Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     04 மே 2018  
                                                   பாஸ்காக் காலம் 5ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 இன்றியமையாதவற்றைத் தவிர வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தீர்மானித்தோம்.

*திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 22-31 *

அந்நாள்களில் திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள்.

பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தில், "திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம்.

எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை.

எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள்.

எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள். இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை,

இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்'' என்று எழுதியிருந்தார்கள்.

யூதாவும் சீலாவும் விடை பெற்று அந்தியோக்கியா வந்தனர். அங்கு மக்களைக் கூட்டிக் கடிதத்தைக் கொடுத்தனர். அதை வாசித்ததும் அவர்கள் ஊக்கமடைந்து மகிழ்ச்சியுற்றார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  திபா 57: 7-8. 9-11 (பல்லவி: 9a)
=================================================================================
பல்லவி: என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன். அல்லது: அல்லேலூயா.

7 என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 8 என் நெஞ்சே, விழித்தெழு! வீணையே, யாழே, விழித்தெழுங்கள்; வைகறையை நான் விழித்தெழச் செய்வேன். பல்லவி

9 என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்; எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 10 ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப்பிறழாமை முகில்களைத் தொடுகின்றது! 11 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக; பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 15b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில், என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 12-17

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன்.

ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்;

ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்.

ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை"

அன்னை தெரசா நோபல் பரிசு பெற்றிருந்த தருணம். அப்போது அவரைச் சந்தித்த பத்திரையாளர் ஒருவர் அவரிடம், "அன்னையே உலகில் நடைபெறும் வன்முறைகள், போர்கள், சண்டைச் சச்சரவுகள் இவற்றுக்கெல்லாம் நிரந்ததத் தீர்வு என்ன?" என்று கேட்டார். அதற்கு அன்னை தெரசா சிறிதும் தாமதியாமல், "அன்பு" என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு நகர்ந்து சென்றார்.

ஆம், அன்பு ஒன்றும்தான் இந்த உலகத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கும் சண்டைச் சச்சரவுகளுக்குமான ஒரு நிரந்தரத் தீர்வு.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நான் உங்களிடத்தில் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்கவேண்டும் என்பதே என் கட்டளை" என்கின்றார். இதனை எப்படிப் புரிந்துகொள்வதற்கு என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

முதலில் இயேசு நம்மிடத்தில் எத்தகைய அன்பு கொண்டிருக்கின்றார் என்று சிந்தித்துப் பார்ப்போம். இந்த உலகத்தில் பலர் பிரதிபலன் பார்த்தே அன்பு செய்வதைப் பார்க்கின்றோம். 'நான் ஒன்று உனக்குக் கொடுத்தால், நீ பதிலுக்கு ஏதாவது எனக்குக் கொடுக்கவேண்டும் என்றும், நான் உன்னை அன்பு செய்தால் நீ என்னை பதிலுக்கு அன்பு செய்யவேண்டும்' என்று எதிர்பார்த்து அன்பு செய்வதைப் பார்க்கின்றோம். ஆனால், இயேசுவின் அன்பில் எந்தவொரு பிரதிபலன் இல்லை, எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை, நாம் பாவிகளாக இருந்தபோதும், அவருக்கு ஒன்றும் நம்மால் கொடுக்க முடியாத நிலையிலும், அவர் நம்மை முழுமையாய் அன்புசெய்கின்றார். அதுதான் இயேசுவின் எதிர்பார்ப்பு இல்லா, பிரதிபலன் பார்க்காத அன்பு.

அடுத்ததாக இயேசுவின் அன்பினை தியாக அன்பு என்று சொல்லவேண்டும். எப்படி என்றால், நாம் அனைவரும் வாழ்வு பெறுவதற்காக தன்னையே கையளிக்கின்றார். இத்தகைய அன்பினை இன்றைக்கு வேறு யாரிடத்திலும் பார்க்கமுடியாது. இயேசு ஒருவர்தான் தன்னுடைய உயிரை நமக்காகத் தந்தார். நிறைவாக இயேசுவின் அன்பினை மன்னிக்கும் அன்பு என்று சொல்லவேண்டும். நாம் எவ்வளவுதான் தவறு செய்தாலும் அதனை மன்னித்து, நம்மீது அன்பினைப் பொழிபவராக இருக்கின்றார். இப்படி யாரும் இயேசுவைப் போன்று நம்மை மன்னித்ததும் கிடையாது, அன்பு செய்வதும் கிடையாது.

ஆகவே, இயேசு நம்மை எந்தவொரு பிரதிபலன் பார்க்காமல், தியாக உள்ளத்தோடு, மன்னித்து அன்பு செய்தார் என்று சொல்லவேண்டும். அவரைப் போன்று நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவேண்டும் என்பதுதான் ஆண்டவர் இயேசு நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

இங்கே 'மற்றவர்' என்று இயேசு சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளக்கூடிய உறவினை வைத்து அவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அன்பர்கள். இவர்கள் எப்போதும் நம்மீது அன்பு செலுத்தக்கூடியவர்கள். இரண்டு அயலார்கள், இப்படிப்பட்டவர்கள் தேவையில் இருக்கக்கூடியவர்கள். மூன்று பகைவர்கள், இவர்கள் நமக்காக எதிராக இருப்பவர்கள். இம்மூன்று பிரிவினரும் மற்றவரில் அடங்குவர். ஆகவே, மற்றவரை அன்பு செய்யவேண்டும் என்று சொன்னால், இம்மூன்று பிரிவினரையும் இயேசுவைப் போன்று அன்பு செய்யவேண்டும் என்பதுதான் நாம் நம்முடைய மனதில் கொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

பல நேரங்களில் நாம் இயேசு நம்மை அன்பு செய்வதுபோல் மற்றவரை அன்பு செய்வது கிடையாது. அதனாலே சமூகத்தில் பிளவுகளும் பிரச்சனைகளும் சண்டைச் சச்சரவுகளும் அதிகமாக ஏற்படுகின்றன. இன்றைய சமூகத்தை அதிகமாக வாட்டிக்கொண்டிருக்கின்ற முக்கியமான பிரச்சனை சாதி. நான் மற்றவனை விட உயர்ந்தவன், அவன் என்னைவிடக் கீழானவன் என்ற எண்ணமும் அதன் வழியாகப் பிறப்பெடுக்கின்ற அடக்குமுறையும்தான் இன்றைக்கு பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. அடுத்தவர் என்னுடைய சகோதரர், நண்பர் என்ற சிந்தனையோடு வாழ்ந்தோம் என்றால், அடுத்தவரை ஆண்டவர் இயேசு நம்மை அன்பு செய்ததுபோன்று அன்பு செய்தோம் என்றால், நம்மிடத்தில் பிரச்சனைகளுக்கு வழியில்லை என்பது நிதர்சனமான உண்மை.

ஆகவே, இயேசு நம்மை அன்பு செய்ததைப் போன்று ஒருவர் மற்றவரை அன்பு செய்வோம். நம்மிடத்தில் இருக்கின்ற பிரிவினைகள் பிணக்குகள் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்போம். இயேசுவின் அன்பு எல்லாருக்கும் கிடைக்கச் செய்து புது உலகம் படைத்திடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

நான் உங்களை நண்பர்கள் என்றேன்.


1852 ஆம் ஆண்டு பெர்ஹன்ஹெட் (Burhenhead) என்கிற பிரிட்டிஷ் கப்பலானது 652 பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலில் பயணமானது. எதிர்பாராத விதமாக அந்தக் கப்பல் பனிப் பாறையின்மீது மேத, அது உடைந்து கடலில் மூழ்கத் தொடங்கியது.

அப்போது அந்தக் கப்பலில் இருந்த கப்பல் தளபதி சிட்னி செட்டர் (Sydney Setter) என்பவர் கப்பலில் பயணம் செய்த பயணிகளுக்கு ஓர் அறிவிப்பை விடுத்தார்: எதிர்ப்பாராதவிதமாக நாம் பயணம் செய்துகொண்டிருக்கும் கப்பலானது பனிப்பாறையின்மீது மோதி, உடைந்துபோய்விட்டது. இதைக் குறித்து யாரும் பதற்றமடைய வேண்டாம், இந்தக் கப்பலில் அறுபது அறுபது பேரை ஏற்றிச்செல்லக்கூடிய மூன்று லைப்போட் இருக்கின்றது. அதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஏறிச் செல்வார்கள். ஏனையோர் உடைந்த கப்பலினுடைய மரக்கட்டைகளை பிடித்துக்கொண்டு எப்படியாவது தப்பித்துப் போய்விடுங்கள்.

சிட்னி செட்டரின் அறிவிப்பைத் தொடர்ந்து மூன்று லைப் போட்டுகளில் குழந்தைகளும் பெண்களும் ஏறிக்கொண்டார்கள். ஏனையோரோ கப்பலின் உடைந்த துண்டுகளைப் பிடித்துக்கொண்டு தப்பித்துச் சென்றார்கள். எல்லாரும் கப்பலிருந்து வெளியேறிய பின்புதான், சிட்னி செட்டர் கப்பலிருந்து குதித்து, அருகே கிடந்த கப்பலின் உடைந்த ஒரு கட்டையைப் பிடித்துக்கொண்டு, அப்படியே நீந்தி கரையை நோக்கிப் புறப்பட்டார்.

அவ்வாறு அவர் நீந்திச் சென்றுகொண்டிருக்கும்போது இரண்டு பயணிகள் நீந்திச் செல்வதற்கு மரக்கட்டைகள் எதுவும் கிடைக்காமல் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்கும்போது அவர்கள் இருவரையும் தான் நீந்திச் செல்லப் பயன்படுத்தும் கட்டையைப் பயன்படுத்திக் கொள்ள அழைத்தார். அவரின் அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும் அங்கு வந்து, அவர் நீந்திச் செல்லப் பயன்படுத்திய கட்டையைப் பிடித்துக்கொண்டு கரையை நோக்கி நீந்திச் சென்றார்கள். ஆனால் துரதிஸ்டம் என்னவென்றால், அந்தக் கட்டியானது மூன்று பேர் பிடித்துக்கொண்டு நீந்திச் செல்லும் அளவுக்கு பெரிதாக இல்லை. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த சிட்னி செட்டர் மற்ற இருவரும் அந்தக் கட்டியைப் பயன்படுத்திக்கொண்டு உயிர்பிழைக்கட்டும், தன்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை என்று அவர்களுக்கு இடம் கொடுத்து, அனுப்பி வைத்தார்.

சிறிதுநேரத்திலே நீந்துவதற்கு உடலில் வலுவில்லாமல் அப்படியே கடலில் மூழ்கி இறந்து போனார். சிட்னி செட்டர் நினைத்திருந்தால் லைப்போட்டைப் பயன்படுத்தியோ அல்லது கையில் கிடைத்த மரக்கட்டையைப் பயன்படுத்தியோ உயிர்பிழைத்திருக்கலாம், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக மற்றவர் உயிர்பிழைக்கட்டும் என்று தன்னுடைய உயிரையே தியாகமாகத் தந்தார்.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுப்பதாய் இருக்கின்றது சிட்னி செட்டர் என்ற அந்தக் கப்பல் தளபதியின் வாழ்க்கை.

ஆண்டவர் இயேசு இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதற்கு முன்பாக சீடர்களுக்குப் பல அறிவுரைகளைத் தருகிறார். அதில் ஓர் அறிவுரைதான் மேலே சொன்னதாகும். இயேசு இத்தகைய வார்த்தைகளைச் சொன்னதோடு மட்டுமல்லாமல், அதனைத் தன்னுடைய வாழ்வில் வாழ்ந்தும் காட்டினார். ஆம், ஆண்டவர் இயேசு நமக்காகத் (நண்பர்களுக்காக) தன்னுடைய இன்னுயிரையே தியாகமாகத் தந்தார்.

இங்கே நாம் இன்னொரு செய்தியையும் புரிந்துகொள்ளவேண்டும். அது யாதெனில் இயேசு தன்னுடைய சீடர்களை பணியாளர்கள் என்று அழைக்காமல் நண்பர்கள் என்று அழைப்பது. "இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன். ஏனெனில், தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்" என்று ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில் கூறுகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் மிகவும் புரட்சிகர, வித்தியாசமான வார்த்தைகள் என்று சொல்லலாம். ஏனென்றால் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இறைப்பணியைச் செய்து வந்த மோசே, யோசுவா, தாவிது அரசன் எல்லாரும் தங்களைப் பணியாளர்கள் என்றுதான் அழைத்துக்கொண்டார்கள். அப்படியிருக்கும்போது இயேசு தன்னுடைய சீடர்களை (ஒருவிதத்தில் பணியாளர்கள்தான்) பணியாளர்கள் என்று அழைக்காமல் நண்பர்கள் என்று அழைத்து, அவர்களுக்கு தந்தைக் கடவுளிடமிருந்து தான் கேட்டறிந்தது அனைத்தையும் கற்றுத் தருகின்றார் என்றால் அது மிகப்பெரிய பேறுதான்.

இயேசு தன்னுடைய சீடர்களை மட்டுமல்ல, நம்மையும் தன்னுடைய நண்பர்கள் என்று அழைத்து, நமக்காகத் தன்னுடைய உயிரையே தந்திருக்கின்றார். எனவே, அவருடைய பேரன்பை உணர்ந்தவர்களாய், அவரைப் போன்று நாமும் நம்மோடு வாழக்கூடியவர்களுக்கு நம்மையே தருவதும்தான் உண்மையான அன்பாக இருக்க முடியும்.

எனவே, இயேசுவைப் போன்று பிறருக்காக, நண்பர்களுக்காக நம்முடைய உயிரையும் தர முன்வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!