Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      24  மார்ச் 2018  
                                                      தவக்காலம் 05ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 இஸ்ரயேலரை ஒரே நாட்டினர் ஆக்குவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 21-28


தலைவராகிய ஆண்டவர் கூறியது: இதோ நான் இஸ்ரயேலர் சிதறுண்ட நாடுகளிலிருந்து அவர்களை அழைத்து, எம்மருங்கினின்றும் கூட்டிச் சேர்த்து, அவர்களின் சொந்த நாட்டிற்குக் கொணர்வேன், இஸ்ரயேலின் மலைகள் மீது அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன்.

அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இனிமேல் ஒருபோதும் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார். அவர்கள் இனிமேல் ஒருபோதும் தங்கள் தெய்வச் சிலைகளாலோ இழிந்த அருவருப்பான பொருள்களாலோ தங்கள் வேறெந்த குற்றங்களாலோ தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பாவம் செய்த எல்லாக் குடியிருப்புகளிலிருந்தும் அவர்களை நான் மீட்டுத் தூய்மையாக்குவேன்.

அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன். என் ஊழியன் தாவீது அவர்களுக்கு அரசனாய் இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஆயன் இருப்பான். என் நீதிநெறிகளின்படி அவர்கள் நடப்பர்; என் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிப்பர். நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் மூதாதையர் வாழ்ந்ததுமாகிய நாட்டில் அவர்கள் வாழ்வர். அவர்களும், அவர்களின் மக்களும், மக்களின் மக்களும் அங்கு என்றென்றும் வாழ்வர். என் ஊழியன் தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாய் இருப்பான்.

நான் அவர்களுடன் நல்லுறவு உடன்படிக்கை செய்துகொள்வேன். அது அவர்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைபெறச் செய்து அவர்களைப் பெருகச் செய்வேன். என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன். என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர். என் தூயகம் அவர்கள் நடுவே என்றென்றும் நிலைத்திருக்கையில், இஸ்ரயேலைத் தூய்மைப்படுத்துபவர் ஆண்டவராகிய நானே என வேற்றினத்தார் அறிந்துகொள்வர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்எரே 31: 10. 11-12யb. 13 (பல்லவி: 10b)
=================================================================================
 பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்.

10 மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்; "இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள். பல்லவி

11 ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார். 12ab அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள். பல்லவி

13 அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
எசே 18: 31

அல்லேலூயா, அல்லேலூயா!  எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்ப்பதற்காக இறக்கப் போகிறார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 45-57

அக்காலத்தில் மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர். ஆனால் அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்ததைத் தெரிவித்தனர்.

தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, "இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்துகொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்? இவனை இப்படியே விட்டு விட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!" என்று பேசிக்கொண்டனர்.

கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், "உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை" என்று சொன்னார்.

இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காகவும், தம் இனத்திற்காக மட்டுமன்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார்.

ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள். அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார். யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழ இருந்தது. விழாவுக்கு முன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப் பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர்.

அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். "அவர் திருவிழாவுக்கு வரவேமாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கோவிலில் நின்று கொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

ஏனெனில் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க எண்ணி அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பிறர் வாழ தன்னையே அர்ப்பணிக்கும் மாந்தர்கள்!

பாரசிக நாடு கொண்டாடும் மகாக் கவிஞன் ஷாநாமா என்ற அமரத்துவம் வாய்ந்த காவியத்தைப் படைத்த பிர்தெளஸி.

ஒருசமயம் பாரசிய மன்னன், பிர்தெளஸியைக் கூப்பிட்டு அரச பரம்பரையைப் புகழ்ந்து கவிதைகள் புனை என்று கேட்டார். உடனே பிர்தெளஸி, நம்முடைய ஊரில் இருக்கும் மக்கள் போதிய வசதிகள் இல்லாமல் வறுமையின் பிடியில் இருக்கிறார்கள். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு, அவர்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என தனக்குள் முடிவுசெய்து மன்னனிடம், "மன்னா! நான் அரச பரம்பரையைக் குறித்து கவிதைகள் புனைகின்றேன். ஆனால், நான் புனையக்கூடிய ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு பொற்காசு தரவேண்டும் என்றார். மன்னனும் அதற்குச் சரியென்று சொல்ல, பிர்தெளஸி அரச பரம்பரைப் புகழ்ந்து கவிதைகள் புனையத் தொடங்கினார். ஒரு கவிதையோ இரண்டு கவிதையோ அல்ல, அறுபதாயிரம் கவிதைகளை பிர்தெளஸி அரச பரம்பரையைக் குறித்துப் புனைந்தார்.

பிர்தெளஸி, அறுபதாயிரம் கவிதைகளைப் புனைந்ததைப் பார்த்த அமைச்சர், மன்னரிடம் வந்து, "மன்னா! பிர்தெளஸி கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, ஒரு கவிதைக்கு ஒரு பொற்காசு வீதம் கொடுத்தால், நம்முடைய அரச கஜானா காலியாகிவிடும், ஆகவே, பொற்காசுக்குப் பதிலாக வெள்ளி நாணயங்களைக் கொடுப்போம்" என்றார். மன்னனுக்கு அது சரியெனப் படவே, அவன் பிர்தெளஸியிடம் அறுபதாயிரம் வெள்ளி நாணயங்களைக் கொடுத்தான். மன்னன் தான் சொன்னது போன்று நடந்துகொள்ளாமல் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்து, பிர்தெளஸி அவனிடத்திலிருந்து எதையும் வாங்காமல் மனமுடைந்து தன்னுடைய கிராமத்திற்குப் போனார். அங்கே அவர், தன்னுடைய கிராமத்து மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் படுத்த படுக்கையாகி, அப்படியே இறந்துபோனார்.

இதற்கிடையில் பிர்தெளஸி புனைந்த அறுபதாயிரம் கவிதைகளைப் படித்துப் பார்த்த மன்னன், அவர் புனைந்த கவிதைகள் சாதாரணமானவை அல்ல, அமரத்துவம் வாய்ந்தவை; அவை அறுபதாயிரம் பொற்காசுகளைவிடவும் மதிப்புமிக்கவை என உணர்ந்து, ஒரு மூட்டையில் அறுபதாயிரம் பொற்காசுகளை வைத்து, அதனை ஒரு குதிரையில் வண்டியில் வைத்து, பிர்தெளஸிக்கு அனுப்பி வைத்தார். ஆனால், குதிரை வண்டி பிர்தெளஸியின் ஊருக்குள் ஒருவழியாக நுழையும்போது, அவருடைய பிரேதம் தாங்கிய வண்டியானது ஊரின் இன்னொரு வழியாகச் சென்றது. கடைசியில் அந்த அறுபதாயிரம் பொற்காசுகளும் பிர்தெளஸியின் கிராமத்து மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு பிர்தெளஸி என்ற அந்த மகா கவிஞனின் தியாகம் அவருடைய கிராமத்து மக்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக அமைந்தது.

நற்செய்தியில், ஆண்டவர் இயேசு இறந்த இலாசரைப் உயிர்பித்ததைப் பார்த்த யூதர்கள் பலர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்குகிறார்கள். இதைக் கண்ட தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, "இவனை இப்படியே விட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே" என்று பேசத் தொடங்குகிறார்கள். அப்போதுதான் கயபா, "இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் இயேசு மட்டும் மக்களுக்காக இருப்பது நல்லது" என்பதை இறைவாக்காகச் சொல்கின்றார். சாத்தான் வேதம் ஓதும் என்பார்களே, அதுபோன்று கொடியவனாகிய கயபா, மேற்கூறிய வார்த்தைகளை இறைவாக்காக சொல்கின்றான்.

இயேசு கிறிஸ்துவோ யூத இனம் மட்டுமல்ல, மனித இனம் முழுவதும் வாழ்வுபெறும் பொருட்டு தன்னுடைய உயிரையே தியாகமாகத் தருகின்றார். மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் எப்படி பிர்தெளஸி தன்னுடைய கிராமத்து மக்கள் வாழ்வுபெறவேண்டும் என்பதற்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்தாரோ அதுபோன்று ஆண்டவர் இயேசு மனுக்குலம் வாழ்வு பெறுவதற்காக தன்னுடைய உயிரையே தியாகமாகத் தருகின்றார். ஆகவே, இயேசு செய்த இந்த தியாகச் செயல் ஒரு தற்கையளிப்புதானே ஒழிய, யாருடைய கட்டாயத்தின் பேரினால் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இயேசுவைப் போன்று, பிர்தெளஸி போன்று நாமும் மக்கள் வாழ்வுபெற நம்மையே கையளிக்கவேண்டும் என்பதுதான் இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது. பல நேரங்களில் நாம், நான், எனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்திலே வாழ்ந்து பொதுநலத்தை மறந்துபோய்விடுகின்றோம். இத்தகைய ஒரு மனப்பான்மையை மாற்றி நாமும் இயேசுவைப் போன்று பிறருக்காக நம்முடைய வாழ்வினை அர்ப்பணிக்க வேண்டும். அதுவே உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை.

ஆகவே, இயேசுவைப் போன்று, பிறருக்காக நமது வாழ்வினை அர்ப்பணிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!