Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               16 மே 2018  
                                                          பாஸ்காக் காலம் 7ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வளர்ச்சியையும் உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்ல கடவுளிடம் ஒப்படைக்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 28-38

அந்நாள்களில் பவுல் எபேசு சபையின் மூப்பர்களிடம் கூறியது: "தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்குத் தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள். உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியும். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்பும் அளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.

எனவே விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்கும் உரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தர வல்லது. எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்கவேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன்.

அதோடு, பெற்றுக்கொள்வதைவிடக் கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவுகூருங்கள் என்றும் கூறினேன்." இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள்படியிட்டு, அவர்கள் எல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார். பின் எல்லாரும் பவுலைக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கதறி அழுதனர். "இனிமேல் நீங்கள் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை" என்று அவர் கூறியது அவர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. பிறகு அவர்கள் கப்பல்வரைக்கும் சென்று அவரை வழியனுப்பிவைத்தனர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 68: 28-29. 32-34a. 34b-35c (பல்லவி: 32a)
=================================================================================
பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள். அல்லது: அல்லேலூயா.

28 கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்! 29 எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர். பல்லவி

32 உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். 33 வானங்களின் மேல், தொன்மைமிகு வானங்களின் மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில், தம் வலிமைமிகு குரலில், முழங்குகின்றார். 34a கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள். பல்லவி

34b அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது. 35c கடவுள் போற்றி! போற்றி! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 17: 17b,a

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11b-19
இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: "தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.

இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன். உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது.

அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும்.

உமது வார்த்தையே உண்மை. நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

இறைமகனது அற்புத செபத்தை இறைவார்த்தையாக பெற்றுக் கொள்கின்றோம்.
பவுல் அடிகளாரின் பணி அற்புதமாக இருந்தது என்பதற்கு எபேசு சபையில் அவர் ஆற்றிய உரை சொல்லி நிற்கின்றது. அதிலே குறிப்பிடும் படியாக பெற்றுக் கொள்வதைவிட கொடுப்பதே பேறுடைமை என்பதனை அழகாக கூறுகின்றார்.
தீயோனிடமிருந்து தன்னிடம் ஓப்படைத்தவர்களை காத்தருளும் என மன்றாடின மன்றாட்டு இறைவனது அற்புத மன்றாட்டு.

நாமும் கொடுப்பதிலே, (பொருளை, அன்பை, நேரத்தை, திறமையை) என பலவற்றை கொடுத்து மற்றவர்களை உள்ளவர்களாக்குவோம். வாழ்வு பெற்றவர்களாக்குவோம்.
நம்மிடம் ஓப்படைக்கப்பட்டவர்கள் தீயவனின் கையில் இருந்து காக்கப்பட அனுதினமும் மன்றாடுவோம்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"அவர்களுள் எவரும் அழிவுறவில்லை"

ஒரு நகர்புறப் பங்கில் பங்குத்தந்தையாக இருந்த அந்த அருட்தந்தைக்கு அப்படியொரு வித்தியாசமான பழக்கம் இருந்தது.

அது என்ன வித்தியாசமான பழக்கம் என்றால், பங்கைச் சார்ந்த ஏழை எளியவர் ஒருவர் இறந்துவிட்டால், அவருக்காக சிறிதுநேரம் மட்டுமே ஜெபம் செய்வார். அதே நேரத்தில் பங்கைச் சார்ந்த பணக்காரர் ஒருவர் இறந்துவிட்டால், அவருக்காக நீண்ட நேரம் ஜெபிப்பார். முதலில் அந்தப் பணக்காரருடைய வீட்டிற்குச் சென்று ஜெபிப்பார், அதன்பிறகு ஆலயத்தில் அவருக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுக்கும்போது நீண்ட நேரம் ஜெபிப்பார். அதைவிடவும் அவரைக் கல்லறையில் அடக்கம் செய்கின்றபோது இன்னும் அதிக நேரம் ஜெபிப்பார்.

இதைப் பார்த்துவிட்டு அந்த பங்கைச் சார்ந்த ஒருவர் பங்குத்தந்தையிடம், "அருட்தந்தையே! பங்குமக்களிடம் ஏன் இவ்வளவு பாரபட்சம் பார்க்கின்றீர்கள்? ஏழை ஒருவர் இறந்தால் அவருக்காக ஒருமாதிரி ஜெபிப்பதும், பணக்காரர் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்காக விழுந்து விழுந்து ஜெபிப்பதும் நல்லதற்கு இல்லையே" என்றார். உடனே பங்குத்தந்தை அவரிடம், "ஐயா பெரியவரே! நான் சொல்வதை கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். அப்போது புரியும் நான் ஏன் இப்படி நடந்துகிறேன் என்று... ஏழைகள் எளிதாக விண்ணரசுக்குள் நுழைந்துவிடுவார்கள். அதனால் அவர்களுக்காக நீண்டநேரம் ஜெபிக்கவேண்டிய தேவையில்லை, ஆனால் பணக்காரர்களுடைய நிலை அப்படிக் கிடையாது, அவர்களுக்காக நீண்ட நேரம் ஜெபிக்கவேண்டும் அப்போதுதான் அவர்களும் விண்ணரசுக்குள் நுழைய முடியும். அதனால்தான் அவர்களுக்காக நீண்ட நேரம் ஜெபிக்கின்றேன்".

இப்படிச் சொல்லிவிட்டு பங்குத்தந்தை அந்த பெரியவரிடத்தில், "என்னுடைய விருப்பமெல்லாம் பங்கில் இருக்கின்ற எல்லாரும் விண்ணரசுக்குள் நுழையவேண்டும். அதற்காகத்தான் இப்படி நடந்துகொள்கிறேன்" என்றார். அப்போதுதான் அந்தப் பெரியவருக்குப் புரிந்தது, பங்குத்தந்தை ஏன் அவ்வாறு நடந்துகொள்கிறார் என்று.

அனைவரும் (அழிவுறாமல்) மீட்கப்படவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு செயல்பட்ட அந்தப் பங்குத்தந்தை உண்மையிலே பாராட்டுக்குரியவராக இருக்கின்றார். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தந்தைக் கடவுளை நோக்கி வேண்டுகின்றார். அவர் வேண்டுகின்றபோது, "நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை" என்று வேண்டுகின்றார். இயேசுவின் இத்தகைய வேண்டுதல் நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

இயேசு தன்னுடைய பணிவாழ்க்கை எல்லாருக்குமானதாக அமைத்துக்கொண்டார். இவர் யூதர் அதனால் இவருக்குக் பணிசெய்வேன், இவருடைய மீட்புக்காக மட்டும் நான் பாடுபடுவேன் என்று அவர் இருக்கவில்லை. மாறாக எல்லாரும் வாழ்வுபெற வேண்டும், இறைவன் அளிக்கக்கூடிய மீட்பினை எல்லாரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார். இதனை யோவான் நற்செய்தி 10:10 ல் இடம்பெறுகின்ற "ஆடுகள் வாழ்வுபெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு இந்த மண்ணுலகிற்கு வந்தேன்" என்ற இயேசுவின் வார்த்தைகளில் நாம் புரிந்துகொள்ளலாம். ஆமாம், இயேசுவின் திருவுளமே எல்லாரும் வாழ்வு பெறவேண்டும். அதற்காகவே அவர் தந்தைக் கடவுளிடம் மேற்சொன்ன வார்த்தைகளைச் சொல்லி ஜெபிக்கின்றார்.

தூய பவுலடியார் கூட இயேசுவின் உள்ளக் கிடக்கையை - எண்ணத்தை உணர்ந்தவராய், "எல்லா மனிதரும் மீட்புப்பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்" என்று கூறுவார் (1 திமோ 2:4). ஆகவே, இத்தகைய எண்ணத்தோடு நம்முடைய மீட்புக்காக ஜெபிக்கின்ற இயேசுவின் பேரன்பினை உணர்ந்துகொள்வதுதான் சாலச் சிறந்த ஒரு காரியமாகும்.

இது மட்டுமல்லாமல் நம் பங்கிற்கு ஒன்றைச் செய்யவேண்டும். அதுதான் "அழிவுக்குரிய வழியை நாடாமல், வாழ்வுக்குரிய வழியினை நாடவேண்டும்" என்பதாகும். பல நேரங்களில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நல்ல ஆயனைப் போன்று நம்மை நல்வழியில் வழிநடத்திச் சென்றாலும் வழிதவறிச் செல்லும் ஆடுகளைப் போன்று தவறான பாதையில் சென்று நாம் அழிவுக்கு உள்ளாகின்றோம். இத்தகைய சூழ்நிலையில் நாம் இயேசு நமக்குக் காண்பிக்கக்கூடிய வாழ்வளிக்கும் வழியில் நடப்பதுதான் மிகச் சிறப்பானது.

இயேசு நமக்காக ஜெபிக்கின்றார், நம்மை நல்வழியில் வழிநடத்துகின்றார். இது ஒருபக்கம் இருந்தாலும் நம்முடைய மீட்புக்கு நம்முடைய துணை கட்டாயம் தேவை. தூய அகுஸ்தினார் இவ்வாறு குறிப்பிடுவார், "உன் துணையின்றி உன்னைப் படைத்த கடவுள், உன் துணையின்றி உன்னை மீட்கமாட்டார்" என்று. ஆமாம், நம்முடைய ஒத்துழைப்பு இல்லாமல் நமக்கு மீட்புக் கிடையாது என்பதே உண்மை

ஆகவே, நம்முடைய மீட்புக்காக தந்தைக் கடவுளிடம் ஜெபிக்கும் இயேசு ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். அதே நேரத்தில் நாம் அழிவுக்கு உரிய வழியில் செல்லாமல், நேரிய வழியில் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.



மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!