Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      27  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 5ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 
உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6

தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக்கொண்டார்.

அவர் என்னிடம், "நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்" என்றார்.

நானோ, "வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றத" என்றேன்.

யாக்கோபைத் தம்மிடம் கொண்டுவரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்றுதிரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  திபா 71: 1-2. 3-4. 5-6. 15, 17 (பல்லவி: 15a)
=================================================================================
 பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். பல்லவி

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்; நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும். பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன். பல்லவி

15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 

அல்லேலூயா, அல்லேலூயா!  பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே, போற்றப் பெறுக; அடிக்கக் கொண்டுபோகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர் சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர்.  அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்... நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது.

தூயயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 21-33, 36-38

அக்காலத்தில் தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, `"யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக் கேள்" என்றார்.

இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், `"ஆண்டவரே அவன் யார்?" என்று கேட்டார்.

இயேசு மறுமொழியாக, "நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்" எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.

இயேசு அவனிடம், "நீ செய்ய இருப்பதை விரைவில் செய்" என்றார். இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்துகொள்ளவில்லை.

பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர். யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம்.

அவன் வெளியே போனபின் இயேசு, "இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்" என்றார்.

சீமோன் பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?" என்று கேட்டார்.

இயேசு மறுமொழியாக, "நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்" என்றார்.

பேதுரு அவரிடம், `"ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்" என்றார்.

இயேசு அவரைப் பார்த்து, "எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
எகிப்து நாட்டின் யோவான்

"உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் பொறுத்துக் கொள்ளக்கூடாதா? உங்கள் உடைமைகளை வஞ்சித்துப் பறிக்கும்போது அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாதா?" (1 கொரி 6: 7)

வாழ்க்கை வரலாறு

யோவான், எகிப்து நாட்டில் 300 ஆம் ஆண்டு பிறந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இவர் தன்னுடைய வாழ்வின் முதல் இருபத்து ஆண்டுகளை தனது தந்தையோடு இருந்து, அவருக்கு தச்சு வேலையில் ஒத்தாசை புரிவதில் செலவழித்தார். இந்தக் காலக்கட்டத்தில் இவர் இறைவனுடைய அழைப்பை உணர்ந்தார். எனவே எல்லாவற்றையும் துறந்து, ஒரு காட்டிற்குச் சென்று, அங்கிருந்த ஒரு துறவியிடத்தில் சீடராகச் சேர்ந்து பயிற்சிகள் பெற்று வந்தார்.

அந்தத் துறவியோ யோவானிடம் பெரிய பெரிய பாறைகளை ஓரிடத்திலிருந்து உருட்டி, இன்னொரு இடத்திற்குக் கொண்டு சேர்த்தல், காய்ந்த சருகுகளை பொருக்கி ஓரிடத்தில் குவித்தல் போன்ற பல கஷ்டமான வேலைகளைக் கொடுத்து அவரை அவஸ்தைக்கு உள்ளாக்கினார். அந்த வேலைகளை எல்லாம் யோவான் மிகப் பொறுமையாகச் செய்து வந்தார். ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள் அவரோடு இருந்து பல்வேறு விதமான பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் யோவான் அவரிடமிருந்து விடைபெற்று, ஓர் மலை உச்சிக்குச் சென்று, அங்கு கடுந்தவம் செய்துவந்தார்.

யோவான் மலை உச்சிக்குச் சென்ற பின்னர், யாரையும் பார்க்காமல் கடுந்தவம் செய்து வந்தார். அவர் மலை உச்சியில் இருந்து தவம் செய்துகொண்டிருக்கின்றார் என்று அறிந்து, அவரைப் பார்ப்பதற்கு நிறையப் பேர் போனார்கள். ஆனால், அவர் யாரையும் நேராகப் பார்க்காமல், தனது அறையின் ஜன்னல் வழியாகப் பேசி அனுப்பி வைத்தார். ஒரு சமயம் பார்வையற்ற பெண்மணி ஒருத்தி, தனக்குப் பார்வை கிடைக்கவேண்டும் என்று யோவானிடத்தில் வேண்டினார். யோவானோ அவருக்கு அற்புதமான முறையில் பார்வை கொடுத்து அவரைக் குணப்படுத்தினார். இப்படி பல்வேறு மனிதர்கள் அவரால் நலம் பெற்றார்கள்.

யோவானுக்கு பின்னர் நடப்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளக் கூடிய வல்லமையை இறைவன் கொடுத்திருந்தார். அதனைக் கொண்டு, அவர் எதிர்காலத்தில் நடக்க இருந்த பல ஆபத்துகளை எடுத்துச் சொல்லி, மக்களை எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சொல்லி வந்தார். அதைப் போன்று மன்னர் முதலாம் தியோடசியஸ் போரில் வெற்றி பெறுவார் என்று சொன்னார். அவர் சொன்னது போன்றே மன்னர் போரில் வெற்றி பெற்றார்.

நாட்கள் ஆக, ஆக, யோவானுக்கு உடல் நலம் குன்றியது. அதனால் அவர் யாரையும் பார்க்கவிரும்பாமல், அறையில் தன்னை அடைத்துக்கொண்டு இறைவனிடத்தில் எப்போதும் ஜெபித்து வந்தார். 390 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தன்னுடைய சாவு நெருங்கிவிட்டது என்பதை அறிந்த யோவான் முழந்தாள் படியிட்டு இறைவனிடத்தில் ஜெபிக்கத் தொடங்கினார். அவர் ஜெபித்துக்கொண்டிருந்த நிலையிலே அவருடைய உயிர் அவருடைய உடலை விட்டுப் பிரிந்தது. இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்து, மக்கள் அவரை நல்லடக்கம் செய்தார்கள்.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்


தூய யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


1. பொறுமையோடு இருத்தல்


தூய யோவானின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவரிடமிருந்த பொறுமைதான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. அவருக்குத் தலைவராக இருந்த துறவி அவருக்குக் கடினமான வேலைகளைக் கொடுத்த போதும் அதனைப் பொறுமையோடு செய்து வந்தார். யோவானை நினைவு கூரும் நாம், அவரைப் போன்று பொறுமையோடு இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஊரில் இருந்த துறவியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். அவன் அவரிடம் தனக்கு ஞான உபதேசம் செய்யும்படி வேண்டினான். அந்தத் துறவியோ அவனை வேறொரு துறவியிடம் அனுப்பி வைத்தார். இளைஞனும் அவர் சொன்ன துறவியிடத்தில் சென்றான். அவரோ அவனை இன்னொரு துறவிடத்தில் அனுப்பி வைத்தார். இளைஞனுக்கு ஒருமாதிரிப் போய்விட்டது. இருந்தாலும் அவர் சொன்னபடி இன்னொரு துறவியிடத்தில் சென்றான். அவரோ அவனை மற்றொரு துறவியிடத்தில் அனுப்பி வைத்தார். இப்படியே அவன் 15 துறவிகளைப் பார்த்துவிட்டு கடைசியில் பொறுமை இழந்து போனான்.

எனவே அவன் முதலில் சந்தித்த துறவியிடத்தில் சென்று, தனக்கு யார்தான் ஞான உபதேசம் செய்வார் என்று முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டான். அதற்கு அந்தத் துறவி, "ஒருவனுக்கு ஞானம் கிடைக்கவேண்டும் என்றால், முதலில் பொறுமை தேவை. பலர் பலவிதமாகப் பேசுவை பொறுமையாகக் கேள். இறுதியில் உனக்கு எது சரியானது என்பது தெரிந்து விடும். அதுவே ஞானம். நானும் அப்படித்தான் ஞானத்தை அடைந்தேன்" என்றார்.

ஆமாம், நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பொறுமையானது தேவையான ஒன்றாக இருக்கின்றது. யோவானும் அப்படித்தான் பொறுமையாக இருந்து இறைஞானத்தை அடைந்தார்.

ஆகவே, தூய யோவானை நினைவுகூரும் நாம் அவரைப் போன்று பொறுமையோடு வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
அச்சத்தைத் தவிர்த்து, ஆண்டவரோடு ஆயுள் உள்ளவரை நிலைத்திருப்போம்.

துறவி ஒருவர் மலையடிவாரத்தில் குடிசை ஒன்றை அமைத்து, அவ்வழியாகப் போவோர் வருவோருக்கெல்லாம் போதித்துக் கொண்டு வந்தார்.

ஒருநாள் இரவு துறவி தன்னுடைய குடிசையில், விளக்கொளியில் அமர்ந்து எதோ எழுதிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு திருடன் கத்தியுடன் அவரது குடிசைக்குகுள் நுழைந்தான். அவனைப் பார்த்த துறவி, "உனக்கு என்ன வேண்டம், என் உயிரா? அல்லது பணமா" என்று கேட்டார். திருடன் சற்றுநேரம் திகைத்துப் போய் நின்றான். பின்னர், "எனக்குப் பணம் வேண்டும்" என்று கூறினான். துறவி அவனுக்கு தன்னிடமிருந்த கணிசமான பணத்தைக் கொடுத்து அனுப்பினார். அவனும் அதைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

ஒருசில நாட்களில் அத்திருடன் பிடிபட்டான். பிடிபட்டபோது காவலரிடம் இப்படிச் சொன்னான்: "நான் நீண்ட நாட்களாகத் திருட்டுத் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஆனால், என் வாழ்நாளில் அந்த துறவி மாதிரி ஒரு தைரியமான ஆளைப் பார்த்ததில்லை. நான் அவரிடம் கத்தியைத் தூக்கிக் காட்டுவதற்கு முன்பாகவே, "உனக்கு என்ன வேண்டும்? உயிரா? பணமா என்று கேட்டு என்னைத் திகைக்க வைத்துவிட்டார். உண்மையில் எனக்கு சிறைவாசம் முடிந்த பின்பு அவரிடம் சென்று சீடராகச் சேரவேண்டும் என்று முடிவுசெய்திருக்கிறேன்". அவன் சொன்னது போன்று சிறைவாசம் முடிந்த பின்பு அவன் அந்த துறவியிடம் சென்று, சீடராகச் சேர்ந்து, தன் வாழ்நாளில் செய்த பாவங்களுக்கு எல்லாம் பிராயசித்தம் தேடினான்.

திருடன் கத்தியைக் கொண்டு மிரட்டியபோதும் உயிருக்கு பயப்படாமல் இருந்த அந்தத் துறவியின் துணிச்சல் நம்மை வியக்கவைக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தனது இறுதி இராவுணவின்போது சீடர்களிடத்தில் தான் காட்டிக்கொடுக்கப்பட இருப்பதையும், அப்போது திருத்தூதர்கள் அனைவரும் தம்மை விட்டு ஓடவிருப்பதையும் எடுத்துச் சொல்கின்றார். தொடர்ந்து அவர் பேதுருவிடத்தில், "நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்" என்கின்றார். அதற்குப் பேதுரு அவரிடம், "ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரியம் கொடுப்பேன்" என்கின்றார். உடனே இயேசு அவரிடம், "எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்கும்முன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்கின்றார்.

இயேசு சொன்னதுபோன்றே பேதுரு, உரோமையர்கள் இயேசுவைப் பிடிக்கவந்தபோது தன்னுடைய உயிருக்குப் பயந்து அவரை விட்டு ஓடிப்போகின்றார். அது மட்டுமல்லாமல் பணியாளர்கள் ஒருசிலர் பேதுருவை அடையாளம் கண்டுகொண்டபொது அவர் தனக்கு இயேசுவைத் தெரியவே தெரியாது என்று சொல்லி மும்முறை மறுதலிக்கின்றார்.

இயேசு திருத்தூதர்களைத் தேர்ந்துகொண்டதன் நோக்கமே தம்மோடு இருக்கத்தான் (மாற் 3:14). ஆனால், ஆபத்து என்று வந்தவுடன் உயிருக்குப் பயந்து அவர்கள் இயேசுவை விட்டு ஓடிப்போனது மிகவும் வேதனையான ஒரு காரியமாகும். பேதுரு இன்னும் ஒருபடி மேலே சென்று, இயேசு யாரென்று தனக்குத் தெரியவே தெரியாது என்று மும்முறை மறுதலிக்கின்றார். இப்படி உயிருக்குப் பயந்து ஒரு கோழையாகவே பேதுரு வாழ்ந்துகொண்டிருக்கின்றார். ஆனால், இவையெல்லாம் தூய ஆவியின் வருகை வரைக்கும்தான். தூய ஆவியின் வருகைக்குப் பின்னரோ பேதுரு புதிய மனிதராக மாறுகின்றார். அதுவரைக்கும் உயிருக்குப் பயந்து யூதர்களுக்கு அஞ்சி வாழ்ந்துவந்த பேதுரு அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவர் இயேசுவைப் பற்றி எடுத்துரைக்கின்றார், அவருக்காகத் தம் உயிரையும் தர முன்வருகின்றார். ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவோடு உடனிருந்து அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருக்குச் சான்று பகரவேண்டும் என்பதுதான் இறைவார்த்தை நமக்கு எடுத்துச் சொல்லும் பாடமாக இருக்கின்றது.

தூய பவுல் கூறுவார், "கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தை உள்ள, அன்பும் வல்லமையும் உள்ள இதயத்தைக் கொடுத்திருக்கிறார்" என்று ஆம். இது உண்மை. கடவுள் நமக்கு இப்படி வல்லமையுள்ள இதயத்தைக் கொடுத்திருக்கும்போது நாம் எதற்கு அஞ்சி நடுங்கவேண்டும் என்று தான் தெரியவில்லை. பேதுரு தொடக்கத்தில் பயந்து பயந்து வாழ்ந்து வாழ்ந்தார். ஆனால், அவர் தூய ஆவியைப் பெற்ற பிறகு புதிய மனிதராக மாறி ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைத்தார். நம்மீதும் தூய ஆவியார் பொழியப் பட்டிருகின்றார். இந்த உண்மையை உணர்ந்து அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருக்குச் சான்று பகர்வதே சிறப்பான ஒரு காரியமாகும்.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருக்குச் சான்று பகர்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!