Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      26  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 5ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-7


ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.

விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 27: 1. 2. 3. 13-14 (பல்லவி: 1a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி 2 தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள். பல்லவி

3 எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 

அல்லேலூயா, அல்லேலூயா!  எங்கள் அரசரே போற்றப் பெறுக. எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே.  அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-11

பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார். அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார்.

மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது.

இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து, "இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டான்.

ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு.

அப்போது இயேசு, "மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும். ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை" என்றார்.

இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச்செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள்.

ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை" என்றார் (யோவான் 12:8)

மார்த்தாவின் சகோதரி மரியா விலையுயர்ந்த நறுமணத் தைலத்தால் இயேசுவின் காலடிகளைப் பூசுகிறார். இது இயேசுவின் மரணத்திற்கு ஒரு முன்னடையாளமாக அமைகிறது. இறந்துபோனவர்களின் உடலை நறுமணத் தைலத்தால் பூசுவது வழக்கம். மார்த்தாவுக்கும் மரியாவுக்கும் சகோதரரான இலாசர் இறந்து கல்லறையில் வைக்கப்பட்டபின் இயேசு அவரை மீண்டும் உயிர்பெறச் செய்திருந்தார். எனவே, இயேசு உண்மையிலே நமக்குத் தம் சாவின் வழியாக உயிரளிக்கிறார் என்பது தெரிகிறது. ஆனாலும் இங்கே ஒரு கேள்வி எழுகிறது. கடவுளின் புகழுக்காக நாம் செலவுசெய்வதற்குப் பதிலாக ஏழைகளுக்குக் கொடுத்து உதவ வேண்டாமா என்பதே அக்கேள்வி. இதற்கு இயேசு தருகின்ற பதில்: ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை" (யோவான் 12:8) என்பதாகும். நாம் எவ்வளவுதான் உதவிசெய்தாலும் சில மக்கள் நம் நடுவே ஏழைகளாகத் தொடர்ந்து இருக்கத்தான் போகிறார்கள் என்றும், அதனால் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்னும் தவறான முடிவுக்கு ஒருசிலர் வந்துவிடுகிறார்கள். 

ஆனால் இயேசுவின் சொற்களை இவ்வாறு திரித்து விளக்குவது சரியாகாது. ஏழ்மை என்பது கடவுள் நம் மீது திணிக்கின்ற நிலை அல்ல. மக்கள் பசி பட்டினியால் வாடவேண்டும் என்றோ, அவ்வாறு வாடுவோருக்கு உதவிசெய்ய நமக்குக் கடமை இல்லை என்றோ கடவுள் நமக்குக் கூறுவதில்லை. இதற்கு நேர்மாறாக, ஏழைகளுக்கு உதவும்போது நாம் இயேசுவுக்கே உதவுகிறோம் (காண்க: மத் 26:31-46). கடவுளுக்குச் செலவழிக்கிறோம் என்னும் சாக்குப்போக்குக் கூறி ஏழைகளைச் சுறண்டுவது கடவுளுக்கு ஏற்புடையதல்ல (காண்க: மத் 15:3-9). எனவே சமூக நீதிக்காக உழைப்பதும் கடவுள் புகழுக்காகத் தியாகம் செய்வதும் இயேசுவின் போதனைப்டி மிக நெருக்கமாக இணைந்துப் பிணைந்தவை ஆகும். கடவுளை நினைந்து மனிதரை மறப்பதோ, மனிதரை நினைந்து கடவுளை மறப்பதோ கிறிஸ்தவின் பார்வையல்ல. மாறாக, ஒடுக்கப்பட்டோரை ஆதரிக்கின்ற அதே வேளையில் நாம் கடவுளைப் புகழ்வதையும் நாம் மறந்துவிடலாகாது.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
பணத்தாசை பிடித்த யூதாசு(கள்)!

தெருவில் மூதாட்டி ஒருத்தி சென்றுகொண்டிருந்தாள். அவள் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் சங்கிலி அந்த வழியாக வந்த ஒரு திருடனின் கண்ணில் பட்டுவிட்டது. சற்று நேரத்தில் அவளது காலடியருகே ஏதோ ஒரு பை உருண்டு வந்தது. பாட்டி பையை எடுத்துப் பார்த்தாள். உள்ளே தகதகவென ஒரு தங்கக்கட்டி ஜொலித்தது. சுற்றுமுற்றும் பார்த்தவள் யாரும் பார்க்காததை உறுதி செய்து கொண்டு, கட்டியை மட்டும் எடுத்து முந்தானையில் முடிந்துகொண்டாள்.


அவ்வேளையில் திருடன் ஒருவன் அவள் முன் வந்தான். வந்தவன் அவளிடம், "பாட்டி! அந்த தங்கக்கட்டியை நீ எடுத்து மறைத்து வைத்ததை நான் பார்த்துவிட்டேன். அதனால், எனக்கு அதில் பாதியைக் கொடுத்துடு. இல்லையென்று சொன்னால், நீ கடத்தல் தங்கம் வச்சிருக்கிறதா போலீசில் காட்டிக் கொடுத்துவிடுவேன்" என மிரட்டினான். கட்டியில் பாதியைக் கொடுக்க யாருக்குத்தான் மனசு வரும். பாட்டி அவனிடம், "அடேய், நான் ஏழைடா! ஏதோ, ஆண்டவனா பாத்து இன்னிக்கு எனக்கு கருணை செஞ்சிருக்காரு. நீ என்னடான்னா அதுலயும் பங்கு கேக்குறியே! இது எந்தவிதத்தில் நியாயம்" என்று சொல்லி, தர மறுத்தாள்.


திருடன் விடாப்பிடியாய் அவளிடம் தங்கம் கேட்டு நின்றான். மூதாட்டிக்கோ, அவனிடம் தங்கத்தை தர விருப்பமில்லை. எனவே, அவளது புத்தி வேறுவிதமாக வேலை செய்தது. "கட்டி கணகிறதைப் பார்த்தா குறைந்தது 20 பவுனாவது தேறும், இதுல வந்தவனுக்கு பாதியை எப்படிக் கொடுப்பது" என சிந்தித்தாள். எனவே, திருடனிடம் "சரி! தொலைஞ்சு போடா! என் கழுத்தில் கிடக்கிற இந்த ஐந்து பவுன் செயினைத் தரேன், அதோடு ஆளை விடு," என்றவள், தன் சங்கிலியைத் தருவதாகக் கூறினாள். திருடனும் ஒன்றும் தெரியாதவன் போல, "சரி சரி வயசானவளா இருக்கிறியேன்னு பாக்குறேன். இல்லாட்டி பாதிப்பங்கு வாங்காம விட்டிருக்க மாட்டேன்" என்றவன், சங்கிலியை வாங்கிக்கொண்டு போய் விட்டான்.

பாட்டி வீட்டுக்குப் போய் ஆசையாசையாய் தங்கக்கட்டியை உரசினாள். மேலே ஒட்டியிருந்த தகதகத்த தாள் கிழிந்து வந்தது. உள்ளே ஒரு செம்புக்கட்டி இருந்தது. பேராசையால் உள்ளதும் போனதை எண்ணி ஒப்பாரி வைத்து அழத் தொடங்கினாள்.

அளவுக்கதிகமான ஆசை, அளவுக்கதிகமான ஆபத்தை வருவிக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு பெத்தானியால் உள்ள தன்னுடைய நெருங்கிய நண்பரான இலாசரின் வீட்டிற்குச் செல்கின்றார். அங்கு அவருக்கு விருந்து பரிமாறப்படுகின்றது. அதன்பிறகு அவருடைய பாதங்களை மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற நறுமணத் தைலத்தால் கழுவி, கூந்தலால் துடைத்து முத்தம் செய்கின்றார். இதைப் பார்க்கும் யூதாசு இஸ்காரியோத்து, இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கலாம்" என்கின்றார். யூதாசு இப்படிச் சொல்வதால், அவர் ஏழைகள்மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கின்றார் என்று நினைக்கவேண்டாம், அவரிடத்தில் பணப்பை இருந்தது, அந்தப் பணப்பையிலிருந்து அவ்வப்போது அவர் தன்னுடைய சொந்தத் தேவைக்கு எடுத்துக்கொள்வார் என்பதால் அப்படி சொல்கிறார் என்பார் நற்செய்தியாளர் யோவான்.

யூதாசு பணத்தின் மீது பேராசை கொண்ட மனிதராகவே இருந்திருக்கவேண்டும். அதனால்தான் அவர் கேவலம் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக ஒரு குற்றமும் அறியாத இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறார். அவர் அந்த முப்பது வெள்ளிக் காசுகளை வைத்துக்கொண்டு சந்தோசமாக இருந்தாரா இல்லை, மன வேதனைக்கு உள்ளாகி இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். ஆகவே, பேராசையோடு வாழ்ந்து வந்த யூதாஸ், அந்தப் பேராசையாலே அழிந்து போனான் என்பதுதான் வரலாறானது.

பேராசை எத்துனை கொடியது என்பதை உணர்த்தும் பொருட்டுதான் திருச்சபை ஏழு தலையாய பாவங்களுள் ஒன்றாக பேராசையைப் பட்டியலிடுகின்றது (ஆணவம், கோபம், பொறாமை, கட்டுபாடற்ற பாலுணர்வு, பெருந்தீனி, சிலைவழிபாடு போன்றவை மற்ற ஆறு தலையாய பாவங்கள் ஆகும்). இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், பேராசையே பல பாவங்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றது. "ஆசை அறுமின்" என்று பெரியவர்கள் சொல்வார்கள். நம்மிடத்தில் இருக்கின்ற உலக காரியங்கள் மீதான ஆசையை அறுத்துவிட்டு உண்மையான இறைவன்மீது ஆசை - பற்று - கொள்வதே சிறப்பான ஒரு காரியமாகும்.

ஆகவே, பேரழிவுக்குக் காரணமாக இருக்கும் பேராசையை நம்மிடத்திலிருந்து அகற்றுவோம், இறைவன்மீது உண்மையான பற்று கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================நாளைய (26 மார்ச் 2018) நற்செய்தி

"பாஸ்கா விழாவுக்கு ஆறு நாட்களுக்கு முன்பு" - இப்படித்தான் தொடங்குகிறது நாளைய நாளின் நற்செய்தி வாசகப் பகுதி (யோவான் 12:1-11). ஏறக்குறைய நாற்பது நாட்களாக, செபம், நோன்பு, பிறரன்புச் செயல்கள் என நம் உடலை ஒறுத்து, பக்குவப்படுத்தி, நம் மனத்தை ஒருமுகப்படுத்தி, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு என்னும் பாஸ்கா விழாவைக் கொண்டாடத் தயாரித்தோம். நாம் மேற்கொண்ட இந்தத் தயாரிப்பு இன்று நாம் தொடங்கி கொண்டாடும் ஏழாம் நாள் கொண்டாடும் திருநாளிற்காகத்தான்.

இன்னும் அந்த நாளுக்கு ஆறு நாட்கள் இருக்க, இன்றைய நற்செய்தி வாசகம் ஆறு பேரை நம் முன் வைக்கிறது. இந்த ஆறு பேர் யார்? இந்த ஆறு பேர் நமக்கு வைக்கும் சவால்கள் எவை? என்று பார்ப்போம்.

1. இலாசர். இவர் மார்த்தா மற்றும் மரியாளின் சகோதரர். இயேசுவின் நண்பர்களாக இருந்த இந்தக் குடும்பம் வசித்தது பெத்தானியாவில். நோயுற்றிருந்து இறந்துபோன இலாசரை இயேசு உயிரோடு மீண்டும் எழுப்புகின்றார். இந்த உயிர்ப்பு நிகழ்வால் இயேசுவின்மேல் பலர் நம்பிக்கை கொள்கின்றனர். இயேசுவின் எதிரிகளுக்கு இவரின் உயிர்ப்பு கண்ணில் விழுந்த தூசியாய் உறுத்துகிறது. இயேசுவோடு இணைந்து இவரையும் கொன்றுவிட நினைக்கின்றனர். வாழ்க்கையை இரண்டாம் முறையாக வாழும் வாய்ப்பு பெற்றவர் இலாசர். நம் வாழ்க்கையை நாம் ஒரேமுறைதான் வாழ்கிறோம். இந்த ஒற்றை வாழ்வை நாம் வாழும் விதம் எப்படி?

2. மார்த்தா. மூத்த சகோதரி. விருந்தோம்பலில் இவரை யாராலும் மிஞ்ச முடியாது. முன்னொரு நாள் இயேசு இவர்கள் வீட்டிற்கு வந்தபோது, இயேசுவைக்குப் பணிவிடை செய்வதில் இவர் மும்முரமாய் இருக்கிறார். "மார்த்தா, நீ பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்!" எனக் கடிந்து கொள்கின்றார். நம் வாழ்வில் நாம் எதை முதன்மைப்படுத்த வேண்டும்? என்பதை நாம் இவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.

3. மரியா. இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசி, தமது கூந்தலால் துடைக்கின்றார். மிக உயர்ந்த நறுமணத் தைலம் அது. அந்த தைலத்தால் அந்த வீடே கமகமக்கிறது. தன்னிடம் இருக்கும் மிகச் சிறந்த ஒன்றை இயேசுவுக்காக இழக்கின்றார் மரியா. மதிப்பு மிக்க ஒன்றை நாம் கண்டுகொள்ளும்போது, அதனிலும் மதிப்பு குறைந்த ஒன்றை இழந்தால் தவறில்லையே என்பது இவரின் வாதம். இயேசுவே இவர் கண்ட புதிய புதையல்.

4. யூதாசு இஸ்காரியோத்து. இவர்தான் இயேசுவை எதிரிகளிடம் முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தவர். இவர் கணக்கில் புத்திசாலி. இவரிடம்தான் சீடர்குழுவின் பணப்பை இருந்தது. "இது என்ன விலை?" "அது என்ன விலை?" என்று இவரின் மூளை எல்லாவற்றிற்கும் விலை குறிக்கும். ஆகையால்தான் இயேசுவை முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விலை பேசுகின்றார். இங்கே, "நறுமணத் தைலத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்" என்று போலி அக்கறை காட்டுகின்றார். நம் வாழ்வில் நாம் எல்லாவற்றிற்கும் விலைபேசிவிட முடியுமா?

5. யூதர்களும் அவர்களின் குருக்களும். இவர்கள் வந்திருந்தது இயேசுவைக் கொன்றுவிடும் திட்டத்தோடு. இயேசுவின்மேல் மக்கள் நம்பிக்கை கொண்டது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. தங்களின் மதம் மற்றும் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரான இயேசுவின் குரலும் இவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. நாமும் பல நேரங்களில் நம் மனச்சான்றின், நம் கடவுளின் குரலை அழித்துவிடத் துடிக்கிறோம். இல்லையா?

6. இயேசு. இவர்தான் இந்த நிகழ்வின் கதாநாயகன். நடக்கும் அனைத்தும் தன் இறுதிநாளை ஒட்டியே நடக்கிறது என்று எப்போதும் தன் இறப்பையும், அதன் வழியாக நடந்தேறவிருக்கும் மனிதகுல மீட்பையும் மனத்தில் நிறுத்தியவர். இவரைத் தான் வானகத் தந்தை, தான் பூரிப்படையும் மகன் (காண். முதல் வாசகம், எசாயா 42:1-7) என உச்சி முகர்கின்றார். இவரே மக்களின் புதிய உடன்படிக்கை. இவரே உலகின் ஒளி. இவரே ஆண்டவர். அதுவே இவரின் பெயர்.

7. நாம். இந்த ஆறு நபர்களுக்குப் பின் நிழலாடுவது நீங்களும், நானும். இந்த கதாபாத்திரங்களில் நம் எல்லாரிடத்திலும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கின்றனர். மற்றெல்லாம் மறைந்து இயேசு மட்டும் வளர்ந்தால் இந்த நாள் மட்டுமல்ல. எல்லா நாளுமே நமக்கு உயிர்ப்பு நாளே.

Fr. Yesu Karunanidhi
Madurai

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!