Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               19 மே 2018  
                                                          பாஸ்காக் காலம் 7ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பவுல் உரோமையில் தங்கி, இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 28;16-20,30-31

16 நாங்கள் உரோமைக்கு வந்தபோது பவுல் தனி வீட்டில் தங்கியிருக்க அனுமதி பெற்றுக் கொண்டார். ஆனால் படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்துக் வந்தார். 17 மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல் யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி, "சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும் எருசலேமில் நான் கைது செய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன்.
18 அவர்கள் என்னை விசாரித்தபோது மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள்.
19 யூதர்கள் அதனை எதிர்த்துப் பேசியபோது நான், "சீசரே என்னை விசாரிக்க வேண்டும்" என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன். ஆனால் என் இனத்தவர்க்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை.
20 இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேசுவதற்காக அழைத்தேன். இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்" என்றார்
30 பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று,
31 இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுத் துணிவோடு தடையேதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 11;4, 5-7
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, நேர்மையாளர் உமது திருமுகத்தைக் காண்பார்கள்.

4 ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது; அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன.
பல்லவி 

5 ஆண்டவர் நேர்மையாளரையும் வன்முறையில் "நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார். 7 ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 16: 7,13

அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும் போது அவர் முழு உண்மை நோக்கி உங்களை வழிநடத்துவார். என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தூய யோவான் இவற்றை எழுதி வைத்தார், இவரது சான்று உண்மையானது.

தூயயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21;20-25

20அக்காலத்தில் பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்பு பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, "ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? என்று கேட்டவர்.
21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்?" என்ற கேட்டார்.
22 இயேசு அவரிடம், "நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா" என்றார்.
23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, "நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?" என்றுதான் கூறினார்.
24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.
25 இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது.

வில்லியம் பார்க்லே என்ற விவிலிய அறிஞர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்லப்படுவதாக சொல்கின்ற ஒரு தொன்மம்.

குழந்தை இயேசுவைக் கொல்வதற்கு ஏரோது மன்னன் திட்டம் தீட்டியபோது அதனை வானதூதர் யோசேப்புக்கு கனவின் வழியாக வெளிப்படுத்தியபோது அவர் மரியாவையும் குழந்தை இயேசுவையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடினார்.

அப்போது ஒரு கொள்ளைக்கூட்டம் எகிப்து நோக்கிச் சென்று கொண்டிருந்த திருக்குடும்பத்தினைக் கொன்றுபோட்டு, அதனிடமிருந்த பொருட்களைக் களவாட நினைத்தது. ஆனால், அந்தக் கொள்ளக்கூட்டத்தில் இருந்த திஸ்மாஸ் என்ற திருடன் குழந்தை இயேசுவின் திருமுகத்தைப் பார்த்து கவரப்பட்டவனாய், "இந்தக் குழந்தை சாதராண குழந்தை கிடையாது, இது அற்புதக் குழந்தை. இந்தக் குழந்தையையும் அதன் பெற்றோரையும் நாம் கொன்றுபோட்டு, அவர்களிடமிருந்து பொருட்களைக் கவர்ந்தோம் என்றால், அது நமக்குத்தான் மிகப்பெரிய சாபத்தைக் கொண்டுவந்து சேர்க்கும்... அதனால் இந்தக் குழ்னதையையும் அதன் பெற்றோரையும் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவோம்" என்று தன்னுடைய குழுவில் இருந்த ஏனையோரைப் பார்த்துக் கேட்டுக்கொண்டான். திஸ்மாஸ் சொன்னதற்கிணங்க அவர்கள் குழந்த்தையையும் அதன் பெற்றோரையும் ஒன்றும் செய்யாமல் அவர்கள் வழியில் விட்டுவிட்டனர்.

அவர்கள் சிறிது தூரம் போனபின்பு, ஏதோ நினைத்தவனாய் அவர்கள் பின்னால் ஓடிச் சென்ற திஸ்மாஸ் குழந்தை இயேசுவைப் பார்த்து, "அற்புதக் குழந்தை இயேசுவே! நாம் மீண்டுமாக ஒருமுறை சந்திக்க நேர்ந்தால், நான் உமக்குச் செய்த நன்மையின் பொருட்டு, நீர் என்னை மன்னிக்கவேண்டும்" என்றான். குழந்தையும் அதற்கு சம்மதம் தெரிவிப்பது போல் கைகளை ஆட்டியது.

இது நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு திஸ்மாஸ் (நல்ல கள்வன்) ஆண்டவர் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டான். அவன் ஆண்டவர் இயேசுவிடம், முன்பு நடந்ததை எடுத்துச் சொல்லி, தன்னுடைய குற்றங்களுக்காக மன்னிப்புக் கேட்டான். ஆண்டவர் இயேசுவும் அவனுடைய குற்றங்களை மன்னித்து திஸ்மாசை பேரின்ப வீட்டினில் ஏற்றுக்கொண்டார்.

இயேசுவில் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த நிகழ்வு திருச்சபையால் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்வினைப் போன்று விவிலியத்தில் இடம்பெறாத பல நிகழ்வுகள் இயேசுவின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படுகின்றது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இன்றைய நற்செய்தி வாசகத்தில் நற்செய்தியாளர் யோவான் கூறுகின்ற, "இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது" என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்று புரிந்துவிடும்.

இதன்வழியாக நாம் கற்றுக் கொள்ளக்கூடிய உண்மை, விவிலியம் என்பது ஒரு வரலாற்று ஆவணமோ, புத்தகமோ கிடையாது. மாறாக அது ஒரு நம்பிக்கை ஏடு. நம்பிக்கை கண்கொண்டு அதனை வாசிக்கின்றபோதுதான் அதில் உள்ளவை எந்தளவுக்கு அர்த்தம் நிறைந்தவை என நாம் புரிந்துகொள்ளலாம்.

மத்தேயு நற்செய்தி 11: 20-24 வரை உள்ள பகுதியில் ஆண்டவர் இயேசு திருந்த மறுத்த நகரங்களான கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் போன்ற நகரங்களைக் கடுமையாகச் சாடுவார். அது மட்டுமல்லாமல், அந்த நகரங்களில் செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருந்தால் என்றைக்கோ அவர்கள் மனம்மாறி சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனமாறியிருப்பார்கள் என்பார். இயேசு கொராசின், பெத்சாய்தா நகரங்களில் அற்புதங்கள், அதிசயங்கள் செய்ததாக எந்தவிதக் குறிப்பும் இல்லை. இதனையும் வைத்துப் பார்க்கின்றபோது இயேசு செய்த நிறைய செயல்கள், அற்புதங்கள், புதுமைகள் ஆற்றிய போதனைகள் விவிலியத்தில் இடம்பெற வில்லை என்றே சொல்லலாம். அப்படியானால், விவிலியத்தை எத்தகைய கண்ணோட்டத்தோடு, எத்தகைய மனநிலையோடு நாம் வாசிக்கவேண்டும் என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருகின்றது.

யோவான் நற்செய்தி 20:29 ல் இயேசு தோமாவிடம் கூறுவதாக வாசிக்கின்றோம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்று. ஆம், இயேசுவின் வார்த்தைகளை, விவிலியத்தை நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்கின்றபோதுதான் அது நமக்கு நிறைந்த அர்த்தத்தைக் கொடுப்பதாக இருக்கும். அதைவிடுத்து, விவிலியத்தை ஒரு வரலாற்று ஆவணமாக எடுத்துக்கொண்டோம் என்றால் நாம் தவறு இழைப்பவர்களாகிவிடுவோம்.

எனவே, விவிலியத்தை நம்பிக்கையின் கண்கொண்டு வாசிப்போம். இயேசுவே மெசியா என்று ஏற்றுக்கொண்டு, அவர் வாழ்ந்துகாட்டிய பாதையில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!