Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      17  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 4ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20

"ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர். வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், "மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்" என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.

படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 7: 1-2. 8bc-9. 10-11 (பல்லவி: 1a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.

1 என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும். 2 இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்; விடுவிப்போர் எவரும் இரார். பல்லவி

8bc ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும். 9 பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள். பல்லவி

10 கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார். 11 கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக்கொள்ளாத இறைவன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா!  தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53

அக்காலத்தில் யூதர்களின் திருவிழா கூட்டத்தில் சிலர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, "வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றனர்.

வேறு சிலர், "மெசியா இவரே" என்றனர்.

மற்றும் சிலர், "கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?" என்றனர்.

இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.

தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள்.

அவர்கள் காவலர்களிடம், "ஏன் அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?" என்று கேட்டார்கள்.

காவலர் மறுமொழியாக, "அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை" என்றனர்.

பரிசேயர் அவர்களைப் பார்த்து, "நீங்களும் ஏமாந்து போனீர்களோ? தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா? இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்" என்றனர்.

அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், "ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" என்று கேட்டார்.

அவர்கள் மறுமொழியாக, "நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்" என்றார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?"

லெபனான் நாட்டுக் கவிஞன் கலீல் ஜிப்ரான் சொல்லக்கூடிய கதை இது.

ஒரு சமயம் பெரியவர் ஒருவர் மலைப்பாங்கான பகுதியில் நடந்து சென்றார். பறந்து விரிந்து உயர்ந்திருந்த மலைகள் எல்லாம் இயற்கை அன்னையின் எழிலைப் புகழ்ந்து பாடுவதாக இருந்தன. அப்போது அதப் பெரியவருடைய புலன்கள் எல்லாம் தங்களுக்குள்ளே பேசத் தொடங்கின.

முதலில் கண், "என்னே அழகு! இந்த மலைகளின் எழில் கொஞ்சம் அழகைப் பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்!" என்று வியந்து பாராட்டியது. கண்ணை இடைமறித்த காது, "மலையா! அப்படி ஒன்று இங்கே இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே. மலை என்ற ஒன்று இங்கே இருந்திருந்தால் எனக்குக் கேட்டிருக்குமே... கண்ணே நீ என்னிடம் போய் சொல்கிறாய்" என்றது. "ஆமாம், மலை என்ற ஒன்று இங்கு இல்லவே இல்லை, தடவிப் பார்க்கின்றபோது ஒரு சாதாரண கல் போன்றுதான் இருக்கின்றது. இது எப்படி மலையாகும்" என்று கை காதுக்கு ஒத்து ஊதியது.

கடையாசியாக வந்த மூக்கு, "ஏய் காது கை, நீங்கள் இருவரும் சொல்வதுதான் சரி, இந்தக் கண் நம்மிடத்தில் நன்றாகக் கதை அளக்கின்றது... கண் சொல்வது போன்று மலை என்ற ஒரு இருந்திருக்குமேயானால் என்னால் நுகர்ந்திருக்க முடியுமே. அதனால் இந்தக் கண் சொல்வது சுத்தப் பொய்" என்று தன் பங்குக்கு ஆடியாது". எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த பெரியவர், "அட மடையர்களே! எதையும் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் இப்படி வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், பேசாமல் இருக்கிறீர்களா இல்லை நாலு சாத்து சாத்தவா" என்றார். உடனே புலன்கள் அனைத்தும் அமைதியாயின.
ஒன்றைக் குறித்து முழுமையாகத் தெரியாமல் பிதற்றிய புலன்களைப் போன்றுதான், பலர் எதுவுமே சரியாகத் தெரியாமல், தெரிந்து கொள்ளவும் விரும்பாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நற்செய்தி வாசகத்தில், யூதர் சிலர் இயேசு கிறிஸ்துவைக் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல், அவரைப் பற்றித் தவறாகப் பிதற்றியபோது, பரிசேயர்களுள் ஒருவராகிய நிக்கதேம், "ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" என்ற வார்த்தைகளை உதிர்க்கின்றார்.

இந்த நிகழ்விற்கு முன்னதாக, யூதர்களில் சிலர், "கலிலேயாவிலிருந்து மெசியா வருவாரா?" தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகின்றது" என்று பேசிக்கொண்டார்கள். யூதர்கள் இவ்வாறு பேசியதில் உண்மை இருக்கின்றதா? அல்லது அறியாமையில் பேசுகிறார்களா? என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். முதலில் இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்ற உண்மை தெரியாமல் யூதர்கள் இருந்தது பெரிய தவறு என்றால், கலிலேயாவிலிருந்து மெசியா/ இறைவாக்கினர் வருவாரா? என்ற குறுகிய மனநிலையோடு, முன்சார்பு எண்ணத்தோடு பேசியது மிகப்பெரிய தவறு என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், பழைய ஏற்பாட்டில் தோன்றிய யோனா, ஓசியா, நாகும் போன்ற இறைவாக்கினர்கள் எல்லாம் கலிலேயாப் பகுதியைச் சார்ந்தவர்களாக இருக்கும்போது, கலிலேயாவிலிருந்து மெசியா/ இறைவாக்கினர் வருவாரா? என்று சொல்வதை எந்த விதத்தில் ஏற்றுக்கொள்வது!

இன்னும் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். அது என்னவென்றால், இயேசுவோ விண்ணகத் தந்தையின் மகன், அவர் விண்ணகத்திலிருந்து வந்தவர். அப்படியிருக்கும்போது அவர் விண்ணகத்திலிருந்து வந்தவர் என்ற உண்மைகூடத் தெரியாமல் அவரைப் பற்றி தவறாகப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது. இத்தகைய பின்னணியில்தான் நாம் நிக்கதேம் கூறுகின்ற வார்த்தைகளை புரிந்துகொள்ளவேண்டும். இயேசுவைப் பற்றி ஒன்றுமே தெரியாமல், அவரை மனம்போல் பேசியது அறியாமை அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்.

இன்றைக்கும் கூட பலர் ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரியாமல், அவரைப் பற்றி தவறாக, தங்கள் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய மனிதர்கள் அவர்களாகவே திருத்தினால் அன்றி, வேறு ஒன்றும் செய்ய முடியாது. கண்ணதாசன் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "உலகத்தை குழந்தையின் கண்கொண்டு பார்க்கவேண்டும்" என்று. ஆம், குழந்தை உலகை அது இருப்பது போன்றே பார்க்கும். எந்தவித முன்சார்பு எண்ணத்தோடு பார்க்காது. நாமும் குழந்தையைப் போன்று இந்த உலகை, மனிதர்களைப் பார்த்தோம் என்றால், அடுத்தவர்களைப் பற்றி தவறாகப் பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் வழியே இல்லை.

ஆகவே, உலகை திறந்த மனதோடு பார்ப்போம். முன்சார்பு எண்ணங்களை அப்புறப் படுத்துவோம் அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!