Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     06 மே 2018  
                                         பாஸ்கா காலம் ஆறாம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
Limage contient peut-tre : texte et nourriture
தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டது.


திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 25-26, 34-35, 44-48

அந்நாள்களில் கொர்னேலியு பேதுருவை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார். பேதுரு, "எழுந்திடும் நானும் ஒரு மனிதன்தான்" என்று கூறி அவரை எழுப்பினார்.

அப்போது பேதுரு பேசத் தொடங்கி, "கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" என்றார்.

பேதுரு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது. பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையுடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்; ஏனென்றால் அவர்கள் பரவசப் பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள்.

பேதுரு, "நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்?" என்று கூறி, இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார்.

பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 98: 1. 2-3ab. 3cd-4 (பல்லவி: 2b)
=================================================================================
பல்லவி: பிற இனத்தார் முன் ஆண்டவர் தம் நீதியை வெளிப்படுத்தினார்.

அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ab இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3cd உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கடவுள் அன்பாய் இருக்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள்.

அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.

நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.

நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.

என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்.

ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை:

இயேசு, தம் சீடர்களைப் பணியாளர்களாக கருதாது, நண்பர்களாக ஏற்று நேசித்தார். நட்பின் உயர்ந்த எல்லையாக, நண்பனுக்ககாக உயிரைக் கொடுப்பதைவிட உயர்ந்த அன்பு இல்லை என்றுரைத்ததார். நட்பு, இரத்த சம்பந்தமில்லாத உன்னமதமான உறவு. நம் இன்ப, துன்பங்கள், வெற்றி, தோல்விகள் என அனைத்திலும் கரம் கொடுத்து, தோள் கொடுத்து உடன் பயணிக்கும் மேன்மையான உறவு.

நாம் மனம்விட்டு எதையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு உறவு நல்ல நட்பிலேதான். அதனால்தான் இயேசுவும், தலைவன் செய்வது பணியாளருக்கு இன்னதென்று தெரியாது, நான் நண்பர்கள் என்றேன், ஏனென்றால். நான் தந்தையிடம் கேட்டவை அனைத்தையும் உங்களிடம் சொன்னேன் என்றார். நட்பின் வட்டம் நல்லதாக, நம்பிக்கைக்குரியதாக அமைவதுவே நல்லது. தன்னலம் நாடும் நண்பர்களும் உண்டு. தீயவழிக்கு இட்டுச்செல்லும் நண்பர்களும் உண்டு. யூதாஸைப்போல காட்டிக் கொடுக்கும் நண்பர்களாக இல்லாது, நல்ல நட்பை ஆய்ந்து, தேர்ந்தெடுக்க வேண்டும். யோனத்தானும், தாவீதும் நல்ல நட்பைப் பேணியதை நாம் விவிலியத்தில் காண்கின்றோம். நல்லது செய்யுமபோது தட்டிக்கொடுத்து, தவறு செய்யும்போது இடித்துரைத்து, கண்டித்து திருத்துபவனே நல்ல நண்பனாவான். ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நட்பைப் பெற முடியும்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
உறவின் சமநிலை

திருத்தூதர் பணிகள் 10:25-26,34-35,44-48
1 யோவான் 4:7-10
யோவான் 15:9-17

"யூவல் நோவா ஹராரி" என்ற இஸ்ரயேல் நாட்டு எழுத்தாளர் எழுதி வெளிவந்த (2014) நூல் 'சேபியன்ஸ். மனுக்குலத்தின் ஒரு சிறு வரலாறு'. இந்த நூலின் ஓரிடத்தில் மனித வாழ்வில் நாம் ஏற்றுக்கொள்ளும் இரண்டு பொய்களைக் குறிப்பிடுகின்றார். முதல் பொய்: 'எல்லா மனிதர்களும் சமம்.' இந்தப் பொய்யை நமக்கு அறிவுறுத்துவது உலக நாடுகளின் பிரகடனம். கொஞ்சம் கண்களைத் திறந்து பாருங்கள். எல்லா மனிதர்களும் சமமா? ஆண் வேறு, பெண் வேறு, மூன்றாம் பாலினம் வேறு. குழந்தை வேறு. முதியவர் வேறு. இளைஞன் வேறு. இளம்பெண் வேறு. மனித உயரத்தில் வேற்றுமை. தோலின் நிறத்தில் வேற்றுமை. மொழியில் வேற்றுமை. மதத்தில் வேற்றுமை. பொருளாதாரத்தில் வேற்றுமை. இப்படி நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி வேற்றுமை நிறைந்த உலகில் 'எல்லா மனிதர்களும் சமம்' என்று சொல்வது முதல் பொய். இரண்டாவது பொய்: 'மனிதர்களில் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு இருக்கிறது.' இந்தப் பொய்யை நமக்கு அறிவுறுத்துவது நம் மண்ணில் ஆரியர்கள் கொண்டுவந்து நம்மேல் திணித்த மனுசாஸ்திரம். இந்த நூலின் படி பிரம்மாவின் தலை, வயிறு, தொடை, கால் ஆகிய நான்கு இடங்களிலிருந்து மனிதர்கள் பிறப்பெடுக்கின்றனர். இந்த நால்வருக்குள்ளும் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு இருக்கிறது.

நிற்க.

சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு பேருந்தில் நம்மால் எப்படி ஏறி பயணம் செய்ய முடிகிறது? அந்தப் பேருந்தை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர், நம் சீட்டில் நமக்கு அருகில் நம் சட்டைப்பையில் உள்ளது என்ன என்று தெரியும் அளவிற்கு, நம் ஃபோனில் அடுத்தவர் பேசுவதைக் கேட்கும் அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும் நபர் இவர்களை எல்லாம் நமக்குத் தெரியாது. இருந்தாலும் எப்படி நம்மால் அவர்கள் அருகில் அமர்ந்து, ஏன் தூங்கி, பயணம் செய்ய முடிகிறது?

பயணத்தின்போது ஒரு ஓட்டலுக்குச் செல்கிறோம். ஏற்கனவே நிறையப்பேர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாமும் ஒரு நாற்காலியில் அமர்ந்து உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். சாப்பிட்டுவிட்டு பில் கட்டிவிட்டு வெளியே வந்துவிடுகிறோம். எவரோ சமைத்த உணவை, எவரோ வைத்து நடத்தும் உணவகத்தில், முன்பின் தெரியாத ஒருவர்முன் அமர்ந்து நாம் எப்படி சாப்பிடுகிறோம்?

20 வருடங்களாக யார், எவர் என்று தெரியாத ஒருவர் 20 வயதில் அப்படி தெரியாத ஒருவரை திருமணம் செய்து 80 வயது வரை 60 ஆண்டுகள் எப்படி இணைந்து வாழ முடிகிறது?

மனிதர்கள் பிரிந்து கிடந்தாலும் அவர்களை இணைக்கின்ற பிணைப்பு எது?

பிணைப்பு ஏற்படுவதுற்கு சமதளம் அவசியம். ஒரு மரத்துண்டை மற்றொரு மரத்துண்டோடு இணைக்க வேண்டும் என்றால் அவை இரண்டும் சம தளத்தில் இருக்க வேண்டும். ஒன்றோடொன்று பொருந்தும் தன்மை கொண்டிருக்க வேண்டும். பென்சிலும் மரத்துண்டுதான். விறகுக்கட்டையும் மரத்துண்டுதான். இரண்டையும் ஒன்றோடொன்று ஃபெவிகால் போட்டு இணைத்துவிட முடியுமா? ஒருவேளை இணைத்தாலும் அந்த இணைப்பு நீண்டதாக இருக்குமா?

கணித, இயற்பியல், வேதியியல் பாடங்களில் சமன்பாடு என்ற ஒன்று உண்டு. அதாவது அம்புக் குறிக்கு இருபக்கமும் இருக்கின்ற கூறுகள் சமமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் இந்தச் சமன் வெளிப்படையாக இருக்கும். சில நேரங்களில் மறைந்து கிடக்கும்.

மனித உறவுகளில் சில நேரங்களில் வெளிப்படையாக, சில நேரங்களில் மறைந்து கிடக்கும் சமன்பாடு அல்லது சமநிலை பற்றிப் பேசிகின்றன இன்றைய இறைவாக்கு வழிபாட்டு வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 10:25-26,34-35,44-48) விருத்தசேதனம் செய்த கிறிஸ்தவர்களுக்கு - அதாவது யூதராய் இருந்து கிறிஸ்தவர்களாக மாறிய (பேதுரு உள்பட) - ஒரு கேள்வி எழுகின்றது: 'விருத்தசேதனம் செய்யாத கிறிஸ்தவர்கள் - அதாவது, பிற இனத்தவராய் இருந்து கிறிஸ்தவர்களாய் மாறியவர்களோடு நாம் எப்படி உறவாடுவது? அவர்களைவிட நாம் மேலானவர்கள் இல்லையா?

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 யோவா 4:7-10) யோவானின் திருச்சபையில் ஒரு கேள்வி எழுகிறது: இயேசு அன்புக்கட்டளை கொடுத்துச் சென்றாரே. இந்த அன்புக்கட்டளையை நாம் எப்படி வாழ்வது? கடவுள் நம்மைவிட பெரியவர். அவரை நம்மால் அன்பு செய்ய முடியுமா? கடவுள் நம்மைவிட பெரியவர் இல்லையா?

இன்றைய மூன்றாம் வாசகத்தில் (காண். யோவா 15:9-17) தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி அவர்களோடு பந்தியில் அமர்ந்திருக்கும் இயேசு தனக்கும் தன் சீடர்களுக்கும் உள்ள உறவு தலைவர்-பணியாளர் உறவு அல்ல என்று சொல்வதோடு, இருவருக்குமான உறவு நண்பர்கள் உறவு என்கிறார். 'சீடர் குருவைவிட மேலானவர் அல்ல' (லூக் 6:40) என்று சொல்லும் இயேசுவால் எப்படி சீடர்களைத் தனக்கு இணையாக அழைக்க முடிந்தது?

ஆக,

பிற இனத்து கிறிஸ்தவர்களும் யூதர்களும் சமமா? - இது முதல் கேள்வி.

கடவுளும் மனிதர்களும் சமமா? - இது இரண்டாம் கேள்வி.

இயேசுவும் சீடர்களும் சமமா? - இது மூன்றாம் கேள்வி.

இந்த மூன்று கேள்விகளுக்கும் இன்றைய வாசகங்களே விடைகளையும் தருகின்றன. இந்த விடைகள் 'அழைத்தல்' மற்றும் 'மறுமொழி' என்ற இரண்டு நிலைகளில் உள்ளன.

1. பிறஇனத்து கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் இணைக்கும் 'அழைத்தல்' தூய ஆவி. இந்த அழைத்தலுக்கு பேதுருவும், மற்ற யூத கிறிஸ்தவர்களும் அளிக்க வேண்டிய 'மறுமொழி' எல்லாரையும் ஏற்றக்கொள்வது. இதை நாம் பேதுருவின் வார்த்தைகளில் பார்க்கிறோம். கொர்னேலியு என்ற புறவினத்து அன்பருக்கு நற்செய்தி அறிவிக்கச் செல்லும் பேதுருவின் காலடிகளில் விழுந்து பணியும் கொர்னேலியுவைத் தூக்கிவிடும் பேதுரு, 'எழுந்திடும், நானும் ஒரு மனிதன்தான்' என்கிறார். தொடர்ந்து பேதுரு பேசிக்கொண்டிருந்தபோதே தூய ஆவி புறஇனத்தார் மேல் இறங்கி வருகின்றது. இதைக் கண்ட பேதுரு அவர்களுக்கு திருமுழுக்கும் கொடுக்கின்றார். இவ்வாறாக, தூய ஆவியார் சமநிலைக்கு 'அழைக்கின்றார்.' அந்த அழைத்தலுக்கு 'மறுமொழியாக' யூதகிறிஸ்தவர்கள் பிறஇனத்து கிறிஸ்தவர்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

2. 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக' என்று தன் திருச்சபைக்கு அறிவுறுத்துகின்ற திருத்தூதர் யோவான், 'நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல. மாறாக, அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது' என்கிறார். ஆக, கடவுளையும் மனிதர்களையும் இணைக்கும் அழைத்தல் 'அன்பு.' இந்த அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. இந்த அழைத்தலுக்கு மனிதர்கள் தரவேண்டிய மறுமொழி 'பிறரன்பு.'

3. தன் சீடர்களோடு பந்தியில் அமர்ந்திருக்கும் இயேசு, 'உங்களை நான் நண்பர்கள் என்றேன்' என்கிறார். இது 'அழைத்தல்.' தொடர்ந்து, 'நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்' என்கிறார். ஆக, அவரின் அழைத்தலுக்கு ஏற்ற மறுமொழியை சீடர்கள் தந்தால்தான் நண்பர்கள் நிலையில் அவர்களால் தொடர்ந்து நிற்க முடியும்.

இயேசு நண்பர்களைப் பற்றி இங்கே பேசுகிறார்கள் என்றவுடன் இது வேற டாபிக் என நினைத்துவிட வேண்டாம். அன்பில் நிலவும் இரண்டு நிலைகளைத்தான் இங்கே சொல்கின்றார்: (அ) பணியாளர் நிலை, (ஆ) நண்பர் நிலை.

அ. பணியாளர் நிலை. இந்த நிலையில் ஒருவர் மேலிருப்பார். மற்றவர் கீழிருப்பார். மேலிருப்பவர் கொடுத்துக் கொண்டிருப்பார். கீழிருப்பவர் பெற்றுக்கொண்டிருப்பார். கீழிருப்பவர் தான் நினைப்பது போல இல்லையென்றால் மேலிருப்பவர் அவர் மேல் கோபப்படுவார். அவரைத் தனக்கு வேண்டாம் என சொல்லி விடுவார். கீழிருப்பவர் தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது. எப்போதும், 'மேலிருப்பவருக்கு இது பிடிக்குமா!' என்று நினைத்துக் கொண்டேதான் செய்ய வேண்டும். மேலிருப்பவரின் மனம் குளிருமாறே இவர் நடந்து கொள்ள வேண்டும். 'நீ எனக்கு மட்டும்தான்!' என்று மேலிருப்பவர் கீழிருப்பவரிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். 'தலைவர் செய்வது இன்னதென்று பணியாளருக்குத் தெரியாது!' என்கிறார் இயேசு. இந்த உறவில் அப்படித்தான் மேலிருப்பவர் எந்த மூடில் இருப்பார். எப்படி ஃபோன் எடுப்பார். என்ன நேரத்தில் கடிந்து கொள்வார் என்று எதுவும் கீழிருப்பவருக்குத் தெரியாது.

ஆ. நண்பர் நிலை. இந்த நிலையில் இரண்டு பேரும் ஒரே தளத்தில் இருப்பார். இருவரும் கொடுத்துக்கொள்வர். வாங்கிக்கொள்வர். என்னுடையது என் உரிமை, அவருடையது அவர் உரிமை என்று ஒருவர் மற்றவர் மேல் மதிப்பும், சுதந்திரமும் இருக்கும். 'உனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக எனக்குப் பிடித்த ஒன்றை செய்யாமல் இருக்க என்னால் முடியாது!' என்று சொல்லும் உரிமை இந்த நிலையில் உண்டு. 'நான் உனக்கு தான். நீ எனக்கு தான். ஆனால், நான் உனக்கு மட்டும் அல்ல. நீ எனக்கு மட்டும் அல்ல' என்று அடுத்தவருக்கும் இடம் கொடுத்த அரவணைத்துக்கொள்வது இந்த நிலை. நண்பர்கள் நிலையில் ஒளிவு மறைவு இருக்காது.

இவ்வாறாக, 'தூய ஆவி,' 'அன்பு,' 'நண்பர் நிலை' என்ற மூன்று இடங்களிலுமே அழைத்தல் என்பது மேலிருந்து கீழ்நோக்கியதாக இருக்கிறது. இந்த மூன்றும் மேலிருந்து கீழ்நோக்கி வரும்போது நாம் தரவேண்டிய மறுமொழியும் - 'ஏற்றுக்கொள்ளுதல்,' 'பிறரன்பு,' 'கனிதருதல்' - இருந்தால்தான் உறவின் சமநிலை கிடைக்கிறது.

உறவின் சமநிலை அடைதலை நாம் எப்படி அறிந்துகொள்வது? கனிதருதலில்.

கனி என்றால் என்ன? மரத்தின் உச்சகட்ட வளர்ச்சி தான் கனி. இலை - பூ - காய் என தொடரும் மரத்தின் பயணம் கனியில் முற்றுப்பெற்றுவிடுகிறது. கனிதான் மரத்தின் நோக்கம். ஆக, உறவில் கனி என்று சொல்லும்போது, உறவில் வளர்தல் அவசியம் - நீங்களும், நானும் அவரில்.

இறுதியாக,

'மனிதர்கள் அனைவரும் சமம்' என்ற பொய்யை நாம் நம்பினாலும், 'மனிதர்கள் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கொண்டவர்கள்' என்ற பொய்யை நம்பினாலும், ஒருவர் மற்றவரோடு நாம் கொண்டிருக்கும் சமநிலையே நம்மை வளரச் செய்கிறது.

நம்மில் குடிகொண்டிருக்கும் ஆவியும், அடுத்தவரில் குடியிருக்கும் ஆவியும் கடவுளின் ஆவியே எனில், அங்கே அன்பு சாத்தியமே. இந்த அன்பினால்தான் இயேசுவும் நம்மைத் தேர்ந்துகொண்டு நம்மேல் உரிமை கொண்டாடுகின்றார்.

ஒருவர் மற்றவர்மேல் உரிமைகொள்ளும் சமநிலையே நம் அழைத்தலும் மறுமொழியாகட்டும் - இன்றும், என்றும். இந்த மறுமொழியே நாம் பேருந்தில் பயணம் செய்யவும், ஓட்டலில் உணவருந்தவும், அருள்பணி, திருமண உறவுகளில் நிலைக்கவும் தூண்டுகிறது.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Teaching Faculty
Saint Paul's Seminary
Tiruchirappalli 620 001


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!