Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      15  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 4ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 
உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14


அந்நாள்களில் சீனாய் மலையில் ஆண்டவர் மோசேயை நோக்கி, `"இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர்.

நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக்குட்டியை வார்த்துக்கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, "இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே' என்று கூறிக்கொள்கிறார்கள்" என்றார்.

மேலும் ஆண்டவர் மோசேயிடம், "இம்மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்" என்றார்.

அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, "ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமை மிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?

"மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்' என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்?

உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். உம் அடியாராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரயேலையும் நினைந்தருளும்.

நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே" என்று வேண்டிக்கொண்டார்.

அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 106: 19-20. 21-22. 23 (பல்லவி: 4a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூரும்!

19 அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்; 20 தங்கள் "மாட்சிக்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்துகொண்டனர். பல்லவி

21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்; 22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். பல்லவி

23 ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா!  தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.   அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார்.

தூயயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 31-47

அக்காலத்தில் இயேசு யூதர்களை நோக்கிக் கூறியது: "என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப்பற்றிச் சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப்பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும்.

யோவானிடம் ஆள் அனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.

யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.

"என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்iலை. அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை; ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை.

மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம்மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது.

வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை. மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை. நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே! உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்? தந்தையின் முன்னிலையில் உங்கள்மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார். நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப் பற்றித்தான் எழுதினார். அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்பவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?" .

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நம்பினோர் வாழ்வடைவர்!

பாவம் செய்த ஒருவன், நரகத்துக்கு அனுப்பப்பட்டான். அவன் நரகப் பள்ளத்தாக்கில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தபோது, பாதையில் ஒரு சிலந்திப் பூச்சி இருந்ததைப் பார்த்து, அதை மிதிக்காமல் கவனமாகச் சென்றான். பிற உயிரைக் கொல்லாமல் இருந்ததற்காக அவன் கணக்கில் கொஞ்சம் புண்ணியம் சேர்ந்தது. உடனே, அந்தப் புண்ணியத்துக்கான பயனும் கிடைத்தது.

அது என்ன பலன் என்றால், விண்ணகத்தில் இருந்தவர்கள், அவனை நரகத்தில் இருந்து மேலே வருமாறு அழைத்தார்கள். அதற்கு அவன் "எப்படி மேலே ஏறி வருவது?" என்று கேட்டான். "இதோ தொங்குகிறது பார் சிலந்தி இழை! இந்த சிலந்தி இழையைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறி வா" என்று சொன்னார்கள். அவனுக்கோ அவநம்பிக்கை. இவ்வளவு மெல்லியதாக இருக்கும் இந்தச் சிலந்தி இழை நம்மைத் தாங்குமா? கையால் தொட்டதும் அறுந்து போகுமே, இதை நம்பி எப்படி மேலே ஏறிச் செல்வது என்று யோசிக்கத் தொடங்கினான். அவனது தயக்கத்தைப் பார்த்து மேலே இருந்தவர்கள், "தைரியமாக வா, இழை அறுந்துவிடாது" என்று சொன்னார்கள்.

மேலே இருந்தவர்கள் சொன்ன வார்த்தையை ஒரு மனதாக நம்பி, அவன் சிலந்தி இழையைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறினான். போகிறபோதே அவனுக்குள் மேலும் சந்தேகம் வந்தது "நூறு கிலோவுக்கும் அதிகமான எடைகொண்ட என்னை எப்படி இந்தச் சாதாரண, மெல்லிய சிலந்தி இழை தாங்கிப் பிடிக்கும் என்பதே அந்தச் சந்தேகம். அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது காற்றுவேகமாக அடித்தது. அவனோ சிலந்தி இழைதான் அறுந்துவிட்டது போலும் என்று தன்னுடைய கையைவிட்டான். அந்த பரிதாபம், அவன் விழுந்த இடத்திலேயே செத்து மடிந்துபோனான்.

அவ நம்பிக்கை என்றைக்கும் ஆபத்தைத்தான் தரும் என்பதற்கு இந்த கதை ஒரு சான்று.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தன்னை மெசியாவாக, இறைமகனாக நம்பி ஏற்றுக்கொள்ளாத யூதர்களிடம், தான் உண்மையிலே மெசியா என்பதை நிருபிக்கும் விதமாக பல்வேறு சான்றுகளைச் சொல்லி விளக்குகின்றார். இயேசு இறைமகன் என்பதை நிரூபிக்கும் முதன்மையான சான்று, திருமுழுக்கு யோவான் ஆண்டவர் இயேசுவைக் குறித்தச் சொன்ன சான்றுகள் ஆகும், "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி, ஆட்டுக்குட்டியாம் இவரே உலகில் பாவங்களைப் போக்குபவர்" என்று சொல்லி திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கு சான்று பகர்வார் (யோவா 1: 29). இதை யூதர்கள் வசதியாக மறுத்துவிட்டார்கள்.

அடுத்ததாக, இயேசு இறைமகன் என்று சொல்வதற்கான சான்று. தந்தையாம் கடவுள், அவர் செய்யப் பணித்த செயல்கள் ஆகும். இயேசு தான் செய்த பல்வேறு இரக்கச் செயல்களின் வழியாகவும் வல்ல செயல்கள் வழியாகவும் தான் இறைமகன் என்பதை மக்களுக்கு நிரூபித்துக் காட்டினார். அதையும் யூதர்கள் ஏற்றுக்கொள்ளாமல், அவரைப் பற்றி தவறாகப் பேசினார்கள்; பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்று சொல்லி விமர்சித்தார்கள்.

மூன்றாவதாக, இயேசு இறைமகன் என்று நிரூபிக்கக்கூடிய சான்று, தந்தையாம் கடவுள் இயேசுவைக் குறித்துச் சொன்ன வார்த்தைகள் ஆகும். யோர்தான் ஆற்றில் இயேசு திருமுழுக்கு பெற்றபோதும் அவர் உருமாற்றம் அடைந்தபோதும் "இவரே என்னுடைய அன்பார்ந்த மகன் என்று தந்தையாம் கடவுள் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சான்று பகர்ந்தார். வேதனை என்னவென்றால், அதனையும் யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அவரைப் புறக்கணித்தார்கள். நான்காவதாக, இயேசு இறைமகன் என்பதை நிரூபிக்கக்கூடிய சான்று இறைவார்த்தையாகும். இறைவார்த்தைகள் இயேசு கிறிஸ்து உண்மையான இறைமகன் என்று சான்று பகர்கின்றன. ஆனால், யூதர்கள் அதனையும் நம்பாமல் இயேசுவுக்கு தாங்கள் விரும்பியதெல்லாம் செய்தார்கள் என்பதுதான் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருந்தது.

இயேசு, இப்படி பல்வேறு சான்றுகள் மூலமாக தன்னை இறைமகன் என்று நிரூபித்தபோதும்கூட யூதர்கள் அவரை நம்பாது இருந்ததால் அவர்கள் அவரிடமிருந்து ஆசிரைப் பெறாமலே போகிறார்கள் (மாற் 6: 5, 6). தூய பவுல் உரோமையர்க்கு எழுதிய நூலில் கூறுவார், "இயேசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்" (உரோ 10: 9) என்று. ஆம், இயேசுவை ஆண்டவர் என்றும் மெசியா என்றும் நம்புகிறபோது மீட்புப் பெறுவோம் என்பது உறுதி, அதை விடுத்து அவநம்பிக்கை கொண்டால் தாழ்வது உறுதி.

ஆகவே, இயேசுவை இறைமகன் என நம்பி ஏற்றுக்கொள்வோம், அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!