|
|
14
மே 2018 |
|
|
பாஸ்காக்
காலம் 7ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
"ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1;15-17,20-26
ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில்
கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது;
16 "அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய
யூதாசைக் குறித்து தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த
மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது.
17 அவன் நம்மில் ஒருவனாய்
எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.
20
திருப்பாடல்கள் நூலில், "அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும்
குடிபுகாதிருப்பாராக!" என்றும் "அவனது பதவியை வேறொருவர் எடுத்துக் கொள்ளட்டும்!" என்றும் எழுதப்பட்டுள்ளது.
21 ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச்
சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்டக்காலத்தில் நம்மோடு
இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டியது
தேவையாயிற்று.
22 யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல்
ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு
இருந்திருக்கவேண்டும்."
23 அத்தகையோருள், இருவரை
முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா.
இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு. மற்றவர் மத்தியா.
24
பின்பு அவர்கள் அனைவரும், "ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே,
யூதாசு திருத்தொண்டையும் திருத்தூதுப் பணியையும் விட்டகன்று
தனக்குறிய இடத்தை அடைந்துவிட்டான்.
25 அந்த யூதாசுக்கு பதிலாக
யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்கு
காண்பியும்" என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டனர்.
26 அதன்பின்
அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே
அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 113;1-8
=================================================================================
பல்லவி: ஆண்டவா் தம் மக்களுள் உயா்குடி மக்களிடையே அவா்களை
அமரச் செய்கின்றார்
அல்லது
அல்லேலூயா
1 அல்லேலூயா! ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது
பெயரைப் போற்றுங்கள். பல்லவி
2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும்
வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி
3 கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!
மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும்விட
உயர்ந்து அவரது மாட்சி. பல்லவி
5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய
உயரத்தில் வீற்றிருப்பவர் யார்?அவர் வானத்தையும் வையகத்தையும்
குனிந்து பார்க்கின்றார்; பல்லவி
7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியரைக்
குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; பல்லவி
8 உயர்குடி மக்களிடையே-தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே அவர்களை
அமரச் செய்கின்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 16
அல்லேலூயா, அல்லேலூயா!
நான்தான் உங்களைத் தோ்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள்
தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். என்கிறார்
ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை;
நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்.
தூயயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15;9-17
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கி கூறியது, என் தந்தை என்
மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு
கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.
10 நான் என் தந்தையின்
கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல
நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில்
நிலைத்திருப்பீர்கள்.
11 என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள்
மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.
12 "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம்
அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.
13 தம் நண்பர்களுக்காக
உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.
14 நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய்
இருப்பீர்கள்.
15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல
மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத்
தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து
நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.
16 நீங்கள்
என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து
கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும்
உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம்
கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
17 நீங்கள் ஒருவர்
மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருச்சபையானது இன்று திருத்தூதரும் மறைசாட்சியுமான தூய மத்தியாசின்
விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.
இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவனும், அவரைக் காட்டிக்
கொடுத்தவனுமான யூதாஸ் இஸ்காரியோத்து "ஒரு பாவமும் அறியாத இயேசுவைக்
காட்டிக் கொடுத்துவிட்டேன" என்று தற்கொலை செய்துகொள்கிறபோது
திருத்தூதர்கள் குழுவில் ஒரு இடமானது காலியாக இருக்கின்றது.
எனவே 120 சீடர்கள் ஒன்றாகக் குழுமியிருந்த நேரத்தில், பேதுரு
அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, "ஆண்டவர் இயேசுயின் உயிர்த்தெழுதலுக்குச்
சாட்சியாக விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்ட காலத்தில் நம்மோடு
இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டிய
தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலம் முதல்
ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றம் அடைந்த நாள்வரை அவர்
நம்மோடு இருந்திருக்க வேண்டும்"என்று யார் திருத்தூதராகத்
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்தை முன்மொழிகிறார்.
உடனே பேதுரு சொன்ன தகுதிகளுடன் இருவரது பெயர்கள் முன்மொழியப்படுகின்றது.
அவர்கள் இருவரில் ஒருவர் யோசேப்பு எனப்படும் பர்சபா. மற்றொருவர்
மத்தியாஸ். பின்னர் அவர்கள் இருவரது பெயர்களும் சீட்டுக்
குலுக்கிப் போடப்படுகின்றன. இறுதியாக சீட்டு மத்தியாசின் பெயருக்கு
விழுகிறது. அவர் பதினோரு திருத்தூதர்கள் அடங்கிய குழுவில்
சேர்த்துக்கொள்ளப்படுகின்றார்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறும், "நீங்கள் என்னைத்
தேர்ந்துகொள்ளவில்லை, நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்" என்ற
இறைவார்த்தையானது இப்படியாக இங்கே நிறைவேறுகிறது.
தூய மத்தியாசைப் பற்றி நாம் அறிய முற்படும்போது, அவரைப் பற்றிய
குறிப்புகள் திருத்தூதர் பணிகள் நூல் முதல் அதிகாரத்தை தவிர,
வேறு எங்கும் காணக் கிடைக்கவில்லை. ஆனால் திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத
தூய அந்திரேயா எழுதிய மத்தியாசின் பணிகள் நூலில் இவர் காட்டு
மிராண்டிகளுக்கு மத்தியில் நற்செய்தி அறிவித்ததாகவும், அப்போது
அவரது கண் பறிக்கப்பட்டதாகவும், அந்திரேயா சென்றுதான் அவரைக்
காப்பற்றியதாகவும் அவரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.
மேலும் இவரது இறப்பைப் பற்றியும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.
இவர் பாலஸ்தீனா, சிரியா, அர்மேனியா போன்ற பகுதிகளில் நற்செய்தி
அறிவிக்கும்போது சிலுவையில் அறைந்துகொள்ளப்பட்டார் என்றும், கல்லால்
எறிந்து கொல்லப்பட்டார் என்றும் செய்திகள் நிலவுகின்றன. எப்படி
இருந்தாலும் அவர் இயேசுவுக்காக, அவர்மீது கொண்ட அன்பிற்காக தன்னுடைய
உயிரையே தியாக பலியாகத் தந்தார் என்பது மட்டும் உண்மை. மத்தியாஸ்
அதிகமான தவ மற்றும் ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டார் என்றும்
சொல்லப்படுகின்றது
இவரது விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், இன்றைய நாள் இறைவார்த்தை
நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப்
பார்ப்போம். யோவான் எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நான் என் தந்தையின்
கட்டளையைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல,
நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால், என் அன்பில்
நிலைத்திருப்பீர்கள்.. நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்கவேண்டும்
என்பதே என் கட்டளை... தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச்
சிறந்த அன்பு யாரிடமும் இல்லை"என்கிறார்.
இயேசுவின் சீடர்களாக, அல்லது அவரது நண்பர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும்
நாம் ஒவ்வொருவரும், ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டு வாழவேண்டும்,
அதற்கு ஈடாக நம்முடைய உயிரையும் கொடுக்க முன்வரவேண்டும். இயேசுவின்
நண்பராக, திருத்தூதராக இருந்த தூய மத்தியாஸ் இயேசுவின் மீதும்,
எல்லார்மீதும் அதிகமான அன்புகொண்டிருந்தார். அந்த அன்பிற்காக
தன்னுடைய உயிரையும் கொடுக்க வந்தார். ஆகவே, ஒருவர் மற்றவரிடம்
அன்புகொண்டு வாழவேண்டும் என்பதுதான் தூய மத்தியாசின் விழா நமக்குத்
தரும் செய்தியாக இருக்கின்றது.
ஒரு யூதக் கதை இது. இலியாஸ், யோசேப்பு என்ற உயிருக்குயிரான நண்பர்கள்
இருந்தார்கள். அவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே
சென்றார்கள்; ஒன்றாகவே படித்தார்கள். அப்படிப்பட்ட நண்பர்கள்
இருவரும் ஒருகட்டத்தில் வேலை விசயமாக வேறு வேறு நாட்டிற்குப்
பிரிந்து சென்றாகள்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இலியாஸ் தன்னுடைய நண்பன் யோசேப்பைப்
பார்ப்பதற்காக அவன் இருந்த நாட்டிற்குக் சென்றான். இலியாஸ் அந்நாட்டின்
தெருக்களில் நடந்துவருவதைப் பார்த்த காவலர்கள் "இவன் பார்ப்பதற்கு
எதிரிநாட்டு ஒற்றன் போன்று இருக்கிறான்" என்று சொல்லி, இலியாசை
அந்நாட்டு மன்னனிடம் இழுத்துக்கொண்டு சென்றனர்.
மன்னன் அவனைப் பார்த்துவிட்டு, "இவன் தலை வெட்டிக் கொல்லப்படவேண்டும்"
என்று உத்தரவிட்டான். உடனே இலியாஸ் மன்னனிடம், "மன்னா! நான் ஒரு
வியாபாரி, எனக்கு மனைவியும், இரண்டு குழந்தைகம் இருக்கிறார்கள்.
அவர்கள் இப்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்கள்
அவர்களிடம் சென்று, நான் வைத்திருக்கும் பணத்தைக்
கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன், நான் வந்த பிறகு என்னை என்ன
வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்"என்று கெஞ்சிக்கேட்டான்.
அதற்கு மன்னன், "அப்படியெல்லாம் விடமுடியாது, வேண்டுமானால்,
உனக்குப் பதிலாக வேறு ஒருவனை இங்கே நிறுத்து, நான் உன்னை உன்னுடைய
மனைவி மக்களைப் பார்க்க அனுமதிக்கின்றேன்"என்றான். உடனே அவன்,
"இங்கு எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான், அவன் என் சார்பாக இங்கே
நிற்பான்"என்றான்.
பின்னர் மன்னரின் உத்தரவின் பேரில் யோசேப்பு அங்கே கொண்டுவரப்பட்டு,
காவலர்களின் கண்காணிப்பில் நிறுத்தப்பட்டான். இலியாசிற்கு ஒருமாத
காலம் காலக்கெடு கொடுக்கப்பட்டது, அந்த ஒருமாதத்தில் அவன்
திரும்பி வரவில்லை என்றால், அவனுடைய நண்பனின் தலைவெட்டப்படும்
என்று எச்சரிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டான்.
இலியாஸ் தன்னுடைய மனைவி, மக்களைப் பார்க்கப் போய் அதிகமான நாட்கள்
ஆகியும் திரும்பிவரவே இல்லை. அவன் திரும்பி வராததால் அவனுடைய
நண்பன் யோசேப்பிற்கு அந்த தண்டனையை நிறைவேற்ற மன்னன் உத்தரவிட்டான்.
எனவே, காவலர் ஒரு வாளை எடுத்து, அவனது தலையை வெட்ட தன்னுடைய
கையை ஓங்கிய தருணம், "அவனை வெட்டவேண்டாம், இதோ நான் வந்துவிட்டேன்"
என்ற ஒரு சத்தம் கேட்டு, எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.
அங்கே இலியாஸ் நின்று கொண்டிருந்தான்.
உடனே காவலர்கள் யோசேப்பை வெட்டுவதை நிறுத்திவிட்டு, இலியாசின்
தலையை வெட்ட முயன்றனர். இதைப் பார்த்த யோசேப்பு, அவனை வெட்ட
வேண்டாம், என்னை வெட்டுங்கள்"என்று கத்தினான். இப்படி மாறி,
மாறி அவர்கள் சத்தம் போட, எல்லாவற்றையும் பார்த்துக்
கொண்டிருந்த அரசன் "இப்படிப்பட்ட நண்பர்களை நான் இதுவரை பார்த்ததில்லை"
என்று சொல்லி, அவர்களை வெட்டவேண்டாம் என்று உத்தரவிட்டான். அதோடு,
இப்படி ஒருவர் மற்றவருக்காக உயிரைக்கொடுக்கும் நண்பர்கள்
குழுவில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டு, அதில் இணைந்துகொண்டான்.
இலியாசும், யோசேப்பும் ஒருவர் மற்றவருக்காகத் தங்களுடைய உயிரைக்
கொடுக்க முன்வந்து, அவர்கள் நட்பிற்கு அன்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாய்
விளங்கினார்கள்.
தூய மத்தியாசின் விழாவைக் கொண்டாடும் நாமும் அவரைப் போன்று, இயேசுவுக்கு
சான்றுபகர்ந்து வாழ்வோம். ஒருவர் மற்றவரிடம் செலுத்துவோம், அதற்கு
ஈடாக நம்முடைய உயிரையும் கொடுக்க முன்வருவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
இறைவன் வழங்கும் கொடைகள்
இறைவன் நமக்கு பல அருள்வரங்களை வழங்குகிறார். ஆனால், அந்த அருள்
நம்மிடம் தங்கியிருப்பதற்கு ஏற்ற வாழ்க்கையை நாம்
வாழாவிட்டால், நிச்சயம் அது நம்மிடமிருந்து எடுக்கப்படும். அதுதான்
யூதாசின் வாழ்க்கையில் நடந்திருப்பதாக, முதல் வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகிறது.
யூதாஸ் அடிப்படையிலே எப்படிப்பட்டவன் என்பதை ஒருவர் உறுதியாகச்
சொல்ல முடியாது. ஆனாலும், அவனுக்கு கடவுளின் நிறைவான அருள் வழங்கப்பட்டது.
இறைவனுடைய மகன், தனக்கு பின்னால் தொடரப்பட இருக்கிற புனிதமான
பணிக்கான கருவியாக அவரைத் தேர்ந்தெடுக்கிறார்.
பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப வாழ வேண்டிய யூதாஸ், அதனை உதாசீனப்படுத்திவிடுகிறான்.
அந்த இழப்பு மற்றவர்களால் அவனுக்கு நேர்ந்ததல்ல. அவனுடைய
நிலைக்கு அவன் வேறு யாரையும் குற்றம் சுமத்த முடியாது. அந்த
இழப்பு மற்றொருவருக்கு ஆதாயமாக முடிகிறது. மத்தியா என்கிறவர்
யூதாசின் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். இறைவனுடைய அருளும்,
கொடைகளும் நமக்கு வழங்கப்படுகிறபோது, அதனை பெறுவதற்கு நாம் தயாராக
இருக்க வேண்டும். பெற்றுக்கொண்ட பிறகு, அதனை தக்கவைப்பதில் ஆர்வம்
உள்ளவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அதனை நாம் சாதாரணமாக
இழந்துவிடுகிற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.
இறைவன் நமக்கு கொடுத்திருக்கிற கொடைகளுக்காக நன்றி
செலுத்துவோம். இறைவன் நமக்கு வழங்கியிருக்கிற வரங்களை நல்ல
முறையில் நாம் பயன்படுத்துவோம். அடுத்தவர் பயன் பெற, அர்ப்பண
உள்ளத்தோடு உழைப்போம். கொடைகளை இழந்தபிறகு நாம் வருந்துவதால்
நமக்கு பயன் ஒன்றுமில்லை. அதற்கான தயாரிப்போடு நாம் வாழ முற்படுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
------------------------------------------------
இறைவனின் பணி
இன்றைய நற்செய்தி அழைப்பு வாழ்வைப்பற்றி நமக்கு தெளிவான ஒரு
சிந்தனையைத் தருகிறது. அழைப்பு என்பது என்ன? இந்த அழைப்பைக்
கொடுக்கிறவர் யார்? பெரும்பாலும், பணிவாழ்வில் இருக்கிற நமக்கு,
இந்த பணியை நாம் தேர்ந்தெடுத்தோமா? அல்லது இறைவன் இந்த பணியை
நமக்கு கொடுத்தாரா? என்ற கேள்வி எழுவது இயல்பு. நமது வாழ்வில்
நாம் சந்திக்கிற சவால்கள், இத்தகைய கேள்விகளை அதிகப்படுத்தும்.
நமக்கு அதிகப்படியான நெருக்கடிகளைக் கொடுக்கும். ஆனால், இயேசு,
அழைப்பு என்பது இறைவனால் கொடுக்கக்கூடியது என்கிற கருத்தை ஆழமாக
வலியுறுத்துகிறார்.
தாயின் கருவறையில் உருவாவதற்கு முன்னதாகவே இறைவன் நம்மை அழைத்திருக்கிறார்.
நாம் இந்த பணியை தேர்ந்து கொள்ளவில்லை. இறைவன்தாம் நம்மை இந்த
பணிக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார். இறைவன் நமது தகுதியைப்
பார்த்தும் நம்மை தேர்ந்தெடுக்கவில்லை. நம்மை தேர்ந்தெடுத்து,
நமக்கான தகுதியை அவர் தருகிறார். நமது அழைத்தல் வாழ்வின் அடிப்படை
நம்பிக்கை இதுதான். இந்த நம்பிக்கை நம் வாழ்வில் இருக்கிறபோது,
நாம் சந்திக்கிற பிரச்சனைகள் எந்த அவநம்பிக்கையையும் நமது
வாழ்வில் நமக்குக் கொடுக்காது. மாறாக, இந்த நம்பிக்கை இல்லாதபோது,
நாம் தணித்துவிடப்படுவோம்.
இறைவனின் பணியைச் செய்வதற்கு ஆற்றலோ, சக்தியோ மட்டும் போதாது.
இறைவனின் பணியைச் செய்கிறோம் என்கிற எண்ணமும், அந்த இறைவனிடத்தில்
நமக்கு பலமான நம்பிக்கையும் வேண்டும். அத்தகைய நம்பிக்கை நமக்கு
இருக்கிறதா? சிந்திப்போம். செயல்படுவோம். இறைவனின் பணியைச் சிறப்பாகச்
செய்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------
நான் தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்
நீங்கள் என்னைத்தேர்ந்து கொள்ளவில்லை. நான் தான் உங்களைத்
தேர்ந்து கொண்டேன். இயேசு தான் நம்மைத் தேர்ந்தெடுத்ததாகச்
சொல்கிறார். தனது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
எதற்காக தனது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்? அவர்களுடைய
பணி என்ன? அவரது சிந்தனைகளை, அவரது கோட்பாடுகளை, அவரது போதனைகளை
எடுத்துரைப்பதற்காக நம்மைத் தேர்ந்தெடுத்தார். எனவே, நாம் பேசக்கூடிய
வார்த்தைகள் மட்டில் கவனத்தோடு இருக்க வேண்டும்.
நமக்கென்று தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், நாம் இயேசுவின்
பிரதிநிதிகளாக இருப்பதால், நமது கருத்துக்களை நாம் சொல்ல
முடியாது. ஏனென்றால், நம்மை யாரும் தனிப்பட்ட நபர்களாக பார்ப்பது
கிடையாது. நாம் பேசுவதை நமது சிந்தனையாக யாரும் பார்ப்பது
கிடையாது. மாறாக, இயேசுவின் மாதிரியாகப்பார்க்கிறார்கள். உதாரணமாக,
ஒரு அருட்பணியாளர் ஆலயத்தின் பீடத்தில் நின்று பேசுகிறபோது,
அவரை யாரும் வெறும் அருட்பணியாளராகப்பார்ப்பதில்லை. இயேசுவின்
பிரதிநிதியாக, இயேசுவே பேசுவதாகப்பார்க்கிறார்கள். அதனால்தான்,
இயேசுவை நமது வாழ்வில் நாம் பிரதிபலிக்க வேண்டும்.
இந்த சமுதாயத்தில் கிறிஸ்தவர்களைப்பற்றிய ஒரு பார்வை மற்ற மதத்தினர்
மத்தியில் உள்ளது. நாம் பேசக்கூடிய பேச்சுக்கள், பயன்படுத்தும்
வார்த்தைகள் நம்மையும், நமது அடையாளத்தையும் உயர்த்திப்பேசுவதாக
இருக்க வேண்டும். இல்லையென்றால், இயேசுவுக்கு அது அவமதிப்பைப்
பெற்றுத்தருவதாக அமைந்துவிடும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
-------------------------------------------------------------
கிறிஸ்தவ வாழ்வு மகிழ்ச்சியான வாழ்வு
இன்றைய நற்செய்தியில் சீடர்களை இயேசுதான் தேர்ந்தெடுத்ததாகக்
கூறுகிறார். அதாவது, நாம் கடவுளைத் தேர்ந்தெடுக்கவில்லை,
மாறாக, கடவுள்தான் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கடவுள்
நம்மை அழைத்ததைப்பற்றி நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். இந்த மகிழ்ச்சி
நமக்கு மனநிறைவைத்தர வேண்டு;ம் என்பதுதான் இயேசுவின் அழைப்பாக
இருக்கிறது.
கிறிஸ்தவ வாழ்வு என்பது எளிதான வாழ்வு அல்ல. இது நம் அனைவருக்கும்
தெரிந்த ஒன்றாகும். இருந்தபோதிலும் அது மகிழ்வுக்கு அழைத்துச்செல்லும்
வாழ்வு என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. நேர்மையானவற்றை,
சரியானவற்றை செய்வதில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கவே செய்யும்.
அதைச்செய்வது கடினமான, பளுவான பணி என்றாலும், நிறைவு அதில்தான்
கிடைக்கும். கிறிஸ்தவர்களாகிய நமக்கும் குறைகள், பலவீனங்கள் இருக்கத்தான்
செய்கிறது. நாமும் பாவம் செய்கிறோம். ஆனால், நாம் பாவிகளாக இல்லை.
ஏனெனில் கிறிஸ்து நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு விட்டார். இந்த
நிகழ்வே நமது நிலையான மகிழ்ச்சிக்கு காரணமாகும். நான் பாவம் என்கிற
குற்ற உணர்ச்சி இல்லாமல், கிறிஸ்து என்னை மீட்டுவிட்டார் என்ற
எண்ணத்தோடு, இனி பாவம் செய்யாமல் இருப்பதற்கான முயற்சியை
மேற்கொள்ளுவதே கிறிஸ்தவ அழைப்பாகும். இந்த முயற்சிதான் நமக்கு
மகிழ்ச்சி.
இயேசுவோடு பயணிக்கிற கிறிஸ்தவ வாழ்வு மகிழ்ச்சியின் வாழ்வு.
வாழ்க்கை கரடுமுரடாக இருந்தாலும், செல்லும் பாதை பாதுகாப்பற்று
இருந்தாலும் இயேசு நம்மோடு இருக்கும்போது நாம் எதற்கும் அஞ்சத்தேவையில்லை.
அவர் நம்மோடு இருக்கிறார் என்கிற செய்தியே, நமக்கு மகிழ்ச்சியைத்தருவதாகும்.
இயேசுவோடு பயணிப்போம். மகிழ்வாய் வாழ்வோம்.
- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================
புனித மத்தியாஸ், திருத்தூதர்
திப 1: 15-17, 20-26
யோவா 15: 9-17
"நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்
திருத்தூதரான புனித மத்தியாசின் திருவிழாவில் "நீங்கள் என்னைத்
தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்" என்னும்
இறைமொழியைத் தியானிப்பது பொருத்தமான ஒன்று.
பன்னிருவருள் ஒருவராகத் திகழும் பேற்றினை மத்தியாஸ் தாமாக அடையவில்லை.
தூய ஆவியின் அருளால்தான் பெற்றுக்கொண்டார். இயேசுவின் சீடர்கள்
ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும். சீடத்துவ அழைத்தல் என்பது ஒருவர்
தாமாகத் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, இறைவனின் கொடை.
இன்றைய நாளில் நம்மையும் அவரே தேர்ந்தெடுத்தார் என நமக்கு
நினைவூட்டுகிறது இறை மொழி. எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம்
என்பதையும் இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. "நீங்கள்
கனி தரவும், நீங்கள் தரும்"கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்"
என்கிறார் இயேசு. ஆம், கனி தரவேண்டும் என்பதற்காகத்தான் இறைவன்
நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளார். அதற்கான ஆற்றலும், திறமைகளும்
நமக்குத் தந்திருக்கிறார். எனவே, நாம் கனி தருகின்றோமா என நம்மையே
நாம் இன்று கேட்டுக்கொள்வோம்.
கனி தருவதற்காக நம்மைத் தேர்ந்தெடுத்த இயேசுவுக்கு நன்றி
சொல்வோம்.
மன்றாடுவோம்: தாயின் வயிற்றிலேயே எங்களைப் பெயர் சொல்லி அழைத்த
இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட
நான் மிகுந்த கனி தந்து, உம் சீடராயிருந்து, தந்தையை மாட்சிப்படுத்தும்
அருளைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே
மாட்சி, ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா
நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்"!
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
#8220;நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத்
தேர்ந்துகொண்டேன்"என்னும் இந்தப் பிரபலமான இயேசுவின் சொற்களை
இன்று தியானிப்போம். நமது கிறித்தவ வாழ்வும், நமது பணியும்,
நமக்கு இறைவன் தந்திருக்கிற தனிப்பட்ட அழைப்பும்ரூhநடடip; அனைத்துமே
நமது சொந்த முயற்சிகள் அல்ல. அனைத்தும் இறைவனின் கொடை. இறைவனே
நம்மைத் தேர்ந்துகொண்டதால், நமக்குக் கிடைத்தவை. நமது தகுதியின்மையைப்
பாராமல், அவரது இரக்கத்தையே கண்ணோக்கியதால், நாம் பெற்றுக்கொண்டவை.
எனவே, இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாய் வாழக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அத்துடன், எதற்காக இறைவன் நம்மை அழைத்திருக்கிறார் என்பதையும்
நாம் சிந்திக்க இன்றைய வாசகம் அழைக்கிறது. "நீங்கள் கனி தரவும்,
நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்".
ஆம், இறைவன் நம்மைத் தேர்ந்துகொண்டதன் நோக்கமே நாம் கனி தரவேண்டும்.
நாம் பிறருக்குப் பயனுள்ள வகையில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.
இந்த உண்மையை மறவாமல், நேர்மையோடு, பிறருக்குப் பயன்தரும் வகையில்
நாம் உழைப்போமாக.
மன்றாடுவோம்: தாயின் வயிற்றிலேயே என்னைப் பெயர் சொல்லி அழைத்த
இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் தந்த அழைத்தலுக்காகப்
போற்றுகிறேன். இந்த அழைத்தலுக்கேற்ற வகையில் வாழ அருள்தாரும்.
மிகுந்த கனி தரும் மரமாக என்னை மாற்றும். உமக்கே புகழ், உமக்கே
நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.;
--அருட்தந்தை குமார்ராஜா
-----------------------
''இயேசு, 'இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன்...
உங்களை நான் நண்பர்கள் என்றேன்' என்றார்'' (யோவான் 15:15)
அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
-- இயேசு கலிலேயாவில் இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தபோது
பலரைத் தம் சீடராகச் சேர்த்துக்கொண்டார். அவரே விரும்பி தம் சீடரை
அழைத்தார். அவர்கள் தம் பணியைத் தொடர வேண்டும் எனவும் இயேசு பணித்தார்.
எனவே, ஒருவிதத்தில் இயேசுவின் சீடர்கள் எல்லாரும் பணியாளர்களே.
ஆனால் இயேசு தம் சீடர்களைப் பணியாளர் என அழைக்காமல் ''நண்பர்கள்''
என அழைக்கிறார். இதில் ஆழ்ந்த பொருள் அடங்கியிருக்கிறது. அதாவது,
இயேசுவை அவருடைய சீடர்கள் ஒரு சிறந்த ஆசிரியராகப் பார்த்தார்கள்;
ஓர் இறைவாக்கினராகக் கருதினார்கள்; அவருடைய தலைமையை ஏற்றுக்கொண்டார்கள்.
அக்காலத்தில் யூத சமயத்தில் வழக்கிலிருந்தவாறே இயேசுவைப் பற்றிச்
சீடர்கள் சிந்தித்தார்கள். ஆனால் இயேசு அவர்களுடைய சிந்தனையைப்
படிப்படியாக மாற்றினார். அவர்கள் இயேசுவை மெசியாவாகப் பார்த்தபோது
இயேசு அவர்களுக்குத் தாம் ஒரு துன்புறும் மெசியாவாக வந்ததாக விளக்கினார்.
இவ்வுலக அதிகாரத்தோடும் ஆட்சித் தோரணையோடும் அவர் வரவில்லை.
மாறாக, அவருடைய அதிகாரம் பணிசெய்வதில் அடங்கியது என இயேசு எடுத்துரைத்தார்.
-- இவ்வாறு தம்மையே பணியாளராகக் கண்ட இயேசு தம் சீடர்களைத் தம்
''நண்பர்கள்'' என அழைத்தது ஏன்? இயேசுவுக்கும் அவர்தம் சீடர்களுக்கும்
இடையே நிலவுகின்ற உறவு குரு-சீடன் என்னும் உறவைவிட ஆழமானது. அந்த
உறவு அன்பின் அடிப்படையில் உருவாகும் ஒன்று. நண்பர்களுக்கிடையே
நெருக்கமான உறவு நிலவும். ஒருவர் மற்றவருடைய சிந்தனைகளையும்
உணர்வுகளையும் பகிர்ந்துகொள்வர்; இன்பத்திலும் துன்பத்திலும்
பங்கேற்பர். தம்மிடம் இருப்பதை மகிழ்வோடு பகிர்ந்துகொள்வர். இந்த
உறவைத்தான் இயேசு தம் சீடர்களுக்கு வாக்களிக்கிறார். சீடர்கள்
இயேசுவின் அன்பை அருகிலிருந்து துய்த்து உணர முடிந்தது. அவர்கள்
எப்போதுமே இயேசுவுக்குப் பிரமாணிக்கமாக இருக்கவில்லை என்பது உண்மைதான்.
ஆனால் இயேசுவைப் பொறுத்தமட்டில் அவருடைய அன்பு ஒருநாளுமே குறைபடவில்லை.
மன்னித்து ஏற்கும் பண்பும் நட்பின் அடையாளம்தானே. இயேசு தம் சீடர்கள்
தவறியபோதெல்லாம் அவர்களை மீண்டும் அரவணைத்திட முன்வந்தார். ஆக,
நமக்கும் இயேசு உண்மையான அன்பராக, நண்பராக இருக்கவே
விரும்புகிறார். நாம் அவருடைய நட்பை ஒரு கொடையாக ஏற்றிட
வேண்டும். அவருடைய அன்பைப் பெற நாம் தகுதியவற்றவர்களாக இருந்தாலும்
அந்த அன்பு நம்மைத் தேடி வந்துகொண்டே இருக்கும். தேடி வரும்
கடவுளை நாம் நாடிச் செல்லும்போது அங்கே நட்பும் அன்பும் உருவாகும்.
நம் அன்புக் கடவுளின் பாசக் கயிற்றினால் நாம் பிணைக்கப்படுவோம்.
அவருடைய பற்றினை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வோம். இயேசுவின்
நட்பைத் துய்க்கின்ற நாம் அந்த நட்புறவைப் பிறரோடும் பகிர்ந்திட
முன்வருவோம்.
மன்றாட்டு
இறைவா, உம் அன்பில் நாங்கள் நிலைத்திருக்க அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
சிறந்த அன்பு
அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
இன்றைய உலகில் உறவின் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது நட்பு.
ஒரு நல்ல நண்பன் நூறு உறவிருக்குச் சமம். நண்பர்கள், தோழர்கள்
இவர்கள்தான் ஒவ்வொருடைய வாழ்க்கையையும் செதுக்கும் சிற்பிகள்.
ரேடியோ நிகழ்ச்சியில் ஒருவன்: காதல், நட்பு விளக்கம் தருக. மற்றவன்:
காதல் ளை pழளைழn.நட்பு ளை அநனiஉiநெ. அதேவேளையில் உங்கள்
வாழ்க்கையை உடைத்து உருக்குலைப்பதும் அவர்களே. கவிஞன் ஒருவன்
இவ்வாறு செபிக்கிறான்: "இறiவா! என் பகைவனை நான்
பார்த்துக்கொள்கிறேன்.நண்பனிடமிருந்து என்னை நீ காப்பாற்று" என்று.
நட்பு, நண்பர்கள் அவ்வளவு கடினமான ஒன்று.
நட்பின் சிறப்பை உணர்ந்த இயேசு, "தம் நண்பர்களுக்காக உயிரைக்
கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" என்றார்.தன்னைக்
காட்டிக்கொடுத்தவரையும் 'தோழா, எதற்காக வந்தாய்?' என்ற உயிரை
உறைய வைத்த வார்த்தைகள் பகைவனையும் பதற வைத்துவிடும். இவ்வாறு
இயேசு, பகையைக்கூட நட்பாக மாற்றவேண்டும். இருக்கின்ற நட்பை, உயிரைக்கொடுத்தேனும்;
வளர்க்க வேண்டும் என்பதைத் தெழிவுபடுத்துகிறார்.
உயிரை வாங்குகின்ற நட்பு பல வடிவங்களில் மாறுவேடங்களில் அலைவதைப்
பார்க்கிறோம்.சுயநலம் என்ற போர்வையில், பணம் பதவி ஆசையில்
காட்டிக்கொடுக்கும் துரோகங்கள் நட்பில் நயவஞ்சகமாக நடைபெறுவதை
முன்னுணர்ந்தே இயேசு இதைச் சொன்னார். நட்பை வளர்ப்போம். உயிரைக்கொடுத்தும்
நண்பனைக் காப்போம்.தலை போனாலும் ஒருபோதும் பகைவனைக்கூட
காட்டிக்கொடுக்க வேண்டாம். அது அவனைத் திருந்தி வாழ வைக்கும்.
நட்பை வளர்க்கும். நம்மை வாழ வைக்கும்.இனிது வாழ்வோம்.
வாழ்த்துக்கள். ஆசீர்.
--அருட்திரு ஜோசப் லியோன்
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
'
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
-------------------------------------------------------- |
|