Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      06  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 3ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 1: 2, 11-19

அந்நாள்களில் அசரியா நெருப்பின் நடுவில் எழுந்து நின்று உரத்த குரலில் பின்வருமாறு மன்றாடினார்: உமது பெயரை முன்னிட்டு எங்களை என்றும் கைவிட்டு விடாதீர்; உமது உடன்படிக்கையை முறித்து விடாதீர். உம் அன்பர் ஆபிரகாமை முன்னிட்டும், உம் ஊழியர் ஈசாக்கை முன்னிட்டும், உம் தூயவர் இஸ்ரயேலை முன்னிட்டும், உம் இரக்கம் எங்களைவிட்டு நீங்கச் செய்யாதீர். விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் அவர்களின் வழிமரபினரைப் பெருகச் செய்வதாக நீர் அவர்களுக்கு உறுதி அளித்தீர்.

ஆண்டவரே, எங்கள் பாவங்களால் மற்ற மக்களினங்களைவிட நாங்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்டோம்; உலகெங்கும் இன்று தாழ்வடைந்தோம். இப்பொழுது எங்களுக்கு மன்னர் இல்லை, இறைவாக்கினர் இல்லை, தலைவர் இல்லை; எரிபலி இல்லை. எந்தப் பலியும் இல்லை; காணிக்கைப் பொருளோ தூபமோ இல்லை; உம் திருமுன் பலியிட்டு, உம் இரக்கத்தைப் பெற இடமே இல்லை.

ஆயினும், செம்மறிக்கடாக்கள், காளைகளால் அமைந்த எரிபலி போலும் பல்லாயிரம் கொழுத்த ஆட்டுக்குட்டிகளாலான பலிபோலும் நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவோமாக. அவ்வாறே எமது பலி இன்று உம் திருமுன் அமைவதாக; நாங்கள் முழுமையாக உம்மைப் பின்பற்றுவோமாக; ஏனெனில் உம்மில் நம்பிக்கை வைப்போர் வெட்கத்திற்கு ஆட்படமாட்டார்.

இப்பொழுது நாங்கள் முழு உள்ளத்துடன் உம்மைப் பின்பற்றுகிறோம். உமக்கு அஞ்சி, உம் முகத்தை நாடுகிறோம். எம்மை வெட்கத்துக்கு உள்ளாக்காதீர்; மாறாக, உம் பரிவிற்கு ஏற்பவும், இரக்கப் பெருக்கிற்கு ஏற்பவும் எங்களை நடத்தும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா 25: 4-5ab. 6-7bc. 8-9 (பல்லவி: 6a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்.

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5ab உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7bc உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவே 2: 12-13

அல்லேலூயா, அல்லேலூயா! இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.

தூயமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21-35

அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?" எனக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம் கூறியது: "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.

உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, "என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்" என்றான்.

அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, "நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, "என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.

ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையில் அடைத்தான்.

அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றை எல்லாம் விளக்கிக் கூறினார்கள்.

அப்போது தலைவர் அவனை வரவழைத்து, "பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?" என்று கேட்டார்.

அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

"உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:
கடவுளின் அற்புத திட்டம், நாம் மன்னிப்பு பெற நாம் முதலில் அதனை பிறருக்கு வழங்கிட வேண்டும். பிறருக்கு கொடுக்கும் மன்னிப்பை பொறுத்தே, நம்முடைய மன்னிப்பு அடங்கியுள்ளது.
மன்னிப்போம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மன்னிப்போம், மன்னிப்புப் பெறுவோம்

ஒருமுறை பல்சமயக் கூட்டம் ஒன்று தில்லில் வைத்து நடைபெற்றது. அதில் ஒவ்வொரு மதத்தைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள், அது மட்டுமல்லாமல் ஏராளமான மக்களும் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தின் இடையே இந்து சமயத்தைச் சார்ந்த அன்பர்கள் சிலர், மேலை நாடுகளிலிருந்து வந்திருந்த கிறிஸ்தவப் பிரதிநிதிகளிடம், "மற்ற மதங்களில் இல்லாத தனிச்சிறப்பு உங்கள் கிறிஸ்தவ மதத்தில் என்ன இருக்கின்றது?" என்று கேட்டார்கள். அதற்கு கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த பிரதிநிதிகள் சிறிதும் தாமதியாமல், "மன்னிப்பு, மன்னிப்பு" என்று உரக்கச் சொனார்கள். கூட்டம் நடந்த அரங்கமே அவர்கள் அளித்த பதிலைக் கேட்டு கைதட்டலால் அதிர்ந்தது.

ஆம், கிறிஸ்தவ மதத்தின் தனிச் சிறப்பே மன்னிப்புதான்.

நற்செய்தி வாசகத்தில் பேதுரு இயேசுவிடம் வந்து, "ஆண்டவரே! என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?" என்கிறார். பேதுரு இப்படிக் கேட்பதில் அர்த்தம் இல்லாமலில்லை. யூத இராபிகளின் போதனைப்படி தவறு செய்த ஒருவரை மூன்றுமுறை மன்னிக்கலாம். பழைய ஏற்பாட்டில்கூட (ஆமோ 1:3, 6,9, 11) கடவுள் தவறு செய்கின்ற ஒருவரை மூன்றுமுறை மன்னிப்பதாக குறிப்புகள் இருக்கின்றன. இதை வைத்துக்கொண்டுதான் பேதுரு தான் மன்னிப்பதில் பெருந்தன்மையாக இருக்கிறேன் என்பதைச் சுட்டிக்காட்ட இயேசுவிடம் ஏழு முறை மட்டுமா?" என்று கேட்கின்றார். பேதுருவின் கேள்விக்கு இயேசுவின் பதில் வித்தியாசமாக இருக்கிறது. இயேசு பேதுருவிடத்தில் சொல்கிறார், "ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை". அதாவது நிபந்தனை இல்லாது மன்னிக்கவேண்டும் என்கிறார் இயேசு.

இப்படிச் சொல்லிவிட்டு இயேசு அதற்கோர் உண்மையைச் சொல்கிறார். உவமையின் சாரம்சம் கடவுளிடமிருந்து நாம் மன்னிப்பைப் பெறவேண்டும் என்றால், முதலில் நாம் அடுத்தவரை மனதார மன்னிக்கவேண்டும் என்பதாக இருக்கின்றது. நான் பிறர் செய்த குற்றங்களை மன்னிக்காதபோது இறைவனும் நம்முடைய குற்றங்களை மன்னிக்க மாட்டார் என்பதுதான் நிதர்சன உண்மையாக இருக்கின்றது.

இயேசு சொல்லக்கூடிய உவமையில் வரும் அரசர் தன்னிடம் 10000 தாலந்து கடன்பட்ட பணியாளரை மன்னிக்கிறார். பத்தாயிரம் தாலந்து என்று சொல்லும் போது ஒரு மனிதர் 15 ஆண்டுகள் வேலை பார்ப்பதால் கிடைக்கின்ற சம்பளமாகும். ஆனால் அந்தப் பணியாளரோ தன்னிடம் 100 தெனாரியம் கடன்பட்ட ஒருவரை மன்னிக்காமல் அவரைச் சிறையில் அடைக்கிறார். ஒரு தெனாரியம் என்றால் ஒருநாள் கூலி, நூறு தெனாரியம் என்று சொல்லும்போது நூறு நாள் வேலைக் கூலி. இப்படி பதினைந்து ஆண்டுகள் தரக்கூடிய கூலியை கடனாகப் பெற்ற ஒருவர், நூறுநாள் கூலியை கடனாகப் பெற்ற தன்னுடைய சக பணியாளரை மன்னிக்காததினால்தான் அரசர் மன்னிக்க மறுத்த அந்தப் பணியாளரை பிடித்து சிறையில் அடைக்கின்றார். ஆகையால், இங்கே மன்னிப்புதான் ஒரு மனிதனைத் தீர்ப்பிட அளவுகோலாக இருக்கின்றது.

இயேசுவின் போதனைகளில் இத்தகைய சிந்தனை விரவிக் கிடப்பதை நற்செய்தியின் பல இடங்களில் நாம் படித்தறிகின்றோம்.

மலைப்பொழிவில், "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்" என்கிறார் (மத் 5:7), தான் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்த ஜெபத்தில்கூட, "எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னியும்" என்கிறார் (மத் 6:12). அதாவது, பிறர் செய்த குற்றங்களை நாம் மன்னிக்கிறபோதுதான் இறைவனும் நம்முடைய குற்றங்களை மன்னிப்பார் என்கிறார். தூய யாக்கோபும்கூட தன்னுடைய திருமுகத்தில், "இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும்" என்கிறார் (யாக் 2:13). ஆகவே, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒருவர் செய்த குற்றங்களை மனதார மன்னிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

மன்னிப்பதில் நிறைய நன்மைகள் இருப்பதாக இன்றைய மருத்துவம் நமக்கு எடுத்துச் சொல்கிறது. ஆம், அது முற்றிலும் உண்மை. மன்னிக்கின்றபோது நம்முடைய மனம் இலகுவாகிறது; மன்னிப்பதால் மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது; மன்னிப்பதால் நாம் கடவுளின் அன்புப் பிள்ளைகள் ஆகின்றோம். தூய பவுல் கொலோசையருக்கு எழுதிய மடலில் கூறுவார், "ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்; ஒருவரைப் பற்றி ஒருவருக்கு எதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். (கொலோ 3:13).

ஆகையால், இயேசு நமக்குக் கற்பித்தது போல ஒருவரை ஒருவர் நிபந்தனையற்ற முறையில் மன்னித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
எத்தனை முறை மன்னிப்பது?

கடந்த நூற்றாண்டில் நம்முடைய இந்தியத் திருநாட்டில் வாழ்ந்த மிகப்பெரிய மகான் ஏகநாதர் என்பவர். அவர் மிகுந்த அன்பிற்கும் பொறுமைக்கும் பெயர்போனவர்.

ஒருநாள் அவர் வழக்கம்போல் காலையில் எழுந்து கோதாவரி ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரைப் பிடிக்காத ஒருவன், தனது வீட்டின் மேல் மாடியிருந்து வாய் கொப்பளித்த நீரை அவர்மீது உமிழ்ந்தான். ஏகநாதர் அவனிடத்தில் எதுவும் பேசவில்லை. மாறாக, மீண்டுமாக கோதாவரி ஆற்றில் குளித்துவிட்டு திரும்பி வந்தார். அப்போதும் ஏகநாதரைப் பிடிக்காத அந்த மனிதன் அவர்மீது உமிழ்ந்தான். இந்த முறையும் ஏகநாதர் அவனிடத்தில் எதுவும் பேசாமல், ஆற்றில் குளித்துவிட்டு தனது வீட்டுக்குத் திரும்பி வந்தார். மறுபடியும் அந்த மனிதன் ஏகநாதர் மீது உமிழ்ந்தான். அப்போதும் ஏகநாதர் அவனிடத்தில் எதுவும் பேசாமல் ஆற்றிற்குச் சென்று குளித்துவந்தார்.

இப்படி அந்த மனிதன் நூற்றுஎட்டு முறை ஏகநாதர்மீது உமிழ்ந்தபோதும், ஏகநாதர் அவனிடத்தில் எதுவும் பேசாமல் ஆற்றிற்குச் சென்று குளித்து வந்தார். இதற்கிடையில் ஏகநாதர்மீது தொடர்ந்து உமிழ்ந்துகொண்டிருந்தவன் சிந்திக்கத் தொடங்கினான், "இத்தனை முறை நாம் அவர்மீது உமிழ்ந்தபோதும் அவர் சிறிதும் கோபம் கொள்ளாமல் பொறுமையாக இருக்கிறாரே, உண்மையில் அவர் பெரியவர்" என உணர்ந்து, அவரிடத்தில் சென்று, அவருடைய காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். அப்போது ஏகநாதர் அவனிடம், "இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கின்றது?. ஒவ்வொருமுறையும் நீ என்மீது உமிழ்ந்தபோது, நான் ஆற்றிற்குச் சென்று குளித்துவந்தான். இவ்வாறு நீ நூற்று எட்டு முறை என்மீது உமிழ்ந்தாய், நானும் அதன்பொருட்டு நூற்று எட்டு முறை ஆற்றிற்குச் சென்று குளித்து வந்தான். ஒருவகையில் நீதான் எனக்கு புண்ணியத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றாய். அதன்பொருட்டு உனக்கு நன்றி" என்று பெருந்தன்மையாகப் பேசிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

ஏகநாதரைப் பிடிக்காதவன், அவர்மீது நூற்றுஎட்டு முறை உமிழ்ந்தபோதும் அவர் அவனை மன்னித்து, அவனிடம் பெருந்தன்மையாக நடந்துகொண்டது மிகவும் வியப்புக்குரியதாக இருக்கின்றது. மன்னிப்பு என்பது சாதாரண வார்த்தை கிடையாது, அது மனுக்குலத்தை மாண்புறச் செய்யும் ஓர் உயிருள்ள சக்தி.

நற்செய்தி வாசகத்தில், சீமோன் பேதுரு இயேசுவிடம் வந்து, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்தால், நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?" என்று கேட்கின்றார். அதற்கு இயேசு அவரிடம், "ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை" என்று சொல்கின்றார். சீமோன் பேதுரு இயேசுவிடத்தில் கேட்ட கேள்வியும் அதற்கு இயேசு சொன்ன பதிலும் நமது ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

பேதுரு இயேசுவிடத்தில், தனக்கு எதிராகப் பாவம் செய்யும் சகோதர சகோதரரை ஏழு முறை மன்னிக்க வேண்டுமா? என்று கேட்பதன் உள்நோக்கம் இயேசு அவரைப் பாராட்டவேண்டும் என்பதுதான். எப்படி என்றால், யூத சமயம் தவறு செய்யும் ஒருவரை மூன்றுமுறை மன்னித்தாலே போதுமானது என்று சொல்லிவந்தது. பேதுரு இதனை உள்வாங்கிக்கொண்டு மூன்றோடு மூன்றைக் கூட்டி, இன்னும் அதனோடு ஒன்றைக் கூட்டி, பெருந்தன்மையாக ஏழுமுறை மன்னிக்க வேண்டுமா? என்று கேட்கிறார். அதற்கு இயேசு அவரிடம், ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை" என்று சொல்லிவிட்டு நிபந்தனை இல்லாமல் மன்னிக்கவேண்டும் என்று சொல்கின்றார். அதனை விளக்கும்பொருட்டு ஓர் உவமையையும் சொல்கின்றார்.

ஆண்டவர் இயேசு இவ்வாறு சொல்வதற்குக் காரணம், இஸ்ரயேல் மக்கள் எத்தனைமுறையோ தவறு செய்தாலும் அத்தனை முறையும் தந்தையாம் கடவுள் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார். எனவே அவரைப் போன்று நாமும் நமக்கு எதிராகப் பாவம் செய்பவர்களை மன்னிக்க வேண்டும் என்பதுதான். மத்தேயு நற்செய்தி 5:48 ல் இயேசு கூறுவார், "உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவாராய் இருப்பது போன்று, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்" என்று. தந்தைக் கடவுளை நிறைவுள்ளவராக இருக்கச் செய்வது, அவருடைய அளவுகடந்த பொறுமையும் அளவுகடந்த மன்னிப்பும்தான். நாமும் தந்தைக் கடவுளைப் போன்று நமக்கு எதிராகத் தீங்கு செய்வோரை மன்னிக்கின்றபோது நாமும் நிறைவுள்ளவர்களாவோம் என்பது உறுதி.

ஆகவே, இறைவழியில் நடக்கும் நாம், இறைவனைப் போன்றே மன்னிப்பதில் தாராளமாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
மன்னிப்பே மகத்தான மருந்து

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவிற்கும், ஜப்பானுக்கும் இடையே நடந்த போரில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டு ஜப்பானில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையின் காரணமாக அவர்கள் இருவரும் ஜப்பான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, தங்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஆண்டுகள் பல உருண்டோடின. 1995 ஆம் ஆண்டு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இரண்டு இராணுவவீரர்களும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்டார், "நம்மை சிறைபிடித்து வைத்திருந்த அந்த ஜப்பான் நாட்டு இராணுவ வீரர்களை மன்னித்துவிட்டாயா? என்று. அதற்கு அவர், "இல்லை, இல்லை என்னால் அவர்களை அவ்வளவு சீக்கிரமாக மன்னிக்க முடியவில்லை"என்றார்.

உடனே கேள்வி கேட்டவர் மற்றவரிடம், "உன்னால் அவர்களை இன்னும் மன்னிக்க முடியவில்லையா, அப்படியானால் இன்னும் நீ அந்தச் சிறையில்தான் இருக்கிறாய்"என்று முடித்தார்.

ஆம், நமக்கெதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்காதபோது, நாம் இன்னும் சிறையில்தான் இருக்கிறோம் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு அழகாக எடுத்துரைக்கிறது. நற்செய்தி வாசகத்தில் சீமோன் பேதுரு ஆண்டவர் இயேசுவிடம், "ஆண்டவரே! என்னுடைய சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் எனக்கெதிராக குற்றம் செய்தால், நான் அவர்களை எத்தனை முறை மன்னிப்பது, ஏழுமுறையா?"என்று கேட்கின்றார். அதற்கு இயேசு, "ஏழுமுறை அன்று, எழுபது முறை ஏழுமுறை"என்கிறார். அதாவது நாம் ஒவ்வொருவரும் நிபந்தனையற்ற முறையில் மன்னிக்கவேண்டும் என்பதுதான் இயேசு நமக்கு உணர்த்த விரும்பும் பாடமாக இருக்கின்றது.

தொடர்ந்து ஆண்டவர் இயேசு கூறும் மன்னிக்க மறுத்த பணியாளனின் உவமை நம்மை இன்னும் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது. கடவுள் நம்மை கணக்கற்ற விதமாய் மன்னிக்கிறார். ஆனால் நாமோ நம்மோடு வாழும் சக மனிதர்கள் செய்யும் சாதாரண குற்றத்தையும் பெரிதுபடுத்தி, அவர்களை மன்னிக்காமலே இருக்கிறோம் என்பதை இவ்வுவமை வேதனையோடு பதிவுசெய்கிறது.

விவிலியம் முழுமைக்கும், குறிப்பாக திருப்பாடல் 130:4 ஆம் வசனத்தில் படிக்கின்றோம், "கடவுள் மன்னிப்பு அளிப்பவர்"என்று. ஆகவே கடவுள் நம்மை அளவுகடந்த விதமாய் மன்னிப்பது போன்று, நாமும் பிறரை மன்னிக்க வேண்டும். இன்றைய நற்செய்தியின் இறுதிப்பகுதியில் இயேசு சொல்வார், "உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர், சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால், விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்"என்று. எனவே நாம் பிறர் செய்த குற்றங்களை மன்னித்து, இறைவனுக்கு ஏற்ற மக்களாக வாழுவோம்.

இங்கே மன்னிப்பதன் வழியாக நடக்கக்கூடிய அற்புதங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பல ஆண்டுகளாக நமக்கு இருக்கக்கூடிய உடல், மனப்பிரச்சனைகள் எல்லாம் பிறரை மன்னிப்பதன் வழியாக காணாமல் போய்விடுகிறது. "எல்லாரையும் மனதார மன்னிப்பதே ஒருவர் அவருக்குக் கொடுத்துக் கொள்ளும் மிகப்பெரிய கொடை"என்பார் மாயா ஆஞ்சலோ என்ற எழுத்தாளர் (It's one of the greatest gifts you can give yourself, to forgive. Forgive everybody).

ஆகவே, கடவுள் எப்படி நம்மை அளவுகடந்த விதத்தில் மன்னிக்கிறாரோ, அதுபோன்று நாமும் பிறர்செய்யும் குற்றங்களை மன்னித்து, அவர்களை ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
மன்னிப்போம் மறப்போம்

2003 ஆம் ஆண்டு அமெரிக்க ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி இது.

கேய் லீ ஹேரியட் என்ற மூன்று வயது குழந்தையும் அவளுடைய சகோதரியும் அவர்களுடைய தோட்டத்தில் சந்தோசமாகப் பாடிக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ பாய்ந்து வந்த மூன்று துப்பாக்கிக் குண்டுகள் கேய் லீ ஹேரியட்டின் முதுகில் பாய அவள் நிலை குழைந்துபோனாள். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவள் உயிர் பிழைத்தாள். சுட்டவன் 23 வயதான ஆண்டனி வாரன். அவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டான்.

நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஒரு பக்கம் குற்றவாளி. இன்னொரு பக்கம் கேய் லீ ஹேரியட். அவள் தன்னுடைய இடத்திலிருந்து இறங்கி வந்து குற்றவாளியின் முன்பாக நின்று தேம்பித் தேம்பி அழுதாள். பின்னர் அவனிடம், "நீங்கள் எனக்கு ஏன் இப்படி செய்தீர்கள். இது குற்றம், இருந்தாலும் உங்களை நான் மன்னிக்கிறேன்"என்றாள். அவளோடு இருந்த அவளுடைய சகோதரியும், தாயும் அவனை மனதார மன்னித்தார்கள். அங்கே கூடி இருந்தவர்கள் இதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு போனார்கள்.

ஒரு மனிதன் இறை நிலையை அடைய வேண்டும் என்றால் அவனிடம் மன்னிப்பு இருக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவிடம் பேதுரு, "எனக்கெதிராக குற்றம் செய்யும் சகோதர சகோதரியை எத்தனை முறை மன்னிப்பது ஏழுமுறையா? என்று கேட்கிறார். அதற்கு ஆண்டவர் இயேசு, "எழுபது முறை ஏழு முறை"என்று சொல்லி நிபந்தனை இல்லாமல் மன்னிக்கச் சொல்கிறார்.

பலர் நினைக்கலாம் மன்னிப்பது பலவீனம் என்று. ஆனால் அது உண்மையல்ல. மன்னிப்பது பலவீனம் அல்ல, அது பலவான்கள் செய்யக்கூடியது. எல்லாராலும் மன்னிக்க முடியாது. இயேசு கிறிஸ்து தனக்கு எதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்கிறார். நாமும் மன்னிக்க வேண்டும் என்று கற்பிக்கிறார்.

இன்றைக்கு மருத்துவம் (கேம்பைன் பார் பர்கிவ்னெஸ் அறிக்கை) சொல்லக்கூடிய உண்மை "ஒரு மனிதருக்கு எதிராக நாம் நம்முடைய உள்ளத்தில் கொள்ளும் கோபம், எரிச்சல் நம் மூளையில் வழுவாகி, அதுவே நம் இயல்பாகி, பின்னர் அதுவே நம்முடைய வாழ்வில் தவிர்க்க முடியாததாக மாறிப்போய்விடுகிறது. மாறாக நாம் மன்னித்து வாழும்போது உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கிறது.

எனவே நாம் ஆண்டவர் இயேசுவை போன்று மன்னித்து வாழுவோம். அதன் வழியாக இறை இயல்பில் பங்கு கொள்வோம்.

"தம் சகோதர் தனக்கு எதிராக தவறு செய்யும் போது மன்னிக்காதவர் எப்படி கடவுளிடம் பாவ மன்னிப்புக் கேட்க முடியும்"(சீஞா 28: 4).

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!