Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      01  மார்ச் 2018  
                                                     தவக்காலம் 2ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-10

ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச் செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்; பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது.

வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும். இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது; அதனை நலமாக்க முடியாது.

அதனை யார்தான் புரிந்துகொள்வர்? ஆண்டவராகிய நானே இதயச் சிந்தனைகளை ஆய்பவர்; உள்ளுணர்வுகளைச் சோதித்து அறிபவர். ஒவ்வொருவரின் வழிகளுக்கும் செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு நடத்துபவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா 1: 1-2. 3. 4, 6
=================================================================================
பல்லவி: ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனி தந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 8: 15
அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 இப்பொழுது இலாசர் ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.

தூயலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31

அக்காலத்தில் இயேசு பரிசேயரை நோக்கிக் கூறியது: `"செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.

இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.

அவர், "தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்" என்று உரக்கக் கூறினார்.

அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது" என்றார்.

அவர், "அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே" என்றார்.

அதற்கு ஆபிரகாம், "மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்" என்றார்.

அவர், "அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்" என்றார்.

ஆபிரகாம், "அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்" என்றார்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அடுத்தவருக்குப் பயன்படியான வாழ்க்கை வாழ்வோம்

முன்பொரு காலத்தில் சீன நாட்டில் வாழ்ந்து வந்த அரசர் ஒருவர், ஒரு சமயம் தன்னுடைய நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். அவ்வாறு அவர் சென்ற சமயத்தில் நூறு வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் தென்னக் கன்றுகளை நட்டுக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த அரசருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்தத் தள்ளாத வயதிலும் இப்படி இவர் கஷ்டப்பட்டு தென்னக் கன்றுகளை ஊன்றிக்கொண்டிருக்கிறாரே, இவர் நடக்கூடிய தென்னக் கன்றுகளால் இவருக்குப் பலன்வந்து சேராதே, அப்படியிருந்தும் எதற்காக இவர் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த தென்னக் கன்றுகளை நட்டுக்கொண்டிருக்கிறார் என்று ஆச்சரியமாகப் பார்த்தார்.

பின்னர் அரசர் தன்னுடைய ஆர்வத்தை அடக்க முடியாமல் அவரிடத்தில், "பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் வீட்டில் இருந்து ஓய்வெடுக்காமல், இப்படி இந்த தோட்டத்தில் கிடந்து கஷ்டப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கிறீர்களே, அதுவும் நீங்கள் நடக்கூடிய இந்தக் தென்னங்களால் உங்களுக்குப் பலனேதும் வந்து சேராதே. அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி கஷ்டப்பட்டு இந்தத் தென்னங்கன்றுகளை நட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெரியவர், "அரசே! நான் நடக்கூடிய இந்தத் தென்னங் கன்றுகளால் எனக்குப் பலன் வந்து சேருமோ இல்லையோ, ஆனால், எனக்குப் பின்னால் வரக்கூடிய தலைமுறையினருக்கு நிச்சயம் பலன் வந்து சேரும்... நான் இந்த பூமிக்கு வந்தபோது என்னுடைய முன்னோர்கள் உழைத்த உழைப்பினால் கிடைத்த பலன்களை நான் அனுபவித்தேன். அப்படி இருக்கும்போது எனக்குப் பின்னால் வரக்கூடிய தலைமுறையினர் நான் உழைத்த உழைப்பினால், பலன் ஒன்றும் பெறாமல் போனார்கள் என்றால், நான் இந்த பூமியில் வாழ்ந்ததன் பயனென்ன?, எனக்குப் பின்னால் வரக்கூடிய தலைமுறையினர் என்னால் பயனேதும் பெறாமல் போனார்கள் என்றால் நான் மிகப் பெரிய சுயநலவாதி அல்லவா" என்றார்.

பெரியவர் இவ்வாறு பேசியதைக் கேட்ட அரசருக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய வயதான காலத்திலும் அடுத்தவர் பயன் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு உழைத்துக்கொண்டிருந்த அந்தப் பெரியவரை வாழ்த்தி, அவருக்கு கொஞ்சம் பொற்காசுகளைக் கொடுத்து, அரசர் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

தன்னுடைய வயதான காலத்திலும் அடுத்தவர் பயன்பெற வேண்டும் என்ற நல்ல மனதோடு வாழ்ந்த அந்தப் பெரியவர் நமது பாராட்டுக்குரியவராக இருக்கின்றார். தான், தன்னுடைய குடும்பம், பிள்ளைகள் என்று இருப்பவர்களால் இந்த உலகிற்கு அழகு வந்து சேராது. பிறர், மற்றவருடைய நலன் என்று வாழ்பவர்களால் மட்டுமே, இந்த உலகிற்கு அழகு வந்துசேரும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு செல்வந்தர், ஏழை இலாசர் உவமையைப் பற்றிப் பேசுகிறார். செல்வந்தரோ விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புறுகிறார். அவருடைய வீட்டுவாயிலில் உடல் முழுவதும் புண்ணாய் இருந்த ஏழை இலாசரோ, செல்வந்தரின் மேசையிலிருந்து விழும் ரொட்டித் துண்டுகளால் பசியாற்றி வருகின்றார். செல்வந்தரோ எல்லா வசதிவாய்ப்புகள் இருந்தும் அடுத்தவர் மட்டில் அக்கறை இல்லாதவராக இருக்கின்றார். ஏழை இலாசரோ தன்னிடத்தில் ஒன்றுமில்லாத போதும், தன்னுடைய பெயருக்கு ஏற்றவாறு ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கின்றார். அதனால் இறப்புக்குப் பிறகு செல்வந்தர் நரகத்திற்கும் ஏழை இலாசர் ஆண்டவருடைய திருவடிகளுக்கும் போகிறார்கள்.

எது செல்வந்தரை நரகத்திற்கு கூட்டிக்கொண்டு போனது என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால், அவருடைய அடுத்தவர் மீதான அக்கறையற்ற தன்மையே என்று எளிதாகப் பதில் சொல்லிவிடலாம். "இரக்கமற்றவருக்கு இரக்கமின்மையே தண்டனையாக அமையும்" என்பார் தூய யாக்கோபு. செல்வந்தர் தன்னிடத்தில் ஏராளமான செல்வம் இருந்தபோதும் தன்னுடைய வீட்டு வாசலில் கிடந்த ஏழை இலாசரைக் கண்டுகொள்ளாமலும் அவர்மீது இரக்கம்கொள்ளாமலும் இருந்தார். அதனாலேயே அவர் நரகத்திற்குச் செல்கிறார். ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய இறுதித் தீர்ப்பு உவமையில் கூட, பசித்தவருக்கு உணவும், தாகமாக இருந்தவருக்குத் தண்ணீரும் ஆடையின்றி இருந்தவருக்கு ஆடையும் இன்னபிற காரியங்களைச் செய்தவருக்கே இறைவனின் அரசில் இடம் கிடைத்தது. அதைச் செய்யத் தவறியவருக்கு இறைவனில் அரசில் இடம் கிடைக்காமல் போனது. ஆகவே, நாம் அடுத்தவர் மட்டில் கொள்கின்ற அன்பும் அக்கறையும்தான் நம்மை இறைவனில் அரசில் நுழைவதற்கு வாய்ப்பளிக்கின்றது.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் அவரைப் போன்று அடுத்தவர் மட்டில் அன்பும் அக்கறையும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். நம்மிடம் இருக்கின்ற தன்னலத்தை, அடுத்தவரைக் கண்டுகொள்ளாத போக்கினை விட்டொழிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!