Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      09   மார்ச் 2018  
                                                     தவக்காலம் 3ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, "எங்கள் கடவுளே" என்று இனி சொல்லமாட்டோம்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் (14: 1-9)

ஆண்டவர் கூறியது: இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய்.

இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: "தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்; அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்; குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்; எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, "எங்கள் கடவுளே!" என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான்" எனச் சொல்லுங்கள்.

அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்; அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது. நான் இஸ்ரயேலுக்குப் பனி போலிருப்பேன்; அவன் லீலிபோல் மலருவான்; லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான். அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்; அவன் பொலிவு ஒலிவ மரம் போல் இருக்கும்; லெபனோனைப்போல் அவன் நறுமணம் பரப்புவான். அவர்கள் திரும்பிவந்து என் நிழலில் குடியிருப்பார்கள்; கோதுமைபோல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம்போல் அவர்களது புகழ் விளங்கும். இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவிசாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்; நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும். ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்துகொள்ளட்டும்; ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை; நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 81: 5c-7a. 7bc-8. 9-10ab. 13,16 (பல்லவி:10,8a)
=================================================================================
பல்லவி: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்.

5c நான் அறியாத மொழியைக் கேட்டேன்.
6 தோளினின்று உன் சுமையை அகற்றினேன்; உன் கைகள் கூடையினின்று விடுதலை பெற்றன.
7a துன்ப வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்; நான் உங்களை விடுவித்தேன்.
-பல்லவி

7bc இடி முழங்கும் மறைவிடத்தினின்று நான் உங்களுக்கு மறுமொழி கூறினேன்; மெரிபாவின் நீரூற்று அருகில் உங்களைச் சோதித்தேன்.
8 என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்; இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால், எவ்வளவு நலமாயிருக்கும்!
-பல்லவி

9 உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது.
10ab உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே.
-பல்லவி

13 என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.
16 உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன்.
-பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(மத் 4: 17)

அல்லேலூயா, அல்லேலூயா! மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். அவரிடம் அன்புகூர்வாயாக.

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (12: 28-30)

அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசுவை அணுகி வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்டார்.

அதற்கு இயேசு, "இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக" என்பது முதன்மையான கட்டளை.

"உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை" என்றார்.

அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், "நன்று போதகரே, "கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை" என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது" என்று கூறினார்.

அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" என்றார்.

அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"மறைநூல் அறிஞருள் ஒருவர்... இயேசுவை அணுகிவந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்டார். அதற்கு இயேசு,... "உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக... உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக" என்றார்" (மாற்கு 12:28-31) 

யூத சமயம் மக்களுக்குப் பல கட்டளைகளை வழங்கியிருந்தது. அக்கட்டளைகளுள் முக்கியமானது எது என்னும் கேள்விக்குப் பல யூத அறிஞர்கள் பதில் தந்தனர். இயேசுவை அணுகிச் சென்று "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்ட மறைநூல் அறிஞர் நல்ல எண்ணத்தோடுதான் அக்கேள்வியைக் கேட்டார். இயேசு அவருக்கு அளித்த பதில் "கடவுளை அன்பு செய்க; மனிதரை அன்பு செய்க" என்பதாகும். இயேசு இப்பதிலைப் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டி எடுத்துரைக்கிறார் (காண்க: இச 6:4-5; லேவி 19:18). கடவுள் நம்மைப் படைத்து, பாதுகாத்து, அன்போடு வழிநடத்துகின்ற தந்தை. எனவே, அவரை நாம் முழுமையாக அன்புசெய்வது பொருத்தமே. அவரிடத்தில் நம்மை நாம் எந்தவித நிபந்தனையுமின்றிக் கையளித்திட வேண்டும். இது முதன்மையான கட்டளை. இதற்கு நிகரான கட்டளையாக இயேசு "பிறரை அன்புசெய்க" என்னும் வழிமுறையை நல்குகின்றார். நாம் எல்லா மனிதரையும் வேறுபாடின்றி அன்பு செய்ய அழைக்கப்டுகிறோம். 

இயேசு அன்புக் கட்டளை பற்றி அளித்த பதிலைக் கேட்ட மறைநூல் அறிஞர் இயேசு கூறிய பதிலை முழுமையாக ஏற்றுக்கொண்டதோடு, அன்புக் கட்டளையை நிறைவேற்றுவது எருசலேம் கோவிலில் நிகழ்ந்த பலிகளை எல்லாம் விட மிகச் சிறந்தது எனக் கூறித் தம் இசைவைத் தெரிவிக்கிறார் (மாற் 12:32-33). இயேசு பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட அன்புக் கட்டளையை மக்களுக்கு மீண்டும் எடுத்துக் கூறிய நேரத்தில் அன்பு என்பது இரு பக்கங்களைக் கொண்டது எனக் காட்டுகிறார். கடவுளை அன்புசெய்வதோடு நாம் பிறரையும் அன்புசெய்ய வேண்டும். ஒன்றில்லாமல் மற்றது இல்லை. எனவே, இயேசு கடவுளின் அன்பில் எந்நாளும் நிலைத்திருந்து, அதே நேரத்தில் நம்மை முழுமையாக அன்புசெய்து நமக்காகத் தம்மையே பலியாக்கியதுபோல நாமும் இறையன்பிலும் பிறரன்பிலும் சிறந்து விளங்க அழைக்கப்படுகிறோம். அன்பு இல்லாத இடத்தில் வேறு நற்பண்புகளும் இராது. அன்பு இருக்குமிடத்தில் தன்னலம் மறையும்; பிறருடைய நலனுக்கு நாம் முன்னுரிமை கொடுப்போம். கடவுள் நம்மை எந்தவொரு நிபந்தனையுமின்றி அன்புசெய்வது போல நாமும் முழுமையாகக் கடவுளை அன்புசெய்து, அவருடைய அன்பின் தூண்டுதலால் எல்லா மக்களையும் அன்புசெய்திட முன்வருவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"அன்பே, அனைத்திலும் மேலான கட்டளை"

முன்பொரு காலத்தில் ஆபிரகாம் என்றொரு மனிதர் இருந்தார். அவர் கடவுள்மீது மிகுந்த பக்தி கொண்டவர். ஒரு சமயம் அவர் புனிதத்தலம் ஒன்றிற்குத் திருப்பயணம் மேற்கொண்டார். நீண்ட நாட்கள் நடந்ததன் பயனாக அவர் அந்த புனிதத்தலத்தை அடைந்தார்.

புனிதத்தலத்தை அடைந்ததும் ஓர் மூலையில் படுத்து ஓய்வெடுக்கத் தொடங்கினார். அன்று இரவு அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், வானதூதர்கள் இருவர் தோன்றி, பேறுபெற்றவர்கள் பட்டியலை வாசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு வானதூதர் மிகவும் சத்தமாக, "இந்த பேறுபெற்றவர் பட்டியலில் முதலில் இடம் பிடித்திருக்கின்ற "அம்மாபட்டணத்தில்" வசிக்கக்கூடிய யோசுவா, திருப்பயணம் மேற்கொள்வதில்லை. ஏன் ஆலயத்திற்குக்கூட வருவதில்லை. ஆனாலும் அவர் தன்னால் இயன்ற உதவிகளை, தன்னை விட எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் செய்து கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் இந்த பேறுபெற்றவர் பட்டியலில் முதலில் இடம் பிடித்திருக்கின்றார்" என்றார்.

இதைக் கேட்ட ஆபிரகாமிற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. உடனே அவர் அம்மாபட்டணத்தில் வசிக்கக்கூடிய யோசுவாவை பார்க்கப் புறப்பட்டுச் சென்றார். அம்மாபட்டணத்தை அடைந்ததும் அங்கிருந்தவர்களிடம் யோசுவாவைக் குறித்து விசாரித்துப் பார்த்தார். ஆனால், யாருக்கும் அவரைப் பற்றித் தெரியவில்லை. ஒருசில மணிநேர அலைச்சலுக்குப் பின்னர் ஆபிரகாம், யோசுவாவைக் கண்டுகொண்டார். யோசுவாவோ பாதையோரத்தில் அமர்ந்து செருப்புத் தைத்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ஆபிரகாமிற்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த மனிதர்தான் பேறுபெற்றவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரா?, இவரைப் பார்க்கும்போது அவ்வளவு ஒன்றும் பெரிய மனிதர் போன்று தெரியவில்லையே. சரி, எது அவரை பேறுபெற்றவர் பட்டியலில் முதலிடத்தில் அமரச் செய்தது என்று விசாரித்துப் பார்ப்போம் என்று அவரிடத்தில் சென்றார்.

"யோசுவா! நீங்கள் பேறுபெற்றவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளீர்கள். பேறுபெற்றவர் பட்டியலில் முதல் இடத்தில் இடம்பெறுகின்ற அளவுக்கு அப்படி என்ன செய்தீர்கள்?, சொல்லுங்கள்?" என்றார் ஆபிரகாம். உடனே யோசுவா என்ற அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி, "நான் அன்றாடம் செருப்பு தைத்து, அதிலிருந்து கிடைக்கக்கூடிய வருமானத்தைக் கொண்டு பிழைப்பை ஓட்டக்கூடியவன். ஒருநாள் என்னுடைய மனைவி என்னிடத்தில், "அறுசுவை உணவு சாப்பிடவேண்டும் என்று ஆசையாக இருக்கின்றது, எனக்காக அருகாமையில் இருக்கக்கூடிய உணவகத்திலிருந்து அதை வாங்கித்தர முடியுமா?" என்று கேட்டாள். நானும் "கையில் கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு வாங்கித் தருகிறேன்" என்று சொல்லிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்தேன். கையில் ஓரளவு பணம் சேர்ந்தபிறகு உணவகத்திற்குச் சென்று, அறுசுவை உணவை வாங்கி வந்தேன்.

அப்போது பாதையோரத்தில் ஒரு பிச்சைக்காரன் மயக்கமடைந்து விழுந்து கிடந்ததைப் பார்த்தேன். அவனை எழுப்பி விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவன் சாப்பிட்டு ஒருவாரம் ஆகிவிட்டது என்று. உடனே நான் என்னுடைய மனைவிக்காக வாங்கிக்கொண்டு போன அறுசுவை உணவை எடுத்து அவனுக்கு உண்ணக் கொடுத்தேன். அவனும் வயிறார சாப்பிட்டு என்னை மனதார வாழ்த்தினான். அப்போது அவனுடைய முகத்தில் தெரிந்த சந்தோசம், அதற்கு முன்னதாக யாரிடத்திலும் கண்டதில்லை. அன்றைக்கே நான் முடிவுசெய்தேன். இனிமேல் நாம் நமக்குக் கிடைக்கூடிய உணவை, நம்மிலும் வறியவரோடு பகிர்ந்து உண்ணவேண்டும் என்று. அன்றிலிருந்து இன்றுவரை அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன். ஒருவேளை அதுதான் என் பெயரை பேறுபெற்றவர் பட்டியலில் முதல் இடத்தில் வைக்கக் காரணமாக இருக்குமோ என்னவோ" என்றார். ஆபிரகாம் உண்மையை உணர்ந்துகொண்டவராய் அங்கிருந்து நகர்ந்தார்.

அன்போடு நாம் எளியவருக்குச் செய்யக்கூடிய உதவி, இறைவனுடைய பார்வையில் உயர்ந்ததாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அது நாம் இறைவனை அன்பு செய்வதற்குச் சமமாக இருக்கின்றது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசககத்தில் மறைநூல் அறிஞர் இயேசுவிடம், "அனைத்திலும் முதன்மையான கட்டளையை எது" என்று கேட்கின்றபோது இயேசு, இறையன்பே முதன்மையான கட்டளை, அதே நேரத்தில் இறையன்புக்கு இணையான கட்டளை பிறரன்பு என்கின்றார். இறைவனில் நாம் கொள்கின்ற அன்பு, மனிதரை அன்பு செய்யத் தூண்டவேண்டும்; மனிதரை அன்பு செய்யாமல் இறைவனை அன்பு செய்ய முடியாது என்பதுதான் இயேசுவின் ஆணித்தரமான பதிலாக இருக்கின்றது.

ஆகவே, நாம் நம்மோடு வாழக்கூடிய மனிதர்களை முழுமையாய் அன்பு செய்து, அதன்வழியாக இறைவனை அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருள் பெற்று, இறையாட்சியை நமதாக்குவோம்.

Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!