புனித வாரத்தில் புனிதமான எண்ணங்களை சுமக்க
சில வழிகள்.....
மனிதன் இருக்கின்றானா?....... இறைவன்
கேட்கிறான்.....
இறைவன் இருக்கின்றானா?....... மனிதன்
கேட்கின்றான்....
நாம் என்ன கேட்கப் போகிறோம்?????????
கழுதை ஒன்றை அதன் எஜமான் ஓட்டிச் சென்று
கொண்டிருந்தான். வழியில் மிகப் பெரிய பள்ளம் ஒன்று இருந்தது.
கழுதை அதைக் கவனிக்காமல் கால் தடுக்கி பள்ளத்துக்குள்
விழுந்துவிட்டது. அதன் எஜமான் எப்படியாவது வெளியில் தூக்கிவிட
முயற்சித்தார். அவரால் முடியவில்லை. கழுதைக்கு வயதாகி விட்டது.
இனி இருந்தாலும் பயனில்லை என எண்ணியவர் பள்ளத்துக்குள்
விட்டுவிட முடிவு செய்தார். இத்தனை ஆண்டுகள் தனக்காக உழைத்த
கழுதை பள்ளத்துக்குள் பரிதவிக்கும். எனவே மண்ணைப் போட்டாவது
மூடிவிடுவோம். அது விரைவில் செத்துவிடும் என எண்ணினார். மண்ணை
அள்ளி அள்ளி பள்ளத்தில் நின்ற குதிரைமீது போட்டுக் கொண்டே
இருந்தார். அப்படி போட்ட போது கழுதை தன் மீது விழுந்த மண்ணை
உதறி உதறி தள்ளிவிட்டுக் கொண்டிருந்தது. அப்படிச் செய்ததால்
மண்மேடாகி விட்டது. கழுதை தானாகவே மேலே ஏறி வந்து விட்டது.
கழுதையின் மீது பவனி வந்த நம்
மன்னன் இயேசுபிரான் நம்மையும் இந்த புனித வாரத்தில் புனித
எண்ணங்களோடு பவனி வரச் சொல்கின்றார்.
நம்மீது வீசப்படும் புழுதிகளை
உதறித்தள்ளுவோம். பிறர் மீது புழுதி வாரித் தூற்றுவதைத்
தவிர்ப்போம்.
மனஅமைதி வேண்டுமானால் பிறர்
குற்றங்களைக் காணாமல் நம் குற்றங்களை எண்ணிப் பார்ப்போம்.
நம்பிக்கையும் மனஉறுதியும் வாழ்வின்
அடிப்படை விஷயங்கள். இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாம்
பெற்றதற்குச் சமமாகும். நம்பிக்கையையும் மன உறுதியையும்
வளர்த்துக் கொள்வோம்.
நம்மால் யாருக்காவது மனமகிழ்ச்சியைத்
தரமுடியுமானால் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டது என்பது
பொருள். நமது அயலாருக்கு மனமகிழ்ச்சியை தருவதை இலட்சியமாக்கிக்
கொள்வோம்.
இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற
பேச்சிற்கே இடமில்லை. இறைவனை மட்டும் நேசிப்பவன் எவனோ அவன்
புண்ணியவான். இந்த புனித வாரத்திலே இறைவனை மட்டும் அதிகம்
நேசித்து புண்ணியவான்களாக மாறுவோம்.
சோம்பலினால் உடல் மட்டுமல்ல, மனவலிமையும் போய்விடும்.
சுறுசுறுப்பால் சோம்பலை துரத்தியடிப்போம்.
நாள் முழுக்க பிரார்த்தனையில்
ஈடுபடமுடியாது. இருந்தாலும் அன்றாடப் பணிகளை செய்து கொண்டே
கடவுளின் நாமத்தை ஜெபித்தபடி இருப்போம்.
எல்லாச் செயல்களின் பலனையும்
இறைவனிடம் ஒப்படைத்து விடுவோம். எனக்கு வலுவூட்டும் இயேசு
கிறிஸ்துவால் என்னால் எல்லாம் செய்ய இயலும் என அடிக்கடி
சொல்லிக் கொண்டிருப்போம். யார் மீது மனத் தாங்கல்
இருந்தாலும் மனதார மன்னித்து பகைமையை மறப்போம்.
கருணையும் இரக்கமும் இல்லாத ஒருவனை
மனிதன் என்று அழைக்க முடியாது. இந்த பண்புகள் இல்லாதவர்களை
மனிதன் என்று கடவுளே ஒப்புக்கொள்ள மாட்டார். மனிதனும் மதிக்க
மாட்டான். எனவே கருணையையும் இரக்கத்தையும் அளவு கடந்த விதமாக
மனதில் இடம் பெறச்செய்வோம்.
மனமே நமக்கு எல்லாமுமாக இருக்கிறது.
மனம் தூய்மையானால் அன்றி ஒரு நன்மையும் வாழ்வில் விளைவதில்லை.
மனத்தூய்மைக்கு நல்ல பாவசங்கீர்த்தனம் அருமருந்தாகும்.
இறைவனின் விருப்பத்தால் தான் உலகில்
எல்லாச் செயல்களும் நடக்கின்றன. இருந்தாலும் மனிதன் செயலாற்றக்
கடமைப்பட்டிருக்கிறான். கடமையை செய்வோம். கடமைக்காக செய்வதை
தவிர்ப்போம்.
செபத்தை அன்றாட கடமையாக்குவோம். அதில்
அன்றன்று செய்த நன்மை தீமைகளை எண்ணிப் பார் த்து நம்மை
நெறிப்படுத்துவோம்.
துன்பத்தில் இறைவனைத் தேடுவோர்
பலர். ஆனால் எப்போதும் இறையன்பில் வாழ்பவனே பாக்கியசாலி.
எப்போதும் இறைவனைத் தேடி பாக்கியசாலிகளாக வாழ புனித வாரத்தில்
பயிற்சி செய்வோம்.
அற்பமான மனிதர் அற்பமான பொருள் என்று
எதுவும் உலகில் இல்லை. நாம் மதிப்பளித்தால் உலகமும் நமக்கு
மதிப்பளிக்கும்.
கண்ணீர் மல்க கடவுளிடம்
பிராத்தனை செய்வோம். நிச்சயம் நம் மனப்பாரம் தீர்ந்துவிடும்.
பிரச்சனைக்குரிய தீர்வினைப் பெற்று மனம் மகிழ்வோம்.
வாழ்க்கை மிகவும் குறுகியது. அதனால்
வாய்ப்புக் கிடைக்கும்போதே நல்ல எண்ணங்களை செயலாக்கி விடுவோம்.
அன்பை மனதில்
நிரப்புவோம். குடும்ப ஒற்றுமைக்கு வழி ஏற்படுத்துவோம்.
இதன்மூலம் வளார்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.
யாரையும் எதற்காகவும் ஏமாற்றக் கூடாது.
ஏமாற்ற நினைப்பவனை ஒருநாள் இறைவன் ஏமாற்றிவிடுவது உறுதி.
ஏமாற்றும் எண்ணத்தை அறவே தவிர்ப்போம்.
சந்தனத்தைத் தொட்ட கையில் நறுமணம்
கமழ்வது போல இறைசிந்தனையில் ஆழ்ந்த மனதில் அருள்மணம் கமழத்
தொடங்விடும்.
பணத்தின் அளவு கூடக் கூட மனதில்
கறை படியத் தொடங்குகிறது. அதனால் இருப்பதைக் கொண்டு
திருப்தியோடு வாழப் பழகுவோம்.
இந்தப் புனித வாரத்தை, புனிதம் கமழச்செய்ய உறுதி பூணுவோம்.
புனித வாரமும் நம்மை புனிதமாக்க உறுதி பூணும்.
வழியிழந்து வருந்துவோரைத் தேற்றும் அன்னையே !
வாழ்க்கைப் பயணம் போகும்போது துணையாய் நின்றவளே!