Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     11 மே 2018  
                                                   பாஸ்காக் காலம் 6ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 9-18

பவுல் கொரிந்து நகரில் இருந்தபோது, இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, "அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்" என்று சொன்னார். அவர் அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் இறைவார்த்தையைக் கற்பித்து அங்கேயே தங்கியிருந்தார்.

கல்லியோ என்பவர் அக்காயா நாட்டின் ஆட்சியாளராக இருந்தபோது யூதர்கள் ஒருமித்து, பவுலைத் தாக்கி, அவரை நடுவர் மன்றத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்து, "இவன் திருச்சட்டத்துக்கு எதிரான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களைத் தூண்டிவிடுகிறான்" என்றார்கள்.

பவுல் பேச வாயெடுத்தபோது கல்லியோ அவர்களை நோக்கி, "யூதர்களே, ஏதாவது குற்றமோ பழிபாவமோ இருக்குமாயின் நான் பொறுமையுடன் உங்கள் வழக்கைக் கேட்டிருப்பேன். ஆனால் இது சொற்களையும் பெயர்களையும் உங்கள் திருச்சட்டத்தையும் பற்றிய சிக்கலாய் இருப்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்; இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை" என்று கூறி, அவர்களை நடுவர் மன்றத்திலிருந்து துரத்திவிட்டார்.

உடனே அவர்கள் அனைவரும் தொழுகைக்கூடத் தலைவரான சொஸ் தேனைப் பிடித்து நடுவர் மன்றத்துக்கு முன்பாக அடித்தனர். ஆனால் கல்லியோ எதையும் பொருட்படுத்தவில்லை.

பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொண்டு, அக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 47: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 7a)
=================================================================================
பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே. அல்லது: அல்லேலூயா.

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

3 வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார். 4 நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 24: 46

அல்லேலூயா, அல்லேலூயா! மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடைய வேண்டும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 20-23a

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்.

இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை:

"அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. ஏனெனில்இ நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்"

இன்றைக்கு இத்தகைய துணிவு யாருக்கு உள்ளது.

இந்த துணிவு இல்லாததற்கு காரணம், அவா நம்மோடு இருக்கின்றார் என்ற உணர்வ இல்லாதது தான் காரணமா?

இல்லை பணிகளை பலவாக்கி, அதனிலே இன்று வருமானம் பார்க்க ஆரம்பித்ததா?

இதனால் போதிக்க வேண்டியவர்கள் பணிகளை மாற்றிக் கொள்ள, ஆண்டவர் பொதுநிலையினரில் பலரை போதிக்க செய்கின்றாரோ?

அழைக்கப்பட்டவர்கள் தங்களது அழைப்பிலே உண்மையாய் இருப்பது அவசியமானது. செபிப்போம்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"உங்கள் துன்பம் இன்பமாகவும், துயரம் மகிழ்ச்சியாகவும் மாறும்"

திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தாயார் தன் மகளைப் பார்த்து, "என்ன விஷயம்?" என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிடம் சொன்னாள். "இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை" என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி, எரியும் அடுப்பிலே அதையெல்லாம் எடுத்துவைத்தார். சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்தில் கேரட்டை எடுத்துப் போட்டார். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை போட்டார். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் காப்பித்தூளை போட்டார். அந்தப் பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில், அந்தப் பாத்திரங்களை கீழே இறக்கி வைத்தார். கேரட்டையும், முட்டையையும் எடுத்து வெளியே வைத்தார். காபியையும் ஒரு கோப்பையிலே ஊற்றினார்.

"மகளே இதெல்லாம் என்ன என்று தெரிகிறதா?" என்று கேட்டார் தாயார். அதற்கு"அது கேரட், அடுத்தது முட்டை, இது காப்பி" என்று கூறினாள் மகள். "சரி, கேரட்டை தொட்டுப் பார் எப்படியிருக்கு?" என்று கேட்டார் தாயார். தொட்டுப்பார்த்து, "ரொம்ப மென்மையாக இருக்கு" என்று கூறினாள் மகள். "முட்டையைத் தொட்டுப் பார்த்து எப்படியிருக்கு என்று சொல்" என்று கூறினார் தாயார். "கொஞ்சம் கடினமாக இருக்கிறது" என்று சொன்னாள் மகள். அடுத்தபடியாக "காப்பியை எடுத்து குடி" என்றார் தாயார். காபியை குடித்துவிட்டு, "ரொம்ப சுவையாக இருக்கிறது" என்று கூறினாள் மகள்.


"எதற்கு இந்த வேடிக்கை?" என்று தாயிடம் வினவினாள் மகள். அதற்கு பதில் அளித்த தாய், "மகளே கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்த மூன்று பொருள்களையும் ஒரே மாதிரி தண்ணீரில் தான் கொதிக்க வைத்தோம். ஒரே நேரத்தில் கீழே இறக்கிவைத்தோம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது.

"இந்தக் கேரட் ஆரம்பத்திலே எவ்வளவு கடினமாக இருந்தது? ஆனால் தண்ணீரில் கொதிக்க வைத்தவுடன் தன்னுடைய இயல்புக்கு நேர்மாறாக மென்மையானதாக மாறிவிட்டது". "இந்த முட்டைக்குள்ளே திரவ நிலையிலே இருந்த கரு கொதிக்க வைத்ததும் கடினமாக ஆகிவிட்டது". "காப்பியைப் பார். அது அந்த தண்ணீரையே சுவை மிக்க பானமாக மாற்றிவிட்டது". "மகளே, வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது இப்படி கொதிக்க வைக்கிற மாதிரிதான். இதை நாம் எந்த ரூபத்தில் சந்திக்கப் போகிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கிறது." என்று கூறினார் தாய். உடனே மகள் முகத்தில் தெளிவு பிறந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். கவலை மறந்து போய்விட்டது. முகத்தில் தெளிவுபிறந்தது.

ஆம், வாழ்க்கையில் எல்லாருக்கும் கஷ்டங்கள் வரும்தான். ஆனால், அதை நாம் தகுந்த பக்குவத்தோடும் உறுதியான மனநிலையோடும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து போராடுகின்றபோது நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் இன்பமாகவும் துயரமெல்லாம் மகிழ்ச்சியாக மாறும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "இப்போது நீங்கள் துயறுருவீர்கள். ஆனால், நான் உங்களைக் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும்" என்கின்றார். இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசு இந்த உலகத்தினை விட்டுப் பிரிந்து செல்கின்றபோது, அவர்பால் நம்பிக்கை கொண்டவர்கள், அவர்பொருட்டு இன்னல்களையும், இக்கட்டுகளையும் அவமானங்களையும் சந்திப்பார்கள். ஆனால், அவர் மீண்டுமாக தன் மீது நம்பிக்கைக் கொண்டு, தனக்காக அவமானங்களையும் துன்பங்களையும் சந்தித்தவர்களைச் சந்திக்கின்றபோது அவர்களுடைய துயரமெல்லாம் மகிழ்ச்சியாக மாறும். இதைத் தான் ஆண்டவர் இயேசு கூறுகின்றார்.

நாம் நம்முடைய வாழ்வில் (இயேசுவின் பொருட்டு) வரும் துன்பங்களையும், பிரச்சனைகளையும் உறுதியான மனநிலையோடு ஏற்றுக்கொள்கின்றோமா? அல்லது பிரச்சனைகளுக்குப் பயந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் மீன்களைப் போன்று இருக்கின்றமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்த உலகம் கோழைகளுக்கு ஆனது அல்ல, குன்றா மன உறுதியுடன் பிரச்சனைகளைத் தாங்கிக்கொண்டு தொடர்ந்து போராடுபவர்களுக்கானது.

ஆகவே, நாம் நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களை உறுதியான மனநிலையோடு எதிர்கொள்வோம். இயேசுவின் பொருட்டு எதையும் தாங்கிக்கொள்ளத் துணிவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

துன்பத்தின் பயனாகக் கிடைக்கின்ற மகிழ்ச்சி நிலையானது

விவசாயி ஒருவர் தன்னுடைய குடிசைக்கு அருகே இருந்த விளைநிலத்தில் நெல்மணிகளை விதைத்துக்கொண்டிருந்தார். அப்போது இரண்டு நெல்மணிகள் மட்டும் மற்ற நெல்மணிகளை விடக் கொஞ்சம் தள்ளி ஓரமாக விழுந்தன.

அதில் ஒரு நெல்மணி மற்றொரு நெல்மணியிடம், "நான் நன்றாக முளைத்து, என்னுடைய வேர்களை தரையில் ஊன்றி, அதன்பின் என்னுடைய கதிர்களை மேலே எழுப்பப் போகின்றேன்" என்றது. இதைக் கேட்ட மற்றொரு நெல்மணி, "முளைத்து வேர்களைத் தரையில் ஊன்றினால் வலிக்குமே, அது போன்று கதிர்களை மேலே எழுப்பினால் சூரிய ஒளி வேதனை அளிக்குமே, அதனால் நான் இப்படியே இருக்கின்றேன், நீ வேண்டுமானால் முளைத்து நன்றாக வளர்ந்துகொள்" என்றது.

வலிகளை தாங்கிகொள்ளப் போவதாகச் சொன்ன நெல்மணி நிலத்தில் நன்றாக வேரூன்றி, வளர்ந்து அழகான நெற்கதிர் ஆனது, ஆனால் வலிகளைத் தாங்கிக்கொள்ள யோசித்த நெல்மணி அப்படியே விதையாக நிலத்தில் கிடந்தது. ஒருசில நாட்களுக்கு பின், அந்தப் பக்கமாக மேய வந்த விவசாயியின் வீட்டுக்கோழியோ நிலத்தின் மேலே கிடந்த நெல்மணியை கொத்தி இரையாக்கிக் கொண்டது.

நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை இன்முகத்தோடு தாங்கிக்கொண்டு, அதற்கு நம்மையே கையளிக்கின்ற போது, நம்முடைய துன்பங்கள் எல்லாம் இன்பமாக மாறும் என்பதைக் இந்த கற்பனைக் கதையானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "உங்களுடைய துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து சொல்வார், "பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனைப் அடைகின்றார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்". ஆம், நாம் துன்பங்களை ஏற்றுக்கொள்ளும்போது, அந்தத் துன்பங்களின் வழியாக நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி மிகவும் அலாதியானது அதைதான் ஆண்டவர் இயேசு நமக்கு எடுத்துச் சொல்கிறார்.

இயேசுவின் வார்த்தைகளில் பொதிந்துள்ள ஒருசில உண்மைகளை இப்போது நாம் சற்று ஆழமான சிந்தித்துப் பார்ப்போம்.

இன்பம் என்ற வீட்டின் திறவுகோல் துன்பம். இதுதான் ஆண்டவர் இயேசு சொல்லுகின்ற முதலாவது செய்தியாக இருக்கின்றது. அதற்கு அவர் பயன்படுத்துகின்ற உருவகம்தான் தான், குழந்தையைப் பெற்றெடுக்கும் நிகழ்வு. குழந்தையைப் பெற்றெடுக்க, தாயானவள் பேறுகால வேதனைகளை அனுபவித்தாக வேண்டும். பேறுகால வேதனையை அனுபவிக்காமல் குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது இயலாத ஒன்றாகும். அது போன்றுதான் இறைவன் தரக்கூடிய மகிழ்ச்சியை நாம் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் அதற்கு நாம் சிலுவைகளையும் பாடுகளையும் அனுபவித்தாக வேண்டும்.

துன்பங்களின் வழியாக, வேதனையின் வழியாக கிடைக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானது. இதுதான் இயேசு நமக்குச் சொல்லுகின்ற இரண்டாவது செய்தியாகும். இன்றைக்கு நிறையப் பேர் சரியாகப் படிக்காமலும், தேர்வினை நன்றாக எழுதாமலும் பட்டம் வாங்கிவிடுகின்றார்கள். இப்படிப் பட்டம் வாங்குவதில் கிடைக்கின்ற மகிழ்ச்சியை விட, கஷ்டப்பட்டு நன்றாகப் படித்து, தேர்வினைச் சிறப்பாக எழுதி அதன்மூலம் கிடைக்கின்ற பட்டாம் தரக் கூடிய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது. மேலும் போலியான முறையில் வாங்கிய பட்டமோ என்றைக்காவது ஒருநாள் எல்லாருக்கும் தெரியவந்து விட்டது என்றால் அதனால் பெருத்த அவமானம் மட்டுமே மிஞ்சும். ஆனால் நேர்மையான முறையில் உழைத்துப் பெறுகின்ற பட்டமோ என்றைக்கும் நமக்கு பெருமை சேர்க்கும். அதனால் கிடைக்கின்ற மகிழ்ச்சியை யாரும் நம்மிடமிருந்து எடுத்துவிட முடியாது. அது நிரந்தரமானது.

துன்பத்தின் வழியாகக் கிடக்கின்ற மகிழ்ச்சி, நாம் பட்ட துன்பத்தையும் மறந்துவிடச் செய்யும். அதுதான் இயேசு நமக்குச் சொல்லும் மூன்றாவது செய்தியாக இருக்கின்றது. தாயானவள் குழந்தையைப் பெற்றெடுத்த பின்பு, தான் பட்ட பேறுகால வேதனையை மறந்துபோய்விடுவாள்; கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வருகின்ற ஒருவர், தான் முன்னுக்கு வந்தபிறகு, தான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் மறந்துவிடுவார். ஏனெனில், அவர் தான் அடைந்த இந்த உயர்ந்த நிலைக்கு முன்னால் அவர் பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஒன்றுமில்லை. இதைதான் இயேசு உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்று சொல்கிறார்.

ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களை துணிவோடு தாங்கிக்கொள்வோம், அதன்வழியாக இறைவன் அளிக்கும் நிறைவான பெரு மகிழ்ச்சியைக் கொடையாகப் பெறுவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!