Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      22  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 5ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 3-9

அந்நாள்களில் ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது: `"உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.

இனி உன் பெயர் ஆபிராம் அன்று; "ஆபிரகாம்" என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன். மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர். தலைமுறை தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால் உனக்கும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன். நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழிமரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்" என்றார்.

மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், "நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்"" என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா: 105: 4-5. 6-7. 8-9 (பல்லவி: 8a)
=================================================================================
 
பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
திபா 95: 8b. 7b

அல்லேலூயா, அல்லேலூயா!  உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள். மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக. அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் தந்தை ஆபிரகாம், நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 51-59

அக்காலத்தில் இயேசு யூதர்களிடம், "என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

யூதர்கள் அவரிடம், "நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?" என்றார்கள்.

இயேசு மறுமொழியாக, "நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள். ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப் போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைப்பிடிக்கிறேன். உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்" என்றார்.

யூதர்கள் இயேசுவை நோக்கி, "உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களிடம், "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"என் வார்த்தையைக் கடைபிடிப்போர் என்றுமே சாகமாட்டார்"

ஹன் பரம்பரை சீனாவை ஆண்டுகொண்டிருந்த சமயத்தில், மன்னர் ஒருவருக்கு சாகாவரம் தரும் அமிர்தம் பரிசாகக் கிடைத்தது. அதனை அவர் உடனே குடிக்காமல், ஒரு நல்லநாள் பார்த்துக் குடிக்கலாம் என்று பத்திரமாக ஓரிடத்தில் வைத்தார். இதற்கிடையில் விஷயம் அறிந்து, அரண்மனையில் வேலைபார்த்து வந்த ஒருவன் அந்த சாகாவரம்" தரும் அமிர்தத்தை எடுத்துக் குடித்துவிட்டான். மன்னருக்கு பயங்கரக் கோபம், நாம் குடிக்கலாம் என்று வைத்திருந்த சாகாவரம் தரும் அமிர்தத்தை ஒரு சாதாரண பணியாள் எடுத்துக் குடித்துவிட்டானே என்று. உடனே மன்னர் அந்த பணியாளுக்கு மரணதண்டனை விதித்தார்.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக அந்தப் பணியாள் மன்னரிடத்தில் வந்தான். வந்தவன் மன்னரைப் பார்த்து, "நான் செய்த குற்றத்திற்காக எனக்கு மரண தண்டனை விதிப்பது சரிதான். ஆனால் நான் சாவதற்கு முன்னால், ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்... நான் சாப்பிட்டது சாகாவரம் தரும் அமிர்தம் என்றால் நீங்கள் தூக்கில் போடும்போது, நான் சாகக்கூடாது, அப்படி நான் இறந்து போனால், அது சாகாவரம் தரும் அமிர்தமே இல்லை. அமிர்தமில்லாததைத் திருடியதற்காக நீங்கள் என்னை மரணத்திற்கு உட்படுத்தியதற்கு பாவத்தை அடைவீர்கள்" என்றான். மன்னர் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒருநிமிடம் குழம்பிப் போனார். பின்னர் அவர் அவனை ஒன்றும் செய்யாமல் விடுதலை செய்து அனுப்பிவிட்டார்.

சாகாவரம் வரும் அமிர்தத்தைக் குடித்தவனுக்கே சாவு வர நேர்ந்ததை என்னவென்று சொல்வது?.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு, "என் வார்த்தையைக் கடைபிடிப்போர் என்றுமே சாகாமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. யோவான் நற்செய்தி 6:68 ல் பேதுரு, தம்மிடம் நீங்களும் போய்விட நினைகிறீர்களா? என்று கேட்ட இயேசுவைப் பார்த்துக் கூறுவார், "ஆண்டவரே! நாங்கள் யாரிடம் போவோம், நிலைவாழ்வு அளிக்கக்கூடிய வார்த்தைகள் உம்மிடம் அன்றோ உள்ளன" என்று. ஆம், இயேசுவின் வார்த்தைகள் வாழ்வுதரக்கூடிய வார்த்தைகள் என்பதை பேதுருவின் கூற்று நமக்குத் தெளிவாக எடுத்துரைகின்றது. அப்படியானால், இயேசுவின் வாழ்வுதரக்கூடிய வார்த்தைகளை நாம் கடைப்பிடித்து வாழ்கிறபோது நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி. ஆனால் நடைமுறையில் பலரால் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியவில்லையே, அது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இயேசுவின் வார்த்தைகள் வாழ்வுதரக்கூடியதாக இருந்தாலும் அதைக் கடைபிடிப்பதற்கு பலர் முயல்வதில்லை, இன்னும் ஒருசிலர் அதனை ஏற்றுக்கொள்வதேயில்லை. யூதர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டார்கள். ஆனால் அதைக் கூர்ந்து கேட்டார்களா? அதைத் தங்களுடைய வாழ்வில் கடைபிடிக்க முயன்றார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. இயேசுவிடம் ஏதாவது குற்றம்காண வேண்டும் என்ற நோக்கில்தான் அவர்கள் கேட்டார்களே ஒழிய, நல்ல மனநிலையோடு அவர்கள் கேட்டார்கள். அதனாலேயே அவர்கள் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ளாமலே போனார்கள்.

நாமும் அனுதினமும் இறைவார்த்தையைக் கேட்கின்றோம், அதனைக் கடைப்பிடித்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பலநேரங்களில் நாம் இறைவார்த்தையை நன்றாகக் கேட்கின்றோம், ஆனால் அதனை கடைபிடிக்கத் தவறிவிடுகின்றோம், இதனாலேயே நாம் நிலைவாழ்வை - அழியா வாழ்வை பெற்றுக்கொள்ளத் தவறிவிடுகின்றோம். இந்தப் பின்னணியில்தான் நாம் தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுகின்ற, "இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்ளாதீர்கள், அதைக் கடைப்பிடிக்கிறவர்களாக இருங்கள்" என்ற வார்த்தைகளை சிந்தித்துப் பார்க்கவேண்டும் (யாக் 1:22). ஆம், இறைவார்த்தையை கேட்கின்ற நாம் அதனைக் கடைபிடிக்கத் தவறிவிடுகின்றோம்.

அடுத்ததாக இயேசு சொல்லக்கூடிய, சாக மாட்டீர் - நிலைவாழ்வு - அடைவீர்கள் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, அதனைக் கடைபிடிப்போர் இந்த மண்ணைவிட்டுப் பிரியலாம். ஆனால் அவர்கள் மக்கள் மனங்களில், ஆண்டவருடைய இறையாட்சியில் என்றுமே நிலைத்திருப்பார்கள் என்ற அர்த்தத்திலேதான் நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆண்டவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அதனைக் கடைப்பிடித்து வந்த அன்னை தெரசா, அசிசியார் இன்னும் பலர் இன்று நம்மோடு இல்லாவிட்டாலும் அவர்களுடைய நினைவும் எடுத்துக்காட்டான வாழ்வும் என்றும் மக்களால் மறக்கப்படாது, அது என்றைக்கும் நிலைத்திருக்கும் என்ற பொருளில்தான் நிலைவாழ்வு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவே, இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக நிலைவாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!