Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               17 மே 2018  
                                                          பாஸ்காக் காலம் 7ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22;30,23;6-11

30 யூதர்கள் பவுல்மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை உறுதியாக அறிய ஆயிரத்தவர் தலைவர் விரும்பினார். எனவே, மறுநாள் தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு அவர் ஆணை பிறப்பித்துப் பவுலை சிறையிலிருந்து கொண்டு வந்து அவர்கள் முன் நிறுத்தினார்.
6 அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறுபகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, "சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்; இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன்" என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார். 7 அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர்.
8 சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.
9 அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது. பரிசேயப் பிரிவினைச்சேர்ந்த மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து, "இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசியிருக்கலாம் அல்லவா!" என வாதாடினர்.
10 வாக்குவாதம் முற்றவே அவர்கள் பவுலைப் பிய்த்தெறிந்து விடுவர் என ஆயிரத்தவர் தலைவர் அஞ்சி படைவீரரை வரச்சொல்லி அவரை அவர்கள் நடுவிலிருந்து பிடித்துக் கோட்டைக்குள் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்.
11 மறுநாள் இரவு" என்றார் ஆண்டவர் அவரருகில் நின்று, "துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றி சான்று பகர்ந்தது போல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 16;1-2 ,5-11
=================================================================================
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
அல்லது
அல்லேலூயா!

1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.2 நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன்.பல்லவி 

5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;6 இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன; உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே.பல்லவி 

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.பல்லவி 

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.பல்லவி 

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 17: 21
அல்லேலூயா, அல்லேலூயா! "தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவா்களும் ஒன்றாய் இருப்பார்களாக, இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்"  என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அனைவரும் முழுமையாய் ஒன்றித்திருபார்களாக:

தூயயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17;20-26

20 "அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.
21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.
22 நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.
23 இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும்.
24 "தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என்மீது அன்புகொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
25 நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள். 26 நான் அவர்களோடு இணைந்திருக்கவும், நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக"

ஒரு வீட்டில் சகோதரர்கள் இருவர் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்புதான் அவர்களது தந்தை அகால மரணம் அடைந்தார், அவர் இறக்கும் முன்பு தன் இரு மகன்களையும் அழைத்து, "நான் இறந்த பிறகு எனது சொத்துக்களை நீங்கள் இருவரும் சரி சமமாக பிரித்து எடுத்து கொள்ளுங்கள்" என்று கூறி இறந்துவிட்டார்.

தந்தையின் இறப்புக்குப் பிறகு சகோதரர்கள் இருவரும் தந்தையின் அனைத்துச் சொத்துக்களையும் சரி சமமாக பிரித்து எடுத்து கொண்டனர். ஆனால் தந்தை வளர்த்த ஒரு பசுவை மட்டும் சரி சமமாக பிரிப்பதில் பெரும் வாக்குவாதமே நடந்தது. அப்பொழுது தான் இருவரும் "ஊர் நாட்டாமையிடம் சென்று முறையிடுவோம், அவரே பசு யாருக்கு சொந்தம் என்று கூறட்டும்" என்று முடிவு செய்தனர், அதன்பிறகு அவர்கள் இருவரும் நாட்டாமையிடம் தங்கள் வழக்கை முறையிட்டனர்.

நாட்டாமையோ, "நீங்கள் இருவரும் இங்கு நில்லுங்கள் உங்கள் முன் 10 அடி தள்ளி பசுவை அவிழ்த்து விடுகிறேன் பசு யாரிடம் வருகிறதோ அவர்களுக்கே சொந்தம்" என்று கூறினார், கூறிய படி பசுவை இரு சகோதரர்கள் முன் பத்து அடி தள்ளி நிறுத்தி, பசுவின் கயிற்றையும் அவிழ்த்து விட்டார் அவர். பசுவோ இவனிடம் வந்தால் அவன் நம்மை கொண்றிடுவான், அவனிடம் சென்றால் இவன் நம்மை கொண்றிடுவான், இல்லையேல் நம்மை இரண்டாக வெட்டி பங்கு கொள்வர் என்று எண்ணி, நிற்காது ஓட்டம் பிடித்து, ஊரை விட்டு எங்கோ ஓடி விட்டது .

கடைசியில் நாட்டாமையோ, "உங்கள் பசு உங்கள் தந்தையிடம் செல்லத்தான் விரும்பியது போலும்" என்று கூறி தீர்ப்பை நிறைவு செய்தார்.
சகோதரர்கள் இருவரும் இப்பொழுதுதான் தாங்கள் பிரிந்ததை எண்ணி வருத்தம் கொண்டனர்.

ஒற்றுமையைத் தொலைத்து பிரிந்து வாழ்வதால் எவ்வளவு பெரிய இழப்பினை நம்முடைய வாழ்வினில் சந்திக்கின்றோம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகச் சிறந்த உதாரணம். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தந்தைக் கடவுளை நோக்கி வேண்டுகின்றார். அப்படி வேண்டுகின்றபோது, "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பது போல அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!" என்று சொல்லி வேண்டுகின்றார். இதையே நாம் நம்முடைய இன்றைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்.

இயேசு சொல்வதுபோல் அவருக்கும் தந்தைக் கடவுளுக்கும் இடையே இருக்கக்கூடிய உறவும் ஒன்றுமையும் உன்னதமானது, அதை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது. அந்த உறவும் ஒற்றுமையும் மாந்தரின் வாழ்வுக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்றுகூடச் சொல்லலாம். இயேசுவின் வேண்டுதல் எல்லாம் தந்தைக் கடவுளும் தானும் ஒன்றாய் இருப்பது போல, நாம் ஒன்றாய் இருக்கவேண்டும் என்பதுதான். ஆனால், அதில் நிறைய பிரச்சனை இருக்கின்றன. ஏனென்றால் இன்றைக்கு மக்கள் நாடுகளாக, வர்க்கங்களாக, இனக் குழுக்களாக, சாதியாகப் பிரிந்து கிடக்கிறார்கள், ஒருவர் மற்றவரை அடித்துக்கொண்டு சாகிறார்கள். இத்தகைய நிலை மாறி அனைவரும் ஒன்றாய் இருக்கவேண்டும். அதுதான் இயேசுவின் விருப்பமாக இருக்கின்றது.

தொடக்கக் கால கிறிஸ்தவர்கள் ஒரு உள்ளமும் ஒரே மனமும் கொண்டவர்களாக விளங்கினார்கள். அதனால் அவர்களிடத்தில் பகிர்வும் நட்புறவும் உண்மையான அன்பு நிலவியது. நம்மிடத்திலும் அத்தகையதோர் நிலை ஏற்படும்போது எல்லாமும் நல்லதாய் நடக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. மேலும் நாம் ஒரே மனத்தவராய், ஒன்றிணைந்து வாழ்கின்றபோது ஏராளமான ஆசிர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம் என்பதை இறைவார்த்தையிலிருந்தே அறிந்துகொள்ளலாம். மத்தேயு நற்செய்தி 18:19-20 ல் வாசிக்கின்றோம், "உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை உங்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று. ஆம், நாம் ஒருமனப்பட்டவர்களாய் இருக்கின்றபோது நம்முடைய வேண்டுதல் கேட்கப்படுவது மட்டுமல்லாமல், நம்மத்தியில் இறைவன் பிரசன்னமாக இருப்பார் என்பது உண்மை.

ஆகவே, இயேசுவும் தந்தைக் கடவுளும் எப்படி ஒன்றாய் இருகிறார்களோ, அது போன்று நாம் ஒன்றாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!