Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     05 மே 2018  
                                                   பாஸ்காக் காலம் 5ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் (16: 1-10)

1 பின்பு பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப்பெண். தந்தையோ கிரேக்கர்.

2 திமோத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலுமுள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர்.

3 பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச்செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில் அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர்.

4 அவர்கள் நகர் நகராகச் சென்றபோது எருசலேமிலுள்ள மூப்பரும் திருத்தூதரும் செய்த தீர்மானங்களை அவர்களிடம் கொடுத்துக் கடைப்பிடிக்குமாறு கூறினார்.

5 இவ்வாறு திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன.

6 பின்பு ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர்.

7 அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை.

8 எனவே அவாகள் மீசியா வழியாகச் சென்று துரொவா நகரை அடைந்தனர்.

9 பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, "நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்" என்று வேண்டினார்.

10 இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 1)
=================================================================================
 பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

அல்லது: அல்லேலூயா.

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!
-பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
-பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (கொலோ 3: 1)

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (15: 18-21)

18 "உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

19 நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.

20 பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்!

21 என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"இயேசு சீடர்களை நோக்கி, நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். 
நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.
பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் 
கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என்றார் (யோவான் 15:19-20)

-- இயேசு தமக்கும் தம்மை அனுப்பிய தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு பற்றிப் பேசுகிறார். பிறகு தம்மையும் தம்மை அனுப்பியவரையும் அறிந்து அன்புசெய்பவர்களும் அந்த உறவில் பங்கேற்பது பற்றிப் பேசுகிறார். இவ்வாறு தந்தை - இயேசு - சீடர்குழு ஆகிய மூவருக்கும் இடையே ஆழ்ந்த அன்புறவு நிலவுகிறது. இவ்வுறவு பற்றிப் பேசிய பிறகு இயேசு "உலகம்" சீடர்களை வெறுக்கும் என்பதையும் அறிவிக்கிறார். இங்கே உலகம் எனக் குறிக்கப்படுவது கடவுள் அன்போடு படைத்த எழில்மிகு இயற்கை உலகமோ, அதில் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டு வாழ்கின்ற மனிதரோ அல்ல. மாறாக, "உலகம்" என்னும் சொல்லுக்கு யோவான் நற்செய்தியில் இன்னொரு எதிர்மறையான பொருளும் உண்டு. அதாவது, இயேசு கடவுளிடமிருந்து வருகிறார் என்னும் உண்மையை ஏற்க மறுக்கின்ற சக்திகளையே "உலகம்" என யோவான் குறிப்பிடுகிறார். இந்த "உலகம்" கடவுளின் திட்டத்தை ஏற்க மறுக்கிறது. கடவுளையும் அவரால் அனுப்பப்பட்டு நம்மை மீட்ட இயேசுவையும் ஏற்கத் தயங்குகிறது.

-- கடவுளின் திட்டத்தை எதிர்க்கிற "உலகம்" இயேசுவின் சீடர்களையும் எதிர்த்து நிற்கும். ஆனால் இயேசு தம் சீடர்களை நோக்கி "அஞ்சாதீர்கள்" என ஆறுதல் மொழி கூறுகின்றார். தலைவராகிய இயேசுவையே எதிர்த்தவர்கள் இயேசுவின் சீடர்களையும் எதிர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என்று கூறி இயேசு தம் சீடருக்கு ஊக்கமூட்டுகிறார். அன்று சீடர்களுக்குக் கூறப்பட்டது இன்றைய திருச்சபைக்கும் பொருந்தும். இயேசுவை நம்புவோர் பல தருணங்களில் துன்பங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் தம்மை எதிர்க்கின்ற சக்திகளைக் கண்டு கிறிஸ்தவ நம்பிக்கையுடையோர் அஞ்ச வேண்டியதில்லை. அவர்களுக்குத் துணையாக இயேசுவும் அவர் அனுப்புகின்ற தூய ஆவியும் இருப்பார்கள். எனவே நாம் நம்பிக்கை இழக்கவேண்டியதில்லை.



---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"உலகு உங்களை வெறுக்கிறது என்றால், அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்"

சில ஆண்டுகளுக்கு முன்பாக, மும்பை பாந்த்ராவில் இருந்த ஒரு பேக்கரி வாசலில் படுத்திருந்த ஏழைகள் 5 பேர்மீது ஹிந்தி நடிகர் சல்மான் கான் தன்னுடைய வாகனத்தை ஏற்றியதில், ஒருவர் இறக்க, மீதி நான்கு பலத்த காயமடைந்தனர். இச்செய்தி பத்திரிக்கையில் அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதை கண்ணால் பார்த்த ரவீந்திர பாடில் என்ற மும்பையின் கடைநிலை காவலர் நீதிமன்றத்தில் சல்மான்கான் தான் வண்டியை ஓட்டினார், அவர் தான் இடித்தார் என்று ஆணித்தரமாய் சாட்சிசொல்லி, எப்ஐரும் கைப்பட போட. சல்மானால் வழக்கிலிருந்து மீண்டுவரவே முடியவில்லை. இதற்கு நடுவில், பாடில் இப்படி சொன்னது காவல்துறை மேல் அதிகாரிகளுக்கு பிடிக்கவே இல்லை. எனவே அவர்கள் தினம் தினம் அவருடைய வீட்டுக்கு வந்து, தொல்லை கொடுத்து, "உன்னுடைய சாட்சியை வாபஸ் வாங்கு" என்று மிரட்டி இன்னும் குடும்பத்துக்கும் தொல்லை கொடுத்தனர். இதைவிட, சல்மான் தன் நிபுணத்துவ வக்கீல்களால் ஒரு சாதாரண காவலரை கோர்ட்டில் குடைய, வெறுத்துப்போன பாடில், ஒரு நாள் வீட்டை விட்டு கிளம்பி காணாமல் போனார்.

காணாமல் போன பாட்டில் மும்பைக்கு 28 கிலோ மீட்டர் அருகில் உள்ள, மஹாபலேஷவர் என்ற சிறிய மலை ஊரில் தங்கிக்கொண்டு, வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு இருந்தார். இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப்போனது. இன்னொரு பக்கமோ சல்மானுக்கு எதிராய் சாட்சி சொன்ன பலரும் பல்டியடிக்க, ஏன் கார் ஏறிய நான்கு பேருமே கூட ஒரு கட்டத்தில் சல்மானா.? இவர் மாதிரி இல்லையே மேல்இடித்த காரின் டிரைவர் என்று பல்டியடிக்க, பாடில் மட்டும் தன் சாட்சியில் பிடிவாதமாய் இருக்க, மும்பை போலிசோ. பாடில் காணாமல் போனதோடு, லீவ் கூட போடாமல் போனார் என்று, அவரை, வேலையில் இருந்து தூக்கி, இந்த காணமல் போன சாட்சியை காவலில் வைக்க ஆவன செய்தது.

இதனால் சாட்சி மற்றும் எப் ஐ ஆர் போட்ட நேர்மையான போலிஸ்காரர் திரு. ரவீந்தர பாடில் நீதிபதியின் ஆணைப்படி சிறப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, ஆர்தர் ரோடு சிறையில் கிரிமினல்களோடு அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட கொஞ்ச நாளிலேயே அவருக்கு டிபி வியாதி வந்தது. ஓரிரு ஆண்டுகள் கழித்து அவர் தனது வீட்டுக்கு வந்தபோது அவருடைய குடும்பம் அவரைக் கண்டுகொள்ளவில்லை. கடைசியில் யாரும் அவரைக் கவனிக்காமல் போகவே, அவர் ஒரு பிச்சைக்காரரைப் போன்று செத்துப் போனார்.

நேர்மையாய் நடப்போரை இந்த சமூகம் எப்படியெல்லாம் நடத்துகின்றது என்பதற்கு ரவீந்தரப் பாடிலின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. பாடில் மட்டும் கிடையாது, நேர்மையாய், உண்மையாய் நடக்கின்ற பலரும் இதுபோன்ற அவமானகளுக்கும் அவமதிப்புகளுக்கும் உள்ளாகினார்கள் என்பது உண்மை. இப்படி நேர்மையாய், உண்மையாய் நடந்து, அதன்மூலம் பல்வேறு பிரச்சனைகளும் துன்பங்களையும் சந்திக்கின்றவர்களுக்கு இன்றைய இறைவார்த்தை என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "உலகு உங்களை வெறுக்கிறது என்றால், அது உங்களை வெறுக்குமுன்னே என்னையும் வெறுத்தது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்" என்கின்றார். இயேசுவையும் இயேசுவைப் போன்று நேர்மையாய் உண்மையாய் நடக்கின்ற ரவீந்தர பாடில் போன்றவர்களையும் இந்த உலகம் வெறுக்கக் காரணம், இவர்களுடைய வாழ்வெல்லாம் இந்த உலகத்தோடு ஒத்து இருக்கவில்லை என்பதே ஆகும். இவர்கள் இப்படி இருப்பதால் தங்களுடைய தீச்செயல் யாவும் வெளியாகிவிடும் என்பதாலே, உலகத்தோடு ஒத்து வாழக்கூடியவர்கள் இவர்களை எதிர்கின்றார்கள் (யோவா 3:20). இத்தகைய சூழலில் உலகம் வெறுக்கிறது என்பதற்காக உலகோடு ஒத்துவாழ்வது இயேசுவின் வழியில் நடப்பவருக்கு உகந்ததாக இராது. எனவே நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் இயேசுவுக்கு ஏற்ற வாழக்கை வாழவேண்டும்.

தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுவார், "உலகத்தோடு நட்பு கொள்வது கடவுளைப் பகைப்பது ஆகும்" என்று. (4:4). ஆமாம், என்றைக்கு நாம் அடுத்தவர் என்னைப் பற்றி என்ன நினைப்போரோ என நினைத்துக்கொண்டு உலகத்தோடு ஒட்டி வாழ்ந்தோம் எனில், நாம் இறைவனைப் பகைப்பவர்களாகின்றோம் என்பதே உண்மை.

ஆகவே, எல்லாச் சூழ்நிலையும் இந்த உலகப்படி அல்ல, இயேசுவின் வழியில் நடப்போம், எதிர்வரும் சவால்களை, அவமானங்களை துணிவோடு எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இயேசுவின் சீடர்களை வெறுக்கும் உலகம்

அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் வாழ்ந்த காலத்தில் எட்வின் ஸ்டாண்டன் (Edwin Stanton) என்றொரு மனிதர் இருந்தார். அவருடைய பிரதான வேலையே ஆபிரகாம் லிங்கனைக் கிண்டலும் கேலியும் செய்வதுதான்.

ஒரு சமயம் அவர் ஆபிரகாம் லிங்கனின் தோற்றத்தைப் பார்த்து, கொரிலா குரங்கு (Original Corila) என்றும் கொரிலா குரங்கைப் பார்க்க விரும்புகிறவர்கள் ஆப்ரிக்கா கண்டத்திற்குப் போகவேண்டிய அவசியமே இல்லை, அமெரிக்காவிலே அதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று விமர்சித்தார். இதைக் குறித்து ஆபிரகாம் லிங்கன் சிறுதும் கவலைப்படவில்லை, மாறாக அவரை உள்ளன்போடு நேசித்தார், அது மட்டுமல்லாமல் அவருக்கு நாட்டின் இராணுவத் தளபதி பொறுப்பையும் கொடுத்தார்.

இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு ஆபிரகாம் லிங்கன் எதிரிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய உடலானது மக்களுடைய இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த எட்வின் ஸ்டாண்டன் ஆபிரகாம் லிங்கனின் இறந்த உடலைக் கட்டியணைத்துக்கொண்டு கதறி அழுதார். அதன்பின்னர் அவர் மக்களைப் பார்த்துச் சொன்னார், "ஆபிரகாம் லிங்கன் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஆளுமை. அவருடைய பிரிவு அமெரிக்காவிற்கு மிகப்பெரிய இழப்பு".

தன்னை வெறுத்து ஒதுக்கியவரையே வியந்து பாராட்டும் அளவுக்கு மாற்றியதுதான் ஆபிரகாம் லிங்கனின் தனித்தன்மை. இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்மை வெறுத்து ஒதுக்குபவர்களும் வியந்து பார்க்கும் அளவுக்கு வாழ்ந்து காட்டுவதுதான் இன்றைய இறைவார்த்தை நமக்குத் தரும் செய்தியாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில், "உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல, எனவே உலகு உங்களை வெறுக்கிறது" என்கிறார். இயேசுவின் வார்த்தைகளில் பொதிந்துள்ள உண்மை என்ன?, அதை எப்படிப் புரிந்துகொள்வது? என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

யோவான் தன்னுடைய நற்செய்தியில் உலகை இரண்டு விதமாகப் பிரித்துப் பேசுவார். ஒன்று கடவுளைச் சார்ந்தோரது உலகம். இன்னொன்று கடவுளைச் சாராவரது உலகம். கடவுளைச் சார்ந்தோரை/ உண்மையின் வழியில் நடப்பவர்களை எப்போதுமே கடவுளைச் சாராவரது உலகம் வெறுத்து ஒதுக்கும். அந்த விதத்தில் இயேசுவின் சீடர்களை அதாவது கடவுளைச் சார்ந்தவர்களை, கடவுளைச் சாராதவர் வெறுத்து ஒதுக்கலாம். அதைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்பதே இயேசு நமக்குச் சொல்லும் செய்தியாக இருகின்றது.

யோவான் நற்செய்தி எழுதப்பட்ட காலத்தில் கிறிஸ்தவர்களை உரோமையர்களும் யூதர்களும் அதிகமாக வெறுத்தார்கள். உரோமையர்கள் கிறிஸ்தவர்களை வெறுத்ததற்குக் காரணம், கிறிஸ்தவர்கள் சீசரை ஆண்டவர் என்று அழைக்காமல், கிறிஸ்து ஒருவரை மட்டுமே ஆண்டவர் இயேசு அழைத்ததால் அவர்கள் கிறிஸ்தவர்களை வெறுத்தார்கள், அவர்களைப் பலவாறாகத் துன்புறுத்தினார்கள்.

யூதர்கள் கிறிஸ்தவர்களை வெறுத்ததற்குக் காரணம், கிறிஸ்தவர்கள் மற்ற மக்களைப் போன்று இல்லை, அவர்களுடைய வாழ்க்கை இவ்வுலகப் போக்கின்படி இல்லாமல், மறுவுலகம் தொடர்பாகவே இருந்தது, மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் அவர்கள் ஒன்றாகக் கூடி அப்பம் பிட்கின்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஒன்றித்து வாழ்ந்து வந்தார்கள். இவையெல்லாம் யூதர்கள் கிறிஸ்தவர்களை வெறுத்து ஒதுக்குவதற்கான காரணிகளாக இருந்ததன. இவற்றையெல்லாம் பின்புலமாக வைத்துக்கொண்டு இயேசுவின் வார்த்தைகளை மறுவாசிப்பு செய்தோம் என்றால் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

சீடர்கள்/ தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் உலகப் போக்கின்படி வாழ்ந்திருந்தால் உலகம் அவர்களை அன்பு செய்திருக்கும், ஆனால் அவர்கள் உலகப் போக்கின்படி வாழாமல், ஆண்டவரின் வழிகளில் நடந்தார்கள். அதனால் அவர்கள் உலகத்தின் எதிர்ப்பை சம்பாதித்தார்கள். இப்படி கிறிஸ்தவர்கள் உலகத்தின் எதிர்ப்பை சம்பாதித்தளும், ஆண்டவரின் அன்பைப் பெற்றார்களே அதுதான் பாராட்டுக்குரிய ஒன்றாக இருக்கின்றது.

இன்றைக்கு நமக்கும் உலகப் போக்கின்படியான வாழ்க்கை வாழ சோதனைகள் வரலாம், அத்தகைய தருணங்களில் நாம் நமக்கு வருகின்ற சோதனைகளை முறியடித்து, ஆண்டவர் இயேசுவின் வழியில் நடந்தோமேன்றால், நாம் ஆண்டவரின் அன்புப் பிள்ளைகளாக மாறுவோம் என்பது உறுதி.

எனவே, இந்த உலகம் நம்மைப் பாராட்டவேண்டும், புகழவேண்டும் என்று நினைக்காமல், மறுவுலகில் ஆண்டவர் நம்மைப் பாராட்டவேண்டும் என்பதற்கு நம்முடைய வாழ்க்கையை இறைவனுக்கு உகந்ததாக மாற்றிக்கொள்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!