Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     12 மே 2018  
                                                   பாஸ்காக் காலம் 6ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இயேசுவே மெசியா என அப்பொல்லோ மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 23-28

பவுல் சிறிது காலம் அந்தியோக்கியாவில் செலவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியாப் பகுதிகள் வழியாகச் சென்று சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார்.

அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவர். ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார்.

ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். அவர் தொழுகைக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்துக் கொண்டுபோய், கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கினர். அவர் அக்காயாவுக்குப் போக விரும்பியபோது சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தி, அவரை ஏற்றுக்கொள்ளுமாறு சீடருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் அங்கே சென்றபோது இறையருளால் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்குப் பெரிதும் துணையாய் இருந்தார். ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, "இயேசுவே மெசியா" என மறைநூல்களின்மூலம் எடுத்துக் காட்டினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 47: 1-2. 7-8. 9 (பல்லவி: 7a)
=================================================================================
பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே. அல்லது: அல்லேலூயா.

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

9 மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 16: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தந்தையே உங்கள்மீது அன்புகொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு, நம்பினீர்கள்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 23b-28

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.

நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப் பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள்.

அப்போது உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன் என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார்.

நீங்கள் என்மீது அன்பு கொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவர். ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார்.

இறைவா உமக்கு நன்றி!

இன்றைய காலக்கட்டத்திலும் இத்தகைய அன்பர்கள் பலரை இறைவன் ஆசீர்வதித்து வருகின்றார் என்பதுவே உண்மை. புலமை வாய்ந்தவர்கள். சொல்வன்மை மிக்கவர்கள். கற்றறிந்தவர்கள். ஈடுபாடு கொண்டவர்கள் என பலர் உண்டு இன்றும்.

இவற்றையெல்லாம் செய்பவர் இறைவன் தாமே என்பதுவே உண்மை.

இறைவா உமக்கு நன்றி என்று சொல்லி அவரை வணங்குவோம். வழிபாடுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்"

தூய எட்மன்ட்டின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வு இது.

ஒரு சமயம் அவர் சாலையோரம் நடந்து போய்க்கொண்டிருந்தபோது அவருக்கு முன்பாக சிறுவன் ஒருவன் வந்தான். அந்தச் சிறுவன் தூய எட்மன்டிடம், "ஐயா! என்னை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். அதற்கு அவர், "இல்லை தம்பி, இப்போதுதான் நான் உன்னைப் பார்க்கிறேன்" என்றார். உடனே அந்தச் சிறுவன் அவரிடம், "இப்போது என்னுடைய நெற்றியை நன்றாக உற்றுப் பாருங்கள். அப்போது தெரியும் நான் யாரென்று?" என்று சொன்னான்.. எட்மன்டும் அந்தச் சிறுவனுடைய நெற்றியை உற்றுப் பார்த்தார். அதில் "நாசரேத்து இயேசு யூதர்கள் அரசன்" என்று பொறிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்தும் எட்மன்ட் சாஸ்டாங்கமாக சிறுவனுடைய இயேசுவின் - காலில் விழுந்து வணங்கினார்.

அப்போது இயேசு அவரிடம், "என் அன்பு மகனே எட்மன்ட்! ஒவ்வொரு நாளும் நாளும் நீ தூங்கச் செல்வதற்கு முன்பாக, உன்னுடைய நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்று சொல்லிவந்தால், இப்போது மட்டுமல்ல, எப்போதும் எல்லாவித ஆபத்துகளிலிருந்தும் நீ காப்பாற்றப் படுவாய்" என்றார். இப்படிச் சொல்லிவிட்டு குழந்தை இயேசு அங்கிருந்து மறைந்து போனார்.

இதன்பிறகு தூய எட்மன்ட் ஒவ்வொருநாளும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக, "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்று சொல்லி தனது நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்துவிட்டு தூங்கச் சென்றார். இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருக்க, ஒருநாள் சாத்தான் அவருக்கு முன்பாகத் தோன்றி, "நீ! இயேசுவின் திருநாமத்தைச் சொல்லி ஜெபிப்பக்கூடாது, அது நல்லது கிடையாது" என்று தந்திரமாகப் பேசியது. இதைக் கேட்டு கடுஞ்சினம் கொண்டு, "நாசரேத்து இயேசு யூதர்கள் அரசன்" என்று சொல்லி தன்னுடைய நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து ஜெபிக்கத் தொடங்கினார். மறுகணம் சாத்தான் அவ்விடத்தை விட்டு அகன்றது. அது மட்டுமல்லாமல், அதன்பிறகு சாத்தான் அவரைத் தொந்தரவு செய்யவேவில்லை.

இயேசுவின் திருப்பெயருக்கு எத்துனை வல்லமை இருக்கின்றது, அத்திருப்பெயரை நாம் சொல்லி வேண்டுகின்றபோது நம்முடைய வேண்டுதல் எப்படி கேட்கப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்" என்கின்றரர். இதன்மூலம் தன் பெயருக்கு இருக்கும் வல்லமையை ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லாமல் சொல்கின்றார்.

என்றைக்காவது நாம், "இறைவனிடத்தில் கேட்டும் கிடைக்காமல் இருந்திருக்கின்றதே, அது ஏன் என்று சிந்தித்துப் பார்த்திருக்கின்றோமா?", அப்படி நாம் சிந்தித்துப் பார்த்தோம் என்றால், நமக்குக் கிடைக்கின்ற ஒரே பதில், நாம் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி ஜெபிக்காததுதான். இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி நாம் ஜெபித்திருந்தோம் என்றால், நம்முடைய வேண்டுதலுக்கு நிச்சயம் பதில் கிடைத்திருக்கும் என்பது உண்மை.

நிறைய நேரங்களில் நாம் நம்முடைய இஷ்ட புனிதர்களிடத்தில் வேண்டிக் கொண்டிருக்கின்றோம். இஷ்ட புனிதர்களால் நம்முடைய வேண்டுதல்களை இறைவனிடத்தில் பரிந்துரைக்க முடியுமே ஒழிய, அவர்களால் நம்முடைய வேண்டுதலுக்கு விடையளிக்க முடியாது. அதற்காக அவர்களுடைய பரிந்துரைக்கு இருக்கும் ஆற்றலை மறுத்துவிட முடியாது. ஆனால் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடுகின்றபோது அதற்கு இருக்கும் வல்லமை அளப்பெரியது என்பதுதான் நாம் இங்கே புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

அடுத்ததாக, இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடுவதால் என்ன நன்மை விளையும் என்பதையும் ஆண்டவர் இயேசு நமக்கு எடுத்துச் சொல்கின்றார். "இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்" என்கின்றார் இயேசு. ஆமாம், இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி ஜெபிப்பதால், அதன்மூலம் நம்முடைய மன்றாட்டு கேட்கப்படுவதனால் நம்முடைய மகிழ்ச்சி நிறைவடையும் என்பது உறுதி.

எருசலேம் திருக்கோவிலின் முன்பாக உள்ள அழகுவாயிலில் இருந்த முடுக்குவாதமுற்றவரை யோவானும் பேதுருவும், இயேசுவின் திருப்பெயரைச் சொல்லிக் குணப்படுத்தியபோது, அந்த முடக்கமுற்றவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதனை நிறைவான மகிழ்ச்சி என்றே சொல்லவேண்டும். நாமும் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மான்றடினோம் என்றால், நம்முடைய மகிழ்ச்சி நிறைவானதாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆகவே, நாம் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!