Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               28 மே 2018  
                                                           பொதுக்காலம் 8ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கிறிஸ்துவை நீங்கள் பார்த்ததில்லை; அவரில் நம்பிக்கை கொண்டு பேருவகை கொள்கிறீர்கள். 

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப்பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது. இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 111: 1-2. 5-6. 9,10
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார். 

நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி 

5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்; 6 வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். பல்லவி 

9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது. 10உ அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி 


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 17:17

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும் பின்பு வந்து என்னைப் பின்பற்றும்


தூயமாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-27

அக்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? `கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட' என்றார். அவர் இயேசுவிடம், போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் என்று கூறினார். அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம் என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது என்றார். சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்? என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?

அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் பணக்காரப் பெண்ணொருத்தி கவுன்சிலிங் செய்யும் ஒருவரைக் காணச்சென்றாள். அவரிடம் என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு, எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல், இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது, என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே. என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்.

அந்தப் பெண்மணி சொன்னதைக் கேட்டுவிட்டு கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார். பின்னர் அவர் அந்த பணக்கார பெண்ணிடம், நான் இப்பொழுது பணிப்பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன், நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் என்றார். பணக்காரப் பெண்மணி அதற்குச் சரியென்று சொல்ல, பணி பெண் துடைப்பத்தை கீழே போட்டுவிட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்.

அன்பான கணவர், அழகான மகன் என்று என்னுடைய வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடிரென்று ஒருநாள் என் கணவர் மலேரியாவில் இறந்து போனார். அவர் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை, எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல, யாரிடமும் சிரிக்க முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும்பொழுது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. அப்போது சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது, எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வரச் செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது. கடந்துபோன மூன்று மாதத்தில் நான் முதல் முதலாக
புன்னகைத்தேன்!

நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷயம் என்னை மகிழ்ச்சிக்குள்ளாகுகிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மனநிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன். அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு உணவு கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன். இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி செய்து அவர்கள் மகிழ நானும் பெரு மகிழ்வுற்றேன். இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம். மகிழ்ச்சி என்பது, அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்.

இதை கேட்ட அந்த பணக்கார பெண்மணி ஓலமிட்டு கத்தி அழுதாள்.
அதே நேரத்தில் மகிழ்ச்சிக்கான வழி என்ன என்பதை அறிந்தவளாய் மனநிறைவோடு வீடு திரும்பினாள்.

உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பணம் வைத்திருக்கின்றோம் என்பதில் அல்ல, வைத்திருக்கும் பணத்தில் நாம் எவ்வளவு பிறருக்குக் கொடுக்கின்றோம் என்பதிலே அடங்கியிருக்கின்றது என்ற ஆழமான உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஒருவர் இயேசுவிடம் வந்து, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்கின்றார். அதற்கு இயேசு அவரிடம், கட்டளைகளைக் கடைபிடி என்று சொல்ல அவர், இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் என்கிறார். அப்போது இயேசு அவரிடம், உமக்கு இன்னும் ஒன்று குறைவுபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் என்கின்றார். அவரோ முகவாட்டத்தோடு செல்கின்றார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

நற்செய்தியில் வரும் மனிதர், நிலைவாழ்வை பெற சிறுசிறு கட்டளைகளைக் கடைபிடித்தால் போதுமென நினைத்தார். ஆனால், அவர் தன்னுடைய உடைமைகளை, தன்னிடம் இருப்பதை ஏழைகளுக்குக் கொடுக்க மறந்துபோனார். அதனாலேயே அவர் நிலைவாழ்வைப் பெறாமலே போனார்.

நாம் நம்மிடம் இருப்பதை பிறருக்குத் தர முன்வருகின்றோமோ? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இருப்பதை பிறருக்குத் தருபவருக்கே நிலைவாழ்வு என்ற பரிசும் இருக்கும்..

ஆகவே, நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்க முன்வருவோம். இயேசுவின் உண்மையான சீடர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்

மகான் ஒருவர் தன்னுடைய சீடர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு ரொட்டித்துண்டை எடுத்து, இந்த ரொட்டித்துண்டை எப்படிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்று கேட்டார்.

அதற்கு ஒரு சீடன் எழுந்து, இந்த ரொட்டித்துண்டை ஜாம் வைத்துச் சாம்பிட்டால் சுவையாக இருக்கும் என்றான். இரண்டாவதாக ஒரு சீடன் எழுந்து, இதை தேன் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்றான். மூன்றாவதாக ஒரு சீடன் எழுந்து, இந்த ரொட்டித்துண்டை பாலில் தோய்த்துச் சாப்பிட்டால் இன்னும் சுவைகாக இருக்கும் என்றான்.

இப்படி ஒவ்வொரு சீடரும் எழுந்துநின்று மகான் கேட்ட கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாருடைய பதிலிலும் மகான் திருப்தி அடையவில்லை.

கடைசியாக ஒரு சீடன் எழுந்து, இந்த ரொட்டித்துண்டை பசியோடு இருக்கும் ஓர் ஏழையோடு பகிர்ந்துகொண்டு சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும் என்றான். இதைக்கேட்ட மகான், அவனை வெகுவாகப் பாராட்டினார். நாம் உண்ணக்கூடிய உணவு சாதாரணமானதாக இருந்தாலும், அதைத் தேவையில் இருக்கும் ஓர் ஏழையோடு பகிர்ந்து உண்ணுகிறபோது அதிலிருந்து கிடைக்கும் மனநிறைவு வேறு எதிலும் இல்லை என்று அவர்களுக்கு விளக்கமளித்தார்.

இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ்கிறபோது அதில் கிடைக்கும் மனநிறைவு அலாதியானது என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கிறது.

நற்செய்தியில் செல்வந்தர் ஒருவர் இயேசுவை அணுகி, நல்ல போதகரே! நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்கிறார். அதற்கு இயேசு, கட்டளைகளைக் கிடைபிடி என்கிறார். அவரோ, இக்கட்டளை எல்லாம் நான் என்னுடைய சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன் என்கிறார். அப்போது இயேசுவை அவரைக் கூர்ந்து நோக்கி, உமக்கு ஒன்று குறைவுபடுகிறது, நீர் போய் உமக்கு உரியவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும், அப்போது நீர் விண்ணகத்தில் செல்வந்தராய் இருப்பீர் என்கிறார். ஆனால் அவரோ முகவாட்டத்தோடு செல்கிறார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தன.

இங்கே இயேசு வலியுறுத்திக்கூறும் உண்மை இதுதான். நாம் நிலைவாழ்வைப் பெற வேண்டும் என்றால், நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுக்குக் கொடுத்து வாழவேண்டும்; தேவையில் இருப்பவர்களோடு பகர்ந்து வாழவேண்டும் என்பதே.

கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பத்துக்கட்டளைகளையும், இன்ன பிற கட்டளைகளையும் நாம் கடைப்பிடிக்கலாம். ஆனால் பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்று வருகின்றபோது அதில் மிகப்பெரிய தேக்கநிலை உருவாகிவிடுகின்றது. செல்வந்தன் கடவுள் கொடுத்த கட்டளைகளை கடைபிடித்தான். ஆனால், ஏழைகளுக்குக் கொடுக்கவேண்டும் என்று இயேசு சொன்னபோது, அவன் பின்வாங்குகிறான். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் அவன் தீமை செய்யாதிருக்கலாம், ஆனால் நன்மை செய்யத் தவறிவிடுகிறான். கிறிஸ்தவம் என்பது தீமை செய்யாமல் இருத்தல் மட்டுமல்ல, நன்மை செய்வதிலும் உள்ளது.

இன்றைக்கு நாம் நம்மிடத்தில் இருப்பவற்றை பிறருக்குக் கொடுத்து வாழ முன்வருகிறோமா? அல்லது நாம் சம்பாதித்த பணத்தை நாமே அனுபவிக்க நினைக்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கொடுக்கும்போது வாங்குபவர்கள் விழிகளில் நன்றி தெரியவேண்டும் என்று கூட எதிர்பார்க்காமல் கொடுப்பவர்களே சிறந்த வள்ளல்கள் என்பார் எழுத்தாளர் வெ. இறையன்பு. நாம் கொடுக்கவேண்டும், அதுவும் எந்தவொரு எதிர்பார்பில்லாமல் கொடுக்கவேண்டும் என்பதே அவர் கூறும் செய்தியாக இருக்கின்றது.

ஆகவே, கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் கொடைகளை, செல்வத்தை, உழைப்பை, அறிவை, பொருளை ..... நமக்காக வைத்துக்கொள்ளாமல், இல்லாதவர்களுக்கு, ஏழைகளுக்குக் கொடுத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

தனக்கு வேண்டாதபோது பிறருக்குக் கொடுப்பது தானம் அல்ல; பிறருக்கு வேண்டும்போது கொடுப்பதுதான் தானம் வெ.இறையன்பு.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, 'நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று அவரைக் கேட்டார் (மாற்கு 10:17)

இயேசுவைத் தேடி வந்த இந்த மனிதரைப் பற்றிய செய்தியை ஒத்தமைவு நற்செய்தியாளர் மூவரும் குறித்துள்ளனர் (காண்க: மத் 19:16-30; மாற் 10:17-31; லூக் 18:18-30). இந்த மனிதர் இயேசுவை வழியில் எதிர்பாராத விதத்தில் சந்திக்கவில்லை; மாறாக, இயேசு எருசலேமை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார் என்பதை அறிந்து, ஓடிவந்து இயேசுவின் முன்னிலையில் தாள்பணிகின்றார். முழந்தாள்படியிடுவது சீடர் தம் குருவுக்குக் காட்டுகின்ற மரியாதையின் அடையாளம். எனவே, இந்த மனிதர் ஒருவிதத்தில் ஏற்கெனவே இயேசுவின் சீடராகத் தம்மைக் கருதி, தம் குருவிடமிருந்து நற்போதனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் நல்ல எண்ணத்தோடு இயேசுவை அணுகுகிறார். நல்ல போதகரே என அவர் இயேசுவை அழைப்பதும் கருதத் தக்கது. அதற்கு இயேசு, நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே என்று பதிலளிக்கிறார் (மாற் 10:18). இயேசு கடவுளுக்கு உரிய பண்புகள் தமக்கு உரியவை என இங்கே உரிமை பாராட்டிப் பெருமை கொள்ளவில்லை. அதே நேரத்தில் கடவுளின் நற்பண்புகள் தம்மில் துலங்கியதால்தான் அம்மனிதர் தம்மை நல்லவர் எனக் கூறுகிறார் என்பதையும் இயேசு மறைமுகமாக ஏற்கிறார். நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? (மாற் 10:17) என்னும் கேள்வி நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுகின்ற கேள்வியே. இம்மண்ணக வாழ்வோடு மனிதரின் இலட்சியங்கள் மடிந்துவிடுவதில்லை. சாவுக்குப் பின் வாழ்வுண்டு என்னும் உறுதிப்பாடு மனித உள்ளத்தில் ஆழப் பதிந்த ஒன்று.

எனவே, நிலைவாழ்வை அடைய வேண்டும் என்னும் உள்ளார்வத்தால் நாம் உந்தப்பட்டு, நிறைவடைய முனைகின்ற வேளையில் அக்குறிக்கோளை எட்டுவதற்கான வழியைத் தேடுவது இயல்பே. இயேசு அவ்வழியை நமக்குக் காட்டுகிறார். அவரை முழு மனத்தோடும் விருப்போடும் பின்செல்வோர் அவர் வாக்களிக்கின்ற நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வர். அதற்கு நிபந்தனையாக இயேசு நமக்குக் கூறுவது: கடவுளிடமிருந்து உங்களைப் பிரிக்கின்ற அனைத்தையும் துறந்துவிடுங்கள்; கடவுளையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். இயேசுவின் குரலுக்குச் செவிமடுப்போர் அவர் காட்டிய வழியில் நடப்பார்கள். அந்த வழி நம்மை நிலைவாழ்வுக்கு இட்டுச் செல்லும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!