Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      02  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 2ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ வருகிறான் கனவின் மன்னன்! வாருங்கள், அவனைக் கொன்றுபோடுவோம். 

தொடக்க நூலிலிருந்து வாசகம் 37: 3-4, 12-13, 17-28


இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும்விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார். அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை. அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில் தம் தந்தையின் மந்தைகளை மேய்க்கச் சென்றனர். இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி; "உன் சகோதரர்கள் செக்கேமில் ஆடு மேய்க்கிறார்கள் அல்லவா? அவர்களிடம் உன்னை அனுப்பப்போகிறேன்'' என்றார். யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக் கண்டுபிடித்தார். தொலையில் அவர் வருவதைக் கண்ட அவர்கள் தங்களுக்கு அருகில் அவர் வருமுன் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். அவர் சகோதரர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, "இதோ வருகிறான் கனவின் மன்னன்! நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்றுவிட்டதென்று சொல்வோம். அப்பொழுது அவனுடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்'' என்றனர். ரூபன் இவற்றைக் கேட்டு, அவரை அவர்கள் கையிலிருந்து தப்புவிக்கும் எண்ணத்தில் அவர்களை நோக்கி, "நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்'' என்றார். ரூபன் அவர்களை நோக்கி, "அவன் இரத்தத்தைச் சிந்தாதீர்கள். அவனைப் பாலை நிலத்திலுள்ள இந்த ஆழ்குழிக்குள் தள்ளிவிடுங்கள். அவன் மீது கை வைக்காதீர்கள்'' என்று சொன்னார். ஏனெனில் அவர் அவர்கள் கையிலிருந்து அவரைத் தப்புவித்துத் தம் தந்தையிடம் சேர்ப்பிக்கும் நோக்கம் கொண்டிருந்தார். யோசேப்பு தம் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடன் அவர் அணிந்திருந்த அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியை உரிந்துவிட்டு, அவரை ஆழ்குழியில் தூக்கிப் போட்டனர். அது தண்ணீரில்லாத வெறும் குழி. பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும், வெள்ளைப் போளத்தையும் அவர்கள் ஒட்டகங்களின்மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி, "நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்? வாருங்கள்; இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம். அவன் மேல் நாம் கை வைக்க வேண்டாம். ஏனெனில் அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாய் இருக்கிறான்'' என்று சொல்ல, அவர்கள் சம்மதித்தனர். ஆகையால் மிதியான் நாட்டு வணிகர் அவர்களைக் கடந்து செல்கையில், குழியிலிருந்து யோசேப்பை வெளியே தூக்கி அந்த இஸ்மயேலரிடம் இருபது வெள்ளிக் காசுக்கு விற்றனர். அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா: 105: 16-17. 18-19. 20-21
=================================================================================
பல்லவி; ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!

16 நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார். 17 அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பி வைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார். பல்லவி 

18 அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர். 19 காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவர் என மெய்ப்பித்தது. பல்லவி 

20 மன்னர் ஆள் அனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்; 21 அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார். பல்லவி 


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 3: 16


அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு கொள்ளும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார் அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்.

தூயமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 33-43, 45-46

அக்காலத்தில் இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: "மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக் குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், "இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள். எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?'' என இயேசு கேட்டார். அவர்கள் அவரிடம், "அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்'' என்றார்கள். இயேசு அவர்களிடம்,  "கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்." தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்ட போது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்துகொண்டனர். அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பலன் தருவோம், பரகதி அடைவோம்!

தமிழக மாவட்ட ஆட்சியாளர்களில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த சாதனைக்குச் சொந்தக்காரர் நீலகிரி மாவட்ட ஆட்சியாளராகிய சுக்ரியா சாமு என்பவர். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுகின்ற அளவுக்கு சுக்ரியா சாமு அப்படி என்ன சாதனைகளைச் செய்துவிட்டார் என்று நாம் பார்த்தோமென்றால் அவருடைய வாழ்வே நமக்கு மிகச் சிறந்த பாடப்புத்தகமாக இருக்கின்றது.

சுக்ரியா சாமு, நீலகிரி மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற பின்பு செய்த முதல் காரியம், உடல் ஊனமுற்றவர்களுக்கு/ மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உதவிகளைப் பெற்றுத்தந்தது. அடுத்ததாக அவர் செய்த காரியம், சமூகத்தில் நலிவுற்ற நிலையில் இருந்த ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர் போன்றோரை முன்னேற்றியது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஊட்டியில் இருக்கும் ஏரியைச் சுற்றி ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டது. அவர் மேற்கொண்ட இத்தகைய பணிகளால் இன்றைக்கு ஊட்டியில் இருக்கும் ஏரி அவ்வளவு அழகாகவும் இரம்மியமாகவும் இருக்கின்றது. சுக்ரியா சாமு செய்த இத்தகைய பணிகள்தான் அவருடைய பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்குக் காரணமாக அமைந்தது.

மனிதராகப் பிறப்பது பெரிய விசயமல்ல, மனிதராக, அதுவும் எல்லாருக்கும் பயன்தரும் நல்ல மனிதராக வாழ்வதுதான் பெரிய விஷயம் என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு அர்த்தம் தருவதாக இருக்கின்றது சுக்ரியா சாமு அவர்களுடைய வாழ்க்கை.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கொடிய குத்தகைக்காரர் உவமையைக் குறித்துப் பேசுகின்றார். உவமையில் வரும் நிலக்கிழார் திராட்சைத் தோட்டத்தை நன்றாகப் பண்படுத்தி, அதனைச் சுற்றி வேலி அமைத்து, பிழிவுக் குழி வெட்டி காவல் மாடமும் கட்டி, அதனை ஒருவரிடம் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு நெடும்பயணம் மேற்கொள்கிறார். சிலநாட்கள் கழித்து, நிலக்கிழார் தன்னுடைய பணியாளர்களிடம், கொத்தகைக்காரரிடமிருந்து குத்தகைப் பணத்தை வாங்கிவர அனுப்பும்போது, அந்த குத்தகைக்காரரோ பணியாளர்களை அடித்துத் துன்புறுத்துகிறார், சிலரைக் கொலை செய்கின்றார். இதனால் சினம் கொள்ளும் நிலக்கிழார், அந்த கொடிய குத்தகைக்காரரை அப்புறப்படுத்திவிட்டு, உரிய காலத்தில் குத்தகை தரும் புதிய குத்தகைக்காரரிடம் திராட்சைத் தோட்டத்தைக் கொடுக்கின்றார்.

ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய இந்த உவமை இஸ்ரேயல் மக்களுடைய சமூக, அரசியல் வரலாற்றை அப்படியே எடுத்துச் சொல்கின்றது. இயேசுவின் வேறு எந்த உவமையைவிடவும், இந்த கொடிய குத்தகைய குத்தகைக்காரர் உவமை இஸ்ரயேல் மக்களுடைய வரலாற்றை அப்படியே படம்படித்துக் காட்டுகின்றது. உவமையில் வரும் நிலக்கிழார்தான் ஆண்டவராகிய கடவுள். அவர் இஸ்ரேயல் என்னும் திராட்சைத் தோட்டத்தை பல வகைகளில் பண்படுத்தி, கனிதரும் வாழ்க்கை வாழ நீதித்தலைவர்களையும் இறைவாக்கினர்களையும், ஏன் தன்னுடைய ஒரே மகனையும் அவர்களிடத்தில் அனுப்பி வைக்கிறார். அவர்களோ யாருடைய போதனைக்கும் செவிமடுக்காமல், அவர்களைக் கொன்றுபோட்டார்கள். இதனால் கடவுள் இறையாட்சியை அவர்கள் மத்தியிலிருந்து எடுத்து, கனிதரக்கூடிய மக்களிடத்தில் கொடுக்கின்றார்

இந்த உவமை ஒருசில முக்கியமான உண்மைகளை எடுத்துச் சொல்கின்றது. அவை என்னென்ன என்று இப்போது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். முதலாவது நாம் ஒவ்வொருவரும் கனிதரக்கூடிய/ பலன்தரக்கூடிய வாழ்க்கை வாழவேண்டும். எப்படி நிலக்கிழார் தன்னுடைய திராட்சைத் தோட்டத்திலிருந்து பலனை எதிர்பார்க்கின்றாரோ, அது போன்று ஆண்டவராகிய கடவுளும் நம்மிடமிருந்து பலனை எதிர்பார்க்கின்றார். ஏனென்றால், நம்மைப் படைத்து, பல்வேறு விதங்களில் பராமரித்து வரக்கூடிய கடவுளுக்கு நாம் பலன் தரவில்லை என்றால் அது எந்த விதத்தில் நியாயம்?. பலன் தரவேண்டும். அதுவே பரமனுக்கு ஒன்று. யோவான் நற்செய்தி 15: 8 ல் ஆண்டவர் இயேசு இதைத்தான், "நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது" என்று கூறுகின்றார். ஆகவே, கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் கனிதரக்கூடிய வாழ்க்கை வாழவேண்டும்.

அடுத்ததாக இந்த உவமை சொல்லக்கூடிய செய்தி கனிதராத நிலை கடினமான தண்டனைக்குரிய குற்றம் என்பதாகும். திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்குப் பெற்ற குத்தகைக்காராரோ நிலக்கிழாருக்கு உரிய காலத்தில் குத்தகைப் பணத்தைத் தாராமல் இருந்ததோடு மட்டுமல்லாமல், அதைக் கேட்க வந்த பணியாளர்களை அடித்துத் துன்புறுத்தினார். அதனால் அவர் அதற்கேற்ற வெகுமதியை/ தண்டனையைப் பெற்றார். நாமும் கனிகொடாத வாழ்க்கை வாழ்கின்றபோது, அதற்கேற்ற தண்டனையைப் பெறுவது உறுதி. ஏனெனில், இறுதித்தீர்ப்பின்போது ஒவ்வொருவருக்கும் அவரவருடைய செயல்களுக்கு ஏற்பவே நீதி வழங்கப்படும் (மத் 25: 31- 46).

ஆகவே, நம்முடைய வாழ்க்கையை கனிதரக்கூடிய வாழ்க்கையாய் அமைத்துக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

"GOD IS LOVE"

Rev. Fr. Amirtha Raj Sundar J.,
amirsundar@gmail.com;
+ 91 944 314 0660;
www.arulvakku.com
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
கொடுக்கப்பட்ட பணிகளை பொறுப்புடன் செய்வோம்!

ஓர் ஊரில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் தாய்க்கு ஒரே மகன். ஒவ்வொரு நாளும் அவன் ஆடுகளை ஒட்டிக்கொண்டு ஊருக்கு பக்கத்தில் இருக்கின்ற புல்வெளிகளில் மேயவிட்டுவிட்டு, மாலை நேரமானதும் ஆடுகளை ஒட்டுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி வருவான்.

ஒருநாள் அவன் ஊரிலிருந்த மலையடிவாரத்திற்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு போகும்போது அங்கே ஓர் ஆசிரமம் இருக்கக் கண்டான். அதில் துறவி தன்னுடைய மாணவர்களுக்கு தியான வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார். தூரத்திலிருந்து எல்லாவற்றையும் பார்த்தானே ஒழிய, ஆசிரமத்திற்கு அருகில் செல்லவில்லை. இதற்கிடையில் ஆசிரமத்தில் இருந்த இளந்துறவிகள் மாணவர்கள் தங்களுடைய குருவிடம் சென்று, "குருவே! நாங்கள் தியானத்தில் இன்னும் அதிகமாக வளரவேண்டும். அதற்காக நீங்கள் நல்ல பயிற்சிகளைத் தாருங்கள்" என்றார்கள். துறவியும் அதற்கு சரி என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு தியான வகுப்புகளை மிகச் சிறப்பாக நடத்திக்கொண்டிருந்தார். ஆனால், மாணவர்களுக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை துறவி தியான வகுப்புகளைத் தொடங்கும் சிறுது நேரத்திலேயே அவர்கள் தூங்கி வழியத் தொடங்கினார்கள். இது துறவிக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை.

பிரிதொரு நாள் ஆடு மேய்க்கும் சிறுவன் தன்னுடைய ஆடுகளை ஒட்டிக்கொண்டு ஆசிரமத்திற்கு மிக அருகிலே வந்தான்; அங்கே இருந்த துறவியிடம் பேச்சுக்கொடுத்தான். அவரும் அவனிடத்தில் நன்றாகப் பேசினார். அன்றைக்கு துறவி தன்னுடைய மாணவர்களுக்கு தியான வகுப்புகளை எடுக்கத் தொடங்கினார். வழக்கம்போல அன்றைக்கும் மாணவர்கள் துறவி தியான வகுப்பைத் தொடங்கிய சிறுது நேரத்திலே தூங்கி வழியத் தொடங்கினார்கள். இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஆடு மேய்க்கும் சிறுவன், "என்ன சுவாமி! உம்முடைய சீடர்கள் தியான வகுப்புகளில் இப்படித் தூங்கி வழிகிறார்கள்" என்று கேட்டான். அதற்கு அவர், "அதுதான் எனக்கும் புரியவில்லை... எனக்காக ஓர் உதவி செய்வாயா?" என்றார். சிறுவன், "என்ன உதவி சொல்லுங்கள் சுவாமி, உங்களுக்காக நான் எந்த உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்" என்றான். "வேறு ஒன்றுமில்லை, தியான வகுப்பின்போது யாராவது தூங்கி வழிந்தால், உன்னுடைய கையில் இருக்கும் கோலை வைத்து, ஒரு தட்டு தட்டவேண்டும், அவ்வளவுதான்" என்றார். அவனும் சரி என்று சொல்லிவிட்டு தியான வகுப்பில் தூங்கி வழிந்த சீடர்களைத் தட்டி எழுப்பினான். இது மாணவர்களுக்குப் பிடிக்கவே இல்லை. இருந்தாலும் தங்களுடைய குரு வைத்த ஆளாயிற்றே என்று சொல்லி எதுவும் பேசாதிருந்தார்கள்.

இப்படியே நாட்கள் போய்கொண்டிருக்க, ஒருநாள் சீடர் ஒருவன் குருவை தனியாகச் சந்தித்து, "குருவே! தாங்கள் சொல்லித்தரும் தியான வகுப்புகளை நாங்கள் நன்றாகச் செய்கிறோமா?, அப்படிச் செய்கிறபோது எங்களில் யார் நன்றாகச் செய்கிறார்?" என்று கேட்டார். அதற்கு துறவி அவரிடத்தில், "உங்களில் யாருமே தியானத்தை நன்றாகச் செய்யவில்லை. இங்கே ஆடுகளை ஒட்டிக்கொண்டு வரும் சிறுவன்தான் தியானத்தை நன்றாகச் செய்கிறான்" என்றார். இதைக் கேட்ட சீடருக்குத் தூக்கி வாரிபோட்டது. "எங்களை விட ஆடு மேய்க்கும் சிறுவன் எப்படி தியானத்தைச் சிறப்பாகச் செய்யமுடியும்?" என்று கேட்டார். "செய்வது எந்த வேலையாக இருந்தாலும் அதைப் பொறுப்போடு செய்தால் அதுவே தியானம்தான். நீங்கள் யாருமே தியானத்தைச் சரியாகச் செய்யாமல் தூங்கி வழிந்தீர்கள். ஆனால் அவனோ உங்களைத் தூங்கவிடாமல் கோலை வைத்து தட்டி எழுப்பும் பணியை சிறப்பாகச் செய்தான். அதனால்தான் அவனே தியானத்தை சிறப்பாகச் செய்தான் என்று சொல்கிறேன்" என்றார். சீடனால் எதுவும் பேச முடியவில்லை.

நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாகச் செய்கிறபோது நாம் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பதை இந்த கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கொடிய குத்தகைக்காரர் உவமையைப் பற்றிப் பேசுகின்றார். உவமையில் வரும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடவுள், திராட்சைத் தோட்டமோ இஸ்ரயேல் மக்கள். குத்தகையை வசூலிக்க வரும் பணியாளர்களோ இறைவாக்கினர்கள், இறுதியாக வரும் மகனோ இயேசு, திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தவர்களோ இஸ்ரயேல் தலைவர்கள். திராட்சைத் தோட்ட தலைவரோ திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்கு விட்டுவிட்டு உரிய காலம் வந்தததும் தன்னுடைய பணியாளர்களை அனுப்பி குத்தகைப் பணத்தை வாங்கி வரச் சொல்கிறார். ஆனால், அவர்களோ அவர்களை நையப்ப்புடைக்கிறார்கள். கடவுள் நம்மிடம் ஒருசில பொறுப்புகளைத் தந்துவிட்டு, எல்லா சுதந்திரமும் தந்துவிட்டு, அவற்றை நாம் எப்படிச் செய்கிறோம் என்பதை பொறுமையோடு பார்த்துக்கொண்டிருக்கிறார். நாம் அவற்றை சரியாகச் செய்யாதபோது அதற்கான வெகுமதியையும் தருகிறார் என்பதைத்தான் இந்த உவமை நமக்கு எடுத்துக்கூறும் உண்மையாக இருக்கின்றது.

உவமை கடவுளின் பொறுமையையும், மக்களின் பொறுப்பற்ற தன்மையையும், இயேசுவின் தியாக உள்ளத்தையும் நமக்கு மிகச் சிறப்பாக எடுத்துக்கூறுகின்றது. கடவுள் நமக்குக் கொடுத்த பொறுப்புகளில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கின்றோமா? என்பதுதான் நமக்கு முன்பாக இருக்கும் கேள்வியாக இருக்கின்றது.

எனவ, கடவுள் கொடுத்த பொறுப்புகளை உண்மையுடனும் நேர்மையுடனும் செய்வோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!