Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     08 மே 2018  
                                                   பாஸ்காக் காலம் 6ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் (16: 22-34)

22 அந்நாள்களில் பிலிப்பு நகர் மக்கள் திரண்டெழுந்து ப்வுலையும் சீலாவையும் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள்.

23 அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக்கருத்தாய்க் காவல் செய்யுமாறுசிறைக்காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள்.

24 இவ்வாறு கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார்.

25 நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினார். மற்ற கைதிகளோ இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

26 திடீரென ஒருபெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக்கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன.

27 சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக்கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலைசெய்துகொள்ள முயன்றார்.

28 பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, "நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்" என்றார்.

29 சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார்.

30 அவர்களை வெளியே அழைத்து வந்து, "பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார்.

31 அதற்க அவர்கள், "ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்றார்கள்.

32 பின்பு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள்.

33 அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள்.

34 அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 138: 1-2a. 2bc-3. 7c-8 (பல்லவி: 7c)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2a உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன்.
-பல்லவி

2bc உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.
-பல்லவி

7c உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (யோவா 16: 7,13)

அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது, அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் போகாவிட்டால், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்.

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (16: 5-11)

அக்காலத்தில் யேசு கூறியதாவது இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால் உங்களுள் எவரும் "நீர் எங்கே போகிறீர்?" என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக் குறித்து துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள்.

7 நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.

8 அவர் வந்து பாவம், நிதீ, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்.

9 பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் என்னிடம் அவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை.

10 நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காண மாட்டீர்கள்.

11 தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றவிட்டான்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார்"

ஒரு மலைப்பாங்கான பிரதேசத்தில், மூடுபனிக் காலத்தில் சிறுவன் ஒருவன் பட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அவன் தன்னுடைய கையில் இருந்த கயிற்றை கொஞ்சம் கொஞ்சமாக விட, பட்டம் உயர உயரப் பறந்து சென்றது. ஒரு கட்டத்தில் பட்டம் கண்களுக்கு தெரியாத உயரத்துப் போனது.

அப்போது அந்த வழியாக பெரியவர் ஒருவர் வந்தார். வந்தவர் சிறுவன் தன்னுடைய கையில் கயிற்ரோடு (String) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார். உடனே அவர் அந்தச் சிறுவனிடம், "தம்பி! கையில் கயிற்ரோடு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அவன் அவரிடம், "ம்ம்ம், பட்டம் விட்டுக்கொண்டிருக்கிறேன்" என்றார். "பட்டம் விட்டுக்கொண்டிருக்கின்றாயா?, கையில் கயிறு இருக்கின்றது தெரிகின்றது, பட்டத்தை எங்கே?" என்று கேட்டார்.

சிறுவனோ அவரிடம், "ஐயா! மேலே பறந்துகொண்டிருக்கின்ற பட்டம் வேண்டுமானால் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அது மேலே பறக்கின்றது என்பதை என்னுடைய கையில் இருக்கும் இந்தக் கயிற்றில் உணர்கிறேன்" என்று சொல்ல, அவர் ஒன்றும் பேசாமல் தன் வழியில் போய்விட்டார்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் இடம்பெற்ற பட்டம் அதைப் பார்ப்பவரின் கண்களுக்குத் தெரியாமல் போனாலும்கூட அது இருக்கின்றது என்பதை சிறுவனின் கையில் இருந்த கயிற்றின் வழியாக அறிந்துகொள்ளலாம். அது போன்றுதான் தூய நம்முடைய புறக்கண்களுக்குத் தெரியாவிட்டாலும் அவர் நம்மோடு இருக்கின்றார், நம்மை வழிநடத்துகிறார் என்பதை அவருடைய அருட்கொடைகளால் அறிந்துகொள்ளலாம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார்" என்கின்றார். ஆமாம், இயேசு சொல்வது போல், தூய ஆவியின் வருகையினால் நம் பயனடைவோம். தூய ஆவியின் வருகையினால் நாம் எந்தெந்த வழிகளில் எல்லாம் பயனடைவோம் என்பதை இப்போது சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்கின்றோம்.

இயேசு கூறுகின்றார், "தூய ஆவியார் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்" என்று. ஆம், இன்றைய சமூகத்தில் எது பாவம், எது நல்லது என்று தெரியாமலே போய்விட்டது. இன்னும் சொல்லப்போனால், பலர் நல்லது என்று நினைத்துக்கொண்டு மேலும் மேலும் பாவத்தைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இயேசுவுக்கு மரண தண்டனை விதித்தவர்கள், அவரைக் கொலை செய்தவர்கள் எல்லாம் தாங்கள் செய்வது பாவமில்லை என்றே மிகப்பெரிய பாவத்தைச் செய்தார்கள். இத்தகைய சூழலில், தூய ஆவியார் வந்து எது பாவம், தீமை என்பதை எடுத்துரைப்பார் என்கின்றார் இயேசு

அடுத்ததாக, இன்றைக்கு நீதி தொடர்பாக முன்வைக்கப்படும் செய்திகளையும் நாம் சிந்தனைக்கு உட்படுத்திப் பார்க்கவேண்டும். "வல்லான் வகுத்ததே நீதி" என்பதுபோல், இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்களும் அதிகாரம் கொண்டவர்களும் தங்களுக்குச் சார்பாக நீதியையும் சட்டத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறார்களே ஒழிய, வறியவரின் சார்பாக நீதியை வழங்குவதில்லை இப்படிப்பட்ட நிலையில் தூய ஆவியார் வந்து எது உண்மையான நீதி என்பதை நமக்கு எடுத்துரைப்பார் என்கின்றார் இயேசு.

நிறைவாக, தீர்ப்பு தொடர்பாகவும் மக்கள் கொண்டிருக்கின்ற கருத்துகளை நாம் சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்போம். இன்றைக்கு கொடுக்கப்படுகின்ற தீர்ப்புகள் யாவும் உண்மைக்குப் புறப்பாக, ஒருதலை பட்சமாக இருக்கின்றன. சில நேரங்களில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு, நிரபராதிகள் அநியாயமாகத் தண்டிக்கப்படக் கூடிய அவலநிலைதான் இருக்கின்றது. இத்தகைய சூழலில் தூய ஆவியார் வருகின்றபோது அவர் தீர்ப்பு குறித்த சரியான நெறிமுறைகளை எடுத்துரைப்பார் என்கின்றார் இயேசு.

இவற்றையெல்லாம் கொண்டு பார்க்கின்றபோது தூய ஆவியாராம் துணையாளர் நம்மத்தியில் வருகின்றபோது நாம் தெளிந்த ஞானத்தையும் அறிவையும் பெறுவோம் என்பது உறுதி.

கவிஞர் இக்பால் எழுதிய கவிதை இது, "இருள் ஆட்சி செய்யும் இரவாக இருந்தவன் நான், அதை ஒளிபரப்பும் விளக்காக மாறியவன் நீ, களிமண்ணாக இருந்தவன் நான், அழகு சிந்தும் வண்ணக் கிண்ணமாக மாறியவன் நீ" இக்கவிதையை அவர் ஆசிரியரைக் குறித்து எழுதியிருந்தாலும் தூய ஆவியாருக்கு இது அப்படியே பொருந்தும். ஆம், தூய ஆவியார்தாமே நம்மை இருளாய் இருந்த நம்மை ஒளியாக மாற்றுகின்றார்.

ஆகவே, நாம் நம்மை உண்மையின் பாதையில் வழிநடத்தும் தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள்.

அன்றிலிருந்து இன்று வரை,சமூக விரோதி எண்ணுகிறான்; இந்த காவல் அதிகாரி போய்விட்டால் நமக்கு இனி பிரச்சனையே இல்லை என்று. இந்த அதிகாரி மாறிப்போய்விட்டால் நமக்கு இனி நல்ல காலம்.வரி செலுத்த வேண்டிய தேவை இல்லை என்று வரி கொடுக்காது ஏய்ப்பவன் நினைக்கிறான். இந்தச் சுங்க அதிகாரி போய்விட்டால் நம் தொழிலைச் சுதந்திரமாகச் செய்யலாம் என்று கடத்தல்காரன் கற்பனைசெய்கிறான். இந்த சாமியார் மாறிவிட்டால்.. இந்த ஆட்சி கவிழ்ந்துவிட்டால் .. இயேசு இல்லாவிட்டால் .. ..

யார் வந்தாலும் யார் போனாலும், உண்மை ஒலித்துக்கொண்டே இருக்கும். எத்தனை பிலாத்துகள் கேட்டாலும் சுருதி மாறாது ஒலிக்கும். நீதியின் குரல்வளை நெரிக்கப்பட்டாலும் கூரை மீதேறி முழங்கிக்கொண்டே இருக்கும். பழியும் பாவமும் பாகுபாடின்றி பரையறிவிக்கப்படும். இயேசு போனால் துணையாளர் வருவார். இன்று துணையாளர் உண்மைக்குச் சான்று பகரும் இயேசுவின் பணியைப் பல்வேறு விதங்களில் பலரின் மூலம் தொடர்ந்து ஆற்றி வருகிறார்.

திருச்சபையில் இறைவனின் துணையாளரின் இப்பணி சிறப்பாகத் தொடர்வதைக் காண்கிறோம். திருத்தந்தையின் அமெரிக்கப் பயணத்தின் பல்வேறு கருத்துரைகளும் குறிப்பாக ஐக்கிய நாட்டு சபையில் அவர் வழங்கிய கருத்துரை, தூய ஆவியின் செயல்பாடுகளுக்கான அத்தாட்சியாகும்.ஒவ்வொரு நாட்டுக்கும், நகருக்கும், வீட்டுக்கும் வீதிக்கும் ஒரு சில நல்லவர்களை அவ்வப்போது எழுப்பி, உண்மைக்கும் நீதிக்கும் அன்புக்கும் சான்று பகர்ந்து வருகிறார் தூய ஆவியார். அவரது கருவியாக, பலர் வருவர் போவர். உண்மையும் நீதியும் ஒலித்துக்கொண்டே இருக்கும். நீயும் நானும் ஆவியாரின் இப்பணி தொடரும் கருவியாவோம்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!