Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               31 மே 2018  
                                      கன்னிமரியாள் எலிசபேத்தைச் சந்தித்தல்  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் (3: 14-18)

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.

அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: "சீயோனே, அஞ்ச வேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம் போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடைய மாட்டாய்."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

அல்லது

பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் (12: 9-16b)

சகோதரர் சகோதரிகளே, உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களை விட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். விடா முயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்.

எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறை வேண்டலில் நிலைத்திருங்கள்; வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.

உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம். மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள். நீங்கள் ஒருமனத்தவராய் இருங்கள்; உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - எசா 12: 2-3. 4bcd. 5-6 (பல்லவி: 6b)
=================================================================================
 பல்லவி: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்ச மாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.
-பல்லவி

4bஉன ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.
-பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.
6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(லூக் 1: 45)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய மரியே, நீர் பேறுபெற்றவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1: 39-56)

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.

ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார்.

அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்." மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழா

இன்று திருச்சபையானது அன்னை மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வை விழாவாகக் கொண்டாடுகின்றது. இவ்விழாவானது கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. 1263 ஆம் ஆண்டில் பிரான்சிஸ்கன் சபையினரால் மட்டும் கொண்டாடப்பட்ட இவ்விழா, அதன்பிறகு திருச்சபை முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் உண்மை என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

வானதூதர் கபிரியேல் மரியாளுக்குத் தோன்றி, மங்கள வார்த்தை சொன்னபோது எலிசபெத் கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியையும் சொல்லிவிட்டுச் சொல்கிறார். எனவே மரியாள் தனது சொந்த ஊரான நாசரேத்திலிருந்து, எலிசபெத்து இருக்கக்கூடிய அயின்கரிம் என்ற மலைநாட்டிற்குச் செல்கிறார். மரியாள் எலிசபெத்தைச் சென்று பார்க்கவேண்டும், அவருக்கு உதவவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனாலும் மரியாள் விரைந்து சென்று எலிசபெத்துக்கு உதவுகிறார். இதுதான் நாம் மரியாளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாக இருக்கின்றது. ஒருவரின் தேவையைக் குறிப்பால் அறிந்து, அவர் கேட்பதற்கு முன்பாகவே உதவிசெய்வதுதான் உண்மையான சேவையாக இருக்கும். மரியாள் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

இன்றைக்கு நம்மிடத்தில் யாராவது ஒருவர் உதவி என்று வந்தாலும் அவர்களுக்கு உதவிசெய்ய நமக்கு மனம் வருவதில்லை. ஆனால் மரியாவோ கேளாமலே உதவிசெய்ய விரைகின்றார். நாமும் ஒருவரின் தேவையை குறிப்பால் அறிந்து, அவருக்கு உதவிசெய்கின்றபோது நாம் அன்னை மரியாவின் அன்புப் பிள்ளைகள் ஆகின்றோம்; அதேவேளையில் ஆண்டவர் இயேசுவின் சகோதர, சகோதரிகளாக மாறுகின்றோம்.

ஒரு நகரில் இருந்த ஆசிரியர் குடியிருப்பில் ஜோ என்ற இளைஞன் இருந்தான். அவனை அந்தக் குடியிருப்பில் இருந்த அனைவருக்கும் பிடிக்கும். காரணம் அவன் எல்லாருக்கும் ஓடி ஓடி உதவி செய்வான். ஒருநாள் கணவனை இழந்த ஆசிரியை ஒருவர் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். அவருக்கு 10 வயதில் குழந்தை ஒன்று இருந்தது. அன்று அந்த குழந்தைக்கு பள்ளிக்கூடத்தில் ஆண்டு இறுதித்தேர்வு வேறு இருந்தது. தான் இப்படி நோயில் படுத்துக்கிடக்கும் இந்த தருணத்தில், தன்னுடைய குழந்தையை பள்ளிக்கூடத்தில் எப்படிக்கொண்டுபோய் விடுவது என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

அந்நேரத்தில் ஜோ அங்கு வந்தான். ஆசிரியை ஜோவிடம் தன்னுடைய குழந்தையை பள்ளிக்கூடத்தில் கூட்டிக்கொண்டு விட்டுவிடும்படியாக கெஞ்சிக்கேட்டதும், அவன் தனக்கு ஒரு முக்கியமான வேலை இருந்தும், சரி என்று ஒத்துக்கொண்டு குழந்தையை தன்னுடைய வண்டியை வைத்து பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிக்கொண்டு போனான்.

அவன் போகின்ற வழியில் குழந்தை ஜோவிடம், "நீங்கள்தான் கடவுளா?" என்று கேட்டது. அதற்கு அவன், "அப்படியெல்லாம் இல்லை, ஏன் கேட்கிறாய்?" என்று திரும்பக் கேட்டான். அதற்கு குழந்தை, "இல்லை, இன்று காலையில்தான் என்னுடைய அம்மா, நான் நோய்வாய்ப்பட்டு கிடக்கும் இந்த நேரத்தில் உன்னைக் கடவுள்தான் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விடவேண்டும் என்றாள். அதான் கேட்டேன்" என்றாள். தொடர்ந்து அந்தக் குழந்தை அவனிடம், "நீங்கள் கடவுள் இல்லையென்றால் அவருடைய வேலைக்காரரா?" என்று அப்பாவியாகக் கேட்டாள். அதற்கு ஜோ, "என்னை கடவுளிடம் பணிபுரியும் வேலைக்காரன் என்றுகூட வைத்துகொள்ளலாம்" என்றான்.

தேவையில் இருக்கும் ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றபோது உண்மையில் நாம் கடவுள்தான்/ கடவுளின் பணியாளர்கள்தான்.

அடுத்ததாக இன்றைய நாள் விழா நமக்கு உணர்த்தும் இரண்டாவது பாடம்: கடவுள் நம் நடுவில் இருக்கிறார் என்பதே ஆகும். இறைவாக்கினர் செப்பானியா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் படிக்கின்றோம், "உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்.." என்று படிக்கின்றோம்.

ஆம், கடவுள் இம்மானுவேலனாய் நம் மத்தியில் குடிகொண்டிருக்கிறார். அதன்வழியாக நமது துன்பங்கள், வேதனைகள், நோய்நொடிகள் அத்தனையும் போக்குகின்றார். இன்றைய நற்செய்தியில்கூட இயேசுவை மடிசுமந்த அன்னை மரியாள், எலிசபெத்தை வாழ்த்துகின்றபோது, எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளுகிறது. அதாவது இயேசுவின் இருப்பு அங்கே மகிழ்ச்யைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம்.

ஆகவே கடவுள் நம்மோடு இருந்து நம்முடைய துன்பங்கள், சோதனைகள் அத்தனையும் போக்கி, சுகம் தருகிறார் என்ற நம்பிக்கையோடு வாழ்வோம்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து நாட்டில் பங்குக் குருவாக இருந்த ஓர் அருட்பணியாளர், மோசே எவ்வாறு சீனாய் மலைமீது ஏறி கடவுளிடம் மன்றாடினாரோ அதுபோன்று, இவர் பங்கு ஆலயத்தின் கோபுரத்தின் உச்சியில் அமர்ந்துகொண்டு, மக்களுக்காக இறைவனிடம் மன்றாடினார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் கடவுள் அவருக்கு செவிசாய்க்கவில்லை. இதனால் கடுங்கோபத்தோடு, "கடவுளே நீர் எங்கு இருக்கிறீர்?" என்று சத்தமாகக் கத்தினார். அப்போது ஒரு குரல் கேட்டது. அது "கடவுளாகிய நான் வேறெங்கும் இல்லை, இதோ கீழே மக்களோடு மக்களாக இருக்கிறேன்" என்றது.

கடவுள் நம்மோடு குடிக்கொண்டிருக்கிறார். நாம்தான் அவரை உணராதவர்களாக இருக்கிறோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.

எனவே, மரியா எலிசபெத்தைச் சந்தித்த இவ்விழா நாளில் நாம் அன்னை மரியாவைப் போன்று பிறரது தேவைகளைக் குறிப்பால் அறிந்து, அவற்றைப் பூர்த்திசெய்வோம்; ஒருவர் மற்றவரைப் வாழ்த்துவோம்; நம்மோடு வாழும் கடவுளின் பிரசன்னத்தை உணர்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம். Fr. Maria


Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கியது"

அரசர் ஒருவர் தனக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்கவும் ஆபத்தில் ஆலோசனை கூறவும் சரியான ஒரு மனிதனை தேடிக்கொண்டிருந்தார். தேடி தேடி கடைசியில் மூன்றுபேரை கண்டுபிடித்து, அந்த மூன்று பேரில் யார் மிகவும் புத்திசாலியாக இருக்கிறாரோ, அந்த மனிதனை அமைச்சராக்கத் தீர்மானித்தார். அதன்படி, ஒரு கதவில் ஒரு பெரிய பூட்டை மாட்டி, அதனை யார் முதலில் திறக்கிறாரோ, அவரே அமைச்சராவார் என்று அறிவித்தார்.

போட்டி தொடங்கியது. மூவரும் பூட்டைத் திறந்து, கதவைத் திறப்பதற்கு மிகக் கடுமையாக முயற்சித்தார்கள். அவர்களில் இருவர், தங்களுக்கு தெரிந்த கணக்கு எல்லாம் போட்டு பார்த்து, எப்படி திறப்பது என்ற மண்டையை உடைத்து கொண்டிருந்தார்கள். சிறிதுநேரப் போராட்டத்திற்குப் பின்னர், இவ்வளவு பெரிய பூட்டை எப்படித் திறப்பது? அதெல்லாம் முடியவே முடியாது என்று நம்பிக்கை தளர்ந்துபோய் அவர்கள் தங்களுடைய முயற்சியைக் கைவிட்டார்கள்.

மூன்றாவது மனிதரோ, ஒன்றும் செய்யாமல், ஒரு நாற்காலியில் அமர்ந்து, எதையோ யோசித்துப் பார்த்தார். பின்னர் மிக உறுதியான நம்பிக்கையுடன் எப்படியும் கதவைத் திறந்துவிடலாம் என்று அந்த கதவின் கைப்பிடியை தொட்டார். அவர் கதவைத் தொட்டதுதான் தாமதம், மறுகணம் கதவு திறந்துகொண்டது. ஏனென்றால் கதவு பூட்டப்படவே இல்லை. அதில் தொங்கவிடப்பட்டிருந்த பூட்டுகூட வெறுமனேதான் தொங்கவிடப்பட்டிருந்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அரசர், கதவை எப்படியும் திறந்துவிடலாம் என்று நம்பிக்கையோடு செயல்பட்ட அந்த மூன்றாவது மனிதரை தன்னுடைய அமைச்சராக நியமித்தார்.

நமது வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒன்று இருக்கின்றபோது எதுவும் சாத்தியப்படும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த நிகழ்வு.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களோடு எரிக்கோவைவிட்டு வெளியே வருகின்றபோது, வழியோரம் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் திமேயுவின் மகனாகிய பார்வையற்ற பர்த்திமேயு, நாசரேத்து இயேசுதான் அவ்வழியாகப் போகிறார் என அறிந்து, "இயேசுவே , தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கத்தத் தொடங்குகிறார். இதைக் கேட்டு கூட்டம் அவரை சத்தம் போடாமல் இருக்கச் சொல்கிறது. ஆனால், அவரோ இன்னும் அதிகமாகக் கத்தத் தொடங்குகிறார். இறுதியில் பர்த்திமேயுவின் குரல் இயேசுவுக்குக் கேட்க, அவர் அவரை அழைத்து அவருக்கு பார்வையளிக்கின்றார்.

இந்த நிகழ்வு நமக்கு இரண்டு முக்கியமான உண்மைகளை எடுத்துக் கூறுகின்றது. ஒன்று பார்வையற்ற பர்த்திமேயுவின் விடாமுயற்சியுடன் கூடிய நம்பிக்கை. வழக்கமாக யூத இரபிக்கள் தங்களுடைய பயணங்களின் போதுதான் மக்களுக்கு நிறையப் போதிப்பார்கள். அவர்கள் நடந்துகொண்டே போதிக்கும்போது, நிறையப் பேர் அவர்களைச் சூழ்ந்துகொண்டு போதனையைக் கேட்டுக்கொண்டு வருவார்கள். இயேசுவும் அப்படித்தான் எருசலேம் நோக்கிய தன்னுடைய பயணத்தில் மக்களுக்கு நிறையப் போதித்துக்கொண்டே வருகின்றார். அதனால் மக்கள்கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டு செல்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் ஒருவர் கத்தினாலும் அது இயேசுவின் காதுக்கு சென்று சேராது. ஆனால் நற்செய்தியில் வருகின்ற பர்த்திமேயுவோ இயேசுவைச் சூழ்ந்து அவ்வளவு பெரிய கூட்டம் இருந்தபோதும் அந்தக் கூட்டத்தையும் மீறி, இயேசுவின் கவனத்தை ஈர்க்கின்றார். அப்படியானால் அவர் எந்தளவுக்கு நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சியோடு சத்தம் போட்டு, இயேசுவின் கவனத்தை ஈர்த்து, அதன்வழியாக குணம்பெற்றிருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அடுத்ததாக இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் இன்னொரு உண்மை இயேசுவின் பரிவுள்ளமாகும். மக்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கும் இயேசு, பர்த்திமேயுவின் கூப்பாடு தனக்குத் தொந்தரவு என நினைக்கவில்லை. மாறாக அவருடைய சூழ்நிலையை உணர்ந்து, அவரிடம் இருந்த நம்பிக்கையைக் கண்டு வியந்து, அவர்மீது பரிவுகொண்டு அவருக்கு நலமளிக்கின்றார். இதன்மூலம் இயேசு கிறிஸ்து மக்கள்மீது இரங்கும் பரிவன்புமிக்க இறைவன் என்று தன்னை நிரூபித்துக் காட்டுகின்றார்.

பல நேரங்களில் பார்வையற்ற பர்த்திமேயுவிடம் இருக்கின்ற நம்பிக்கையும் விடாமுயற்சியும் நமக்கு இல்லாதது வருத்தமளிக்கக்கூடிய விசயமாக இருக்கின்றது. அவர் மக்கள் தன்னை அதட்டுகிறார்கள், தடுத்து நிறுத்துகிறார்கள் என்று நினைக்கவில்லை. மாறாக, இயேசுவிடமிருந்து தனக்கு எப்படியும் நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இயேசுவை நோக்கிக் கத்தினார். அதனால் குணம்பெற்றார்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், உறுதியான நம்பிக்கையுடன் அவரிடத்தில் வேண்டுவோம், அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.




=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழா.

"பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்" (லூக்கா 1:42)

-- இந்திய நாடு சுதந்திரம் அடைந்த நாளும் மரியா விண்ணேற்பு அடைந்த பெருவிழாவைத் திருச்சபை கொண்டாடுகின்ற நாளும் ஒன்றாக அமைவது மகிழ்ச்சிக்குரியது. இந்திய நாடு அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. அன்னை மரியா மனித குலம் விடுதலை அடையும்போது எந்நிலையை அடையும் எனக் காட்டும் விதத்தில் கடவுளின் அரசில் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாட்சிமை அடைந்தார். விடுதலை என்பது நலிவான நிலையிலிருந்து நலமான நிலைக்குக் கடந்து செல்வதைக் குறிக்கும். அடிமை நிலையிலிருந்து சுதந்திர நிலை அடையும்போதுதான் நாம் விடுதலை என்றால் என்னவென்று உணர்ந்துகொள்ள முடியும். மரியா தம் உறவினரான எலிசபெத்தைச் சந்தித்த வேளையில் அவரை அன்போடு வரவேற்று எலிசபெத்து கூறிய சொற்றொடர் "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்" என்பது. உலகில் வாழ்கின்ற அனைத்துப் பெண்களும் ஆண்களும் கடவுளின் ஆசியைப் பெற்றவர்களே. என்றாலும், மரியா இறைவனால் தனிப்பட்ட விதத்தில் தேர்ந்துகொள்ளப்பட்டார். கடவுளின் திருமகனுக்கு இவ்வுலகில் தாயாகின்ற பொறுப்பை மரியா ஏற்றார்; கடவுளின் முன்னிலையில் தாழ்ந்து தலைவணங்கி, "நான் ஆண்டவரின் அடிமை" (லூக்கா 1:38) என்று மரியா கூறியதோடு கடவுளின் திருவுளத்தை எப்போதும் நிறைவேற்றிட முன்வந்தார். இதனால் கடவுளின் ஆசி அவருக்கு நிறைவாக வழங்கப்பட்டது.

-- மரியா பெற்ற சிறப்பு கடவுளின் திருவுளத்தைப் பணிந்து ஏற்று அதன்படி செயல்படுவோர் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட சிறப்புக்கு முன்மாதிரியாக உள்ளது. இவ்வாறு, மரியா திருச்சபைக்கு ஓர் முன் அடையாளம். திருச்சபையும் மரியாவைப் போல இறைவனுக்குப் பணிந்து, இறைத்திட்டத்தை இவ்வுலகில் நிறைவேற்றும் கருவியாகச் செயல்பட வேண்டும். அப்போது கடவுளாட்சிக்குச் சாட்சியாகத் திருச்சபை திகழும். கடவுளின் ஆசி நம்மீதும் இந்திய நாட்டின்மீதும் பொழியப்பட வேண்டும் என நாம் மன்றாடுகின்ற சிறப்பு நாள் இது. வீதியெங்கும் விடுதலைக் கீதம் முழங்க வேண்டும். அடிமைத்தனத்தின் சங்கிலிகள் அறுந்து விழ வேண்டும். நம் உள்ளத்தில் உண்மையான சுதந்திரமும் நாம் வாழ்கின்ற சமுதாயத்தில் வேரோட்டமான விடுதலையும் விடிந்திட வேண்டும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!