Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               18 மே 2018  
                                                          பாஸ்காக் காலம் 7ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இயேசு உயிரோடு இருப்பதாக பவுல் சாதித்தார்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 25;13-21

13 சில நாள்களுக்குப் பின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தனர்.
14 அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது பெஸ்து பவுலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்; "பெலிக்சு கைதியாக விட்டுச் சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார்.
15 நான் எருசலேமிலிருந்தபோது தலைமைக் குருக்களும், யூதரின் மூப்பர்களும் அவரைப்பற்றிய வழக்கை என்னிடம் தெரிவித்து அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.
16 நான் அவர்களைப் பார்த்து, "குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் குற்றம் சாட்டியவர்க்கு முன் நின்று தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப் பற்றி விளக்குவதற்கான வாய்பைப் பெற வேண்டும். அதற்குமுன் அவருக்குத் தீர்ப்பு அளிப்பது உரோமையரின் வழக்கமல்ல" என்று கூறினேன்.
17 எனவே அவர்கள் இங்கே வந்தபோது, சற்றும் காலம் தாழ்த்தாமல் மறுநாளிலேயே நான் நடுவர் இருக்கையில் அமர்ந்து அவரை என்னிடம் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தேன்.
18 குற்றம் சுமத்தியவர்கள் எழுந்து பேசியபோது நான் நினைத்திருந்த கொடிய குற்றம் எதுவும் அவர்மீது சுமத்தவில்லை.
19 அவர்கள் அவருக்கு எதிராகச் சொன்னதெல்லாம் தங்கள் சமயத்திலுள்ள சில கருத்து வேறுபாடுகளாகத்தான் இருந்தன. இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள். இந்த இயேசு உயிரோடு இருப்பதாக பவுல் சாதித்தார்.
20 இக்கருத்துச்சிக்கல்களைப் பற்றிக் கேட்டதும் நான் குழம்பிப்போய், "நீர் எருசலேமுக்கு வருகிறீரா? அங்கு இவை பற்றி விசாரிக்கப்பட விரும்பகிறீரா?" எனக் கேட்டேன்.
21 பவுல், பேரரசரே விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும் வரை தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆதலால் இவரைச் சீசரிடம் அனுப்பும்வரை காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தேன்."


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 103;1-2,11-12,19-20
=================================================================================
பல்லவி; ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலை நிறுத்தியுள்ளார்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி 

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. மேற்கினின்று கிழக்கு எத்துணைத்; தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார் பல்லவி.

19 ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது.20 அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 26

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய்.

தூயயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21;15-19

15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" என்றார்.
16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்" என்றார்.
17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று கேட்டார். "உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?" என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளைப் பேணிவளர்.
18 "நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் "
19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், "என்னைப் பின் தொடர்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசுவின் அன்பும் பேதுருவின் மனமாற்றமும்!

பிரபல சிறுகதை எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் எழுதிய சிறுகதை The Rependent Sinner". இச்சிறுகதையில் வரும் மனிதர் தன்னுடைய எழுபது வயது வரைக்கும் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, சாகும் தருவாயில் தனது குற்றத்தை உணர்ந்து இறைவனிடத்தில் மன்னிப்புக் கேட்பார். அப்போது அவருடைய ஆன்மா மேலே எழுந்து சென்று விண்ணகத்தின் வாசலைத் தட்டும்.

வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, ஒருவர் வந்து, "யார் நீ?" என்று கேட்பார். அதற்கு அந்த மனிதரோ, "நான் ஒரு பாவி, எனக்கு விண்ணகத்தின் வாசலைத் திறந்துவிடும்" என்று கேட்பார். வந்தவரோ, "அதெல்லாம் முடியாது, பாவிகளுக்கு இங்கே இடமில்லை, தயவுசெய்து நீங்கள் போகலாம்" என்பார். உடனே அந்த மனிதர், "ஐயா! நீங்கள் யாரென்று எனக்குத் தெரிவில்லை. உங்களுடைய முகத்தைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை. இப்போது நீங்கள் யாரென்று நான் தெரிந்துகொள்ளலாமா?" என்று கேட்பார். அதற்கு வாசலைத் திறக்க வந்தவர், "நான்தான் பேதுரு" என்பார். "நீங்கள்தான் பேதுருவா! ஐயா! நீங்கள் இயேசுவோடு இருந்தபோது அவரை மும்முறை மறுதலித்தீர்களே, நீங்கள் செய்த குற்றத்தை இயேசுவும் மன்னித்து ஏற்றுக்கொண்டாரே, அப்படிப்பட்ட நீங்களா என்னை விண்ணகத்திற்குள் நுழையவிடாமல் தடுக்கிறீர்கள்" என்பார் வந்தவர். இதைக் கேட்டு பேதுருவால் எதுவும் பேசமுடியாது அமைதியாக இருப்பார்.

பேதுரு அமைதியானதைத் தொடர்ந்து அந்த மனிதர் மீண்டுமாக கதவைத் தட்டுவார். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு தாவீது அரசர் வந்து கதவைத் திறப்பார். கதவைத் திறந்ததும் அவர் அந்த மனிதரிடம், "ஐயா! நீங்கள் யார்? உங்களுக்கு என்னவேண்டும்?" என்று கேட்பார். உடனே அந்த மனிதர், "ஐயா நான் ஒரு பாவி, ஆனால், இப்போது என்னுடைய குற்றத்தை உணர்ந்திருக்கின்றேன். எனக்காக அருள்கூர்ந்து விண்ணகத்தின் வாசலைத் திறந்துவிடும்" என்றார். உடனே தாவீது அரசர் அவரிடம், "பாவிகளுக்கு எல்லாம் இங்கே இடமில்லை. நீர் போகலாம்" என்று சொல்லி அவரை விரட்டுவார். உடனே அந்த மனிதர் தாவீது அரசரிடம், "ஐயா! நீங்கள் உரியாவைக் கொன்றுபோட்டுவிட்டு, அவருடைய மனைவியை அபகரித்துக்கொள்ளவில்லையா? பின்னர் உங்களுடைய குற்றத்தை உணர்ந்து மனமாறவில்லையா? அப்படிப்பட்ட நீங்கள் இப்படிச் சொல்லலாமா?" என்று கேட்பார். இதற்குக் தாவீது அரசரால் ஒன்றும் சொல்லமுடியாமல் போகவே, அமைதியாவார்.

இதைத் தொடர்ந்து அந்த மனிதர் மீண்டுமாக விண்ணகத்தின் கதவைத் தட்டுவார். சத்தம் கேட்டு அன்பின் அப்போஸ்தலரான யோவான் அங்கு வருவார். வந்தவர் அந்த மனிதரிடம், "நீர் யார்? உமக்கு என்ன வேண்டும்?" என்று கேட்பார். அவரும் முன்பு சொன்ன பதிலையே சொல்வார். அவர் சொன்னதைக் கேட்டுவிட்டு யோவான் அவருக்குப் பதிலளிக்க வாயைத் திறப்பார். அதற்குள் அந்த மனிதர், "தூய யோவானே! நீங்கள்தான் அன்பைக் குறித்து அதிகமாக எழுதியவர். உங்களுடைய கடைசிக் காலத்தில் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவேண்டும் என்று போதித்தவர். அப்படிப்பட்ட நீங்கள் என் குற்றங்களைப் பொறுத்துக்கொண்டு, என்மீது அன்பைப் பொழிந்து, எனக்கு விண்ணகத்தின் வாசலைத் திறந்துவிடக்கூடாதா?" என்று கெஞ்சிக் கேட்பார்.

அந்த மனிதர் இவ்வாறு பேசியதைத் தொடர்ந்து யோவான் அவர்மீது பரிவுகொண்டு அவரை விண்ணகத்திற்குள் ஏற்றுக்கொள்வார்.

லியோ டால்ஸ்டாய் சொல்லக்கூடிய இந்த சிறுகதை, பாவி ஒருவன் தன்னுடைய குற்றத்தை உணர்ந்து மனமாறுகின்றபோது அவன் விண்ணகப் பேரின்ப வீட்டில் ஏற்றுக்கொள்ளப்படுவான் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் இயேசு பேதுருவுக்குத் தோன்றி, "யோவானின் மகனான சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? என்று கேட்கின்றார். இப்படி அவர் மும்முறை பேதுருவிடத்தில் கேட்கின்றார். இதன்மூலம் பேதுருவுக்கு தன்மீது அன்பிருக்கின்றதா? என்று சோதித்துப் பார்க்கின்றார். பேதுருவும் தன்னுடைய குற்றத்தை உணர்ந்தவராய், ஆண்டவரே எனக்கு உம்மிடம் அன்பு இருக்கின்றது என்று உமக்குத் தெரியுமே" என்று சொல்லி தான் மனம்மாறிவிட்டேன் என்பதையும், அவரை முழுமையாய் அன்பு செய்கின்றேன் என்பதையும் இயேசுவிடத்தில் உறுதிப்படுத்துகின்றார். உடனே இயேசு அவரிடத்தில் திருச்சபையை தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைக்கின்றார்.

தவறு செய்யும் நாம், பேதுருவைப் போன்று நம்முடைய குற்றத்தை உணர்ந்து, மனமாறி, இயேசுவை அன்பு செய்யத் தொடங்கினால், இயேசு நம் வழியாய் அதிசயங்களைச் செய்வது உறுதி.

ஆகவே, நாம் பேதுருவைப் போன்று மனமாறி, அவரிடத்தில் உண்மையான அன்பு கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.



மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!