Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      10   மார்ச் 2018  
                                                     தவக்காலம் 3ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6

"வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பிவிடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம். நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப் பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்'' என்கிறார்கள்.

எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே! அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்றுவிட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 51: 1-2. 16-17. 18-19ab (பல்லவி: ஓசே 6: 6)
=================================================================================
பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி
 
18 சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக! 19ab அப்பொழுது எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர். பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 95: 7b, 8b

அல்லேலூயா, அல்லேலூயா!  "உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்," என்கிறார் ஆண்டவர்.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.

தூயலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14

அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர்.
ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: "கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார்.

இயேசு, "பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை :
ஒப்பீடு மனிதனை வீழ்த்துமே தவிர, மனிதனை வாழ்விக்கப் போவது கிடையாது.

ஓப்பீடு மனிதத்தை வளர்த்தெடுக்கப் போவது கிடையாது.

ஓவ்வொருவரும் தனி ரகம் தான். தனித்தன்மையோடு படைக்கப்பட்டவரே.

பிறருடைய தனித் தன்மையை போற்ற முற்படுவதுவே மனிதத்தை வளர்த்தெடுக்க முடியும்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அன்பே அனைத்திலும் முதன்மையான கட்டளை

இளைஞன் ஒருவன் இரயில் நிலையத்தில் அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தான். அப்போது நாற்பது வயதையொத்த நான்கு மனிதர்கள் அங்கே தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களது பேச்சால் ஈர்க்கப்பட்ட இளைஞன், அவர்களோடு கலந்துகொண்டு பேசத்தொடங்கினான். சிறிது நேரத்தில் அவர்கள் நான்கு பேரும் காசிக்கு புனித பயணம் செல்கிறார்கள் என்பதை உறுதிசெய்து கொண்டான்.

உடனே இளைஞன் அவர்களிடம், "எதற்காகப் புனிதப் பயணம் போகிறீர்கள்? என்று கேட்டான். அதற்கு அவர்கள், "நாங்கள் எங்களுடைய பாவங்களைப் போக்குவதற்காகப் புனிதப் பயணம் செல்கிறோம்" என்றார்கள். அதற்கு அவன் அவர்களிடம், "அப்படியானால் உங்கள் குடும்பத்தார் எல்லாம் எங்கே?" என்று கேட்டான். அவர்கள், "எங்கள் குடுபத்தினர் பிள்ளைகளோடு வீட்டில் இருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள்.

இளைஞன் அவர்களை விடவில்லை. "உங்களுடைய பெற்றோர்கள் எல்லாம் எங்கே? என்று கேட்டான். அதற்கு அவர்கள், "எங்களுடைய பெற்றோர்கள் பக்கத்துக்கு ஊரில் இருக்கும் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள். மாதத்திற்கு ஒருமுறை அவர்களைப் போய் பார்த்துவிட்டு வருவோம்" என்றார்கள். இதைக் கேட்டு இளைஞன் வருந்தினான்.

பின்னர் அவன் அவர்களிடம், "உங்களுடைய வாழ்வில் ஒளியேற்றிய தீபங்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு, தெய்வங்களைத் தேடி கோவிலுக்குச் செல்வதனால் என்ன புண்ணியம் கிடைத்துவிடப் போகிறது" என்று ஒரு போடுபோட்டான். அவர்கள் நால்வரும் பேசாது மௌனம் காத்தார்கள்.

மனிதர்கள் எந்தளவுக்கு முரண்பாடுகளின் மூட்டையாகும், அன்பில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு தெளிவாக எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்கிறார். அதற்கு இயேசு "இறையன்பும், பிறரன்பும்" அனைத்திலும் முதன்மையான கட்டளை என்று சொல்லி அவருக்குப் பதிலளிக்கிறார். இயேசுவிடம் கேள்விகேட்ட மறைநூல் அறிஞருக்கு அக்கேள்விக்கான பதில் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர் ஒரு மறைநூல் அறிஞர்; மறைநூலைப் பற்றி மிகத்தெளிவாக அறிந்து வைத்திருப்பவர். அப்படிப்பட்ட மனிதர் ஆண்டவர் இயேசுவிடம் கேள்வி கேட்கிறார் என்றால் இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்ற நோக்கம்தான் அவருக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் இயேசு அவருக்கு சரியான பதிலைத் தந்து, அவரை வெற்றிகொள்கிறார்.

தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5:14 ல் கூறுவார், "உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்புகூர்வாயாக என்னும் ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் அடங்கியிருக்கிறது" என்று. ஆகவே அன்பு ஒன்றுதான் அனைத்திற்கும் மேலான, உயர்ந்த கட்டளை" என்பதை இயேசு, போன்றோரின் வார்த்தைகள் வழியாக நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

பல நேரங்களில் நாம் "நம்மிடம் பொருள் இருக்கிறது, பணம் இருக்கிறது" எதற்கு அடுத்தவரை நாடிச் செல்லவேண்டும், அவர்களை அன்பு செய்யவேண்டும் என்ற மனநிலையில் வாழ்கிறோம். இன்னும் ஒருசிலர் "தான் உண்டு, தன்னுடைய வேலையுண்டு" என்று குறுகிய வட்டத்திலே சுழன்றுகொண்டு இருப்பதையும் பார்க்கிறோம். இந்நிலை மாறவேண்டும்.

"அடுத்தவர் மீது சொரியப்பட்ட அன்பு வீண்போவதில்லை, கொடுத்த காசைவிட ஓர் அன்பு அன்புச் சொல் மேலானது" என்கிறது ரஷ்யப் பழமொழி. ஆகவே கடவுள் நமக்குத் தந்திருக்கும் அன்புக்கட்டளையை நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம். உலகை அன்புமயமானதாக மாற்றுவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 கடவுளின் கைவினைப் பொருளே!!!!!

இறையேசுவில் பிரியமுள்ள அன்பர்களே, தவக்காலத்தின் நான்காம் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இத்தவக்காலத்தில் நமது தவத்தின் காரணத்தையும் அதன் பலனையும் பற்றி இன்றைய வாசகங்கள் நமக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. நாம் கடவுளின் கைவேலைப்பாடு, கைவினைப்பொருட்கள். கடவுளால் உருவாக்கப்பட்ட நாம் அதற்கான நோக்கத்தையும் காரணத்தையும் ஒளியாம் இயேசுவின் பாதையில் கண்டறிய இன்றைய விவிலிய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. கைவினைப்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன, மெருகுபடுத்தப்படுகின்றன, பயன்பெற, பயன்பட தேவையான இடத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. நாமும் அதுபோல் தான். கடவுளால் படைக்கப்பட்டோம்., மெருகேற்றப்பட்டோம், நமக்குரிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டோம். இந்த அடிப்படையில் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.

படைத்து பாதுகாக்கும் இறைவன்
மெருகேற்றி மேன்மைப்படுத்தும் இறைவன்
நற்பயன் தர அழைப்புவிடுக்கும் இறைவன்.


படைத்து பாதுகாப்பவர்.;

இன்றைய முதல் வாசகம் கடவுளுக்கு எதிராக இஸ்ரயேல் மக்கள் செய்த செயல்களையும் அதற்கு பதிலாக கடவுள் அவர்கள் மேல் சினமுற்றதைப் பற்றியும் கூறுகிறது. தன்னால் படைக்கப்பட்ட ஒரு மக்களினம் தன் மேல் நம்பிக்கை கொள்ளாது, தனக்கு எதிராக செயல்படுவதைக் கண்டு சினமுறுகிறார் இறைவன். பாபிலோனிய அடிமைத்தனம் மூலமாக அவர்களைக் கண்டிக்கிறார். தன்னை வழிபட என்று ஏற்படுத்தப்பட்ட எருசலேம் ஆலயம் அதன் பயனில்லாது அசுத்தமாயிருப்பது கண்டு கொதித்தெழுகிறார். எனவே அதனை இல்லாமல் செய்கிறார். எகிப்திலிருந்து, அடிமைத்தன நாட்டிலிருந்து பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வந்த மக்களை மீண்டும் பாபிலோனியர்களுக்கு அடிமையாகும்படிச்செய்கிறார். அவர்களின் வழிபாட்டுப் பொருட்கள் இடங்களை தீக்கிரையாக்குகின்றார்.

ஒரு பொருளின் அருமை அதன் இருப்பை விட இழப்பில் தான் பன்மடங்கு அதிகமாக தெரியும். அது உருவமாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி . இதை இஸ்ரயேல் மக்களுக்கு வெளிப்படுத்த எண்ணுகிறார். அதை அவர்கள் உணர்ந்து நைல் நதிக்கரையோரம் தங்கள் புலம்பல்களைப் பாடலாகப் பாடுவதைக் காண்கிறார். அவர்கள் மேல் இரக்கம் கொண்டு மீண்டும் ஆலயம் கட்ட , பழைய வாழ்வை வாழ சைரசு மன்னன் மூலம் வழிகாட்டி பராமரிக்கிறார். இன்றும் பல்வேறு இடங்களில் நமது தேவாலயங்கள் தகர்க்கப்படுகின்றன. நமது மறையை மண்ணோடு மண்ணாக ஆக்கும் நோக்கத்தில் அவை நடத்தப்படுகின்றன. ஆனால் அந்த இழப்பிலும் வேதனையிலும் தான் நமது மறையும் விசுவாசமும் இன்னும் அதிகமாக ஆழப்படுகின்றன என்பதை உணராது அவர்கள் செயல்படுகின்றனர்.
இஸ்ரயேல் மக்கள் தங்கள் எருசலேம் ஆலயம் தகர்க்கப் பட்டதை எண்ணி மிகவும் மனம் வருந்துகின்றனர். தங்களின் பாவ நிலையை விடுத்து இறைவனிடம் மீண்டும் திரும்பி வர முயற்சிக்கின்றனர். தங்களைப் படைத்த இறைவனின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் வழிநடத்துதலையும் எண்ணி மனமுறுகுகின்றனர். இவ்வாறாக தன் மக்களை தன்னை நோக்கி திரும்பி வர வைக்கின்றார் இறைவன். பெற்றோர் தன் பிள்ளைகளை கண்டித்து திருத்துவது போல திருத்துகின்றார். எவ்வளவுதான் பிள்ளைகள் குறும்பு செய்தாலும், எவ்வளவு தான் பெற்றோர்கள் கண்டித்து திருத்தினாலும் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே இருக்கும் பந்தம் பாசம், உறவு என்பது அழிக்க முடியாதது, அளவிட முடியாதது. அப்படி ஒரு உறவை மீண்டும் இஸ்ரயேல் மக்களுடன் ஏற்படுத்திக் கொள்கிறார் இறைவன். சைரசு மன்னன் முலமாக தன் மக்களை மீட்டுக் கொள்கிறார். புதிய இஸ்ரயேல் மக்களாம் நம்முடனும் இந்த உறவைப் புதுப்பிக்க, நமது பழைய பாவ இயல்பைக் களைந்து ,நம்மை நாமே தயாரித்து புது வாழ்வு பெற தவக்காலத்தை நமக்கு அளித்திருக்கின்றார்.

மெருகேற்றி மேன்மைப்படுத்துபவர்.;

எந்த ஒரு பொருளும் இயல்பிலேயே அழகு தான் ஆனால் அதை மெருகேற்றும்போது அதன் அழகு இன்னும் அதிகமாக வெளிப்படுகிறது. சாதாரண உலோகம் ஆபரணமாய் மாறுவது போல, காகிதங்கள் கலை வண்ணப் பொருட்களாய் மாறுவது போல. நம்மைப் படைத்து காத்த இறைவன் அன்பினால் நம்மை மெருகேற்றி மேன்மைப்படுத்துகிறார். இரக்கத்தினால் அழகுபடுத்துகிறார். இதுவரை பாவங்களினால் இறந்து போயிருந்த நம்மைஅன்பின் மூலம் உயிர்பெறச்செய்கின்றார். இன்று உலகில் ஏராளமான பொருட்கள், மனிதர் கைகளால் உருவாக்கப்படுகின்றன. கண்ணைக்கவரும் வண்ணங்கள், மனதை உருக வைக்கும் இசைகளோடு நாள்தோறூம் பல்வேறு விதமான பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவைகளுக்கெல்லாம் ஒரு குறுகிய கால, காலவரையறை உண்டு. அதன்பின் அதன் செயல்பாடு முடிந்துவிடும். நாமும் கைவினைப் பொருட்கள் தான் ஆனால் கடவுளின் கைவினைப் பொருட்கள். அவர் கைகளால் உண்டாக்கப்பட்டவர்கள். காலவரையறை அவர் தம் வேலைப்பாடுக்குக் கிடையாது. நாம் இறந்தாலும் மீண்டும் கடவுளின் மக்களாக உயிர்ப்போம். ஏனெனில் நாம் அனைவரும் நற்செயல் புரிவதற்காக அன்பினால் உயிர் பெற்றவர்கள். அருளினால் மீட்கப்பட்டவர்கள். கடவுளின் கரத்தினால் மெருகேற்றி மேன்மைப்படுத்தப்பட்டவர்கள்.

நற்பயன் தர அழைப்புவிடுக்கும் இறைவன்;

நாம் படைக்கப்பட்டது மெருகேற்றப்பட்டது அனைத்தும் பலன் தரவே,அதுவும் நற்பயன் தரவே. ஒளியின் பாதையில் நடப்பவர்களால் மட்டுமே அந்த நற்பயனைத் தர முடியும். இயேசுவே ஒளி அவரே நமக்கு முன்மாதிரி. ஒரு பொருளை உருவாக்கி, அழகுபடுத்தி, அது , அதற்கு உண்டான பலனைத் தரவில்லையெனில் அது வீண். அது எப்படி பயன் தர வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாய் கடவுள் தன் மகனையே நமக்கு தந்திருக்கிறார். மூலப்பொருளாம் இயேசுவை மையமாகக் கொண்டு அவரைப்போல வாழவே இறைவன் நம்மை அழைக்கிறார். ஒளியாம் இறைவன் உலகில் நற்செயல் புரிபவர் உருவத்தில் இருந்தும், நாம் அதை கண்டு கொள்ளாது இருளாம், பகட்டு ஆடம்பர வாழ்விலும் கேளிக்கைகளிலும் பாதிப்பளிக்கும் தொலைதொடர்பு சாதனங்களிலும் நம்மை நாமே தொலைத்து விடுகிறோம்.
ஒளியாக இருப்போம் இருளை விரட்ட, ஒளியிடம் செல்வோம் உண்மைகேற்ப வாழ, ஒளியை நேசிப்போம் ஒளியாம் இயேசு போல் வாழ முயற்சிப்போம். நாம் கடவுளின் கைவினைப் பொருட்கள் என்பதை மனதில் நிறுத்தி அவரில் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரியும் நல்லவர்களாக வாழ்வோம். இத்தவக்காலத்தில் இறைவனின் அருகிருப்பு நமக்கு தரும் ஆறுதலையும் அன்பையும் எண்ணி ஒளியின் வழியில் நடக்க முயல்வோம். படைத்த இறைவன், மெருகேற்றிய இறைவன், நற்செயல் புரிய அழைக்கும் இறைவன் நம்மோடு உடனிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

மறையுரை. . வழங்குபவர் சகோதரி மெரினா.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!