Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      12   மார்ச் 2018  
                                                     தவக்காலம் 4ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.

ஏசாயா நூலிலிருந்து வாசகம் 65:17-21

ஆண்டவர் கூறுவது: இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்: முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை: மனத்தில் எழுதுவதுமில்லை.18 நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்.  நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்: என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்: இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.  இனி அங்கே நில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது: தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்: ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான்.21 அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்: திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா: 30:1, 3-5, 10-12
=================================================================================
பல்லவி: *ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர் *


1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. 

3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். 4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். 

5 அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. 

10 ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11 நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர். 

12 ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
ஆமோ 5: 14

அல்லேலூயா, அல்லேலூயா!  நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 43-54

அக்காலத்தில் இயேசு சமாரியாவிலிருந்து கலிலேயாவுக்குச் சென்றார்.
 அந்த இரண்டு நாளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர். கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார். இயேசு அவரை நோக்கி, " அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள். "என்றார். அரச அலுவலர் இயேசுவிடம், "ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும் "என்றார். இயேசு அவரிடம், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான் "என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார். அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். "எத்தனை மணிக்கு நோய் நீங்கியது? "என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், " நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது " என்றார்கள். "உம் மகன் பிழைத்துக் கொள்வான் "என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்"

அமெரிக்காவில், 1910 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் நாள் உலகக் குத்துச் சண்டைப் போட்டிக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஜெம் ஜெப்ரீஸ், ஜேக் ஜான்சன் என்ற இரு வீரர்கள் பங்குபெற்றனர். இந்த இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறாரோ என்ற பதற்றம் போட்டியைக் காணவந்த பார்வையாளர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

இதற்கு மத்தியில், குத்துச் சண்டைப் போட்டியைப் பார்க்க வந்த பதினைந்து வயது பையன் ஒருவன், "இக்குத்துச் சண்டையில் யார் பெற்றி பெறுகிறாரோ அவரை ஒருநாள் நான் வெற்றிகொள்வேன்" என்று மனதிற்குள்ளாகவே சூளுரைத்தான். அன்றைக்கு விறுவிறுப்பாக நடந்த போட்டியில் ஜேக் ஜான்சன் ஜிம் ஜெப்ரீசை வீழ்த்தி உலக குத்துச் சண்டை வீரர் பதக்கத்தை வென்றார். அன்றிலிருந்தே அந்த இளைஞன் தான் குத்துச் சண்டை பழகும் பையில் ஜேக் ஜான்சனின் படத்தை வரைந்து, தினமும் அதன்மீது முழு வேகத்துடன் பாய்ந்து குத்திப் பழகி வந்தான். இதைப் பார்த்த அந்த இளைஞனுடைய பெற்றோர், நண்பர்கள், தெரிந்தவர்கள் அனைவரும் அவனிடம் இது சுத்த பைத்தியக்காரத்தனம், ஜேக் ஜான்சனின் படத்தை பையில் வரைந்து, அதனைத் தினமும் குத்தி பயிற்சி எடுப்பதால் மட்டும் அவரை வெற்றிகொள்ள முடியுமா? பேசாமல் வேறு வேலையைப் பார்" என்று சொல்லி வந்தார்கள். அதற்கு அந்த இளைஞன், "உங்களுக்கு வேண்டுமானாலும் இது பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். ஆனால், எனக்கு ஜேக் ஜான்சனை வெற்றி கொள்ள முடியும் என்ற தளரா நம்பிக்கை இருக்கின்றது" என்று சொல்லி வந்தான்.

ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜேக் ஜான்சனும் அந்த இளைஞனும் போட்டியில் எதிரெதிராக மோதவேண்டிய நாள் வந்தது. எல்லாரும் என்ன நடக்கப்போகிறதோ என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இளைஞன் தன்னுடைய முழு பலத்தையும் திரட்டி ஜேக் ஜான்சனை பாய்ந்து பாய்ந்து குத்தினான். அவனுடைய தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், அதுவரை யாரிடமும் தோற்காத ஜேக் ஜான்சன் தோற்றுப்போனார். இப்படி யாராலும் வெற்றிகொள்ள முடியாத ஜேக் ஜான்சனை தோற்கடித்த அந்த இளைஞன் வேறு யாருமல்ல உலகப் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரராகிய ஜேக் டெம்ப்சே என்பவரே ஆவர். ஜேக் டெம்ப்சே, தன்னால் ஜேக் ஜான்சனை வெற்றிகொள்ள முடியும் என்ற தளரா நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

"மனித மனம் எதையெல்லாம் சிந்தித்து நம்புகிறதோ, அதையெல்லாம் உண்மையிலே சாதித்துவிடும்" என்பார் நெப்போலியன் ஹில்ஸ் என்ற பிரபல எழுத்தாளர். எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள்.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வருகின்றபோது, கப்பர்நாகுமைச் சார்ந்த அரச அலுவலர் ஒருவர், சாகும் தருவாயில் இருக்கின்ற தன் மகனைக் குணப்படுத்த வருமாறு இயேசுவிடம் வேண்டுகிறார். அப்போது இயேசு அவரிடம், "நீர் புறப்பட்டுப்போம், உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்கிறார். இயேசு சொன்னதை நம்பி அரச அலுவலர் சென்றார், அவர் நம்பிய வண்ணமே அவருடைய மகன் பிழைத்துக்கொண்டான்.

அரச அலுவலரின் மகன் பிழைப்பதற்கு எது காரணமாக இருந்தது என்று நாம் சிந்தித்துப் பார்க்கும்போது அவருடைய நம்பிக்கைதான் அடிப்படைக் காரணமாக இருந்தது என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். அந்த மனிதர் இயேசுவை நேரில் பார்த்திராதவர், அதைவிடவும் அவர் ஒரு யூதரல்லாத புறவினத்தார். ஏனென்றால் கலிலேயாவில் புறவினத்தார் அதிகமாக வாழ்ந்து வந்தனர். அப்படிப் பார்க்கும்போது அரச அலுவலரை நாம் புறவினத்தார் என்றுதான் நம்ப வேண்டி இருக்கின்றது. எனவே, இயேசுவைக் கண்ணால் பார்த்திராத அரச அலுவலர், இயேசுவால் தன் மகனை நிச்சயம் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு வருகின்றார். அதனாலேயே அவருடைய மகன் இயேசுவால் பிழைத்துக்கொள்கின்றார்.

அரச அலுவலரிடம் இருந்த இன்னொரு முக்கியமான சிறப்பம்சம் அவருடைய தாழ்ச்சியாகும். தான் மிக உயர்ந்த பதவியில் இருக்கின்றோம் என்றெல்லாம் எண்ணாமல், அவர் மிகவும் தாழ்ச்சியோடு இயேசுவிடம் வருகின்றார். அதனாலேயும் அவர் இயேசுவிடமிருந்து ஆசிரைப் பெறுகின்றார். ஆகவே, அரச அலுவலரிடம் இருந்த நம்பிக்கை, அதோடு கூட இருந்த தாழ்ச்சி அவருடைய மகன் உயிர் பெற்றெழக் காரணமாக அமைந்தது. நாமும் அரச அலுவலரைப் போன்று இயேசுவிடம் தாழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்டு வாழ்கின்றபோது, அவரிடமிருந்து ஆசிர்வாதங்களைப் பெறுவது உறுதி.

ஆகவே, இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நம்பிக்கைதான் வாழ்க்கை

அந்த நகரத்தில் இருந்த ஓர் அடுக்குமாடிக் கட்டடத்தின் உச்சியில் பலர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஓர் இளைஞன் கவனக்குறைவாக எங்கோ பார்த்தபடி கால்வைத்தபோது கால் தவறிவிட்டது. தலை குப்புற அவன் கீழே விழுந்தான். அவனது அதிர்ஷ்டம் இடையில் ஒரு கயிறு தொங்கிக்கொண்டிருந்தை அவன் பிடித்ததால் தரையில் விழாமல் தொங்கினான்.

ஆனால் கயிறு அற்பமானது; அதிகநேரம் அது அவனது பளுவைத் தாங்காமல் அறுந்துவிழக்கூடிய நிலையில் இருந்தது. அவனுக்குக் கீழே கருங்கற்கள் கொட்டிக் கிடந்தன. இன்னும் சில விநாடிகள்தான்; அவன் தவித்தான்.

அப்போது கீழே போய்க்கொண்டிருந்த ஒருவன் அவனைப் பார்த்து விட்டான். அவனைக் காப்பாற்ற அருகில் ஓடி வந்தான். "அய்யனே! கயிற்றை விட்டுவிடு, கீழே விழாமல் பத்திரமாகத் தாங்கி தரையில் நான் விடுகிறேன்" என்றான் உதவிக்கு வந்தவன். ஆனால் இளைஞனுக்கோ பயமாக இருந்தது. அவன் பளு தாங்காமல் போய்விட்டால், "நான் மாட்டேன், நீங்கள் விட்டு விடுவீர்கள்" என்றான். "பயப்படாதே! நிச்சமாக விடமாட்டேன்! உனக்கு ஆபத்து ஏதுமில்லாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். கையிற்றை விட்டுவிடு" என்றான்.

இளைஞன் யோசித்தான்! எப்படியும் கயிற்றை விடாது போனாலும் அது அறுந்து கீழே விழுந்து சாவது நிச்சயம். இதோ இவர் காப்பாற்ற வாய்ப்பிருக்கிறது. இவரை நம்பினால் நஷ்டமில்லை என்று நினைத்தவனாகக் கயிற்றை விட்டான். கீழே இருந்தவன் பத்திரமாய் அவனை ஏந்தி நலுங்காமல் தரையில் இறக்கி விட்டான். பின்னர் இறக்கி விட்டவன் சொன்னான். நம்பிக்கை தான் வாழ்க்கை அய்யனே! கடவுளை நம்பு, உன்னோடு வாழும் சக மனிதர்களை நம்பு, உன்னையும் நம்பு காப்பாற்றப் படுவாய்".

நம்பிக்கை நம்முடைய வாழ்க்கையில் எந்தளவுக்கு முக்கியதத்துவம் வாய்ந்தது என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சாகும் தருவாயில் இருக்கின்ற அரசு அலுவலரின் மகனைக் குணப்படுத்துகின்றார். இயேசு செய்த இந்த அற்புதச் செயலுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தது அரச அலுவலரின் நம்பிக்கை என்று சொன்னால் அது மிகையாகது.

மத்தேயு (8:5-13), லூக்கா (7: 110) நற்செய்தியில் இடம்பெறும் நூற்றுவத் தலைவரும், யோவான் நற்செய்தியில் வரும் அரச அலுவலரும் ஒருவரா அல்லது இருவரும் வேறு வேறா என்ற குழப்பம் உண்டு. இருந்தாலும் அவர்கள் இருவரும் ஒருவரே என்பர் விவிலிய அறிஞர்கள் சிலர்.

இயேசு அரச அலுவலரின் மகனைக் குணப்படும் அளவுக்கு அரச அலுவலரித்தில் அப்படி என்ன இருந்தது என்று சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். நற்செய்தியில் இயேசு கானாவில் இருக்கின்றார். ஆனால் அரச அலுவலரோ கப்பர்நாகூமில் இருந்து இயேசுவைப் பார்க்க வருகின்றார். இந்த இரண்டு ஊர்களுக்கும் இடைய 20 கிலோ மீட்டர் தொலைவு. தான் அரச அலுவலராக இருந்தாலும் மிகவும் தாழ்ச்சியோடு தச்சராகிய (?) இயேசுவை பார்க்க வருகின்றார். அவரிடம் விளங்கிய தாழ்ச்சியே இயேசுவை மனம் இளகச் செய்திருக்கும் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

அடுத்ததாக, இயேசு அரச அலுவலரின் நம்பிக்கையை சோதித்துப் பார்க்கின்றார். "அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்" என்று இயேசு அவரிடத்தில் சொல்கிறார். ஆனால் அவரோ தன் மகனுக்கு எப்படியாவது நலம் கிடைக்கவேண்டும் என்று மன உறுதியோடு இருக்கின்றார். எப்படி கானானியப் பெண்மணி தன்னை இயேசு நாயென்று சொன்னாலும் மன உறுதியோடு இருந்தாரோ அது போன்று இவர் மன உறுதியோடு இருக்கின்றார். அவருடைய மன உறுதி இயேசுவை வெகுவாகத் தொட்டிருக்கும்.

நிறைவாக, இயேசு அவரிடம், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்" என்று சொல்கிறார். இயேசு சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவர் நம்பிக்கையோடு செல்கிறார், அதனாலே அவருடைய மகனை உயிர் பிழைக்கச் செய்கிறார். ஆகையால் அரச அலுவலரின் தாழ்ச்சி, மன உறுதி, அதைவிடவும் அவருடைய நம்பிக்கை நம்மை தொடுவதாக இருக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் அரச அலுவலரிடத்தில் நம்பிக்கையைக் கொண்டு வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

புலம்பல் ஆகமம் 3:25 ல் இவ்வாறு வாசிக்கின்றோம், "ஆண்டவரில் நம்பிக்கை வைப்போருக்கும், அவரைத் தேடுவோருக்கும் அவர் நல்லவர்". இது முற்றிலுமாக உம்மை. நாம் இறைவனிடம் நம்பிக்கை வைத்து வாழும்போது அவர் நமக்கு அளப்பெரிய காரியங்களைச் செய்வார் என்பது உறுதி.

எனவே, நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அரச அலுவலரைப் போன்று இறைவனிடத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!