Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      13   மார்ச் 2018  
                                                    ஆண்டின் தவக்காலம் 4ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9,12

அந்நாள்களில் வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்.

ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்துகொண்டிருந்தது.

அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார். பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார்.

அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார்.

அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப் போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது.

அவர் என்னிடம், "மானிடா! இதைப் பார்த்தாயா?" என்றார்.

பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார். நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன்.

அவர் என்னிடம் உரைத்தது: "இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும். பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்."



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 46: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 7)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; நமக்கு அரணாயும் இருக்கின்றார்.

1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. 2 ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. பல்லவி

4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. 5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. பல்லவி

7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். 8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! பல்லவி
 




=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 51: 10a,12a

அல்லேலூயா, அல்லேலூயா!  கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். அல்லேலூயா!

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உடனே அம்மனிதர் நலமடைந்தார்.

தூயயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3ய, 5-16

யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர்.

இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்கு வாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக் கிடப்பர்.

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.

இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, "நலம்பெற விரும்புகிறீரா?" என்று அவரிடம் கேட்டார்.

"ஐயா, தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்" என்று உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார்.

இயேசு அவரிடம், "எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்" என்றார்.

உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார்.

அன்று ஓய்வுநாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், "ஓய்வுநாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்" என்றார்கள்.

அவர் மறுமொழியாக, "என்னை நலமாக்கியவரே "உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்" என்று என்னிடம் கூறினார்" என்றார். `"

"படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்" என்று உம்மிடம் கூறியவர் யார்?"" என்று அவர்கள் கேட்டார்கள்.

ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய்விட்டார்.

பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, "இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.

அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்.

ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நமக்காக அல்லாமல், பிறருக்காக வாழ்வோம்"

மலையடிவாரத்தில் தங்கி, போதித்துக்கொண்டிருந்த துறவியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். அவன் அவரிடம், "சுவாமி! என்னுடைய மனதை நீண்ட நாட்களாக ஒரு கேள்வியானது அரித்துக்கொண்டே இருக்கின்றது. அந்தக் கேள்விக்கான பதிலை பலரிடத்திலும் கேட்டுவிட்டேன். யாரும் அதற்கு சரியான பதிலை சொல்லவில்லை. இந்த நேரத்தில்தான் என் நெருங்கிய ஒருவர் "மலையடிவாரத்தில் துறவி ஒருவர் இருக்கின்றார், அவரிடத்தில் சென்று நீ உன்னுடைய கேள்வியைக் கேட்டுப் பார், நிச்சயம் அவர் உனக்கு சரியான பதிலைச் சொல்லுவார்" என்று சொல்லி உங்களிடத்தில் அனுப்பி வைத்தார். அதன்பேரில்தான் இப்போது நான் இங்கே வந்தேன்... இப்போது என்னுடைய கேள்வி இதுதான்: "தனக்காக மட்டும் வாழும் வாழ்க்கை சிறப்பானதா? மற்றவர்களுக்காக வாழும் வாழக்கை சிறப்பானதா?" என்றான்.

அப்போது துறவி அவனிடத்தில் எதுவும் பேசாமல் தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டு போனார். அங்குள்ள பலவிதமான பூக்களை அவனுக்குக் காண்பித்தார். பின்னர் அவர் அவனிடம், "இதோ இந்தப் பூக்கள் இருக்கின்றனவே, இந்த பூக்களைத் தேடி ஒவ்வொருநாளும் எத்தனையோ வண்டுகள் வந்து தேனை எடுத்துச் செல்கின்றன; பலருக்கும் இவை நறுமணம் தருவதாக இருக்கின்றன; மங்கையர் தங்களுடைய கூந்தலில் இவற்றை சூடி மகிழ்கின்றார்கள்; பக்தர்கள் இவற்றை இறைவனுக்குச் சூட்டி மகிழ்கின்றார்கள். இப்படி இந்த மலர்கள் பலருக்கும் பயன்படுவதால், ஒவ்வொருநாளும் அழகாக மலர்கின்றன... மனிதர்களும் இந்த மலர்களைப் போன்று தனக்காக வாழாமல், பிறருக்காக வாழ்கின்றபோது வாழ்க்கை சிறப்பானதாகவும் அழகாகவும் இருக்கும்" என்றார். துறவி சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்தவனாய், அந்த இளைஞன் தனது வாழக்கையை பிறருக்காக அர்ப்பணித்து வாழத் தொடங்கினான்.

"தனக்கான வாழ்வது என்பது இறகைவிட லேசானது. பிறருக்காக வாழ்வது மலையிட விடப் பளுவானது. அந்தப் பளுவைச் சுமக்கத் தயாரானவனே, சவால் நிறைந்த வாழ்க்கை வாழ்பவனாகும் சாதனையாளனாகவும் மாறுகிறான்" என்பார் மாவோ. ஆம், பிறருக்காக வாழும் மனிதர்களே சாதனையாளர்கள் ஆவார்கள்.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு எருசலேமிற்குச் செல்கின்றபோது அங்கே ஆட்டு வாயிலுக்கு அருகில் இருந்த பெத்சதா குளத்தருகே முப்பத்தெட்டு ஆண்டுகளாக ஒருவர் படுத்த படுக்கையாய் கிடக்கின்றார். இயேசு அவரிடம் சென்று, "நலம் பெற விரும்புகிறீரா?" என்று கேட்க, அவரோ, "ஆம்" என்று பதில் சொல்லாமல் "ஐயா, தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்" என்கின்றார். இயேசு அந்த மனிதரை எப்படிக் குணப்படுத்தினார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், அந்த மனிதருக்கு ஏற்பட்ட நிலையைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.

பெத்சதா குளத்தருகே இருந்த அந்த மனிதர் முப்பதெட்டு ஆண்டுகளாக அங்கே இருக்கின்றார். இந்த முப்பப்தெட்டு ஆண்டுகளில் ஒருவர்கூட அவர்மீது பரிவுகொண்டு, அவரைக் குளத்தில் இறக்கிவிட்டு, அவர் குணம் பெறுவதற்கு உதவி புரியாதது மிகவும் கசப்பான உண்மையாக இருக்கின்றது. இதை வைத்துப் பார்க்கும்போது அங்கிருந்த/ அங்கு வந்த மனிதர்கள் எல்லாம் அடுத்தவர் மீது அக்கறைகொள்ளாத சுயநலவாதிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கின்றது. இப்படி சுயநலத்தோடு இருந்த மக்களுக்கு மத்தியில் ஆண்டவர் இயேசு பிறர் நலத்தோடு அந்த மனிதர்மீது அக்கறை கொண்டு, "எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்" என்று சொல்லி அவரைக் குணப்படுத்துகின்றார். இயேசு அந்த மனிதரைக் குணப்படுத்தியதோ ஓய்வுநாள். ஓய்வுநாளில் ஒருவரைக் குணப்படுத்தினால் யூதர்கள் என்ன செய்வார்கள் என்று இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்து அவர் மிகவும் துணிச்சலாக, சவாலான பிறரன்புச் செயலைச் செய்கின்றார்.

இங்கே முப்பதெட்டு ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாய் கிடைந்த மனிதரை "மானுட சமூகத்திற்கு" ஒப்பிடலாம். பலர் அந்த மனிதரைக் கண்டுகொள்ளாதவர்கள் போன்று, இந்த சமூகத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களால் இந்த சமூகத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இந்த சமூகத்திற்கு விடிவு பிறக்கவேண்டும் என்றால், இயேசுவைப் போன்று பிறர் நலத்தோடு செயல்படுபவர்களால் மட்டுமே முடியும். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று பிறர் நலத்தோடு செயல்பட்டு இந்த சமூகத்திற்கு பதுவாழ்வு தருவதுதான் நமது கடமையாக இருக்கின்றது.

"வாழ்வு இன்பமின்றி வேறொன்றுமில்லையென தூங்கிக் கனவு கண்டேன். தூங்கி எழுந்ததும் வாழ்க்கை சேவை எனக் கண்டேன். சேவை செய்த பிறகுதான் புரிந்தது, சேவையே வாழ்க்கை என்று" என்பார் தாகூர்.

ஆகவே, இயேசுவைப் போன்று பிறர் நலச் சேவையே வாழ்க்கை என்று உணர்ந்து அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!