Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               30 மே 2018  
                                                           பொதுக்காலம் 8ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும். 

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18-25

அன்புக்குரியவர்களே, உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும். உலகம் தோன்றும் முன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார். உண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மா தூய்மை அடைந்துள்ளதால் நீங்கள் வெளிவேடமற்ற முறையில் சகோதர அன்பு காட்ட முடியும். எனவே நீங்கள், தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். நீங்கள் அழியக்கூடிய வித்தினால் அல்ல; மாறாக, உயிருள்ளதும், நிலைத்திருப்பதுமான, அழியா வித்தாகிய கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்கள். ஏனெனில், "மானிடர் அனைவரும் புல்லைப் போன்றவர்; அவர்களது மேன்மை வயல்வெளிப் பூவைப் போன்றது; புல் உலர்ந்துபோம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்." இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 147: 12-13. 14-15. 19-20
=================================================================================
 பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
அல்லது
அல்லேலூயா!

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி 

14 அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி 

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பல்லவி 

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா!
மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா!
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எருசலேமில் மானிட மகன் தலமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞா்களிடமும் ஒப்புவிக்கப் படுவார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 32-45

அக்காலத்தில் சீடர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழ இருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார். அவர், "இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; அவர்கள் ஏளனம் செய்து, அவர்மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று அவர்களிடம் கூறினார். செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்கள். அவர் அவர்களிடம், "நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, "நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர். இயேசுவோ அவர்களிடம், "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "இயலும்" என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, "நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப் புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்" என்று கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்"

சீனாவிற்கு ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியைக் கொண்டு வந்தவர்களில் முன்னோடி ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் என்பவர். இவர் மிகச் சிறந்த மறைபோதகராக இருந்தபோதும் எப்போதும் தாழ்ச்சியோடு இருந்தார்.

ஒரு சமயம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இருந்த ஒரு பல்கலைக்கழகத்தில் இவரைப் பேச அழைத்திருந்தார்கள். அப்போது அந்த பல்கலைக்கழகத்தின் தலைவர் இவரை வரவேற்றுப் பேசும்போது, "எல்லாம் தெரிந்தவர்" என்று பேசினார். அவருக்குப் பின் பேசிய டெய்லர், "நானல்ல, என் ஆண்டவர் இயேசுவே எல்லாம் தெரிந்தவர்" என்று பேசினார். இதனால் இவருக்கு கூட்டத்திலிருந்து பயங்கர கரகோஷம்.

அந்நாட்களில் இவர் தங்கியிருந்த அறையில் இவரோடு இன்னொரு பணியாளரும் தங்கியிருந்தார். இருவரும் சேர்ந்துதான் பல இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்து வந்தார்கள். ஒருநாள் இரவு இவர் தூங்கச் செல்வதற்கு முன்பாக இவரோடு தங்கியிருந்த பணியாளரது காலணிகள் (Shoe) மிகவும் புழுதி படிந்திருப்பதைக் கண்டார். உடனே இவர் அந்தப் பணியாளருடைய காலணிகளை நன்றாகத் துடைத்துச் சுத்தம் செய்துவிட்டு அதன்பிறகு தூங்கப் போனார். இது டெய்லரோடு இருந்த பணியாளருக்குத் தெரியாது. காலையில் அவர் எழுந்து தன்னுடைய காலணிகளைப் பார்த்தபோது அது சுத்தம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சிகுள்ளானார்.

மேலும் அவர் தன்னுடைய காலணிகளை டெய்லர்தான் சுத்தம் செய்திருக்கிறார் என்று உறுதிசெய்துகொண்டு அவரிடம், "ஏனைய்யா நீங்கள் என்னுடைய காலணிகளைத் துடைத்து சுத்தம் செய்தீர்கள், இதெல்லாம் நீங்கள் செய்யவேண்டிய காரியமா?" என்று கேட்டார். அதற்கு டெய்லர் அவரிடம், "உங்களுடைய காலணிகளை நானன்றி வேறு யார் சுத்தம் செய்வது... உங்களுக்குப் பணிவிடை செய்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன்" என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட டெய்லரோடு இருந்த பணியாளர் வாயடைத்துப் போய் நின்றார்.

எல்லோராலும் போற்றப்பட்ட மிகப் பெரிய மறைபோதகரான ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் தன்னுடைய பணியாளரின் காலணிகளைத் துடைத்துச் சுத்தம் செய்தது என்பது உண்மையில் ஓர் இறை ஊழியர் எப்படித் தாழ்ச்சியோடு பணிவிடை புரிபவராக இருக்கவேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் செபதேயுவின் மக்களாகிய யோவானும் யாக்கோபும் இயேசுவை அணுகி வந்து, "போதகரே நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவரும் இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்" என்று கேட்கின்றார்கள். முதலில் யோவானும் யாக்கோபும் இயேசுவிடத்த்தில் எத்தகைய மனநிலையோடு இத்தகைய வேண்டுகோளை வைத்தார்கள் என்பதை சிந்தித்துப் பார்ப்போம். அதன்பிறகு இயேசு அவர்களுக்கு அளித்த பதிலைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர் இயேசு, தான் யூதர்களால் பலவாறாகத் துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, மூன்றாம் நாம் உயிர்தெழுவேன் என்று சொல்கின்றார். இதைத் தவறாகப் புரிந்துகொள்ளும் யோவானும் யாக்கோபும் இயேசுவிடத்தில் இப்படிப்பட்ட வேண்டுகோளை வைக்கிறார்கள். அவர்களுடைய நினைப்பெல்லாம் இயேசு ஆட்சியுரிமையோடு வருகின்றபோது தங்களுக்கு முதன்மையான இடம் கிடைக்கவேண்டும் என்பதுதான். இதை அறியும் இயேசு, "என் வலப்புறத்தில் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்" என்கின்றார்.

இயேசு இப்படிச் சொல்லிவிட்டு தொடர்ந்து தன்னுடைய சீடர்களிடத்தில் உண்மையான சீடத்துவம் என்பது பதவியை வகிப்பது கிடையாது, மாறாகப் பணிவிடை செய்வது; தொண்டுகள் ஏற்பது கிடையாது, மாறாக தொண்டுகள் ஆற்றுவது. ஏன் மானிடமகனும் கூட அதற்காகத்தான் இந்த மன்னுலகத்திற்கு வந்திருக்கிறார் என்று சொல்லி அவர்களைத் தெளிவு படுத்துகின்றார். ஆம், இயேசு இந்த மன்னுலகத்திற்கு வந்தது தொண்டு செய்வதற்குத் தானே ஒழிய, தொண்டுகள் ஏற்பதற்கு அல்ல. எனவே, அவருடைய வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் அவரைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு தொண்டுகள் ஆற்றுவதுதான் சாலச் சிறந்த ஒரு காரியமாகும்.

பல நேரங்களில் நாம், பதவி என்பது பிறரை அடக்கி ஆள்வதற்கும் ஆண்டு நடத்துவதற்கும் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இது ஒரு தவறான புரிதலாகும். பணிவிடை புரிந்து பலியாவதுதான் உண்மையான சீடத்துவ வாழ்வாகும்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று பணிவிடை புரிவதில் பெருமிதம் கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இறைவனின் வழிகாட்டுதல்

மனித வாழ்க்கையில் பயம் என்பது வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது. தவறான ஒரு செயலில் ஈடுபடுகிறோம் என்றால், நம்மை அறியாமல் நமக்குள்ளாக ஒருவிதமான பயம் வரும். சரியான ஒன்றை, எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாம் துணிந்து செய்கிறபோதும், நமக்குள்ளாக பயம் வரும். ஆனால், இந்த இரண்டு பயத்திற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. தவறான செயலுக்காக நாம் பயப்படுகிறபோது, நம்முடைய ஆன்மாவிற்கு அது மிகப்பெரிய இடறலாக மாறுகிறது. சரியான செயலை எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்கிறபோது, நமக்குள்ளாக நமது ஆன்மா நம்மை அந்த பயத்திலும் ஈடுபட வைக்கக்கூடிய மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது.

இன்றைய நற்செய்தியில் சீடர்களுக்குள்ளாக ஒருவிதமான பயம், கலக்கம். இதுவரை வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் இயேசுவுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. அதிகாரவர்க்கத்தினர் இயேசுவை எதிரியாக நினைத்திருந்தாலும், மக்கள் அவரை மெசியாவாக பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். எனவே, அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம், சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு இருந்தது. இப்படி வாழ்க்கை மிக நன்றாக சென்று கொண்டிருக்கிறபோது, இயேசு தன்னுடைய முடிவைப்பற்றியும், அது நெருங்கிவிட்டது என்று, எருசலேமுக்கு போகிறவழியில் சொல்வது, நிச்சயம் அவர்களுக்குள்ளாக கலக்கத்தையும், கலகத்தையும் ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இயேசு நல்லவர். மக்களுக்கு வாழ்வு தரக்கூடியவர். அவரோடு நாம் எதற்கும் நிற்போம், என்று நிச்சயம் சீடர்களின் ஆன்மா, அந்த பயத்தின் நடுவில், கலக்கத்தின் மத்தியில் மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

நமது வாழ்வில் உண்மைக்கு துணைநிற்பதற்கு நாம் ஒதுங்கியிருக்க தேவையில்லை. நம்மால் இந்த தீமையை எப்படி எதிர்க்க முடியும் என்று ஓடி ஒளிய தேவையில்லை. இறைவன் நம்மை இயக்குவார். இறைவன் நம்மை வழிநடத்துவார். அந்த நம்பிக்கை சீடர்களுக்கு இருந்தது. அதே நம்பிக்கையை நாமும் வளர்த்துக் கொள்வோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!