Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      14  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 4ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15

ஆண்டவர் கூறியது: தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்; நாட்டை மீண்டும் நிலைநாட்டவும் பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும் நான் உம்மைப் பாதுகாத்து மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன். சிறைப்பட்டோரிடம் "புறப்படுங்கள்" என்றும், இருளில் இருப்போரிடம் "வெளிப்படுங்கள்" என்றும் சொல்வீர்கள்.

பாதையில் அவர்களுக்கு மேய்ச்சல் கிடைக்கும்; வறண்ட குன்றுகள் அனைத்திலும் பசும் புல்வெளிகளைக் காண்பர். அவர்கள் பசியடையார்; தாகமுறார்; வெப்பக் காற்றோ, வெயிலோ, அவர்களை வாட்டுவதில்லை.

ஏனெனில் அவர்கள்மேல் கருணைகாட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார்; அவர் அவர்களை நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார். என் மலைகள் அனைத்தையும் வழியாக அமைப்பேன்; என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும்.

இதோ, இவர்கள் தொலையிலிருந்து வருவார்கள்; சிலர் வடக்கிலிருந்தும் சிலர் மேற்கிலிருந்தும் சிலர் சீனிம் நாட்டிலிருந்தும் வருவார்கள். வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; மண்ணுலகே, களிகூரு; மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார்.

சீயோனோ, "ஆண்டவர் என்னைக் கை நெகிழ்ந்துவிட்டார்; என் தலைவர் என்னை மறந்துவிட்டார்" என்கிறாள். பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 145: 8-9. 13cd-14. 17-18 (பல்லவி: 8A)
=================================================================================

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

13உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். பல்லவி

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி
 


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================

அல்லேலூயா, அல்லேலூயா!  "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறந்தோரை தந்தை எழுப்பி, அவர்களை வாழவைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.

தூயயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-30


அக்காலத்தில் இயேசு யூதர்களிடம், "என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்" என்றார். இவ்வாறு அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: "மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை மகன் மேல் அன்புகொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார்; இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார். நீங்களும் வியப்புறுவீர்கள். தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழ வைக்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை.

என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார். அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார். இதுபற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.

நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

தந்தை மகன் உறவு தம்முடைய உறவு என்பதனை அற்புதமாக விளக்குகின்றார்.
இந்த உறவிலே உயர்ந்தவர் தந்தையே.
மகன் அவருடைய அறிவுரை பெற்றே வாழ வேண்டும்.
நம்மோடு கொண்டுள்ள உறவிலும் அத்தகைய அம்மையப்பன் உறவு சொல்லப்படுகின்றது.
பரலோக தந்தையே என்று மன்றாட கற்றுக் கொடுக்கின்றார்.
நாமும் அவரது அறிவுரையை ஏற்று வாழ்ந்தால் நம்முடைய வாழ்வு சிறக்கும்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"என் தந்தை இன்றும் செயலாற்றுகின்றார்"

ஒருசமயம் விற்பனையாளர் குழு ஒன்று உலக அளவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நகரிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அதற்கு முன்னதாக அந்தக் குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு உணவிற்கு வீடு திரும்பி விடுவதாகத் தங்களது குடும்பத்தினருக்குச் சொல்லி இருந்தனர். ஆனால், கூட்டம் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடியாமல் போனது. இதனால் அந்தக் குழுவினர் விமானத்தைப் பிடிக்கவேண்டும் என்பதற்காக கையில் டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு, விமானம் சென்றிருக்காது என்ற நம்பிக்கையில் விமான நிலையத்திற்கு வேகவேகமாக ஓடி வந்தார்கள்.

அவ்வாறு அவர்கள் ஓடிவரும்போது, குழுவில் இருந்த ஒருவர் தெரியாமல் ஒரு மேஜையைத் தட்டிவிட்டார். அந்த மேஜையின் மீது ஒரு பழக்கூடை இருந்தது. எல்லாப் பழங்களும் அங்கும் இங்கும் சிதறி ஓடின. ஆனால் நிற்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. அவர்கள் ஓடியபடியே இருந்தனர். விமானத்திற்குள் ஏறி அமர்ந்தவுடன் எல்லாருமே நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள், ஒருவரைத் தவிர. அவர் தன் மனசாட்சியால் உந்தப்பட்டு எழுந்தார்; தன் நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு கீழே இறங்கினார். அவர் பார்த்த காட்சி அவர் அவ்வாறு வந்துவிட்டத்தை எண்ணி மகிழ்சிகொள்ள வைத்தது. அவர் இடறிவிட்ட மேஜை அருகே பிழைப்பதற்காக பழங்களை விற்றுக்கொண்டிருந்த ஒரு பத்து வயது பார்வையற்ற சிறுமி ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள்.

"நாங்கள் உனது இன்றைய பொழுதை நாசமாக்கிவிடவில்லை என்று நினைக்கிறேன்" என்று சொன்னார். பின்னர் தனது சட்டைப் பையிலிருந்து பத்து டாலரை எடுத்து அவளிடம் தந்தவாறு, "இது பழங்களுக்காக" என்று சொல்லி விடைபெற்றார். அந்தப் பெண்ணிற்கு என்ன நடந்தது என்று பார்க்க முடியவில்லை; அவளால் கேட்க முடிந்ததெல்லாம் காலடிகள் போவதைத்தான். காலடிகளின் சப்தம் ஓய்ந்தவுடன் அவள், "நீங்கள் கடவுளா?" என்று கத்தினாள். அவள் கத்தியது அவருடைய காதில் விழவில்லை. அவர் வேகமாகச் சென்று விமானத்திற்கு உள்ளே நுழையப் பார்த்தார் ஆனால், அதற்குள் விமானம் கிளம்பிவிட்டது.

கடவுள் மனிதர்கள் வழியாக இன்றும் செயலாற்றுகிறார்; அவர் ஏழை எளியவர் மீது உண்மையான பரிவுகொண்டு, அவர்களின் துன்ப துயரத்தைத் துடைக்கின்றார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "என் தந்தை இன்றும் செயலாற்றுகின்றார்; நானும் செயலாற்றுகின்றேன்" என்கிறார். ஆண்டவர் இயேசு கூறுகின்ற இவ்வார்த்தைகளை இதற்கு முந்தைய பகுதியோடு (யோவா 5: 1-16) இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது இன்னும் பொருளுள்ளதாக இருக்கும். அப்பகுதியில் இயேசு கிறிஸ்து முப்பத்தெட்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாய் கிடந்த ஒருவரைக் குணப்படுத்துகின்றார். அவரைக் குணப்படுத்தியதன் வழியாகவும் இன்னும் பல்வேறு அருமடையாளங்கள் வழியாகவும் இரக்கச் செயல்கள் வழியாகவும் இயேசு கிறிஸ்து, தந்தைக் கடவுள் இன்றைக்கும் செயலாற்றுகின்றார்; நானும் செயலாற்றுகின்றேன் என்று எடுத்துச் சொல்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு இதையொட்டி சொல்லக்கூடிய இன்னொரு செய்தி, "தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாக இருப்பதுபோல், மகனும் வாழ்வின் ஊற்றாக இருக்குமாறு செய்தருளினார்" என்பதாகும். வாழ்வின் ஊற்று என்று சொல்கின்றபோது மனித வாழ்வை வளப்படுத்தும் அன்பு, இரக்கம், பரிவு மன்னிப்பு போன்ற குணங்களுக்கெல்லாம தந்தையாம் கடவுளும் மகனாகிய இயேசுவும் ஊற்றாக இருக்கின்றார்கள் என்று சொல்லலாம். ஆகவே, தந்தைக் கடவுளிடமிருந்து ஆசிரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நாமும் அன்பை, பரிவை, இரக்கத்தை, மன்னிப்பை நம்முடைய வாழ்வில் துலங்கச் செய்ய வேண்டும்.

இன்றைக்கு நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த காலத்தில் உண்மையான அன்பும், பிறர் மீது நாம் கொள்ளக்கூடிய பரிவும் கானல் நீராய் போய்விட்டது. மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் பார்வையற்ற பத்துவயது பெண்மணிக்கு உதவிய அந்த நல்ல உள்ளம் படைத்த மனிதரைப் போன்று இங்கொன்றும் அங்கொன்றுமாய் மனிதர்கள் இருக்கின்றார்கள். ஏனையோர் எல்லாம், அவரோடு வந்த மனிதரைப் போன்றுதான் யாரையும் கண்டும் காணாமலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். ஒருமுறை அன்னை தெரசா இவ்வாறு குறிப்பிட்டார், "சமுதாயச் சேவையின் மூலம் இந்த சமூகத்தின் அணையா விளக்குகள் ஆகுங்கள்" என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும் நம்மோடு வாழக்கூடிய மனிதர்களுக்குச் சேவைகள் செய்து, சமூகத்தின் அணையா விளக்குகள் ஆகவேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஆகவே, இயேசுவைப் போன்று எல்லாரிடத்திலும் பரிவும் அன்பும் தோழமையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறைவனை இன்றும் நம்மத்தில் செயல்பட அனுமதிப்போம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!