Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               23 மே 2018  
                                                          பாஸ்காக் காலம் 7ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாளைய வாழ்க்கைபற்றி உங்களுக்குத் தெரியாது. 

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17

"இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்; பணம் ஈட்டுவோம்" எனச் சொல்லுகிறவர்களே, சற்றுக் கேளுங்கள். நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே! நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள். ஆகவே அவ்வாறு சொல்லாமல், "ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடு இருப்போம்; இன்னின்ன செய்வோம்" என்று சொல்வதே முறை. இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை கொள்கிறீர்கள். இது போன்ற பெருமையெல்லாம் தீமையானது. நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 49: 1-2. 5-6. 7,8,9. 10
=================================================================================
பல்லவி: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களதே

மக்களினங்களே, அனைவரும் இதைக் கேளுங்கள்; மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள். 2 தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே, அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள். பல்லவி 

5 துன்பக் காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்? 6 தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப் பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். பல்லவி 

7 உண்மையில், தம்மைத்தாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது; தம் உயிரை மீட்க எதையும் கடவுளுக்குத் தர இயலாது. 8ய மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது. 9 ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திட முடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா? பல்லவி 

10 ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவது போல, ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம் அன்றோ! அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர்.
பல்லவி 


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

தூயமாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-4

அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், "போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார். அதற்கு இயேசு கூறியது: "தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நல்லவை எங்கும் நடந்தாலும், அதைப் பாராட்டுவோம்

கடந்த நூற்றாண்டில் முஸ்லீம்களுக்கும், சீக்கியர்களுக்கும் இடையே அடிக்கடி மதக்கலவரம் நடைபெறுவதுண்டு. அதில் இரு தரப்பிலிருந்தும் ஏராளமான பேர் கொல்லப்பட்டார்கள்; நிறையப் பேர் படுகாயமடைந்தார்கள்.

ஒருமுறை இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் நடைபெற்றபோது இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருசில இளைஞர்கள் தாகத்தால் தவித்துநின்றார்கள். இதைப் பார்த்த சீக்கிய மதத்தைச் சார்ந்த கனையா என்ற இளைஞன் அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்து, அவர்களது தாகத்தைப் போக்கினான்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த சீக்கியர்கள் கனையாவை அவர்களது மத குருவான குரு கோவிந்த சிங்கிடம் இழுத்துச் சென்றார்கள். "இவன் நமது பரம எதிரிகளான முஸ்லீம்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தான்" என்று குற்றம் சாட்டினார்கள். அதற்கு கனையா குருவிடம், "இவர்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். ஆனால் நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தபோது அவர்களில் கடவுளின் முகத்தைத்தான் பார்த்தேனே ஒழிய, அவர்களை முஸ்லீம்களாகப் பார்க்கவில்லை" என்றான்.

அதற்கு குரு அவனிடம், "நீ செய்த சேவை உண்மையிலே பாராட்டுக்குரியது, இத்தகைய சேவையைத் தொடர்ந்து செய்" என்று சொல்லிவிட்டுச் சொன்னார், "இனிமேல் நீ கனையா என்று அழைக்கப்படமாட்டாய், மாறாக "பாய் கனையா" என்றே அழைக்கப்படுவாய்" என்று. (பாய் என்றால் சகோதரன் என்று பொருள், சீக்கியர்களில் மற்ற எல்லாரையும்விட உயர்ந்தவன் என்ற பொருளும் உண்டு).

நன்மையானது எங்கு நடந்தாலும், யார் செய்தாலும் அதைப் பாராட்டவேண்டும் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான யோவான் இயேசுவிடம் வந்து, "போதகரே! உம் பெயரால் ஒருவன் பேய் ஓட்டுவதைப் பார்த்து, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்" என்கிறார். அதற்கு இயேசு அவரிடம், "அவரைத் தடுக்கவேண்டாம், ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்" என்கிறார்.

இங்கே இயேசுவின் பரந்துபட்ட பார்வையை நாம் பாராட்டியே ஆகவேண்டும். ஏனென்றால் இன்றைக்கு (Royalty, Copyright) காப்புரிமை என்ற ரீதியில் ஒருவர் சம்பாதித்து வைத்திருக்கும் பெயரை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது என்று அதற்காக உரிமம் வாங்கி வைத்திருக்கிறார்கள். ஒருவேளை ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தாரின் பெயரை இன்னொருவர் பயன்படுத்திவிட்டால், அதற்கான பின்விளைவை அவர் அனுபவிக்கும் நிலையையும் நாம் பார்க்கின்றோம்.

இத்தகைய பின்னணில் இயேசுவின் வார்த்தைகளை வைத்துப் பார்க்கும்போது அவர் தன் பெயரில் பேய்களை ஓட்டுவதில் ஒருபிரச்சனையும் இல்லை; அவர் நமக்கெதிராக இல்லாததால் நம் சார்பாக இருக்கிறார் என்று சொல்லி முடிக்கின்றார். அதாவது நன்மையான எங்கு வேண்டுமானாலும் நடக்கட்டும், அதற்குத் தான் ஒருபோதும் தடையாய் இல்லை என்ற விதத்தில் இயேசு சீடர்களுக்குப் பதிலளிக்கிறார்.

நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கும் இன்னொரு உண்மையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது ஒருவர் நல்லது செய்யும்போது அவர்மீது பொறாமைகொண்டு, அவரது செயலைத் தடுக்க நினைக்கவேண்டாம் என்பதே அச்சிந்தனை.

பலநேரங்களில் நம்முடைய சமுதாயத்தில் அல்லது நாம் வாழும் சூழலில் ஒருவர் நல்லது செய்யும்போது அவரைப் பாராட்டுகிறோமோ இல்லையோ, அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போடுகின்றோம். இது ஒரு தவறான போக்கு. இயேசு தன்னுடைய சீடர்கள் பேய் ஓட்டியரின் செயலைத் தடுக்க நினைத்தபோது, அது கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஊர்களில் சொல்லப்பட்டும் பழமொழி இது, "ஒருவருக்கு உதவி செய்யாவிட்டாலும், உபத்திரம் செய்யாதே" என்பது. நாம் ஒருவருக்கு உதவி செய்யாவிட்டாலும் (உதவி செய்வது நல்லது), உபத்திரம் செய்யாதிருப்போம். அதேவேளையில் இயேசுவைப் போன்று எல்லாரும் இன்புற்றிருக்கட்டும் என்ற பரந்துபட்ட பார்வைக் கொண்டிருப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்"

ஓர் ஊரில் ஊர் நாட்டாமையாக இருந்து பெரும் பாவம் செய்த ஒருவன் நரகத்துக்கு அனுப்பப்பட்டான். நரகத்தில் அவன் நடந்துகொண்டிருக்கும்போது, பாதையில் ஒரு சிலந்திப் பூச்சி இருந்ததைப் பார்த்து, அதை மிதிக்காமல் கவனமாகச் சென்றான். பிற உயிரைக் கொல்லாமல் இருந்ததற்காக அவன் கணக்கில் கொஞ்சம் புண்ணியம் சேர்ந்தது. உடனே, அந்தப் புண்ணியத்துக்கான பயனும் கிடைத்தது. நரகத்தில் இருந்து மேலே வருமாறு அவனை அழைத்தார்கள்.

"எப்படி மேலே ஏறி வருவது" என்று அவன் கேட்டான். "இதோ, தொங்குகிறது பார் சிலந்தி இழை! இதைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறி வா" என்று சொன்னார்கள் மேலே இருந்தவர்கள். அவனுக்கோ அவநம்பிக்கை. இவ்வளவு மெல்லியதாக இருக்கும் இந்தச் சிலந்தி இழை நம்மைத் தாங்குமா? இதைப் பார்த்தால் கையால் தொட்டதும் அறுந்துபோகும் அளவுக்கு அல்லவா இருக்கிறது, இதை நம்பி எப்படி மேலே ஏறிச் செல்வது என்று யோசிக்கத் தொடங்கினான். அவனது தயக்கத்தைப் பார்த்து மேலே இருந்தவர்கள், "தைரியமாக வா, இழை அறுந்துவிடாது" என்று சொன்னார்கள்.

அவனும் சிலந்தி இழையைப் பிடித்துக்கொண்டு மேலே பாதிவரை சென்றுவிட்டான். அப்போது திடீரென்று கீழே பார்த்தான். அவனைப் போலவே பல பேர் சிலந்தி இழையைப் பிடித்து, மேலே வந்துகொண்டிருந்தார்கள். அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. "புண்ணியம் செய்தது நான், பலனைப் பெறவேண்டியதும் நான். அப்படியிருக்கும்போது இவர்கள் எல்லோரும் மேலே வரப் பார்க்கிறார்களே அது எப்படி" என்று பொறாமையினால் கோபித்துக்கொண்டு கீழே இருந்தவர்களைக் காலால் எட்டி உதைத்தான். அந்தோ பரிதாபம்! சிலந்தி இழையைப் பிடித்துக்கொண்டு கீழே தொங்கிக்கொண்டிருந்த எல்லோரும் விழுந்தார்கள். அவர்களோடு சேர்ந்து அவனும் கீழே விழுந்தான்.

தான் மட்டும் மேலே ஏறிச்செல்ல வேண்டும், மற்றவர்கள் யாரும் மேலே ஏறி வரக்கூடாது என்று பொறாமையுணர்வினால் சுயநலத்தோடு செயல்பட்ட அந்த மனிதனால் மற்றவர்கள் மட்டுமல்ல, அவன்கூட மேலே ஏறிச் செல்ல முடியாது போனது மிகவும் துரதிஸ்டவசமானது.

நற்செய்தி வாசகத்தில் யோவான் இயேசுவிடத்தில் வந்து, "போதகரே, ஒருவர் உம் பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்கின்றார். இயேசு யோவானுக்கு சொன்னப் பதிலைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பாக, யோவான் குறிப்பிடும் அந்த ஒருவர் யார் என அறிந்து கொள்வோம்.

இயேசு/ மெசியாவின் பெயரால் பேய்களை ஒட்டிய அந்த ஒருவர் திருமுழுக்கு யோவானின் சீடராக இருக்கலாம் என்று ஒருசில விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள். எப்படி என்றால், மெசியாவின் வருகையைப் பற்றியும் அவர் வருகின்றபோது என்னென்ன வல்ல செயல்களை அவர் செய்வார் என்பது பற்றியும் திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களுக்குப் போதித்திருக்கக் கூடும். அதை அடிப்படையாகக் கொண்டு, நற்செய்தியில் சொல்லப்படுகின்ற ஒருவர் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டியிருக்கக் கூடும். இது ஒருபுறம் இருக்க, இன்னும் ஒருசில விவிலிய அறிஞர்கள், இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டிய அந்த ஒருவர், இயேசுவின் திருத்தூதர்கள் குழுவிலோ, அல்லது சீடர்கள் குழுவிலோ இல்லாத ஒருவராக இருக்கலாம என்பர். இப்படி திருத்தூதர்கள்/ சீடர்கள் குழுவில் இடம்பெறாத ஒருவர் எப்படி இயேசுவின் பெயரால் பேயை ஓட்டமுடியும் என்பதாலேயே யோவான் இயேசுவிடத்தில் அவ்வாறு கூறுவதாகச் சொல்வார்கள்.

இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டிய மனிதர் யாரென அறிந்த நாம், யோவான் சொன்னதற்கு இயேசு என்ன பதிலளித்தார். அதிலிருந்து நாம் உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசு யோவானிடத்தில், "அவரைத் தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கின்றார்" என்கின்றார். இயேசு யோவானிடத்தில் மறைமுகமாக, "அவர் நம் சார்பாகத்தான் செயலாற்றிக் கொண்டிருக்கின்றார். நீ அவரை குறித்து பொறாமை கொள்ளாதே" என்று சொல்வதாகவே நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் ஒருவரிடத்தில் இருக்கின்ற பொறாமை அடுத்தவரை மட்டுமல்ல அவரையும் வளரச் செய்யவிடாமல் தடுத்துவிடும். யோவான் பொறாமையோடு பேசியதாலேயே இயேசு அப்படி பதிலளித்தார் என நாம் புரிந்துகொள்ளலாம். பல நேரங்களில் நாமும்கூட பொறாமையோடு இருப்பதும் நடந்துகொள்வதும் வேதனையான ஒரு விஷயம்.

ஆகவே, நம்மிடத்தில் இருக்கின்ற பொறாமைக் குணத்தைத் தவிர்ப்போம். அடுத்தவருடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைவோம். ஒருவர் மற்றவருக்கு உறுதுணையாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!