|
|
|
|
|
தவக்காலம்
5ம் ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும்
இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9
அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து
இஸ்ரயேலர் "செங்கடல் சால" வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை
முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர்.
மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: "இந்தப்
பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தது
ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு
வெறுத்துப் போய்விட்டது" என்றனர். உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப்
பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில்
பலர் மாண்டனர்.
அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, "நாங்கள் பாவம்
செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப்
பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம்
வேண்டிக்கொள்ளும்" என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார்.
அப்போது ஆண்டவர் மோசேயிடம், "கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச்
செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப்
பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்" என்றார். அவ்வாறே மோசே ஒரு
வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்;
பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப்
பார்த்து உயிர் பிழைப்பான்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா: 102: 1-2. 15-17. 18-20 (பல்லவி:
1)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்!
1 ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக் குரல் உம்மிடம்
வருவதாக! 2 நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்!
உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும்
நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்! பல்லவி
15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர்
யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர்
சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.
17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின்
மன்றாட்டை அவமதியார். பல்லவி
18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்;
படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 19 ஆண்டவர்
தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று
வையகத்தைக் கண்ணோக்கினார். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச்
செவிசாய்ப்பார்; சாவுக்கென குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா!
விதை கடவுளின் வார்த்தை; விதைப்பவரோ கிறிஸ்து; இவரைக் கண்டுகொள்கிற
அனைவரும் என்றென்றும் நிலைத்திருப்பர்.
அல்லேலூயா!
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, "இருக்கிறவர் நானே' என்பதை
அறிந்துகொள்வீர்கள்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 21-30
அக்காலத்தில் இயேசு பரிசேயர்களை நோக்கி, "நான் போனபின் நீங்கள்
என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது.
நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்" என்றார். யூதர்கள், "நான்
போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாத என்று சொல்கிறாரே, ஒருவேளை
தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ?" என்று பேசிக்கொண்டார்கள்.
இயேசு அவர்களிடம், "நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான்
மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால்
நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே
சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். "இருக்கிறவர் நானே' என்பதை
நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்" என்றார்.
அவர்கள், "நீர் யார்?" என்று அவரிடம் கேட்டார்கள்.
அவர், "நான் யார் என்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன்.
உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு.
ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து
கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்" என்றார். தந்தையைப்
பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
இயேசு அவர்களிடம், "நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, "இருக்கிறவர்
நானே'; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை கற்றுத்தந்ததையே
நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள். என்னை அனுப்பியவர்
என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை.
நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்" என்றார்.
அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
இக்கட்டில் இறைவனின் உடனிருப்பு!
ஆற்றங்கரையோரம் அமர்ந்து போதித்துக்கொண்டிருந்த துறவியிடம் இளைஞன்
ஒருவன் வந்தான். அவன் துறவியின் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து
வணங்கினான். பின்னர் அவன் அவரிடத்தில் மெதுவாகப் பேச்சுக்
கொடுத்தான்.
"சுவாமி! எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது; ஜெபத்திலும்
முழுமையான நம்பிக்கை கிடையாது; அது ஏன், என் வாழ்நாளில் ஒரு
முறைகூட இறைவனிடத்தில் ஜெபித்தது கிடையாது" என்றான். "அப்படியா...
உன்னுடைய வாழ்நாளில் ஒருமுறைகூட நீ இறைவனிடத்தில் ஜெபித்தது
கிடையாதா... நன்றாக யோசித்துப்பார். எப்போதாவது நீ இறைவனிடம்
ஜெபித்திருப்பாய்?" என்றார் துறவி. இளைஞன் சிறுது யோசித்துப்
பார்த்துவிட்டு, "ம்ம்ம். ஞாபகம் வருகிறது. நான் என்னுடைய சிறுவயதில்,
நடுக்காட்டில் தனியாக மாட்டிக்கொண்டபோது உதவி வேண்டும் என்று
ஒரே ஒருமுறை இறைவனிடம் ஜெபித்திருக்கிறேன். ஆனால், இறைவன் அந்த
ஜெபத்திற்கு செவி சாய்க்கவே இல்லை" என்றான். "இறைவன் உன்னுடைய
ஜெபத்திற்கு செவிசாய்க்கவில்லையா. அவர் நிச்சயமாக உன்னுடைய ஜெபத்திற்கு
செவிசாய்த்து உனக்கு உதவ வந்திருக்கவேண்டுமே. இல்லையென்றால் நீ
இங்கே இருந்திருக்க முடியாதே" என்றார் துறவி.
அந்த இளைஞன் மீண்டுமாக சிறிது யோசித்துப் பார்த்துவிட்டு,
"நான் உதவி உதவி என்று அழைத்தபோது எனக்கு உதவிட இறைவன் வரவில்லை.
மாறாக ஒரு விறகுவெட்டி அங்கு வந்தார். அவர்தான் என்னை அந்த நடுக்காட்டிலிருந்து
அழைத்துவந்து ஊருக்குள் விட்டுச் சென்றார்" என்றான். உடனே துறவி
அவனிடம், "தம்பி! உன்னை அந்த நடுக்காட்டிலிருந்து அழைத்து வந்து,
ஊருக்குள் விட்டது யாரென்று நினைக்கிறாய்... கடவுள்தான் ஒரு விறகுவெட்டியின்
உருவில் வந்து உன்னைக் காப்பாற்றி இருக்கின்றாய். கடவுள் என்றால்
நீண்ட தாடியுடன், முதிர்ந்த தோற்றத்தோடு இருப்பார் என்று
நினைத்துவிட்டாயா, அப்படியில்லை அவர் சாதாரண தோற்றத்திலும் இருப்பார்,
ஏன் ஒரு விறகுவேட்டியின் தோற்றத்திலும் இருப்பார். ஆகவே, அன்றைக்கு
உனக்கு உதவிக்கு வந்தது கடவுளைத் தவிர, வேறு யாரும் இருக்கமுடியாது.
இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் அவர்மீது நம்பிக்கை இல்லை,
அவரிடத்தில் ஜெபிப்பதில்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்"
என்றார். இளைஞன் துறவி சொன்னதில் இருந்த உண்மையை அறிந்தவனாய்,
இறைவன்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினான்.
கடவுள் எப்போதும் நம்மோடு இருக்கின்றார், அவர் நம்முடைய இக்காட்டான
வேளையில், உதவி செய்ய ஓடோடி வருகிறார் என்பதை இந்த நிகழ்வின்
வழியாக அறிந்துகொள்ளலாம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, பரிசேயர்களுடனான விவாதத்திற்கு
பின், "என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத்
தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும்
செய்கிறேன்" என்கிறார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகள் ஆழமாக
அர்த்தத்தைத் தருவனவாக இருக்கின்றன.
முதலில், இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தந்தைக்
கடவுள் தன்னோடு இருக்கிறார் என்பதை உணர்ந்தவராகவே செயல்பட்டார்
என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இயேசுவுக்கு நிறைய எதிர்ப்புகள்
இருந்தன. ஒரு பக்கம் பரிசேயர்களிடமிருந்தும் இன்னொரு பக்கம் ஏரோது
மன்னனிடமிருந்து நிறைய எதிர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் வந்தன.
அத்தகைய தருணங்களில் எல்லாம் அவர் மனம் தளர்ந்து போகாமல், தந்தைக்
கடவுள் தன்னோடு இருக்கின்றார் என்று உணர்ந்து செயல்பட்டார். இன்னொரு
விதத்தில் சிந்தித்துப் பார்த்தோமென்றால், இயேசு எப்போதும் இறைவனுக்கு
உகந்ததையே செய்து வந்தார். அதனாலேயே இறைவன் அவரோடு உடனிருந்தார்
என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இயேசுவின் வழியில் நடக்கும் நாம், தந்தைக் கடவுளின் பிரசன்னம்
எப்போதும் நம்மோடு இருக்கிறது என்ற உண்மையை உணர்திருக்கின்றோமா
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நம்முடைய
வாழ்வில் இன்னல், இக்கட்டுகள் வருகின்றபோது நாம் தனித்துவிடப்பட்டவர்களாய்
உணருகின்றோம்; தவறான முடிவுகளையும் எடுக்கின்றோம். இறைவன் நம்மோடு
இருக்கின்றார், அவர் நம்மை எப்போதும் உடனிருந்து வழிநடத்துகிறார்
என்று உண்மையை உணர்ந்தோம் என்றால், நாம் தனித்திருக்கின்றோம்
என்பதை உணரமாட்டோம். தாவீது அரசன் பெலிஸ்தியனாகிய கோலியாத்தோடு
போர்தொடுக்கும்போது, "நீயோ வாளோடும் ஈட்டியோடும் வருகிறாய், ஆனால்,
நானோ ஆண்டவரின் திருப்பெயரால் அவருடைய துணியை நம்பி
- வருகிறேன்
என்று சொல்லி அவனை போரில் வெற்றி வெற்றிகொள்வார். இவ்வாறு அவர்
ஆண்டவரின் துணை தன்னோடு இருக்கிறது என உணர்ந்து போரில் வெற்றி
கொண்டார். நாமும் தாவீதைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவைப்
போன்று ஆண்டவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து
வாழ்கின்றபோது வாழ்வில் வெற்றியைப் பெறுவது உறுதி.
ஆகவே, இறைவன் நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்பதை உணர்ந்து,
அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
- Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|