|
|
10
மே 2018 |
|
|
பாஸ்காக்
காலம் 6ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கொரிந்து நகரில் பவுல் வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும்
அவர் தொழுகைக்கூடத்தில் பேசினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 1-8
அந்நாள்களில் பவுல் ஏதென்சை விட்டு கொரிந்துக்குப் போய்ச்
சேர்ந்தார். அங்கே போந்துப் பகுதியில் பிறந்த அக்கிலா என்னும்
பெயருடைய ஒரு யூதரையும் அவர் மனைவி பிரிஸ்கில்லாவையும் கண்டு
அவர்களிடம் சென்றார். அவர்கள், "யூதர் அனைவரும் உரோமை நகரத்தை
விட்டு வெளியேற வேண்டும்" என்ற கிலவுதியு பேரரசருடைய கட்டளைக்கு
இணங்கி இத்தாலிய நாட்டைவிட்டு அண்மையில் அங்கு வந்திருந்தார்கள்.
கூடாரம் செய்வது அவர்களது தொழில். தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால்
பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார்.
ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக் கூடத்தில் யூதரிடமும்
கிரேக்கரிடமும் பேசி அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து வந்தபோது பவுல்
இறைவாக்கை அறிவிப்பதில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார்;
"இயேசுவே மெசியா" என்று யூதரிடம் சான்று பகர்ந்துவந்தார்.
அவர்கள் அதனை எதிர்த்துப் பழித்துரைத்தபோது அவர் தமது
மேலுடையிலிருந்த தூசியை உதறி, "உங்கள் அழிவுக்கு நீங்களே
பொறுப்பு, நான் அல்ல. இனிமேல் நான் பிற இனத்தாரிடம்
செல்கிறேன்" என்று கூறினார்; அவ்விடத்தை விட்டுவிட்டுக் கடவுளை
வழிபடும் தீத்துயுஸ்து என்னும் பெயருடைய ஒருவரின் வீட்டுக்குப்
போனார். அவரது வீடு தொழுகைக்கூடத்தை அடுத்து இருந்தது.
தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும்
ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல்
கூறியவற்றைக் கேட்டு நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)
=================================================================================
திபா 98: 1. 2-3ab. 3cd,4 (பல்லவி: 2b)
பல்லவி: பிற இனத்தார் முன், ஆண்டவர் தம் நீதியை வெளிப்படுத்தினார்.
அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு
செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும்
அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம்
நீதியை வெளிப்படுத்தினார். 3யb இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட
தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி
3உன உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப்
பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 18, 16: 22b
அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களைத் திக்கற்றவர்களாக
விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்; உங்கள் உள்ளம்
மகிழ்ச்சி அடையும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக
மாறும்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 16-20
அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம்: "இன்னும் சிறிது காலத்தில்
நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில்
என்னைக் காண்பீர்கள்" என்றார்.
அப்போது அவருடைய சீடருள் சிலர், "இன்னும் சிறிது காலத்தில்
நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில்
என்னைக் காண்பீர்கள்' என்றும் `நான் தந்தையிடம் செல்கிறேன்"
என்றும் சொல்லுவதன் பொருள் என்ன?" என்று தங்களிடையே
பேசிக்கொண்டனர்.
"இந்தச் "சிறிது காலம்" என்பது என்ன? அவர் பேசுவது நமக்குப்
புரியவில்லையே" என்றும் பேசிக்கொண்டனர்.
அவர்கள் தம்மிடம் கேள்வி கேட்க விரும்புவதை அறிந்த இயேசு
அவர்களிடம் கூறியது: "இன்னும் சிறிது காலத்தில் நீங்கள்
என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக்
காண்பீர்கள்' என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே
சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள்,
புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள்
துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
"உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்"
அரபு நாட்டில் வாழ்ந்து வந்த பெரியவர் லுக்மான் ஹகிம்.
ஒருசமயம் அவரும் அவருடைய மகனும் அவசர காரியமாக ஓர் ஊருக்கு
நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அப்படி நடந்துசெல்லும்போது
வழியில் கிடந்த முள்ளானது லுக்மான் ஹகிமின் மகனுடைய காலில்
குத்த, இரத்தம் வெளிவந்தது. அதன் காரணமாக அவரால் நடக்க
முடியவில்லை. எனவே அவ்விடத்தில் தங்கி அவர்கள் இருவரும் இரவைக்
கழிக்க நேர்ந்தது.
போய்ச் சேரவேண்டிய ஊருக்குப் போகமுடியவில்லையே என்று லுக்மான்
ஹகிமின் மகனுக்கு ஏற்பட்ட வருத்தத்திற்கு அளவேயில்லை. அப்போது
லுக்மான் ஹகிம் தன்னுடைய மகனிடத்தில் "ஆண்டவர் செய்வதெல்லாம்
நன்மைக்கே, உன்னுடைய கஷ்டமெல்லாம் நாளைய நாளில் சந்தோசமாக
மாறிவிடும்" என்று ஆறுதல் சொன்னார். அடுத்தநாள் காலையில்
அவர்கள் போய்ச் சேரவேண்டிய ஊரை அடைந்தபோது அங்கு முந்தின நாள்
இரவு ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக அவ்வூர் மக்கள் அனைவரும்
இறந்து கிடந்தனர். இதைப் பார்த்துவிட்டு முந்தின நாள் தன்னுடைய
தந்தை சொன்னதை நினைவுகூர்ந்து, லுக்மான் ஹகிமின் மகன் கவலை
மறந்து மகிழ்ச்சி கொள்ளத் தொடங்கினார்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப்
பார்த்து, "நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம்
மகிழும். நீங்கள் துயறுருவீர்கள்; ஆனால் உங்கள் துயரம்
மகிழ்ச்சியாக மாறும்" என்கின்றார். இயேசு தனது சீடர்களைப்
பார்த்துச் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகள் மிகவும்
சிந்தனைக்குரியவையாக இருக்கிறது
இயேசு சொல்லும் இவ்வார்த்தைகளை நாம் இரண்டு விதங்களில்
புரிந்துகொள்ளலாம் ஒன்று. அவருடைய இரண்டாம் வருகை
தொடர்பானதாகவும். இரண்டு வாழ்வில் நல்ல நிலையை அடைவதற்கு நாம்
சந்திக்கவேண்டிய அடையவேண்டிய துன்பங்கள், சவால்கள்
தொடர்பானதாகவும் புரிந்துகொள்ளலாம். இவ்விரண்டையும் நாம் சற்று
விரிவாக சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு தன்னுடைய சீடர்களை விட்டுப் போவதால் அவர்கள் அழுவார்கள்,
புலம்புவார்கள். ஆனால், அவர்கள் தூய ஆவியின் வருகைக்குப்
பின்னால் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற பொருளில் இயேசு இப்படிச்
சொல்கின்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தை
விட்டுப் பிரிந்த சமயத்தில் சீடர்கள் அடைந்த துயரத்திற்கு அளவே
இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் தங்களை அறைக்குள்
பூட்டிக்கொண்டு யூதர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பயந்து
பயந்து வாழ்ந்து வந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் இயேசுவினுடைய
உயிர்தெழுதலுக்கு பிறகு, தூய ஆவியாரின் வருகைக்குப் பிறகு கவலை
மறந்து மகிழ்ச்சி கொண்டார்கள்; பயந்தாங்கோழிகளாக இருந்தவர்கள்
துணிவோடு நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார்கள். இப்படி
ஒருவிதமாக நாம் இயேசு சொல்வதைப் புரிந்துகொள்ளலாம்.
இயேசு சொல்வதில் உள்ள இன்னொரு அர்த்தத்தையும் நாம்
புரிந்துகொள்ளவேண்டும். அதுதான் இப்போது தங்களுடைய வாழ்வில்
கஷ்டங்களையும், சவால்களையும் சந்திக்கின்றவர்கள் பின்னாளில்
அந்தக் கஷ்டங்களை எல்லாம் மறந்து மகிழ்ச்சிகொள்வார்கள்
என்பதாகும். இன்றைக்கு சமூகத்தில் ஓரளவுக்கு நல்ல நிலையில்
இருப்பவர்கள், வசதி வாய்ப்போடு இருப்பவர்கள் எல்லாம்
ஒருகாலத்தில் கஷ்டப்பட்டு உழைத்தவர்கள்தான். கஷ்டப்படாமல்
யாரும் இஷ்டப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை.
இறையாட்சிப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு புனிதர்களாக,
மறைசாட்சிகளாக இன்றைக்கு உயர்ந்து நிற்பவர்களுக்கும் இது
பொருந்தும். இயேசுவுக்காக தங்களுடைய உடல் பொருள் ஆவி
அத்தனையும் கொடுத்த அவர்கள், அதனை கஷ்டமாக நினைக்காமல்
மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள். அதனால்தான் இன்றைக்குப்
புனிதர்களாக, மறைசாட்சிகளாக உயர்ந்து நிற்கின்றார்கள். நாமும்
நம்முடைய வாழ்வில் இயேசுவின் பொருட்டு வரும் எதிர்வரும்
துன்பங்களை, பிரச்சனைகளை, சவால்களை நேரிய மனதோடு
ஏற்றுக்கொள்கின்றது ஒருநாளில் நாம் இறைவனால்
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆவோம் என்பது உறுதி.
கேரி கோரன்சன் என்ற அறிஞர் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார்,
"துன்பங்கள்தான் ஒரு மனிதனைப் புடம்போட்டுப் பிரகாசிக்க
வைக்கின்றன" என்று. இது உண்மை. இப்போது நாம் இயேசுவின்
பொருட்டும் இறையாட்சியின் பொருட்டும் அடைகின்ற துன்பங்கள்,
இன்னல்கள், சவால்கள் பின்னாளில் நமக்கு ஆசிர்வாதமான வாழ்வினை
அமைத்துத் தரும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும்
கிடையாது.
"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் அதனால் பலன்
கொடுக்கமுடியும். மமடியாவிட்டால் அது அப்படியேதான் இருக்கும்".
அதுபோன்றுதான் இயேசுவின் பொருட்டு துன்பங்களை சந்திக்கின்ற
ஒருவரால்தான் நிறை மகிழ்ச்சியை அடைய முடியும்.
ஆகவே, இயேசுவுக்காக துன்பங்களையும் இன்னல்களையும்
ஏற்றுக்கொள்வோம். அதன்மூலம் இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
'
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
-------------------------------------------------------- |
|