Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               26 மே 2018  
                                                          பாஸ்காக் காலம் 7ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நேர்மையாளரின் வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20

உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்.

ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்துகொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.

எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்; மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போயிற்று. மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது.

என் சகோதரர் சகோதரிகளே, உங்களுள் ஒருவர் உண்மையை விட்டு நெறி தவறி அலையும்போது, வேறொருவர் அவரை மனந்திரும்பச் செய்தால், தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார் என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 141: 1-2. 3, 8 (பல்லவி: 2a)
=================================================================================
பல்லவி: தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்கப்படுவதாக!

1 ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; விரைவாய் எனக்குத் துணைசெய்யும். உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.

2 தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக் கொள்ளப்படுவதாக! மாலைப் பலி போல் என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக! பல்லவி

3 ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்; என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும்.

8 ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன; உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்; என் உயிரை அழியவிடாதேயும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்குள் நுழையமாட்டார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில் சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.

இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

சிறியவர்கள் யதார்த்தமானவர்கள்.

யதார்த்த உணர்வு நம்மிடையே இருப்பது நம்மையும் சிறியவர்களாக மாற்றும்.

இத்தகையோருக்கே இறையரசு உண்டு என்கின்றார்.

நாமும் இறையரசின் மக்களாக யதார்த்த உணர்வுடனே வாழ நம்மை ஒப்புக் கொடுப்போம்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது"

அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவம். சீனாவைச் சார்ந்த 7 வயது சிறுவன் ஜென் ஜியோடியன் (Chen Xiaotian). இவன் மூளைப் புற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளாக உயிருக்கு போராடி வந்தான். இவனுடைய அம்மா ஜோ லு (Zhou Lu), என்பவரோ அவனது உயிரைக் காப்பாற்ற இரண்டு ஆண்டுகளாக பெரும் முயற்சி செய்துவந்தார்.

இந்நிலையில் ஜோ லுவுக்கு திடீரென சிறுநீரக நோய் வந்துவிடுகிறது. அவர் மருத்துவரிடம் சென்று சோதித்துப் பார்த்தபோது, உடனடியாக மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும், இல்லையேல் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தனது நோய்க்காக வருத்தப்படுவதா அல்லது தனது மகனின் மூளை புற்றுநோய்க்காக வருத்தப்படுவதா? என்று ஜோ லு மனதுக்குள் துடிதுடித்து கொண்டபோது, சிறுவனின் மூளைப்புற்று நோய் மிகவும் முற்றிவிட்டதாகவும், கூடிய விரைவில் அவன் இறந்துவிட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் சிறுவன் ஜென் ஜியோடியன் மருத்துவர்களையும், தனது பாட்டி லு யுவாஞ்சியு (Lu Yuanxiu) என்பவரையும் வரவழைத்து, "நான் உயிரிழந்த பிறகு என்னுடைய சிறுநீரகத்தை எடுத்து எனது அம்மாவுக்கு பொருத்தி, அவருடைய உயிரை காப்பாற்றுங்கள்" என்று கேட்டுக்கொண்டான். அதுமட்டுமின்றி மேலும் தன்னுடைய உடலில் உள்ள மற்ற பாகங்களையும் எடுத்துக்கொள்ளுமாறும் உடல் தானத்திற்கு தான் சம்மதிப்பதாகவும் தெரிவித்துள்ளான். இதைக் கேட்டு பாட்டி லு யுவாஞ்சியு நெகிழ்ச்சி அடைந்தார். அந்த சிறுவன் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி (2/4/2018) மரணமடைந்தான். உடனே மருத்துவர்கள் அவனுடைய சிறுநீரகங்கள், கல்லீரல் முதலியவற்றை எடுத்து ஒரு சிறுநீரகத்தை சிறுவனின் தாயாருக்கும், மற்றொரு சிறுநீரகத்தை 29 வயது பெண் ஒருவருக்கும், கல்லீரலை 27 வயது நபர் ஒருவருக்கும் பொருத்தினர்.

தற்போது சிறுவனின் தாயார் உள்பட மூவரும் நலமாக இருக்கின்றனர். தனது உயிரை கொடுத்து தனது தாயாரின் உயிரை காப்பாற்றிய சிறுவனின் தியாகம் குறித்து சீன ஊடகங்கள் பெரும் பரபரப்போடு செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

குழந்தைகள் எவ்வளவு தியாகம் நிறைந்தவர்கள், அவருடைய உள்ளம் எவ்வளவு பரிசுத்தமானது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் சிலர் தங்களுடைய குழந்தைகளை இயேசுவிடம் கொண்டுவந்து, அவர்களை அவர் ஆசிர்வதிக்குமாறு கேட்கின்றார்கள். ஆனால், இயேசுவின் சீடர்களோ அவர்களைத் தடுகின்றார்கள். இதைப் பார்த்து சினம்கொள்ளும் இயேசு அவர்களிடம், "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கு உரியது" என்கின்றார்.

பொதுவாக நல்ல நாட்களின்போதும் முக்கியமான நாட்களின்போதும் யூதப் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை ரபிக்களிடம் கொண்டு வந்து ஆசிர்வதிக்குமாறு கேட்பார்கள். அவர்களும் குழந்தைகளைத் தொட்டு ஆசிர்வதிப்பார்கள். இது வழக்கமாக நடைபெற்றக்கூடிய காரியம். ஆனால் இயேசுவின் சீடர்களோ அவ்வாறு தங்களுடைய குழந்தைகளை இயேசு ஆசிர்வதிக்க வேண்டும் என்று வந்தபோது, தடுத்து நிறுத்தியதைப் பார்த்து அவர்களிடம் சினம் கொள்கின்றார். மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் இறையாட்சிகும் எத்தகைய தொடர்பிருக்கின்றது என்பதை அவர் மிக அழகாக எடுத்துக்கூறுகின்றார்.

ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதற்கு இருக்கவேண்டிய முதன்மையான தகுதி அன்பு, இரக்கம் மற்றும் தியாக உள்ளமாகும். இவற்றையெல்லாம் குழந்தைகள் இயல்பிலே கொண்டிருக்கின்றார்கள். மேலே சொல்லப்பட்ட நிகழ்வு இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. எனவே தியாக உள்ளத்தோடும் உண்மையான அன்போடும் இரக்கத்தோடும் இருக்கின்ற குழந்தைகளை சீடர்கள் தன்னிடம் வரவிடாமல் தடுத்தனால்தான் இயேசு அவர்களிடம் சினம் கொள்கின்றார்.

ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதற்கு இருக்கவேண்டிய இரண்டாவது தகுதி தூய்மையான உள்ளம் அல்லது தூய்மையான வாழ்க்கையாகும். இதனையும் குழந்தைகள் இயல்பிலே கொண்டிருக்கின்றார்கள். அதனால்தான் ஆண்டவர் இயேசு இறையாட்சி இத்தகையோருக்கே உரியது என்று குழந்தைகளைக் குறித்துச் சொல்கின்றார்.

நம்மிடத்தில் குழந்தைகளிடம் இருக்கின்ற அன்பும் தியாகம் இரக்கமும் அதோடுகூட தூய உள்ளமும் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் ஆணவத்திற்கும் தலைக் கணத்திற்கும்தான் எடுத்துக்காட்டாக இருக்கின்றோம். ஆகவே, இத்தகைய தீய பண்புகளை நம்மிடமிருந்து தவிர்த்துவிட்டு, குழந்தைகளைப் போன்று அன்பிலும் தியாகத்திலும் இரக்கத்திலும் சிறந்து விளங்குவதே பொருத்தமானது.

எனவே, நாம் குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நீங்கள் சிறுபிள்ளைகள் போன்று ஆகாவிட்டால் விண்ணரசுக்குள் புகமுடியாது.

இளம்பெண் ஒருத்தி ஒரு பெரிய சூப்பர் மார்கெட்டுக்குள் சென்று, தன்னுடைய வீட்டிக்குத் தேவையான மளிகைச் சாமான்கள், காய்கறிகள், பழங்கள் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு சுமக்க முடியாமல் வெளியே வந்தாள். பின்னர் அவற்றைத் தன்னுடைய சைக்கிளில் வைத்துக்கொண்டு, வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாள். வண்டியில் வைத்தது போக, பொருட்கள் மீதமும் இருந்ததால், அவற்றை ஒரு கையில் வைத்துக்கொண்டு சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்தாள்.

சாலையில் இருந்த ஒரு வேகத்தடையில் (Speed Break) வண்டி இறங்கியபோது அவருடைய கால் இடறி அப்படியே சரிந்துவிழுந்தாள். அதனால் அவள் தன்னுடைய பையில் வைத்திருந்த பழங்கள், காய்கறிகள் யாவும் நாலாபக்கமும் சிதறி ஓடின. அந்த சாலையில் எத்தனையோ பெரிய மனிதர்கள் போவதும், வருவதுமாய் இருந்தார்கள். ஆனால் யாருமே அவளுக்கு உதவ முன்வரவில்லை. அவள் தனி ஒரு ஆளாய் கீழேகிடந்த எல்லாவற்றையும் பொறுக்கி எடுத்து, தன்னுடைய பையில் போட்டுக்கொண்டிருந்தாள்.

அந்நேரத்தில் பக்கத்திலிருந்த பள்ளிக்கூடத்திலிருந்து உணவு இடைவேளைக்காக வெளியே வந்த மாணவர்கள் சிலர் அப்பெண்மணியின் நிலைகண்டு, அவளுக்கு உதவுவதற்காக ஓடிவந்தார்கள். ஒருசில மாணவர்கள் கீழே கிடைத்தவற்றை பொறுக்கி எடுத்து, பையில் போயிட்டார்கள். இன்னும் ஒருசிலர் தங்களுடைய வகுப்பறைக்குச் சென்று, அப்பெண்ணின் கிழிந்திருந்த பைகளுக்கு மாற்றாக வேறு பைகளைக் கொண்டுவந்து, அவற்றில் கீழேகிடந்த பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே போட்டார்கள்.

பின்னர் அந்த மாணவர்கள் (சிறுவர்கள்) பைகளை எடுத்து தங்களுடைய சைக்கிளில் போட்டுக்கொண்டு, அந்தப் பெண்மணி இருந்த வீடுவரை சென்று, அவளிடம் பொருட்களை ஒப்படைத்துவிட்டு, அப்படியே வீடு திரும்பினார்கள். வானதூதர்கள் போன்று வந்து உதவிய மாணவர்களை நினைத்து அந்தப் பெண்மணி மிகவும் மகிழ்ந்து போனாள்.

பெரியவர்கள் எல்லாரும் கண்டுகொள்ளாமல் சென்றபோது, சாதாரண சிறுவர்களோ விழுந்து கிடந்த அப்பெண்மணிக்கு உதவியது நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சிறுபிள்ளைகளைத் தொடவேண்டும் என்று ஒருசிலர் அவரிடம் குழந்தைகளைக் கொண்டுவருகிறபோது, சீடர்கள் அவர்களை அதட்டுகிறார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், "சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது" என்கிறார்.

பெரியவர்களிடமிருந்து குழந்தைகள் ஆசிர்பெறுவது வழக்கம். இது எல்லா சமூகத்திலும் காணக்கூடிய ஒன்று. ஆனால் சீடர்கள், குழந்தையின் பெற்றோர்களை அதட்டியது எனது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

அடுத்ததாக இயேசு கூறும், "இறையாட்சி இத்தகையோருக்கே உரியது என்ற வார்த்தை நமது சிந்தனைக்கு உரியது. குழந்தைகள் மாசு மருவற்றவர்கள், கள்ளம் கபடு இல்லாதவர்கள், தாழ்ச்சி நிறைந்தவர்கள். அதனால்தான் இயேசு இறையாட்சி குழந்தைகளுக்கு உரியது என்கிறார்.

இன்றைக்கு நாம் வளர, வளர குழந்தைகளுக்கே உரிய நல்ல பண்புகளைத் தொலைத்துவிட்டு, கரடுமுரடானவர்களாக, தீயவர்களாக மாறிவிடுகின்றோம். இன்னும் சொல்லப்போனால் யாருமே எனக்குத் தேவையில்லை என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றோம். ஆனால் குழந்தைகள் அப்படியல்ல, அவர்களுக்கு பெரியவர்களின் (கடவுளின்) துணை தேவைப்படுகின்றது. நாம் குழந்தைகளைப் போன்று தூயவர்களாக, கடவுளை மட்டுமே நம்பி வாழ்கின்றவர்களாக இருக்கும்போது கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார் என்பது உண்மை.

எனவே கள்ளம் கபடற்ற குழந்தைகளின் உள்ளம் கொண்டு வாழ்வோம். கடவுளின் ஆட்சியை நமதாக்கிகொள்வோம்.

"ஆகாயத்தின் ரத்தினம் சூரியன்; வீட்டின் அலங்காரம் குழந்தை" வேர்ட்ஸ்வொர்த்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
சிறுகுழந்தைகளை வரவிடுங்கள்

பொதுவாக யூதத்தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளைப் போதகர்களிடம் கொண்டுவந்து ஆசீர் பெற்றுச்செல்வது வழக்கம். குறிப்பாக தங்கள் குழந்தைகளின் முதல் பிறந்தநாளில் இதை அவர்கள் தவறாமல் செய்தார்கள். இந்த ஒரு நோக்கத்தோடு தான், அவர்கள் தங்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். சீடர்களுக்கும் இது நன்றாகத்தெரியும். சீடர்களுக்கு நிச்சயமாக குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்து ஆசீர்பெற்றச்செல்வது மகிழ்ச்சிதான். ஆனால், இங்கே அவர்கள் கோபப்படுவதற்குக்காரணம் சூழ்நிலை. இயேசு ஏற்கெனவே இரண்டு முறை தான் பாடுகள் பட்டு இறக்கப்போவதை சீடர்களுக்கு அறிவித்துவிட்டார். சீடர்களுக்கு அது என்னவென்று முழுமையாகப்புரியவில்லை என்றாலும், இயேசுவின் முகத்தில் படிந்திருந்த கலக்க ரேகைகளை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவே, இயேசுவோடு இருந்து அவரைப்பாதுகாப்பதும், தேவையில்லாத தொந்தரவுகளிலிருந்து அவரைக்காப்பாற்றி அவருக்கு ஓய்வுகொடுக்க நினைப்பதும் சீடர்களுடைய எண்ணமாக இருந்தது. எனவேதான், அவர்கள் பெற்றோரை அதட்டினர்.

இயேசுவோ, சிறு குழந்தைகளை தன்னிடம் வரவிட அவர்களைப்பணிக்கிறார். தனக்கு எவ்வளவுதான் துன்பங்கள் இருந்தாலும், கலக்கம் இருந்தாலும், அதிலே மூழ்கிப்போய் தவிக்காமல், தன்னுடைய கடமையை நிறைவாகச்செய்வதில் அதிக அக்கறை எடுக்கிறார். இறைவனின் பிரசன்னத்தை, அன்பை, இரக்கத்தை, ஆசீரை மனுக்குலம் உணரச்செய்வதுதான் இயேசுவின் கடமை. அதை நிறைவாகச்செய்வதின் சிறப்பான உதாரணம்தான் இந்த நற்செய்திப்பகுதி. தன்னுடைய பணிவாழ்வில் ஒவ்வொருநிமிடமும் இயேசு விழிப்பாக இருந்தார் என்பதைத்தான் இது காட்டுகிறது. அவருடைய பணிவாழ்வில் தன் சுயநலத்துக்காக எதையும் குறை வைப்பதற்கு தயாரில்லை.

வாழும் ஒவ்வொரு கணமும் நிறைவோடு வாழ வேண்டும். நம்முடைய கவலைகளும், கலக்கங்களும் நாம் மற்றவருக்கு உதவி செய்வதற்கு தடையாக இருக்கக்கூடாது. அது ஒரு பொருட்டாகவும் இருக்கக்கூடாது. இறைவனைத்துணையாகக்கொண்டு நமது வாழ்வை சிறப்பாக வாழ்வோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!