Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               22 மே 2018  
                                                          பொதுக்காலம் 7ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; எனவே நீங்கள் கேட்டாலும் அடைவதில்லை. 

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-10

சகோதரர் சகோதரிகளே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணம் என்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெற முடிவதில்லை? நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள். விபசாரர் போல செயல்படுவோரே, உலகத்தோடு நட்புக் கொள்வது கடவுளைப் பகைப்பது என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கு நண்பராக விரும்பும் எவரும் கடவுளைப் பகைப்பவர் ஆவார். அல்லது "மனித உள்ளத்திற்காகக் கடவுள் பேராவலோடு ஏங்குகிறார். அதற்கு அவர் அளிக்கும் அருளோ மேலானது"" என மறைநூல் சொல்வது வீண் என நினைக்கிறீர்களா? ஆகவே, "செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்"" என்று மறைநூல் உரைக்கிறது. எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும். கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள். இருமனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள். உங்கள் நிலையை அறிந்து, துயருற்றுப் புலம்பி அழுங்கள். உங்கள் சிரிப்பு புலம்பலாகவும், மகிழ்ச்சி ஆழ் துயரமாகவும் மாறட்டும். ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 55: 6-7. 8-9. 9-10. 22
=================================================================================
பல்லவி: கவலையை ஆண்டவர்மேல் போட்டுவிடு; அவரே உனக்கு ஆதரவு

நான் சொல்கின்றேன்: "புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்? நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே!
7 இதோ! நெடுந்தொலை சென்று, பாலை நிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பேனே! பல்லவி 8 பெருங் காற்றினின்றும் புயலினின்றும் தப்பிக்கப் புகலிடம் தேட விரைந்திருப்பேனே!
9a என் தலைவரே! அவர்களின் திட்டங்களைக் குலைத்துவிடும்; அவர்களது பேச்சில் குழப்பத்தை உண்டாக்கும். பல்லவி
9b ஏனெனில், நகரில் வன்முறையையும் கலகத்தையும் காண்கின்றேன்."
10a இரவும் பகலும் அவர்கள் அதன் மதில்கள் மேல் ஏறி அதைச் சுற்றி வருகின்றனர். பல்லவி
22 ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
கலா 6: 14
அல்லேலூயா, அல்லேலூயா!
நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன். அதன் வழியாகவே, உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா! 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிலும் கடையராக இருக்கட்டும்.

தூயமாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 30-37


அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் மலையை விட்டுப் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், "மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்தபொழுது இயேசு, "வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்" என்றார்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அனைவருக்கும் தொண்டராக இருக்கட்டும்

பெருநகர் ஒன்றில் தாசில்தாராக (வட்டாச்சியார்) இருந்த ஒருவர் மிகவும் செறுக்குடனும், ஆணவத்துடனும் நடந்துகொண்டார். அவர் தனக்கு இருந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு அடுத்தவர்களை கிள்ளுக்கீரையாக பாவித்து வந்தார்.

ஒருமுறை அவர், விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் கிணறுவெட்ட பணம் பட்டுபாடா செய்திருந்தார். அந்தப்பணம் சரியான முறையில் பயன்படுத்தப் பட்டிருக்கிறதா? என்பதை அறிந்துகொள்வதற்காக அவர் வருவாய்த்துறை அதிகாரி, இன்னும் ஒருசில முக்கியப் பிரமுகர்களோடு ஒவ்வொரு கிணறாகப் பார்வையிடச் சென்றார்.

முடிவில் எல்லாக் கிணறுகளும் சரியான முறையில், சரியான ஆழத்தில் தோண்டப்பட்டிருப்பதை அறிந்துகொண்டிருந்தார். இருந்தாலும் தனது அதிகாரத்தை மற்றவருக்குக் காட்டவேண்டும் என்ற நோக்கில், ஒரு குறிப்பிட்ட கிணற்றைச் சுட்டிக்காட்டி, "இந்த கிணற்றின் ஆழம் குறைவாக இருக்கிறது, இது சரியாகத் தோண்டப்பட்டிருக்கிறதா? என்பதை ஆய்வுசெய்து பார்க்கவேண்டும் என்று ஒரு 30 அடிநீளக் கயிறை எடுத்துக்கொண்டு கிணற்றுக்கு உள்ளே இறங்கினார்.

அருகே இருந்தவர்கள் எல்லாரும் "இன்னும் சுற்றுச் சுவர் கட்டப்படவில்லை, மண் சரிமானம் ஏற்படும்" என்று எவ்வளவோ எச்சரித்தும் அவர் இறங்கியதால், மண் சரிமானம் ஏற்பட்டு உள்ளே விழுந்தார். எனவே அங்கே இருந்தவர்கள் எல்லாரும் உள்ளே விழுந்த தாசில்தாரை கயிறு கட்டி வெளியே இழுத்துத் தொடங்கினர்.

அப்போது வேகமாக ஓடிவந்த தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர் ஒருவர், "நம்முடைய தாசில்தாரை வேறொரு ஊருக்கு இடமாற்றம் செய்துவிட்டார்கள்" என்று அறிவித்தான். தாசில்தாரை கயிறுகட்டி வெளியே இழுத்துக்கொண்டிருந்த மக்கள் இதைக் கேள்விப்பட்டதும், கயிற்றைப் பாதியிலே விட்டுவிட்டு, தங்களது இல்லம் திரும்பினார்கள். ஆணவம்கொண்ட தாசில்தார் கிணற்றுக்கு உள்ளே விழுந்து கத்திக்கொண்டிருந்தார்.

அதிகாரத்தால் பிறரை அடக்க ஆள நினைப்பவர்கள், அந்த அதிகாரம் போனதும், இப்படித்தான் அழிந்துபோவார்கள் என்பதை வேடிக்கையாக இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய பாடுகளைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது சீடர்கள் அதைப் புரிந்துகொள்ளாமல், தங்களுக்குள் "யார் பெரியவர்?" என்ற விவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அப்போது இயேசு அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிலும் கடையவராகவும், அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்கிறார். அதாவது ஒரு பணியாளரே அல்லது சேவகரே அனைவருக்கும் தலைவராக இருக்க முடியும் என்பது இயேசுவின் போதனையாக இருக்கின்றது.

இன்றைக்கு அதிகாரம் என்பதே மக்களை அடக்கி ஆள்வது என்ற ரீதியில் புரிந்துகொள்ளப்படுகிறது. மேலே சொல்லப்பட்ட நிகழ்வு அதற்கு ஒரு உதாரணம். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அதற்கு முற்றிலும் எதிராக, தான் இறைமகனாக இருந்தும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றவும், பலருடைய மீட்புக்காகத் தன்னுடைய உயிரைக் கொடுக்கவும் வந்தார்" என்கிறார் (மத் 20:28).

ஆகவே, இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஒவ்வொரும் பணிவிடை புரியும் மக்களாக வாழவேண்டும். இங்கர்சால் என்னும் அறிஞர் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார் "ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறியவேண்டுமானால் அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப்பாருங்கள்" என்று. ஆம், பலநேரங்களில் ஒருவன் அதிகாரத்தைப் பெற்றதும் அவன் வேறொரு மனிதனாக மாறிவிடுகிறான் என்பது வேடிக்கையான உண்மை. அதிகாரம் என்பது அடக்கி ஆள அல்ல, சேவை புரியவே என்ற உண்மையைப் புரிந்துகொள்ளாததால்தான் இப்படிப்பட்ட ஒரு நிலை.

எனவே, நாம் அதிகாரம் என்பதன் உண்மைப் பொருளை உணர்ந்துகொள்வோம். இயேசுவைப் போன்று பிறருக்குப் பணிவிடைசெய்யும் மக்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.



மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்"

முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவர் தனது முதிய வயதை எய்துமுன் தன்னுடைய இரு வாரிசுகளையும் பண்படுத்த நினைத்தார். எனவே அவர் அந்நாட்டில் இருந்த புகழ்பெற்ற ஒரு மகானைத் தேர்ந்துதெடுத்து, அவரிடத்தில் தன்னுடைய இரு வாரிசுகளையும் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார்.

நாட்கள் உருண்டோடின. இளவரசர்கள் இருவரும் மகான் கற்றுக்கொடுத்த பாடத்தை மிக நல்ல முறையில் கற்றுவந்தார்கள். இதற்கிடையில் ஒருநாள் அரசர் தன் இரு பிள்ளைகளையும் பார்க்கப் போனார். அவர் அங்கே சென்ற நேரத்தில், தொழுகைக்கூடத்திற்கு முன்பாக இருந்த பாதங்களைக் கழுவும் இடத்தில் இளவரசர்கள் இருவரும் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்க, தனது பாதங்களைக் கழுவிக் கொண்டிருந்தார் அந்த மகான்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அரசர் கோபத்தோடு அரண்மனைக்குத் திரும்பிப் போய்விட்டார். நடந்ததை நினைத்து வருத்தப்பட்ட மகான், "பாடம் கற்க வந்த இளவரசர்களை இப்படிப் பாதம் கழுவும்படி பயன்படுத்திவிட்டேனே! அரசரும் கோபப்பட்டுவிட்டாரே!" என்று பெரிதும் வருந்தினார். பின்னர் அவர் தான் செய்ததற்கு அரசரிடத்தில் மன்னிப்புக் கேட்க வேகவேகமாக ஓடினார். ஆனால் அரசர் மகான் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர் அவரை இன்முகத்தோடு வரவேற்றார். மகானுக்கு ஒன்றும் புயயவில்லை. இருந்தாலும் தான் அவ்வாறு செய்திருக்கக்கூடாது என்று அரசரிடத்தில் மன்னிப்புக் கேட்டார்.

அப்போது அரசர் அவரிடம், "மேன்மை தங்கிய மகான் அவர்களே! அன்று நான் அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்து போய் கோபப்பட்டது உண்மைதான். ஆனால், தாங்கள் பாதங்களுக்குத் தண்ணீர் ஊற்றும் தகுதியைத்தான் என் பிள்ளைகளுக்குத் தந்திருக்கிறீர்கள். பாதங்களையே கழுவும் தகுதியை அவர்களுக்கு எப்போது தரப்போகிறீர்கள்" என்றார். இதைக் கேட்டு அந்த மகானுக்கு அரசர் மீதும் மதிப்பும் மரியாதையும் உண்டானது. அதே நேரத்தில் அவர் அரசர் சொன்னபோன்று அவருடைய பிள்ளைகளை தாழ்ச்சி என்ற புண்ணியத்தில் வளர்த்தெடுக்க உறுதிபூண்டார்.

பின்னாளில் அரசராகப் போகக்கூடிய தன்னுடைய பிள்ளைகள் தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் இன்னும் அதிகமாக வளரவேண்டும் என்று நினைத்த அந்த அரசர் நம்முடைய பாராட்டுக்கு உரியவராக இருக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் தன்னுடைய பாடுகளைக் குறித்துப் பேசுகின்றார். ஆனால் சீடர்களோ அதைப் புரிந்துகொள்ளாமல், தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபடுகின்றார். இதை அறிந்த இயேசு வருந்துகின்றார். இருந்தாலும் தன்னுடைய சீடர் யார்? உண்மையில் யார் பெரியவர்? என்று அவர்களுக்கு விளக்கம் தருகின்றார். இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்துச் சொல்கின்றார், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகும் அனைவருக்கும் தொண்டராக இருக்கட்டும்" என்று. இயேசுவைப் பொறுத்தளவில் யாரும் யாரைவிட உயர்ந்தவரோ பெரியவரோ கிடையாது. தம்மைத் தாமே தாழ்த்திக்கொண்டு அடுத்தவருக்குப் பணிவிடை செய்பவரே உண்மையில் பெரியவர். இதைப் புரிந்துகொள்ளாமல் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டது மிகவும் துரதிஸ்டவசமானது.

இயேசு இந்த உண்மையை விளக்க ஒரு குழந்தையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கின்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுகொள்கிறார்" என்கின்றார். குழந்தை தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த உதாரணம். அது ஒருபோதும் தன்னைப் பெரியவன் என்றோ/ பெரியவள் என்றோ சொல்லிக்கொள்வதில்லை. மாறாக அது எப்போதும் தாழ்ச்சியின் உறைவிடமாகவே இருக்கும். இயேசு தனது சீடர்களிடத்தில், இக்குழந்தையை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கின்றார் என்றால், குழந்தையிடம் இருக்கக்கூடிய தாழ்ச்சியை, தூய உள்ளத்தை, உண்மையான அன்பை ஏற்றுக்கொள்ளக்கூடியவர் என்னையே ஏற்றுக்கொள்கின்றார் என்ற அர்த்தத்தில் கூறுகின்றார்.

நம்மிடத்தில் குழந்தையிடம் இருக்கக்கூடிய அந்த தாழ்ச்சி நிறைந்த உள்ளம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இயேசுவின் சீடர்களைப் போன்று யார் பெரியவன் என்ற போட்டியில் இருக்கின்றோம். இத்தகைய நிலை மாறி, நமக்குள் அன்பும் தாழ்ச்சியும் வளர வேண்டும். அப்போதுதான் இயேசுவின் உண்மையான சீடர்களாக மாறமுடியும்.

ஆகவே, நம்முடைய உள்ளத்தில் இருக்கின்ற நான் பெரியவன் என்ற ஆணவத்தை அப்புறப்படுத்தி, தாழ்ச்சியோடு வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!