Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      07  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 3ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1,5-9

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள், முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்.

எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்.

நாம் குரல் எழுப்பும்போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? கவனமாய் இருங்கள்; உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்துபோகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா: 147: 12-13. 15-16. 19 (பல்லவி: 12a)
=================================================================================
பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக.

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி

15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. 16 அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழியச் செய்கின்றார்; சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார். பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதி நெறிகளையும் அறிவிக்கின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 63b, 68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே! நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர்.

தூயமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார்.

இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

கற்றுக் கொடுப்பதை சரியாக செய்பவரே பெரியவர் என அழைக்கப்படுவார்.
கற்றுக் கொடுப்பவர் தாம் கற்றுக் கொடுப்பவற்றை தாம் முதலிலே வாழ்ந்து பார்த்து, பின்னர் கற்றுக் கொடுக்க முற்படும் போதே அது கேட்போருக்கு நிறைந்த பலனை விளைவிக்கும் என்பது உண்மையாகின்றது.

தன்னிடம் இனிப்பு அதிகமாக சாப்பிடும் மாணவனை அழைத்து வந்து அவனுக்கு அறிவுரை சொல்லக் கேட்ட தாயிடம் ஒருவார கால அனுமதி வேண்டும் என கேட்டு, தன்னிடம் மாற்றத்தை வரவழைத்துக் கொண்டு பின்னர் போதனையை செய்தார் என மகாத்மா வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. அவர் இன்றும் பெரியவராக கருதப்படுகின்றார்.

வாழ்ந்து பார்த்து போதிப்பவர்களே உயர்ந்தவர்கள். வார்த்தை ஜாலத்தில் வறட்டு கௌரவத்தோடு போதனை மற்றவர்களுக்குத் தான் எனக்கில்லை என்பவர்கள் ஒரு விதத்தில் விபச்சாரர்களே. இவர்கள் தொழிலாய் போதனையை செய்ய முற்படும் போது சிறியவர்களே.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
திருச்சட்டம், இறைவாக்கின் நிறைவு அன்பு

சிலி நாட்டில் வாழும் தம்பதியினர் கார்லோஸ் அபார்க்கா, எரிக்கோ சோடிலோ. அன்பு என்றால் என்ன என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர்கள்.

சோடிலோவுக்கு கருப்பையில் நோய் வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவருக்கு தவறுதலாக வேறு ஒரு மருந்தைக் கொடுத்ததால் மூளை பாதிப்புக்கு உள்ளாகி நினைவில்லாத நிலைக்குப் (கோமா) போய்விட்டார். மருத்துவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லாரும் இவர் பிழைக்க மாட்டார், ரொம்பா நாள்கள் வாழமாட்டார் என்று கைவிட்டுச் சென்றபோதிலும் அவருடைய கணவர் கார்லோஸ் அபார்க்கா கடந்த 15 ஆண்டுகளாக கூடவே இருந்து பராமரித்து வருகிறார், ஒவ்வொருநாளும் மூன்று மணிநேரம் அவரோடு ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்.

யாராவது அவரிடம், "இன்னும் ஏன் இவரை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் வேலையைக் கவனிக்கக் கூடாதா?" என்று கேட்டால், "என் மனைவியைப் பார்த்துக்கொள்வதே என்னுடைய வேலை" என்பாராம்.

"ஆண்டவரை அன்பு செய்வதும், அடுத்தவரை அன்புசெய்வதும்தான் திருச்சட்டமும், இறைவாக்கும் சொல்லும் செய்தி" (மத் 22:40) என்பார் இயேசு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, "திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ அழிக்க வந்தேன் என நினைக்க வேண்டாம். அழிப்பதற்காக அல்ல அதை நிறைவேற்றவே வந்தேன்" என்கிறார்.

பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் இயேசுவின் மீது வைக்கும் குற்றச்சாட்டு, "இவன் மூதாதையரின் மரபையும், திருச்சட்டத்தையும் மீறுகிறான்" என்பதாகும். ஆனால் இயேசு திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ மீற வரவில்லை; அவை சுட்டிக்காட்டும் அன்பை, மானுட நேயத்தை போதித்து வாழ்வாக்குகிறார். ஓய்வு நாள் என்றால் ஒரு வேலையும் செய்யக்கூடாது என்று இருந்த யூதர்களுக்கு அந்நாளில் நோயாளியைக் குணப்படுத்தி நன்மை செய்கிறார். நாமும் நன்மை செய்ய வேண்டும் என்று பணிக்கிறார். கொலை செய்தால் பாவம் என்று நினைத்தவர்களுக்கு பிறர் மீது சினம் கொள்வதே பாவம் என்று போதிக்கிறார். இப்படியாக இயேசு சட்டங்களுக்கு புதிய அர்த்தம் தருவதுடன், எல்லா மக்களின்மீதும் பரிவும், அன்பும் காட்டுகிறார்.

இயேசுவின் சீடர்களாகிய நாம் சட்டங்களை, இறைவார்த்தையை கடமைக்காக வாசிக்காமல் அது சுட்டிக் காட்டும் மானுட நேயத்தை வாழ்வாக்குவோம். இறையருள் பெறுவோம்.

"வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என்பது அன்பு செலுத்தும் குடும்பத்தில் அங்கத்தினராய் இருப்பதுதான்" தாமஸ் ஜெபர்சன்

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
சொல்லில் சிறந்த சொல், செயல்!

சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் நடைபெற்ற "செனட் செக்ரட்டரி"க்கான தேர்தலில் ஒருவர் போட்டியிட்டார். அவர் அப்பதவி தனக்குக் கிடைத்தால், மக்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்வேன் என்று சொல்லிக்கொண்டு, வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரிக்கும் பணியில் மும்முரமாக இருந்தார்.

இதற்கிடையில் ஒரு மழைநாள் இரவில், அவருடைய வீட்டுக் கதவு தட்டப்பட்டது. "இந்த நேரத்தில் யார் கதவைத் தட்டுகிறார்?" என்று அவர், கதவைத் திறந்து பார்த்தபோது வெளியே ஒருவர் கொட்டும் மழையில் நின்றுகொன்று, "ஐயா என்னுடைய வாகனமானது பள்ளத்தில் மாட்டிக்கொண்டது, நீங்கள் பெரிய மனது வைத்து, எனது வாகனம் மேலே வருவதற்கு உதவி செய்தால் அது பேருதவியாக இருக்கும்" என்றார். உடனே செனட் செக்ரட்டரி பதவிக்குப் போட்டியிட்டவர் (Would be senator) சாலையில் இறங்கி, வானகத்தைத் தள்ளினார். வாகனம் எந்தவொரு சிரமும் இல்லாமல் நகர்ந்தது. உடனே அவர் வாகன ஒட்டியிடம், "வாகனம் பள்ளத்தில் இறங்கியதாகச் தெரியவில்லையே... அதே நேரத்தில் அதனைத் தள்ளியபோது உடனே நகர்ந்துவிட்டதே அப்படியிருக்கும்போது இந்த வேலையை தனியொரு ஆளாக இருந்து நீங்களே செய்திருக்கலாம், எதற்காக இந்த நடு இரவில் என்னை அழைத்தீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு அந்த வாகன ஒட்டி, "என்னுடைய வாகனம் பள்ளத்திலும் இறங்கவில்லை, அதில் எந்தவொரு குறையும் இல்லை. நான்தான் செனட் செக்ரட்டரி பதவிக்குப் போட்டியிடும் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைச் சோதித்துப் பார்க்க விரும்பினேன். உண்மையில் நீங்கள் நான் வைத்த சோதனையில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்; நீங்கள் மிகவும் இரக்கம் படைத்தவர்கள் என்று தெரிகிறது. நீங்கள் பதவிக்கு வரும் பட்சத்தில், நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் எனது வாக்கு உங்களுக்குத்தான் என்று சொல்லிவிட்டு, தன்னுடைய வாகனத்தை ஒட்டிக்கொண்டு கிளம்பினார்.

பதவி கிடைத்தால் மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அதனைச் செய்யவும் துணிந்த அந்த மனிதர் ஓர் உண்மையான மக்கள் தலைவனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்களுக்குப் போதிக்கும்போது, "(கடவுளின்) கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கின்றவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைபிடித்துக் கற்பிக்கின்றவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்" என்கின்றார். அதாவது, போதிப்பவரோ, சொல்பவரோ அல்ல, போதித்ததை வாழ்ந்து காட்டுகின்றவரும், சொன்னதைச் செய்துகாட்டுபவருமே உண்மையில் விண்ணரசில் மிகப் பெரியவர் என்பதுதான் இயேசு கூறுகின்ற செய்தியாக இருக்கின்றது.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் பலவற்றை மக்களுக்குப் போதித்தார்கள். ஆனால், அவர்களுடைய வாழ்க்கையோ முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. இரக்கத்தைப் போதித்தார்கள், ஆனால் நடைமுறையில் ஏழைக் கைம்பெண்களின் வீடுகளை அபகரித்தார்கள். அதனால்தான் இயேசு, "அவர்கள் சொல்வார்கள், செயலில் காட்டமாட்டார்கள்" என்று கடுமையாக விமர்சிக்கின்றார். ஆகையால், இயேசுவைப் பொறுத்தளவில் ஒருவர் இறைவார்த்தையைப் போதிப்பதால் மட்டும் விண்ணரசில் பெரியவராகிவிட முடியாது. போதித்ததை வாழ்வாக்க வேண்டும். அப்போதுதான் அவர் விண்ணரசில் பெரியவராக முட்யும்.

இந்த இடத்தில் இன்னொரு உண்மையையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அது என்னவென்றால், ஆண்டவர் இயேசு போதித்தாரே, அதனை வாழ்வாக்கினாரா என்றால், நிச்சயமாக ஆம் என்று சொல்லவேண்டும். ஏனென்றால், நிறைய நேரங்களில் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் ஆண்டவர் இயேசுவின் மீது வைத்த குற்றச்சாட்டு, "இயேசு திருச்சட்டத்தை மீறுகிறார்" என்பதாகும். உண்மையில் இயேசு திருச்சட்டத்தை மீறவில்லை, மாறாக இயேசு அதற்கு புது அர்த்தம் கொடுத்தார். மேலும் இயேசு தான் போதித்ததை அனைத்தையும் வாழ்ந்துகாட்டினர். இதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. எம்மாவு நோக்கி செல்லக்கூடிய சீடர்கள் இருவர், இயேசுவைக் குறித்துச் சொல்கின்றபோது, "அவர் சொல்லிலும் செயலிலும் வல்லவராக இருந்தார்" என்றுதான் சொல்கின்றார்கள். ஆகையால், இயேசு வெறுமனே போதித்தவர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அவர் போதித்ததை வாழ்ந்து காட்டியவர், மற்றவருக்கும் அதையே போதித்தவர் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று போதிப்பதோடு அல்லது சொல்வதோடு மட்டும் நின்றுவிடாமல், போதிப்பதை வாழ்ந்து காட்டுவோம். சொல்வதைச் செய்து காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!