Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      08  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 3ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28

ஆண்டவர் கூறியது: நான் இஸ்ரயேலுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.

அவர்களோ செவிசாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை. பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்.

உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை; கவனிக்கவில்லை; முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.

நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்; அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்; அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள். தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 95: 1-2. 6-7a. 7b-9 (பல்லவி: 8b,7b )
=================================================================================

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.

1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7a அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். பல்லவி

7b இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! 8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவே 2: 12-13

அல்லேலூயா, அல்லேலூயா! "இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்,"என்கிறார் ஆண்டவர்.
அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்.

தூயலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 14-23


ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார். கூட்டத்தினர் வியந்து நின்றனர்.

அவர்களுள் சிலர், "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்"என்றனர்.

வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.

இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்?

ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.

நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!

வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக்கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார். என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

பேச்சிலே ஆற்றல் இருக்கின்றது இயேசுவுக்கு.
இதனை ஒருவர் எப்படி பெற்றுக் கொள்ள முடியும்.
நல்லது செய்ய முற்படும் மனிதர்கள் எல்லாரும் தன்னிடம் கணம் இல்லாததால், பயமில்லாமல் துனிவோடு பேச இயலுகின்றது.

இத்தகையவர்கள் நல்லது செய்ய முற்படும் மனிதர்கள் உண்மையுள்ளவர்களாய் இருப்பதால் உண்மை அவர்களை இத்தகைய மனவுறுதி கொண்டவர்களாக மாற்றுகின்றது என்பதுவே உண்மை.

இதனைத் தானோ அன்றே உண்மை உங்களை விடுவிக்கும். உண்மையின் ஆவியானவர் உங்களை வழிநடத்துவார் என்றார் இயேசு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஒட்டுகிறேன் என்றால், உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்?"

நகரில் பிரபல நீதிபதி ஒருவர் இருந்தார். அவர் உண்மைக்குக் கட்டுப்பட்டு நல்ல தீர்ப்புகளை வழங்கி வந்தார். அவர் பணியாற்றி வந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவரும் பணியாற்றி வந்தார். அவருடைய முதன்மையான வேலையே நீதிபதி "என்னதான் நேர்மையான தீர்ப்புகளை வழங்கினாலும் அதற்கு எதிராக வாக்குவாதம் செய்து, தடைபோடுவதுதான்". சில நேரங்களில் அந்த வழக்குரைஞர் நீதிபதியின் மீது தனிமனிதத் தாக்குதல் நடத்தி வந்தார். இது பல நாட்களாகத் தொடர்ந்துகொண்டே இருந்தது.

ஒருநாள் நீதிபதி, தீர்ப்பு ஒன்றை வழங்கிவிட்டு உணவு விடுதி ஒன்றில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரோடு சேர்ந்து அவருடைய நண்பர்களும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது நீதிபதியின் நண்பர் ஒருவர் அவரிடம், "நண்பரே! உங்கள்மீது அந்த வழக்குரைஞர் தொடர்ந்து தனிமனிதத் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறாரே, நீங்கள் ஏன் அவருக்கு எதிராக ஒருவார்த்தை கூட சொல்லமாட்டேன் என்று இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு நீதிபதி அவரிடம், "உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா... ஓரூரில் பெண்ணொருத்தி இருந்தாள். அவள் ஒரு நாயை வளர்த்து வந்தாள். அந்த நாயானது சூரியனைக் கண்டாளே பயங்கரமாகக் குறைக்கும். சூரியனும் நாய் குறைக்கிறது என்பதற்காக இதுவரைக்கும் ஒளி கொடுக்க மறக்கவில்லை" என்று சொல்லிவிட்டு தொடர்ந்து பேசினார்.

"நாய் குறைக்கிறதே என்பதற்காக சூரியன் ஒளி கொடுக்க மறக்கவில்லை. அதுபோன்றுதான் நானும் அந்த வழக்குரைஞர் என்மீது தனிமனிதத் தாக்குதல் நடத்துகிறாரே என்பதற்காக என் பணியிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. என் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பேன்".

நம் வளர்ச்சி பிடிக்காதவர்கள் நம்மீது விஷ அம்புகளைப் பாயச்சுகின்றபோது, அதனை எப்படிக் கையாளவேண்டும் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, பேய்பிடித்து பேச்சிழந்த ஒருவரிடமிருந்து தீய ஆவியை விரட்டியடிக்கிறார். அதைப் பார்க்கக்கூடிய பரிசேயக்கூட்டம், இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்று விமர்சிக்கின்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு என்ன பதில் அளித்தார், அவர்களுடைய இந்த வீண் பழியை எப்படி கைகொண்டார் என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

முதலில் இயேசு எதனால் அல்லது யாருடைய துணியால் தீய ஆவியை ஓட்டினார் என்று சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாக இருக்கின்றது. திருத்தூதர் பணிகள் 10: 38ல் வாசிக்கின்றோம், "இயேசு கிறிஸ்துவின்மீது ஆண்டவராகிய கடவுள் தூய ஆவியின் வல்லமையைப் பொழிந்தருளினார். அதனால் அவர் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த மக்களை விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்" என்று. ஆம். இயேசு கிறிஸ்து தூய ஆவியால் முற்றிலுமாக நிரப்பப்பட்டிருந்தார். அத்தூய ஆவியால்தான் அவர் எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். அப்படியானால் பரிசேயர்கள் இயேசுவின் மீது சுமத்திய "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்ற வீண் வாதம் அர்த்தமற்றதாகி விடுகின்றது.

அடுத்ததாக இயேசு, பரிசேயர்கள் முன் வைத்த ஆதாரமற்ற வாதத்திற்குச் சொல்லக்கூடிய பதிலும் நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. இயேசு கூறுகின்றார், "தனக்கு எதிராகப் பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்காது" என்று. ஆம், பரிசேயர்கள் சொல்வதைப் போன்று இயேசு பெயல்செபூலைக் கொண்டுதான் பேய்களை ஓட்டினார் என்றால் அந்த அரசு எப்படி நிலைத்துநிற்கும்? அது நிச்சயமாக அழிந்துபோகும். ஆதலால், இயேசு தீய ஆவியின் துணை கொண்டு அல்ல, தூய ஆவியின் துணைகொண்டே பேய்களை ஓட்டினார் என்று சொல்லலாம். தொடர்ந்து இயேசு பரிசேயர்களிடம் வைக்கக்கூடிய வாதம், "நான் பெயல்செபூலின் துணை கொண்டு பேய்களை ஒட்டுகிறேன் என்றால், நீங்கள் யாரைக் கொண்டு பேய் ஒட்டுகிறீர்கள்?" என்பதாகும். இதற்கும் பரிசேயார்களால் பதில் சொல்லமுடியவில்லை. அவர்கள் இயேசு பேசியதைக் கண்டு திக்குமுக்காடிப் போய்விடுகிறார்கள். இயேசு தூய ஆவியால் பேய்களை ஓட்டுகின்றபோது அவர் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார் என்று சொல்வது எவ்வளவு பெரிய அராஜகம். அதனால் இயேசு அவர்களுக்கு சரியான சாட்டையடி பதிலைக் கொடுக்கின்றார்.

நம்முடைய வாழ்விலும் பலர் நம்மீது இருக்கின்ற பொறாமையினால் விமர்சனங்களை, பொய் புரட்டுகளை அள்ளிவீசுவார்கள். அவர்களை எப்படிக் கையாளவேண்டும் என்பதற்கு இயேசுதான் நமக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார். ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று நம்மீது வைக்கப்படும் விமர்சனங்களை விவேகமாய் கையாளுவோம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!