Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      03  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 3ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20

ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.

உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து, நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.

பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா 103: 1-2. 3-4. 9-10. 11-12 (பல்லவி: 8a)
=================================================================================

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. 12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 15: 18
அல்லேலூயா, அல்லேலூயா! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், "அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்" என்று அவரிடம் சொல்வேன் அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.

தூய லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" என்று முணுமுணுத்தனர்.

அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: "ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, "அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்" என்றார்.

அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.

பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.

அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், "என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்" என்று சொல்லிக்கொண்டார்.

உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், "அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்" என்றார்.

தந்தை தம் பணியாளரை நோக்கி, "முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும் காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்துகொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, "இதெல்லாம் என்ன?" என்று வினவினார்.

அதற்கு ஊழியர் அவரிடம், "உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்" என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.

அதற்கு அவர் தந்தையிடம், "பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.

ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!" என்றார்.

அதற்குத் தந்தை, "மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார்.""

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில்இ அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.
பாவத்தை பார்க்காமல், பாவியின் வாழ்வில் அக்கரை கொண்டவரே நம் இறைவன்.
நம்பிக்கை கொண்டவராக, நம்முடைய பாவங்களை ஓப்புக் கொண்டு, பாவ மன்னிப்பின் மீது அக்கரை கொண்டவராக, இத்தவக்காலத்தில் பாவத்தை அகற்றி, மன்னிப்பு பெற்றவர்களாக வாழ முன்வருவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
ஊதாரித்தந்தை!

சிறுநகர் ஒன்றில் வினோத் என்ற சிறுவன் இருந்தான். அவன் படிப்பில் பயங்கர திறமைசாலி. அதனால் அவனுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். நண்பர்களில் ஒருசில தீயவர்களும் இருந்தார்கள். அவர்கள் அவனைக் கெடுத்து, கேடுற்றவனாக மாற்றினார்கள்.ஒருகட்டத்தில் வினோத் தன்னுடைய தந்தையிடமிருந்து பணத்தை சுருட்டிக்கொண்டு, தீய நண்பர்களோடு சேர்ந்து வெளியூருக்கு ஓடிப்போனான். அப்போது அவனுடைய தந்தையும் தாயும் தேடாத இடமில்லை. ஆனாலும் அவன் அவனுடைய பெற்றோரின் கண்ணில் படவே இல்லை. சில மாதங்கள் கழித்து அவன் தன்னிடமிருந்த பணமெல்லாம் தீர்ந்தபிறகு, வேறுவழியில்லாமல் வீட்டுக்குத் திரும்பி வந்தான். அப்போது வினோத்தின் பெற்றோர் அவனை எதுவும் சொல்லாமல், அன்போடு ஏற்றுக்கொண்டார்கள்.

எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், வினோத் மீண்டுமாக தன்னுடைய தந்தையிடமிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தீய நண்பர்களோடு சேர்ந்து, தொலைதூரத்திற்கு ஓடிப்போனான். இந்த முறை வினோத்தின் பெற்றோர்கள் அவனை எங்கெல்லாமோ தேடித்பார்த்தார்கள். ஆனால், ஒரு பயனும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தங்களுடைய மகனை நினைத்து நினைத்து ஒவ்வொருநாளும் அழுதுகொண்டே இருந்தார்கள். ஓரிரு மாதங்கள் கழித்து வினோத் தன்னுடைய நண்பர்கள், பணம் அத்தனையும் தன்னைவிட்டுப் போனபின்பு தனது பெற்றோரிடத்தில் திரும்பி வந்தான். அப்போதும் அவனை அவர்கள் அன்போடு ஏற்றுக்கொண்டார்கள். இன்னும் ஒருசில முறை வினோத் தன்னுடைய வீட்டைவிட்டு ஓடி, மீண்டுமாகத் திரும்பி வந்தபோதும் அவனை அவனுடைய பெற்றோர்கள் ஒருகுறையும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டார்கள்.

இதற்கிடையில் வினோத் எப்போதெல்லாம் வீட்டைவிட்டு ஓடிப்போகிறானோ, அப்போதெல்லாம் அவனுடைய தந்தை, இரயில் நிலையத்திற்குச் சென்று, தன் மகன் வருவானா என்று காத்துக்கொண்டே இருப்பார். அவன் வந்தபிறகு கடைத் தெருவுக்குச் சென்று, நல்ல மீன் வாங்கி வந்து அவனுக்கு விருந்துப் படைப்பார். இதையெல்லாம் பார்த்துவிட்டு வினோத்தின் தாயார், அவனுடைய தந்தையிடம், "நீங்கள் இப்படிச் செல்லம் கொடுப்பதால்தான் அவன் இப்படி அடிக்கடி வீட்டைவிட்டு ஓடிப்போகிறான்" என்று குறைபட்டுக்கொண்டார். அப்போதெல்லாம் வினோத்தின் தந்தை, "என்றைக்காவது ஒருநாள் நம் பையன் திருந்துவான், அந்த நம்பிக்கையில்தான் இப்படி நடந்து வருகிறேன்" என்று சொல்லி வந்தார்.

ஒருமுறை வினோத் வீட்டைவிட்டு ஓடி, மீண்டுமாகத் திரும்பி வந்தபோது, வினோத்தின் தந்தை முன்புபோல் கடைத்தெருவுக்குச் சென்று, மீன்களை வாங்கிவந்து, அவற்றைப் பொறித்து அறுசுவை படைத்து, அதனை வினோத்திற்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். அவனும் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, தூங்கச் சென்றான். அப்போது அவனுடைய தந்தை அவன் தூங்கிவிட்டான் என நினைத்துக்கொண்டு, அவனுடைய படுக்கைக்கு அருகே சென்று, விவிலியத்திலிருந்து ஒருசில பகுதிகளை வாசித்து, பின்னர் அவனுடைய தலையில் கைவைத்து, "என் அன்பு மகன் நன்றாக இருக்கவேண்டும்" என்று ஜெபித்துவிட்டுச் சென்றார். இதனை உறங்காமல் கேட்டுக்கொண்டிருந்த வினோத் உள்ளம் உருகிப்போனான். தனது தந்தை தன்மீது இத்தனை அன்பு வைத்திருக்கும்போது நான் ஏன் இப்படி வீட்டைவிட்டு அடிக்கடி ஓடிப்போகவேண்டும்!. இனிமேலும் அப்படிப்பட்ட தவற்றினைச் செய்யக்கூடாது" என்று முடிவு செய்து அன்றிலிருந்தே புதிய மனிதனாக வாழத் தொடங்கினான். பையினிடம் தென்பட்ட இத்தகைய மாற்றத்தைக் கண்டு, அவனுடைய பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

நிகழ்வில் வரும் வினோத் எவ்வளவுதான் தவறு செய்தபோதும் அவனுடைய தந்தை, அவன்மீது மாறாத அன்பு கொண்டிருந்தார். அந்த அன்பே அவன் திருந்தி, புதிய மனிதனாக வாழ வழிவகுத்தது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு ஊதாரி மகனுடைய உவமையைச் சொல்கிறார். இயேசு சொல்லக்கூடிய இந்த உவமையை ஊதாரி மைந்தனின் உவமை என்று சொல்வதை விடவும், ஊதாரித் தந்தை என்று சொல்வதே பொருத்தமானது. ஏனென்றால், இளையமகன் தன்னிடமிருந்து சொத்தையெல்லாம் பிரித்துக்கொண்டு போய், பாவிகளோடு பாவ வாழ்க்கை வாழ்ந்து, மீண்டுமாகத் திரும்பி வந்தபோது, தந்தை அவனை அன்போடு ஏற்றுக்கொள்கிறார்; அவனை ஓர் அடிமையாக அல்ல, தனது அன்பு மகனாக ஏற்றுக்கொள்கின்றார். பாவ வாழ்க்கை வாழ்ந்துவிட்டு வரும் பிள்ளையை ஒரு தந்தை ஏற்றுக்கொள்வது இன்றைக்கு மிகக் கடினம். ஆனால், ஆண்டவராகிய கடவுள் பாவ வாழ்வு வாழ்ந்துவிட்டு திரும்பி வருகின்ற ஒருவரை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார் என்பதைத்தான் இந்த உவமையின் வழியாக ஆண்டவர் இயேசு சொல்கின்றார்.

"கடவுளுக்கு ஏற்ற பலி, நொறுங்கிய உள்ளமே" (திபா 51: 17) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆம், தவறு செய்யும் எவரும் தன்னுடைய தவற்றை உணர்ந்து, தந்தைக் கடவுளிடம் திரும்பி வரும்போது அவரை அன்போடு ஏற்றுக்கொள்ளும் தந்தையாக இருக்கின்றார் நம்முடைய விண்ணகத் தந்தை. ஆகவே, தவறை உணர்ந்து, நம்மீது அளவு கடந்த அன்பு கொள்ளும் ஆண்டவரும் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

"இயேசு, "பெண் ஒருவரிடம் இருந்த பத்து திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணைய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, "என்னோடு மகிழுங்கள். ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பார்" என்றார்"" (லூக்கா 15:8-9)

காணாமற்போன ஆடு பற்றி உவமையும் (லூக் 15:4-7) காணாமற்போன திராக்மா உவமையும் (லூக் 15:8-10) பல வகைகளில் மிகவும் ஒத்திருக்கின்றன. இரண்டுமே "மகிழ்ச்சி" பற்றிய உவமைகள். காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்த ஆயர் "நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, "என்னோடு மகிழுங்கள்" என்றார்" (லூக் 15:6). அதுபோலவே, காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்த பெண்ணும் தம் "தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, "என்னோடு மகிழுங்கள்" என்றார்" (லூக் 15:9). அக்கால பாலஸ்தீன நாட்டில் சாதாரண வீடுகளின் உள்ளே அவ்வளவு வெளிச்சம் இருப்பதில்லை. எனவேதான் தன்னிடமிருந்த திராக்மா (ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம்) தவறிப் போனதும் அது வீட்டுக்குள்ளேதான் எங்கேயோ விழுந்திருக்க வேண்டும் என அப்பெண் சரியாக முடிவுசெய்கிறார். அதைத் தொடர்ந்து அந்த நாணயத்தை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும் என அவர் உறுதியாயிருந்ததால் முதலில் "எண்ணெய் விளக்கை ஏற்றுகிறார்""; பின் வீட்டைப் பெருக்குகிறார்; கவனமாக அந்த நாணயத்தைத் தேடுகிறார் (லூக் 15:8). அவருடைய முயற்சி வீண்போகவில்லை. தான் தொலைத்துவிட்ட நாணயத்தை அவர் மீண்டும் கண்டுபிடிக்கிறார். 

தவறிப் போன பொருள் கிடைத்துவிட்டால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்பு. ஆனால் இப்பெண் அந்த மகிழ்ச்சியைத் தன் உள்ளத்தில் மட்டுமே வைத்துக்கொண்டிருக்கவில்லை. தான் அடைந்த மகிழ்ச்சியை அவர் பிறரோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். எனவே, தன் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அணுகிச் சென்று அவர்களிடம் நடந்ததையெல்லாம் எடுத்துச் சொல்கிறார். தான் அடைந்த மகிழ்ச்சியில் அவர்களும் பங்கேற்பதைக் கண்டு அவருடைய மகிழ்ச்சி நிச்சயமாக பன்மடங்காகப் பெருகியிருக்கும். இயேசு இந்த உவமையை ஏன் கூறினார்? பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசு பாவிகளை வரவேற்பது பற்றியும் அவர்களோடு உணவருந்துவது பற்றியும் ""முணுமுணுத்தனர்"" (லூக் 15:2). அந்த முணுமுணுப்பு சரியல்ல என்று காட்டவே இயேசு இந்த உவமையைக் கூறினார். கடவுள் தம்மை விட்டுப் பிரிந்துசென்ற பாவிகளைத் தேடிச் செல்கிறார். அவர்களைக் கண்டுபிடித்துத் தம்மோடு சேர்த்துக்கொள்ளும் வரை அவர் ஓய்ந்திருப்பதில்லை. உவமையில் வருகின்ற பெண் கடவுளுக்கு உருவகம். தவறிப்போன திராக்மா கடவுளை விட்டுப் பிரிந்துவிட்ட பாவிக்கு உருவகம். பாவிகள் கடவுளிடம் திரும்பும்போது கடவுள் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றார். இந்த உண்மையை இயேசு அழகான ஓர் உவமை வழியாக நமக்கு உணர்த்துகிறார். நம்மைத் தேடி வருகின்ற கடவுள் நாம் அவரை விட்டு ஒருநாளும் பிரிந்துவிடலாகாது என்பதில் கருத்தாயிருக்கின்றார். அவருடைய எல்லையற்ற அன்பை நாம் உணர்ந்து அவரோடு எந்நாளும் அன்புறவில் இணைந்திருந்தால் அவர் நிறைவான மகிழ்ச்சி கொள்வார். அந்த மகிழ்ச்சியில் நமக்கும் பங்குண்டு.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
அண்டிப் பிழைக்கச் சென்றார்

தந்தையை விட்டுப் பிரிந்த இளைய மகன் மற்ற நாட்டவர் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார்.

ஆக, மகனாக இருந்தவர் வேலைக்காரராக மாறுகின்றார். இதுதான் அவர் அனுபவித்த மிகப் பெரிய வலியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். மகனாக இருக்கும் வரை அவருக்கு எல்லாம் இருந்தது. தந்தையின் வீட்டில் அனைத்து உரிமைகளும் இருந்தன. வேலை வாங்குவதற்கு ஏவலர்களும், வேலைக்காரர்களும் இருந்தனர். ஆனால் இப்போது அந்த நிலையிலிருந்து அவர் இறங்க வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.

"அண்டிப் பிழைத்தல்" என்பது தனது தனிப்பட்ட சுதந்திரத்தை மற்றவர்களுக்கு கொடுத்துவிடுவது. உதாரணத்திற்கு, போர் மற்றும் இயற்கைச் சீற்றத்தால் நாடுவிட்டு நாடு புலம்பெயர்ந்து செல்பவர்கள் தங்கள் சொந்த நாட்டின் மேல் உள்ள உரிமையை விட்டுக்கொடுத்தால்தான் அடுத்த நாடு அவர்களைத் தன் நாட்டிற்குள் வர அனுமதிக்கும்.

இவ்வாறாக, "அண்டிப் பிழைத்தல்" நம் வாழ்வின் சுதந்திரத்தை நம்மிடமிருந்து எடுத்துவிடுகிறது. மேலும், அது நம்மை மகன் நிலையிலிருந்து அடிமை நிலைக்குத் தள்ளிவிடுகின்றது.

Fr. Yesu Karunanidhi
Madurai

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!