Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               24 மே 2018  
                                                          பாஸ்காக் காலம் 7ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கொடுக்க வேண்டிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அவ்வேலையாள்களின் கூக்குரல் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப் போல உங்கள் சதையை அழித்துவிடும்.

இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே! உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள். நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 49: 13-14b. 14உ-15. 16-17. 18-19 (பல்லவி: மத் 5: 3)
=================================================================================
பல்லவி: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களதே.

13 தம்மையே மதியீனமாக நம்பியிருப்போரின் முடிவு இதுவே; தம் சொத்திலேயே மகிழ்ச்சி கொள்வோரின் கதி இதுவே. 14b பலியாடுகளைப் போலவே அவர்களும் சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்; சாவே அவர்களின் மேய்ப்பன். பல்லவி

14உ அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்; அப்பொழுது அவர்களது உருவம் மாய்ந்து போகும்; பாதாளமே அவர்களது குடியிருப்பு. 15 ஆனால், கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி; பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து என்னைத் தூக்கி நிறுத்துவார். பல்லவி

16 சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே! 17 ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை; அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை. பல்லவி

18 உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும், "நீங்கள் நன்மையையே நாடினீர்கள்" என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும், 19 அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்துகொள்வர்; ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
1 தெச 2: 13

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இரு கையுடையவராய் நரகத்துக்குத் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது நல்லது.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 41-50

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: "நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.

உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.

நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது. ஏனெனில் பலிப் பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவது போல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர்.

உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

அன்றைய நாளின் சிந்தனையில் உறுப்புக்களை இழந்தாவது மீட்பினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பினை அந்த காலத்தின் முரட்டுத்தனத்தின் பொருட்டு கூறினாலும், உட்கருத்து உறுப்புக்களை இழப்பது அல்ல, மாறாக நேரிய மனத்துடனே வாழ்வு பெற வேண்டும் என்பதுவே.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார்"

நடு நடுங்க வைக்கும் குளிர் இரவில் குருவானார் ஒருவர், தன் பங்கில் இருந்த ஒரு பணக்கார வியாபாரியின் வீட்டுக் கதவைத் தட்டினார். கதவைத் திறந்த வியாபாரி, குருவானவரைக் கண்டதும், அவரை உடனே உள்ளே அழைத்தார். தரையில் கனமான கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. கணப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அந்தக் கதகதப்பான அறையில், வசதியான சோபாக்களில் அவர்கள் அமர்ந்தனர்.

"தாங்கள் வந்த விஷயத்தை நான் தெரிந்து கொள்ளலாமா?"என்று வியாபாரி, குருவானவரைப் பார்த்துக் கேட்டார். "ஏழை மக்களுக்குக் குளிரைத் தாங்குவதற்கான ஆடைகள் வாங்குவதற்காக நான் பணம் திரட்டும் காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறேன். அதுவும் இந்த வருடம் குளிர் ரொம்ப அதிகமாகவே இருக்கு! எலும்பையே ஆட்டி வைக்குது!" என்று கூறினார் குருவானவர். "நம்மூர் மக்கள் இதுக்கெல்லாம் பழகினவங்கதானே!' என்று மிகவும் அலட்சியமாகக் கூறினார் வியாபாரி. "எப்படி இருந்தாலும் நம்மால் முடிந்த உதவியை நாம் செய்யத் தானே வேண்டும்!"என்று குருவானவர் கூறினார்.

"நீங்கள் கூறுவதும் சரிதான்! ஆனால், என்னைப் பொறுத்தவரை, நான் உதவியென்று செய்தால், ஏதாவது பெரிதாகக் கொடுக்க விரும்புகிறேன். அதனால். உங்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது மன்னியுங்கள்!"என்று வியாபாரி கூறினார். குருவானவர், மிகுந்த ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பினார். இரண்டு நாட்கள் சென்றன. மீண்டும் குருவானவர், அந்த வியாபாரியின் வீட்டுக் கதவைத் தட்டினார். இந்த முறையும் வியாபாரி, குருவானவரை வீட்டுக்குள் அழைத்தார். ஆனால், குருவானவர் வீட்டுக்குள் நுழையாமல் வெளியே தள்ளியே நின்றுகொண்டார். "இந்த வழியே போய்க்கிட்டு இருந்தேன். அப்படியே உங்களைப் பார்த்துகிட்டுப் போகலாமின்னு வந்தேன்" என்று வியாபாரியைப் பார்த்து குருவானவர் கூறினார்.

"ரொம்ப கரிசனமானவராக இருக்கீங்களே, சரி உள்ளே வாங்க, வெளியே ரொம்ப குளிரா இருக்கும்!"என்று கூறிய வியாபாரி, குருவானவரை வீட்டுக்குள் வருமாறு அழைத்தார். "இல்லை, இல்லை நாம் ரொம்ப அவசரமாக போய்கிட்டு இருக்கேன், உங்க குடும்பம் எப்படி இருக்கு? எல்லாரும் நல்லா இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்!"என்று குருவானவர் விசாரித்தார். "எல்லாரும் நலம்" என்று கூறிய வியாபாரி குளிரால் தன் ஆடையை இறுக்கிக் கொண்டார். தொடர்ந்து குருவானவர் அவரிடம், "உங்க தொழில் எப்படி இருக்கு?"என்று வியாபாரியைப் பார்த்துக் கேட்டார். வியாபாரி குளிரில் நடுங்கிக்கொண்டே, ஏறக்குறைய அலறினார். "போதும் போதும் ஏழைகள் குளிரில் எப்படிக் கஷ்டப்படுவாங்கன்னு இப்போது நான் உணர்ந்து கொண்டேன். முதல்லே உள்ளே வாங்க!"என்று குருவானவரை உள்ளே அழைத்தார் வியாபாரி.

பின்னர், அந்த வியாபாரி மக்களுடைய தேவைக்கும் குருவானவரின் தேவைக்கும் நிறையப் பணம் கொடுத்து அனுப்பினார்.. அவர் துறவிக்கு குருவானவருக்கும் அவரைச் சார்ந்த மக்களுக்கும் இவ்வாறு உதவி செய்த அடுத்த ஓரிரு மாதங்களில் அவருடைய வியாபாரம் நிறைய இலாபத்தோடு இயங்கத் தொடங்கியது.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் பணக்காரர் தன்னை நாடி வந்த குருவானவருக்கு வேண்டிய உதவியைச் செய்தபின் அவருடைய வியாபாரம் அமோக வளர்ச்சியடைந்ததைப் பார்க்கும்போது இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லும், "நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என்ற வார்த்தைகளை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது.

நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகள் நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. அதில் முதலாவது கிறிஸ்து கிறிஸ்தவர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றார் என்பதாகும். ஆம், நாம் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களுக்கு ஒன்று கொடுக்க, அது கிறிஸ்துவுக்கே போய் சேரும் என்பது ஆழமான உண்மை.

அடுத்ததாக, கிறிஸ்துவைச் சார்ந்தவர்களுக்கு சிறிதளவுக்கு ஓர் உதவியை நாம் செய்தாலும் அதற்கான பலனை மிகுதியாகப் பெறுவோம் ஆகும். ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் அதற்கான கைமாறைப் பெறாமல் போகார் என்று சொல்லும் இயேசு, அதிகமாகச் செய்வோருக்கு இன்னும் அதிகமான ஆசிவாதங்களைத் தருவார் என்பதே இயேசுவின் வார்த்தைகள் நமக்குச் சொல்லும் உண்மையாக இருக்கின்றது.

ஆகவே, நமக்கு இறைவாக்கை எடுத்துரைக்கும் இறையடியார்களுக்கு இயன்ற நன்மைகளையும், உதவிகளையும் செய்வோம். அதன்வழியாக இறைவன் தரக்கூடிய அருளாசிரைப் பெற்று மகிழ்வோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இறையடியார்களுக்கு உதவுவோருக்கு இறைவன் அளிக்கும் கைமாறு

நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வேலைபார்க்க பயன்படுத்தப்படும் ஒரு கருவி சேப்டி லாம்ப் (Safety Lamb) என்பதாகும். நிலக்கரிச் சுரங்கங்களில் நிறைய நேரங்களில் தீவிபத்து ஏற்படும். எனவே இவற்றிலிருந்து தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் Safety Lamp மிகவும் தேவையாக இருக்கின்றது.

இக்கருவியைக் கண்டுபிடித்தவர் ஹம்ப்ரி டேவி என்பவர். இவர் Safety Lamp கண்டுபிடித்ததற்கான காப்புரிமைக்கூட ஒரு நிறுவனத்திற்கு இலவசமாகக் கொடுத்துவிட்டார். இதை அறிந்த ஹம்ப்ரி டேவியின் நண்பர்கள், "எதற்காக நீ இப்படிச் செய்தாய், இந்த காப்புரிமையை வைத்துக்கொண்டு நீ நிறையச் சம்பாதித்திருக்கலாம்; இதை வைத்து நீ பெரிய பணக்காரானாக மாறியிருக்கலாம்" என்றனர்.

அதற்கு அவர் அவர்களிடம், "நான் இந்தக் கருவியைக் கண்டுபிடித்தற்கான காரணமே நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஆபத்தின்றி வேலை பார்க்கவேண்டும் என்பதற்காகத் தான். நான் பணத்திற்காக இக்கருவியைக் கண்டுபிடிக்கவில்லை" என்றார். தொடர்ந்து அவர் அவர்களிடம், " நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் Safety Lamp ஐ கண்டுபிடித்தவர் நன்றாக இருக்கவேண்டும்" எனச் சொல்கிறார்களே அதுதான் நான் பெரும் மிகப்பெரிய கைம்மாறு" என்று முடித்தார்.

இந்த மானிட சமூகத்திற்கு நன்மையான ஒரு காரியத்தைச் செய்யும் யாவருக்கும் கடவுள் அளிக்கும் கைம்மாறு நிச்சயம் உண்டு என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்கிறார். இது உண்மையிலும் உண்மை.

இதற்கு எடுத்துகாட்டாக பழைய ஏற்பாட்டிலிருந்து இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம். ஒன்று ஆபிரகாமின் வாழ்வில் நடைபெற்றது. ஆபிரகாம் மம்ரே என்ற இடத்தில் தன்னுடைய கூடாரத்திற்கு வெளியே நின்றுகொண்டிருக்கும்போது வானதூதர்கள் மூவர் தோன்றுகிறார்கள். அவர்களுக்கு ஆபிரகாம் சிறப்பான ஒரு விருந்து படைக்கிறார். இதனால் மகிழ்வுற்ற அவர்கள் மூவரும் ஆபிரகாமையும், அவரது மனைவி சாராவையும் ஆசிர்வதித்து அவர்களுக்கு குழந்தைப் பாக்கியத்தையும் தருகிறார்கள். (தொடக்க நூல் 18: 1-19).

இரண்டாவது நிகழ்வு எலியா இறைவாக்கினரின் வாழ்வில் நடைபெற்றது. எலியா இறைவாக்கினர் சாரிபாத்தில் இருந்த ஒரு கைம்பெண்ணிடம் சென்று, "எனக்கு ஒரு பாத்திரத்தில் குடிக்கத் தண்ணீரும், கையோடு அப்பமும் கொண்டுவா" என்று சொல்கிறார். அதற்கு அவர் "என்னிடத்தில் அப்பம் இல்லை. ஆனால் பத்திரத்தில் கையளவு மாவும், கொஞ்சம் எண்ணையும் மட்டுமே இருக்கிறது. இதைச் சாப்பிட்டு விட்டு, நானும் என்னுடைய மகனும் சாகவேண்டியதுதான்" என்று சொல்கிறார். உடனே இறைவாக்கினர் எலியா, "நான் சொன்னதை உடனே செய், மீண்டுமாக மழை பெய்யும் வரை உன்னுடைய பாத்திரத்தில் மாவும், எண்ணையும் குறையாது" என்கிறார்.

அவர் சொன்னபடியே அந்தக் கைம்பெண் செய்ய, அவரது பாத்திரத்தில் மாவும், எண்ணையும் குறையாமல் இருந்தது ( 1 அரசர்கள் 17)

இந்த இரண்டு நிகழ்வுகளும் நாம் இறைவனிடம் அடியார்களுக்கு உதவி செய்கிறபோது, இறைவன் நமக்கு உதவி செய்வார் என்று உண்மையை எடுத்தியம்புகின்றது. ஆகவே, இறையடியார்களுக்கு உதவுவது நம்முடைய கடமை என்று உணர்ந்து உதவி செய்வோம்.

நம்முடைய ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்யவேண்டும் என்று திருச்சபை நமக்குக் கற்றுத் தருகிறது. உண்மையிலே நாம், நம்மத்தியில் இறைப்பணி செய்யும் இறையடியார்களுக்கு உதவிசெய்கிறோமா? என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்று.

ஆகவே, எல்லாருக்கும் குறிப்பாக இறையடியார்களுக்கு நம்மாலான உதவியைச் செய்வோம். அதன்பயனாக இறைவனால் நிறைவாக ஆசிர்வதிக்கப்படுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!