எனக்காக உம்முடைய திருமகனை மன்றாடும் . எனக்கு பூமியும் அதன் செல்வா சுகங்களும் வேண்டாம் . மகிமையும் மாட்சிமையும் வேண்டாம். சரீர இன்ப சுகமும், புகை போல் மறையும் பேர் கீர்த்தியும் வேண்டாம். என் ஆண்டவரும், அவர் இராச்சிய பாரமும் எனக்கு அகப்பட்டாலே போதும் அப்பாக்கியத்தை நினைத்து நினைத்து அனலில் விழுந்த புழுப்போல் துடிக்கிறேன் அம்பு தைத்த மான் போல் அலறுகிறேன். காட்டில் இராக்காலத்தில் அகப்பட்ட பிள்ளையைப் போல் திகைத்து நிற்கிறேன்


நீர் சகல புண்ணியங்களைக் கொண்ட ஆண்டவளுமாய் இரக்கம் நிறைந்த என் தாயுமாகையால் அக்கினி பற்றி வேகும் வீட்டில் அகப்பட்ட பிள்ளைக்கு கை கொடுப்பார் போல் நீர் எனக்கு இத்தருணத்தில் கை கொடும். கடலில் நீந்தி அமிழ்ந்தித் திரிபவர்க்கு கப்பற்காரர் உதவுமாப்போல், நீர் எனக்கு இந்த ஆபத்தான வேளையில் உதவ வாரும். சீக்கிரமாக வாரும். தயையோடும் இரக்கத்தோடும் வாரும். நான் இறைவனுக்கு ஏற்காத பாதகனென்றாலும், நான் உம்மை நோக்கி நீட்டிய கை பதறுவதைப் பாரும். நீர் பாவிகளுக்குத் தஞ்சமென்று எல்லாரும் சொல்லுகிறார்களே; உம்மை அண்டி ஆதரவடையாமல் போனவர்கள் இல்லையே.


ஆகையால் பாவிகளின் பாவியாகிய என் மேல் இரக்கம் வைத்து என்னையும் ஆதரிக்கச் சீக்கிரமாய் வாரும். தாமதம் பண்ணாதேயும். வேதம் சொல்லுவதெல்லாம் முழுமனதோடு விசுவசிக்கிறேன். என் நம்பிக்கை எல்லாம் ஆண்டவருக்குப் பின் உமது பேரில் வைக்கிறேன். உமது திருநாட்களை எல்லாம் உத்தம பிரகாரம் அனுசரிக்கிறேன். அற்பப் பாவத்தை முதலாய் கட்டிக் கொள்ள மனதில்லை. எந்நேரமும் உமது திருமகனுமாய் எனது அன்புள்ள இரட்சகருமாய் இருக்கிற இயேசுநாதருக்குப் பிரியப்படுவேனோ என்கிற பயமேயன்றி எனக்கு வேறே பயமில்லை. சுதந்திரத்தாயே! உமது தஞ்சமென்று ஓடி வந்த என்னை தைரியமுள்ளவ(னா)ளாக்கி உலக காரியங்களில் எனக்குப் பெரிய கசப்புண்டாக்கி உல்லாசமான ஆனந்த ஞானக் கடலில் மூழ்க அனுக்கிரகம் பண்ணியருளும். ஆமென்.

சம்மனசுக்களின் இராக்கினியான புனித தேவமாதாவுக்கு ஜெபம்


ஓ! பிரதாபம் நிறைந்த மோட்ச இராக்கினியே! சம்மனசுக்களின் அதி உன்னத ஆண்டவளே! ஆதிகால முதல் பசாசின் தலையை நசுக்கும்படியான வல்லமையும் அலுவலும் சர்வேசுரன் உமக்குத் தந்தருளினாரே! தேவரீர் தயவு செய்து உமது இராணுவச் சேனைகளை இப்பூமியில் அனுப்பி, அவர்களை உமது வன்மையின் பலத்தாலும் அதிகார ஏவலாலும், பசாசுகளை எங்கும் எதிர்த்துத் தாக்கி, பின் தொடர்ந்து துரத்தி, அவர்களுடைய ஆணவ கர்வத்தை அடக்கி அவைகளை திரும்பவும் நரக பாதாளத்துக்கு விரட்டி ஓட்டும்படி கிருபை செய்வீராக. பரிசுத்த சம்மனசுக்களே! அதி தூதர்களே! எங்களைக் காப்பாற்றி ஆதரிப்பீராக..!ஆமென்.

 

தேவதாய்க்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம்

என் ஆண்டவளே! என் தாயாரே! இதோ என்னை முழுமையும் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். தேவரீர் பேரில் அடியேன் வைத்த பக்தியைக் காண்பிக்கதக்கதாக. இன்றைக்கு என் கண் காதுகளையும், வாய், இருதயத்தையும் என்னை முழுமையும் தேவரீருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். என் நல்ல தாயாரே, நான் தேவரீருக்குச் சொந்தமாயிருக்கிற படியினாலே, என்னை உம்முடைய உடமையாகவும் சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றும் தாயே. ஆமென்

 

புனித தேவமாதாவின் பிராத்தனை 

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா  
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா  
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தூய ஆவியாகிய சர்வேசுர
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தூய்மை நிறை மூவொரு இறைவா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

புனித மரியாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சர்வேசுரனுடைய புனித மாதாவே -எங்களுக்காக ...
கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே ...
மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே...
கிறிஸ்துவினுடைய மாதாவே...
தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே...
மகா பரிசுத்த மாதாவே...

அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே..
பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே...
கன்னி சுத்தங்கெடாத மாதாவே...
மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே...
ஆச்சரியத்துக்குரிய மாதாவே...
நல்ல ஆலோசனை மாதாவே,,,
சிருஷ்டிகருடைய மாதாவே...
இரட்சகருடைய மாதாவே...
மகா புத்தியுடைத்தான கன்னிகையே...
மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே...
பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட்ட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே...
சக்தியுடைத்தவளாயிருக்கிற கன்னிகையே...
தயையுள்ள கன்னிகையே...
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே....
தருமத்தின் கண்ணாடியே...
நீதியின் கண்ணாடியே.....
ஞானத்துக்கு இருப்பிடமே...
எங்கள் சந்தோஷத்தின் காரணமே...
தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா புஷ்பமே...
ஞான பாத்திரமே...
மகிமைக்குரிய பாத்திரமே...
அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே...
தாவீது இராஜாவுடைய உப்பரிகையே...
தந்த மயமாயிருக்கிர உப்பரிகையே...
சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே...
வாக்குத்தத்தத்தின் பெட்டகமே...
பரலோகத்தினுடைய வாசலே...
விடியக்காலத்தின் நட்சத்திரமே...
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே...
பாவிகளுக்கு அடைக்கலமே...
கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே...
கிறிஸ்தவர்களுடைய சகாயமே...
சம்மனசுக்களுடைய இராக்கினியே...
பிதா பிதாக்களுடைய இராக்கினியே...
இறைவாக்கினர்களுடைய இராக்கினியே...
அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே...
மறைசாட்சிகளுடைய இராக்கினியே...
துதியர்களுடைய இராக்கினியே...
கன்னியர்களுடைய இராக்கினியே...
அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே...
ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே...
பரலோகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே...
திருச் செபமாலையின் இராக்கினியே...
சமாதானத்தின் இராக்கினியே...

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே

 எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
லகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எங்கள் மேல் இரக்கமாயிரும்.

                  
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப் பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். -ஆமென்.

இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


ஜெபிப்போமாக :
                   இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்

 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா