Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               25 மே 2018  
                                                          பாஸ்காக் காலம் 7ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் (5: 9-12)

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்று கொண்டிருக்கிறார்.

அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள். தளரா மனமுடையோர் பேறுபெற்றோர் என்கிறோம்.

யோபுவின் தளரா மனத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் என்ன செய்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனெனில், ஆண்டவர் மிகுந்த பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, என் சகோதரர் சகோதரிகளே, நீங்கள் ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின்மீதும் மண்ணுலகின்மீதும் வேறு எதன்மீதும் ஆணையிடாதீர்கள்.

நீங்கள் ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 103: 1-2. 3-4. 8-9. 11-12 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!
-பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்.
-பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.
-பல்லவி

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.
12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 17:17

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை; உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (10: 1-12)

அக்காலத்தில் இயேசு புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம்போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார்.

பரிசேயர் அவரை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.

அவர் அவர்களிடம் மறுமொழியாக, "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?" என்று கேட்டார்.

அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்" என்று கூறினார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.  இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.

பின்னர் வீட்டில் இதைப்பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.

இயேசு அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அன்பின் நிலைத்திருங்கள்

அந்த ஊரில் இருந்த பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டிக்கிடந்தது.

ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய இறைவன், "பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இதுவரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது. எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக்கூடாது" என்றார். கனவிலிருந்து வெளியே வந்த வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். இறைவனிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.

"நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்" என்று அவர்கள் அடுக்கிக் கொண்டே போனார்கள். அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், "அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து இறைவன் வெளியேறப் போகிறேன் என்று கூறிவிட்டாரோ, அப்போதே இந்த வீட்டில் இருக்கும் எல்லாப் பொருட்களும் வெளியேறி விடும். எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பர அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று இறைவனிடம் கேளுங்கள்" என்று கூறினாள்.

இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி. அன்றைய தினம் இரவில், அவர் கனவில் இறைவன் தோன்றினார். வியாபாரி அவரிடம், "இறைவா! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பர அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது" என்றார். இறைவன் சிரித்தபடி "மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவரும் பரஸ்பர அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்" என்று கூறி இறைவன் அங்கேயே தங்கிவிட்டார்.

ஆம், உண்மையான, பரஸ்பர அன்பு குடியிருக்கக்கூடிய குடும்பத்தில் ஆண்டவன் நிச்சயம் குடியிருப்பார். அதைத் தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துச் சொல்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்றொரு கேள்வியைக் கேட்கின்றனர். அவர்கள் இப்படிப்பட்ட ஒரு கேள்வியை இயேசுவிடம் கேட்பது பதிலைத் தெரிந்துவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்பதற்காகவே. பரிசேயர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு ஆம் என்றோ அல்லது முறை என்றோ சொன்னால் அது ஏரோது அரசன் செய்த தவற்றை ஆதரிப்பதாகவே இருக்கும் அதே நேரத்தில் திருமுழுக்கு யோவானின் நிலைப்பாட்டிற்கு எதிராக இருக்கும். அப்படியில்லாமல் இயேசு இல்லை என்று சொன்னால் அது ஏரோது அரசன் செய்த தவற்றைக் கண்டிப்பதாக இருக்கும். இதனை நன்றாக உணர்ந்த இயேசு, பரிசேயர்கள் கேட்ட கேள்விக்குப் நேரடியாகப் பதில் சொல்லாமல், திருமணத்தின் உன்னதத்தை விளக்கிச் சொல்லி விடையளிக்கின்றார்.

ஆண்டவராக கடவுள், "ஆணும் பெண்ணும் ஈருடல் ஓருயிர்" என்ற அடிப்படையில் வாழவேண்டும் என்பதற்காகவே படைத்தார். மனிதர்கள் அதை உணர்ந்துகொள்ளாமல், ஒருவர் மற்றவருக்கு இடையே அன்பில்லாமல் வாழ்வது மிகவும் துரதிஸ்டவசமானது. ஆணும் பெண்ணும் உண்மையான, தூய பரஸ்பர அன்பில் நிலைத்திருக்கும்போது அக்குடும்பம் திருக்குடும்பமாக மாறும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆகவே, குடும்பங்களில் பரஸ்பர அன்பு நிலைத்திருக்கச் செய்வோம். ஒருவர் மற்றவருக்கு உறுதுணையாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"பரிசேயர் இயேசுவை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று கேட்டு அவரைச் சோதித்தனர்" (மாற்கு 10:2)

ஒரு பொருள் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என அறிய விரும்பும்போது நாம் அவர்களிடம் அப்பொருள் பற்றிக் கேள்வி கேட்கிறோம். ஆனால் கேள்விகள் பல விதம். சிலர் நேர்மையான உள்ளத்தோடு பிறருடைய கருத்தை அறியும் ஆவலோடு கேள்வி கேட்பார்கள். வேறு சிலரோ பிறரிடம் குற்றம் காண்கின்ற நோக்கத்தோடு கேள்வி கேட்பார்கள். இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் பலர் இருந்தார்கள். சிலர் நேர்மையான உள்ளத்தோடு அவரை அணுகியதுண்டு. ஆனால் வேறு சிலரோ "இயேசுவைச் சோதிக்கும் எண்ணத்துடன்" அவரிடம் கேள்வி கேட்டார்கள். மண விலக்குப் பற்றி இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தது. எனவேதான் இயேசு தம்மிடம் கேள்வி கேட்ட பரிசேயரிடம் ஒரு மறு கேள்வியைக் கேட்கிறார்: "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?" (மாற் 10:3). கணவன் மணவிலக்குச் சான்று எழுதி, தன் மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே அனுமதி அளித்ததாக அவர்கள் பதிலிறுக்கிறார்கள் (மாற் 10:4). உண்மையில் மோசே மண விலக்குப் பற்றி எந்தவொரு "கட்டளை"யும் கொடுக்கவில்லை. மாறாக, மண விலக்குச் செய்யும் கணவன் மீண்டும் அதே பெண்ணை மணமுடித்தல் ஆகாது என்பதே சட்டம்.

எவ்வாறிருந்தாலும், அக்காலத்தில் திருமண உறவு சீர்குலையத் தொடங்கியது என்பது மட்டும் தெரிகிறது. இயேசு வீண் வாதங்களில் ஈடுபடுவர் அல்ல. அதே நேரத்தில் அவர் அருட்சாதனம் பற்றி "படைப்பின் தொடக்கத்திலேயே" கடவுள் வழங்கிய சட்டத்தைத் தம் எதிரிகளுக்கு நினைவூட்டுகிறார். அதாவது, கடவுள் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்கள் திருமண உறவில் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்க வேண்டும் எனவும், "கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்கலாகாது" எனவும் தொடக்கத்திலிருந்தே கட்டளை தந்துள்ளார் (காண்க: தொநூ 2:24; மாற் 10:6-9). இன்றைய உலகில் திருமண உறவு பல விதங்களில் முறிந்துவிடும் நிலையில் உள்ளது. கணவனும் மனைவியும் கடவுள் தங்கள் மீது காட்டுகின்ற அன்பின் அடிப்படையில் ஒருவர் ஒருவரை ஏற்கும்போது திருமண அன்பு நிலைத்துநிற்கும். மாறாக, தன்னலப் போக்கு குடும்பத்தின் உள்ளே நுழைந்துவிட்டால் குடும்ப உறவும் அதன் அடிப்படையான திருமண ஒன்றிப்பும் ஆபத்துக்கு உள்ளாகக் கூடும். ஆனால் கடவுளின் விருப்பம் யாதென இயேசு தெளிவாகக் கற்பிக்கிறார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் திருமண மற்றும் குடும்ப உறவும் ஒற்றுமையும் இன்றைய உலகில் தழைத்தோங்க வேண்டும் என்னும் குறிக்கோளை அடைய உழைத்திட வேண்டும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
அருட்சாதனம் என்று திருவருட்சாதனம்

அது ஒரு கிறிஸ்தவக் குடும்பம். ஒருநாள் அந்தக் குடும்பத்தில் இருந்த மகன் தன்னுடைய தாயிடம் சென்று, "அம்மா! எனக்கொரு சந்தேகம், மனித இனம் எப்படித் தோன்றியது? என்பதை எனக்கு எடுத்துச் சொல்லுங்கள்" என்றான். அதற்கு அவனுடைய தாய், "கடவுள் படைப்பின் தொடக்கத்தில் ஆதாம் ஏவாளைப் படைத்தார்; அவர்களிடமிருந்து பலுகிப் பெருகி மனித இனம் தோன்றியது" என்றாள்.

தாய் சொன்ன பதிலில் திருப்தி அடையாத மகன், தன்னுடைய தந்தையிடம் சென்று, அதே கேள்வியைக் கேட்டான். அதற்கு அவனுடைய தந்தை, "குரங்கிலிருந்து மனித இனம் தோன்றியது. அதிலிருந்துதான் மனித இனம் படிப்படியாக வளர்ந்து, இன்றைக்கு இவ்வளவு பெரிதாக இருக்கிறது" என்றான்.

தந்தை சொன்ன பதிலில் குழம்பிப்போன மகன், மீண்டுமாக தாயிடம் சென்று, "அம்மா! நீங்கள் மனித இனம் ஆதாம் ஏவாளிடமிருந்து தோன்றியது என்கிறீர்கள், ஆனால் அப்பாவோ, குரங்கிலிருந்து மனித இனம் தோன்றியது என்கிறார். இந்த இரண்டில் இது உண்மை?, நான் யாரை நம்புவது?" என்று கெஞ்சிக் கேட்டான். அதற்கு அவனுடைய தாயானவள், "என்னுடைய பரம்பரை ஆதாம் ஏவாளிடமிருந்து தோன்றியது; உன்னுடைய தந்தையின் பரம்பரையோ குரங்கிலிருந்து தோன்றியது" என்று பதிலளித்தாள்.

இவை எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த தந்தை, கொலைவெறியோடு தன் மனைவியின்மீது பாயத் தொடங்கினான்.

வீட்டுக்கு வீடு வாசல்படி போன்று, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள கணவன் மனைவிக்கு இடையே ஒவ்வொரு விதமான பிரச்சனை என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் பரிசேயர் சிலர் ஆண்டவர் இயேசுவிடம் வந்து, "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று கேட்கின்றனர். அதற்கு அவர் இயேசு அவர்களிடம், ".... கடவுள் ஆணும், பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர், இனி அவர்கள் இருவர் அல்ல, ஒரே உடல்" என்கிறார். அதாவது படைப்பிலே அவர்கள் (கணவனும், மனைவியும்) ஒன்றாக இருக்கப் பணிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆதலால் மணவிலக்கு என்பதோ கூடாது என்பதை ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

"இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாய் இருப்பேன்" என்று வாக்குறுதி கொடுத்த கணவனும், மனைவியும் இன்றைக்கு பிரமாணிக்கமாகவும், ஒரே உடலாகவும் இணைந்திருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமான ஒன்று.

அறிவியலும், தொலை தொடர்புச்சாதனங்களும் பெருகிவிட்ட சூழலில் கணவன் மனைவிடம், அல்லது மனைவி கணவனிடம் பிரமாணிக்கமாக இருப்பது என்பது அரிதாகிக் போய்விட்டது. "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவரும் விபசாரம் செய்கிறாள்" என்று சொல்வதன் வழியாக ஆண்டவர் இயேசு திருமண வாழ்வில் பிரமாணிக்கமின்மை என்பது விபசாரத்திற்குச் சமம் என்கிறார்.

அதே வேளையில் திருமண வாழ்வு அன்பில் கட்டி எழுப்பப்படாவிட்டால் அது முழுமை பெறாது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். தூய பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், "இவையனைத்திற்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுறச் செய்யும்" என்று. (கொலோ 3:14). ஆகவே, திருமண உறவுகள் அன்பில் கட்டி எழுப்படவேண்டும். ஏனென்றால் அன்பு இருக்கும் இடத்தில்தான் மன்னிப்பு, தியாகம், புரிந்துகொள்ளும் தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை எல்லாம் இருக்கும்.

"ஒரு திருமணத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென்றால் இருவர் தேவை. தோல்விக்கு ஒருபோதும்" என்பார் ஹெர்பர்ட் சாமுவேல் என்ற அறிஞர். ஆகவே, திருமண வாழ்வில் மட்டுமல்லாது நம்முடைய ஒவ்வொருவருடைய வாழ்விலும் பிரமாணிக்கமற்ற தன்மையை வேரறுத்து, அன்பை அடிப்படையாகக் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் நிறை நல்வாழ்வைப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!