Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                                                       மே 01 - தொழிலாளர் புனித யோசேப்பு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் (1: 26 - 2: 3)

கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார்.

அப்பொழுது கடவுள், "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.

விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.

கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

அல்லது

அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல, ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் (3: 14-15,17,23-24)

சகோதரர் சகோதரிகளே, அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.

எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல, ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருளுவார் என்பது தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 90: 2. 3-4. 12-13. 14,16 (பல்லவி: 17c)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! அல்லது: அல்லேலூயா.

2 மலைகள் தோன்றும் முன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்கும் முன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! பல்லவி 3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்.
4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.
-பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.
-பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (திபா 68: 19)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இவர் தச்சருடைய மகன் அல்லவா?

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (13: 54-58)

அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

அவர்கள், "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவை எல்லாம் எங்கிருந்து வந்தன?" என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களிடம், "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

இவன் தச்சனின் மகன் தானே!

இந்த அலட்சிய மொழிக்கு தொழில் தான் காரணமா?

எந்த தொழிலையும் அலட்சியப்படுத்துவது என்பது அழகாகுமா?

அந்த அந்த தொழிலை செய்து பார்த்தால் தான் அதன் பாரம் தெரியும்.

எந்த நல்ல தொழிலுமே வாழ்வுக்கு அவசியமானதே.

அதனையோ, அதனை செய்வோரையோ அலட்சியப்படுத்துவது என்பது மனிதாபிமானத்திற்கு எதிரானதே.

சில தொழில்களை மிக முக்கியமானது என்று சொல்லி மற்ற தொழிலை அலட்சியப்படுத்தும் போது, இன்றைக்கு விவசாய தொழிலுக்கு ஆட்கள் இல்லை. யாரும் மிகவெ விருப்பத்துடனே வருவதும் இல்லை. நான் ஒரு விவசாயின் மகன் என்று சொல்ல வெட்கப்படுகின்ற பிள்ளைகள், இன்றைக்கு எங்க அப்பா பைனான்ஸ் நடத்துகிறார் என்று சொல்ல மகிழ்ச்சியடைகிறார்கள்.

உண்மையென்ன? வட்டிக்கு பணம் கொடுத்து, பிறரை சுரண்டாதே என்கிற வேதம் சொல்லுகின்றது, சீராக் 07: 15 கடும் உழிப்பையும் உழவுத் தொழிலையும் வெறுக்காதே. இவை உன்னத இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை.

மனித சமூகத்திற்கான எல்லா தொழிலையும், அதனை செய்வோரையும் உயர்வாக, சமமாக மதிப்போம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர்:

ஏழையாக பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்!

துன்பத்தில் துவண்டாலும் தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்!

கஷ்டங்களுக்கு ம...த்தியிலும் கண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்!

இவ்வாறு வாழ்ந்தவர் யார் தெரியமா? அவரே நமது புனித சூசையப்பர். இன்று நம் தாய் திருச்சபையானது தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரை நினைவு கூர்கின்றது. ஒருவர் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள தினம் தினம் தம்தம் தகுதிக்கும், அறிவுத்திறனுக்கும் உடல் வலிமைக்கும் ஏற்ப, உழைக்கும் கரங்களை போற்றும் நாள் இந்நாள். இறைவனின் படைப்புத் தொழிலின் பங்காளிகளான தொழிலாளர்களை கரம் குவித்து வணங்கி வாழ்ந்திடும் நன்னாள் இன்று. இந்த விழா எவ்வாறு தோன்றியது.

உழைப்பை பரிசுத்தபடுத்தவும், உழைக்கிறவர்களுக்கு ஒரு மேல் வரிச்சட்டத்தை கொடுக்கவும் நம் அனைவருக்கும் ஒரு பாதுகாவலரை கொடுக்கும்படியும் 12ஆம் பத்திநாதர் 1955ல் இவ்விழாவை ஏற்படுத்தினார். மேலும் புனித சூசையப்பர் திருமறையில் "சான்றோர்" என கெளரவப்படுத்தப்படுவதுடன், தொழிலாளர்களின் பாதுகாவலராகவும், கல்விக்கும் கற்புக்கும் பாதுகாவலராகவும் விளங்குகிறார். அத்துடன் 23ம் அருளப்பர் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை புனித சூசையப்பரின் பாதுகாப்பில் வைத்திருப்பதாக உலகிற்கு அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சூசையப்பர்?

மரியாளின் கணவர் சூசையப்பர். அவர் ஒரு நேர்மையாளர், நீதிமான், அயராது உழைப்பவர். (மத். 1:19)

தாவீதின் வழிமரபினர்தான் புனித சூசையப்பர். (லூக் 2:4)

இயேசு யோசேப்பின் மகன். இவர் யேசுவின் வளர்ப்புத் தந்தையாக இருந்தார். (அருளப்பர் 1:45, 6:42)

கன்னி மரியாளின் கணவரும் இயேசுவின் வளர்ப்பு தந்தையுமான புனித சூசையப்பரைப் பற்றி விவிலியம் மிகச் சுருக்கமாகவே எடுத்தியம்புகிறது. நீதிமான் என்ற வார்த்தை அவர் கடவுளுக்கு மிகவும் பணிந்து நடப்பவர் எனக் காட்டுகிறது. தச்சுத் தொழில் செய்து, தந்தைக்குரிய பொறுப்பேற்று, கணவருக்குரிய கடமைகளை நிறைவேற்றி குடும்பத்தை நன் முறையில் நடத்தினார். கன்னிமரியின் பேறுகாலத்திற்கு சத்திரம் தேடி அலைந்த போதும், குழந்தையை கொடுங்கோலன் ஏரோதுவின் பிடியிலிருந்து விடுவிக்க எகிப்துக்கு ஓடிச் சென்ற போதும் பல இன்னல்களை தாங்கிக் கொண்டார். இதன் வழியாக யேசுவின் மீட்புப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

இன்றைய முதல் வாசகத்திலே கடவுள் முதல் ஆறு நாட்களில் உலகைப் படைத்து விட்டு ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்று வாசிக்கிறோம். மேலும் கடவுள் மனிதனை தமது சாயலாக படைத்தார். ஆணும் பெண்ணுமாக படைததார். ஆணும் பெண்ணும் இறைவனது படைப்பு பணியிலே சமமாக பங்கேற்கிறார்கள். இன்றைய சூழலில் ஆண்கள் அலுவலகத்தில் 8 மணிநேரம் வேலை செய்தாலும் பெண்கள் வீடுகளில் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். உழைத்து, உழைத்து சோர்ந்து போகிறார்கள். இன்றைய சூழலில் நாம், அப்பா ஆசிரியராக இருந்தால் வாத்தியார் மகன் என்றும் அரசியல் வாதியாக இருந்தால் ஆடுயு மகன் என்றும் மருத்துவராக இருந்தால் டாக்டர் மகன் என்றும் அவர்கள் செய்யும் தொழிலை கொண்டு பிறரை நாம் இனம் கண்டு கொள்கிறோம்.

இன்றைய நற்செய்தியில் கூட இயேசுவை, அவரது வளர்ப்பு தந்தையாகிய சூசையின் தச்சுத் தொழிலை கொண்டே இனம் கண்ட மக்களைப் பற்றி மத்தேயு எழுதிய நற்செய்தி குறிப்பிடுகிறது. சூசையப்பரின் தொழில் இன்றைய கம்பியூட்டர் உலகிலே மிகச் சாதரணமாகப் பார்க்கப்படும் தச்சுத்தொழில். அவர் ஒரு கூலித் தொழிலாளி. ஆனால் அன்று அது மேன்மையாக கருதப்பட்டது. உடல் உழைப்புக்கு மாண்பும், மதிப்பும் இருந்தன. ஆனால் இன்றோ சேற்றில் இறங்கி உழைப்பவனும், உலைகளத்தில் நெருப்பில் வெந்து சம்மட்டி அடிப்பவனும், சாக்கடையை சுத்தம் செய்பவனும், வேகாத வெயிலிலே பாரவண்டி இழுப்பவனும், யுஃஉ அறையில் வேலை செய்பவர்களுக்கு இழுக்கானவர்கள், மட்டமானவர்கள் என கருதுகின்றனர்.

மாறாக செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமைதான் நம் செல்வம், என்ற மனநிலை வேண்டும். தொழிலை இழிவாக கருதாமல் தொழில் செய்வோரின் நேர்மை, அதை செய்யும் நேர்த்தி மேலும் அவர்கள் அளிக்கும் உழைப்பையும் போற்றிட வேண்டும். மட்டமான தொழில்கள் எனப்படும் வேலைகளும் செய்யப்பட்டால்தான் படித்த, புத்தி கூர்மையுள்ள தொழில் செய்வோர்களால் முழுமையாக செயல்பட முடியும். உழவன் சேற்றிலே கால் வைத்தால்தான் நாம் சோற்றிலே கை வைக்கமுடியும். எனவே எப்படிப்பட்ட தொழிலாக இருந்தாலும் அது சமுதாயத்திற்கும், உலகிற்கும் பயன் அளிப்பதாக இருந்தால் அதைப்பற்றி மேன்மை படுத்துவோம். எனவே கூலித் தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போம்.

இன்று நாம் விழா கொண்டாடும் புனிதராம் சூசையப்பரிடம் நாம் கற்றக் கொள்ள வேண்டியது என்னவென்றால், எல்லா பணிகளும் மதிக்கப்படவேண்டும். எல்லாப்பணியாளர்களும் இறைவனது படைப்பு பணியிலே ஒத்துழைப்பவர்களாவார்கள். எவ்வாறு புனித சூசையப்பர், அன்னையாம் மரியாளுக்கும், இயேசுவுக்கும் உறுதுணையாக இருந்தாரோ அதே போல் நம் உழைப்பால் மற்றவர்களுக்கு நன்மை செய்வோம். சில பணிகள் நல்லவை என்றும், சில நல்லவையல்ல என்றும் பிரித்து பார்க்கும் மனநிலை மாற வேண்டும். உண்மையான உழைப்பிற்கும், அன்பினால் உழைத்து குடும்ப வளர்ச்சிக்கு தியாகம் செய்யும் கணவனுக்கும் மனைவிக்கும் சூசையப்பர் ஒரு சிறந்த முன் மாதிரியாவார்.

எனவே மனித உழைப்பை ஒரு வியாபார பொருளாக கருதுவதும், மனிதனை உற்பத்தி செய்யும் இயந்திரமாக கருதுவதும், முற்றிலும்; தவறானதாகும். . நாம் செய்கின்ற தொழிலை மதிப்போம். அதனை அளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். நாம் செய்கின்ற தொழிலை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும் உலகிலுள்ள தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படவும், உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவும் வேலையின்றியிருப்போர்க்கு நல்ல வேலை கிடைக்குபடியாகவும் மன்றாடுவோம். ஆமென்.....

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
தச்சனின் மகன்

உழைப்பாளர் தினம். தூய வளனாரை தொழிலாளர், உழைப்பாளி எனக் கொண்டாடி மகிழ்கிறது தாய்த்திருச்சபை.

அம்மா, அப்பாக்கள் சாதாரண கூலி வேலை செய்வதை பிள்ளைகள் அவ்வளவு எளிதாக வெளியில் சொல்வதில்லை. ஒரு டாக்டரின் மகன், ஒரு பொறியாளரின் மகன், ஒரு வழக்குரைஞரின் மகன், ஒரு ஆசிரியரின் மகன் என உள்ள வட்டத்தில் மில்லுக்கு வேலை செய்யும் ஒருவரின் மகன் இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். 'உங்க அப்பா என்ன வேலை செய்றார்?' என்ற கேள்விக்கு பெரும்பாலும் அவர் 'மில் சூபர்வைசர்' என்று பதில் சொல்வார்.

வேலையை நாம் அதன் கூலி மற்றும் செய்முறையை வைத்து நல்ல வேலை, கெட்ட வேலை என்று பிரித்துவிடுவதால்தான் அதைச் செய்பவர்களையும் நல்லவர்கள், கெட்டவர்கள், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என பிரித்துவிடுகின்றோம்.

'இவர் தச்சனின் மகன் அல்லவா!'

இயேசுவைக் காயப்படுத்த அவரின் சமகாலத்தவர் கையாண்ட ஒரு பெரிய உத்தி அவரின் பழைய காலத்தை நினைவூட்டுவது. பழைய காலத்தை ஒருவருக்கு நினைவூட்டுவதன் மூலம், 'நீ ஒன்னும் பெரிய ஆளு இல்ல!' 'நீ தச்சனின் மகன்தான்!' 'உனக்கு எப்படி விவிலியம் தெரியும்?' 'உனக்கு எப்படி திருச்சட்டம் தெரியும்?' 'உனக்கு எப்படி வல்லசெயல்கள் செய்யத் தெரியும்?' என்று மறைமுகமாகக் கேட்டனர் இயேசுவின் சமகாலத்தவர். ஆனால் இயேசு ஒருபோதும் இதற்கு எதிர்வினை ஆற்றவே இல்லை.

'ஆம். நான் தச்சனின் மகன்தான்' என்று ஏற்றுக்கொள்வதுபோல இருக்கிறது அவருடைய மௌனம்.

மற்றவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினர். ஆனால் இயேசு தன்னை ஏற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கவே இல்லை. தன்னை ஏற்றுக்கொள்பவரே தன்னை முழுமையாக வளர்த்தெடுக்க முடியும். வளர்த்தெடுத்த தன்னை மற்றவருக்குக் கொடுக்க முடியும்.

உழைப்பு சில காலம்தான் என்பதை நாம் உணர வேண்டும்.

70 வருடம் வாழ்கின்ற வாழ்க்கையில் நாம் 25 முதல் 55 வரை வெறும் 30 ஆண்டுகள்தாம் உழைக்கிறோம். 25க்கு முன்னும் 55க்கு; பின்னும் நாம் உழைக்கவில்லை என்றாலும் நம் இயல்பில் ஒன்றும் குறைவுபடுவதில்லையே. ஆக, உழைப்பை இரசிக்கும் அளவுக்கு ஓய்வையும் நாம் இரசிக்க வேண்டும். பல நேரங்களில் ஓய்வு வேலை செய்வதற்கான தயாரிப்பு என பார்க்கப்படுகிறது.

ஆகையால்தான் உழைப்பை பற்றி பேசுகின்ற நாளைய பதிலுரைப்பாடலில் (திபா 90) ஆசிரியர், 'ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்' என்று வேண்டிவிட்டு, வேகமாக 'எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்' என்கிறார்.

உழைப்பின் தினமாகிய நாளை கடவுள் தந்த இந்த மனித உழைப்பிற்காக, மனித உழைப்பின் பிதாமகன் ஆதாமுக்காக நன்றி கூறுவோம்.

உழைப்ப மட்டும் இல்லையென்றால் கடவுளிடம் கையேந்துபவர்களாக நாம் நின்றிருப்போம். உழைப்பு மட்டுமே கடவுளோடு நம்மைக் கைகோர்க்க வைக்கிறது. உழைப்பால் நாம் கடவுளின் உடன்படைப்பாளர்கள் ஆகிறோம்!

உழைப்பு தின வாழ்த்துக்கள்.

Fr. Yesu Karunanidhi
Trichy

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
மே 01 - தொழிலாளர் புனித யோசேப்பு

காட்டிலே ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். அவர் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒவ்வொருநாளும் முதியவர் ஒருவர் வந்து விறகுகள் பொறுக்குவதும், அதை சந்தையில் விற்று பணமீட்டி, அதை வைத்து தன்னுடைய பிழைப்பை ஓட்டிக்கொண்டு வந்தார்.

இது பலநாட்கள் நடந்தாலும், இரண்டு பேரும் பேசிக்கொண்டதில்லை. ஒருநாள் முனிவர் அந்த முதியவரை அழைத்தார். அவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். பின்னர் அவரிடம், எவ்வளவு நாளுக்குத்தான் இங்கேயே விறகு பொறுக்குவீர்கள், இன்னும் கொஞ்சம் தள்ளிபோய் பொறுக்குங்கள் என்றார். முதியவரும் முனிவரின் வாக்கை வேதவாக்காக எடுத்துகொண்டு அடுத்த நாளிலிருந்து கொஞ்சம் தள்ளிப் போய் விறகுகளை சேகரிக்கத் தொடங்கினார்.

அங்கே அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. விறகுகள் எல்லாம் குவியலாக ஒரே இடத்தில் கிடந்தன. அவருக்கு ரொம்ப சந்தோசம். முனிவரின் வாக்கை நினைத்து பெருமைபட்டுக்கொண்டார். இப்போது அவர் அலைந்து திரியாமல் ஒரே இடத்தில் கிடக்கும் விறகுகளை எடுத்து சந்தையில் விற்று பணமீட்டி வாழ்ந்துவந்தார்.

சிறது நாள்கள் கழித்து முனிவரின் வாக்கை நினைத்துப் பார்த்தார். ஏன் இன்னும் கொஞ்சம் தள்ளிப்போய் விறகு சேகரிக்கக்கூடாது என்று நினைத்து, கொஞ்சம் தள்ளிப்போய் விறகுகள் சேகரிக்கத் தொடங்கியவருக்கு மிகப் பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கே வைரக்கற்கள் குவியலாய் கிடந்தன. அவற்றையெல்லாம் அள்ளிக்கொண்டு வந்து சந்தையில் விற்றார். அவருக்கு மிகப் பெரிய தொகை கிடைத்தது. அதை வைத்து அவர் மகிழ்ச்சியாய் இருந்தார்.

இன்னும் கொஞ்சம் முன்னேறு என்ற முனிவரின் வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு செயல்பட்டதால் அந்த முதியவரின் வாழ்வே மாறிப்போனது. நாமும் இப்போது உழைக்கிற அளவைவிட இன்னும்கொஞ்சம் உழைத்தால் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை அடையலாம் என்பதையே இக்கதை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

இன்று நாம் தொழிலாளர்களின் பாதுகாவலரான தூய யோசேப்புக்கு விழா எடுத்து மகிழ்கின்றோம். தூய யோசேப்பு தன்னுடைய குடும்பத்தைத் தச்சுத் தொழில் செய்து காப்பாற்றினார். உழைத்து வாழ்ந்தார். இவருடைய விழாவை கொண்டாடும் இவ்வேளையில் இன்றைய நாளில் நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இன்றைய காலகட்டத்திலே உடல் உழைப்பு என்பது இழிவானதாகப் பார்க்கப்படுகிறது. ஆடை கசங்காமல் பார்க்கிற வேலைதான் உயர்ந்தது. காட்டிலும், மேட்டிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு இழிவானது என்று நினைக்கும் போக்கு நிலவுகிறது. இது தவறான ஒரு சிந்தனை.

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள், தான் செய்த வேலைகள் அனைத்தையும் ஆறு நாட்களில் முடித்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்று படிக்கிறோம் (தொநு 2:2,3). கடவுளே ஒரே தொழிலாளி என்பதுதான் விவிலியம் நமக்குக் கற்றுத்தரும் பாடம். இயேசுவை குறித்து மக்கள் சொல்கிறபோது இவர் தச்சர் அல்லவா (மாற் 6:3) என்று அழைக்கிறார்கள். எனவே உழைப்பை, உடல் உழைப்பை இழிவாகப் பார்க்கும் நிலையை மாற்றுவோம்.

அடுத்ததாக தூய யோசேப்பை நினைவு கூறும் இந்நாளானது (மே1) தொழிலாளர்களின் நாளாகக் கொண்டாடப்படுவதால் நாம் சோம்பேறித்தனத்தை விடுத்து உழைத்து வாழவும் அழைக்கப்படுகிறோம். சோம்பேறி தன்னுடைய பாதை முழுவதும் முட்கள் நிறைந்தது என்பான் (நீமொ 15:19). சோம்பேறித்தனத்தால் இந்த மக்கள், மண் நிச்சயமாக வளம்பெற முடியாது. அதனால் நமக்கு அழிவு மட்டுமே மிஞ்சும். நாம் அனைவருமே வளம் பெறவேண்டும் என்றால் உழைப்புதான் உறுதுணையாக இருக்கமுடியும்.

எனவே தூய யோசேப்பை போன்று உழைத்து வாழ்வோம். உழைப்பைப் போற்றுவோம்.

- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
மே 01 - தொழிலாளர் புனித யோசேப்பு

யார் இந்த சூசையப்பர்?

01. மரியாளின் கணவர் சூசையப்பர். அவர் ஒரு நேர்மையாளர், நீதிமான், அயராது உழைப்பவர். (மத். 1:19)
02. தாவீதின் வழிமரபினர்தான் புனித சூசையப்பர். (லூக் 2:4)
03. இயேசு யோசேப்பின் மகன். இவர் யேசுவின் வளர்ப்புத் தந்தையாக இருந்தார். (அருளப்பர் 1:45, 6:42)

கன்னி மரியாளின் கணவரும் இயேசுவின் வளர்ப்பு தந்தையுமான புனித சூசையப்பரைப் பற்றி விவிலியம் மிகச் சுருக்கமாகவே எடுத்தியம்புகிறது. நீதிமான் என்ற வார்த்தை அவர் கடவுளுக்கு மிகவும் பணிந்து நடப்பவர் எனக் காட்டுகிறது. தச்சுத் தொழில் செய்து, தந்தைக்குரிய பொறுப்பேற்று, கணவருக்குரிய கடமைகளை நிறைவேற்றி குடும்பத்தை நன் முறையில் நடத்தினார். கன்னிமரியின் பேறுகாலத்திற்கு சத்திரம் தேடி அலைந்த போதும், குழந்தையை கொடுங்கோலன் ஏரோதுவின் பிடியிலிருந்து விடுவிக்க எகிப்துக்கு ஓடிச் சென்ற போதும் பல இன்னல்களை தாங்கிக் கொண்டார். இதன் வழியாக யேசுவின் மீட்புப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

இன்றைய முதல் வாசகத்திலே கடவுள் முதல் ஆறு நாட்களில் உலகைப் படைத்து விட்டு ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்று வாசிக்கிறோம். மேலும் கடவுள் மனிதனை தமது சாயலாக படைத்தார். ஆணும் பெண்ணுமாக படைததார். ஆணும் பெண்ணும் இறைவனது படைப்பு பணியிலே சமமாக பங்கேற்கிறார்கள். இன்றைய சூழலில் ஆண்கள் அலுவலகத்தில் 8 மணிநேரம் வேலை செய்தாலும் பெண்கள் வீடுகளில் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். உழைத்து, உழைத்து சோர்ந்து போகிறார்கள். இன்றைய சூழலில் நாம், அப்பா ஆசிரியராக இருந்தால் வாத்தியார் மகன் என்றும் அரசியல் வாதியாக இருந்தால் ஆடுயு மகன் என்றும் மருத்துவராக இருந்தால் டாக்டர் மகன் என்றும் அவர்கள் செய்யும் தொழிலை கொண்டு பிறரை நாம் இனம் கண்டு கொள்கிறோம்.

இன்றைய நற்செய்தியில் கூட இயேசுவை, அவரது வளர்ப்பு தந்தையாகிய சூசையின் தச்சுத் தொழிலை கொண்டே இனம் கண்ட மக்களைப் பற்றி மத்தேயு எழுதிய நற்செய்தி குறிப்பிடுகிறது. சூசையப்பரின் தொழில் இன்றைய கம்பியூட்டர் உலகிலே மிகச் சாதரணமாகப் பார்க்கப்படும் தச்சுத்தொழில். அவர் ஒரு கூலித் தொழிலாளி. ஆனால் அன்று அது மேன்மையாக கருதப்பட்டது. உடல் உழைப்புக்கு மாண்பும், மதிப்பும் இருந்தன. ஆனால் இன்றோ சேற்றில் இறங்கி உழைப்பவனும், உலைகளத்தில் நெருப்பில் வெந்து சம்மட்டி அடிப்பவனும், சாக்கடையை சுத்தம் செய்பவனும், வேகாத வெயிலிலே பாரவண்டி இழுப்பவனும், யுஃஉ அறையில் வேலை செய்பவர்களுக்கு இழுக்கானவர்கள், மட்டமானவர்கள் என கருதுகின்றனர்.

மாறாக செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமைதான் நம் செல்வம், என்ற மனநிலை வேண்டும். தொழிலை இழிவாக கருதாமல் தொழில் செய்வோரின் நேர்மை, அதை செய்யும் நேர்த்தி மேலும் அவர்கள் அளிக்கும் உழைப்பையும் போற்றிட வேண்டும். மட்டமான தொழில்கள் எனப்படும் வேலைகளும் செய்யப்பட்டால்தான் படித்த, புத்தி கூர்மையுள்ள தொழில் செய்வோர்களால் முழுமையாக செயல்பட முடியும். உழவன் சேற்றிலே கால் வைத்தால்தான் நாம் சோற்றிலே கை வைக்கமுடியும். எனவே எப்படிப்பட்ட தொழிலாக இருந்தாலும் அது சமுதாயத்திற்கும், உலகிற்கும் பயன் அளிப்பதாக இருந்தால் அதைப்பற்றி மேன்மை படுத்துவோம். எனவே கூலித் தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போம்.

இன்று நாம் விழா கொண்டாடும் புனிதராம் சூசையப்பரிடம் நாம் கற்றக் கொள்ள வேண்டியது என்னவென்றால், எல்லா பணிகளும் மதிக்கப்படவேண்டும். எல்லாப்பணியாளர்களும் இறைவனது படைப்பு பணியிலே ஒத்துழைப்பவர்களாவார்கள். எவ்வாறு புனித சூசையப்பர், அன்னையாம் மரியாளுக்கும், இயேசுவுக்கும் உறுதுணையாக இருந்தாரோ அதே போல் நம் உழைப்பால் மற்றவர்களுக்கு நன்மை செய்வோம். சில பணிகள் நல்லவை என்றும், சில நல்லவையல்ல என்றும் பிரித்து பார்க்கும் மனநிலை மாற வேண்டும். உண்மையான உழைப்பிற்கும், அன்பினால் உழைத்து குடும்ப வளர்ச்சிக்கு தியாகம் செய்யும் கணவனுக்கும் மனைவிக்கும் சூசையப்பர் ஒரு சிறந்த முன் மாதிரியாவார்.

எனவே மனித உழைப்பை ஒரு வியாபார பொருளாக கருதுவதும், மனிதனை உற்பத்தி செய்யும் இயந்திரமாக கருதுவதும், முற்றிலும்; தவறானதாகும். . நாம் செய்கின்ற தொழிலை மதிப்போம். அதனை அளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். நாம் செய்கின்ற தொழிலை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும் உலகிலுள்ள தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படவும், உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவும் வேலையின்றியிருப்போர்க்கு நல்ல வேலை கிடைக்குபடியாகவும் மன்றாடுவோம். ஆமென்..

--------------------------------------------------------
=================================================================================
திருப்பலி முன்னுரை:
=================================================================================

மே 01 - தொழிலாளர் புனித யோசேப்ப

ஏழையாக பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்!
துன்பத்தில் துவண்டாலும் தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்!
கஷ்டங்களுக்கு மத்தியிலும் கண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்!
அவரே நமது புனித சூசையப்பர்.

இன்று நம் தாய் திருச்சபையானது தொழிலாளர்களின் தினமான இன்று தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரை நினைவு கூர்கின்றது. ஒருவர் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள தினம் தினம் தம்தம் தகுதிக்கும், அறிவுத்திறனுக்கும் உடல் வலிமைக்கும் ஏற்ப, உழைக்கும் கரங்களை போற்றும் நாள் இந்நாள். இறைவனின் படைப்புத் தொழிலின் பங்காளிகளான தொழிலாளர்களை கரம் குவித்து வணங்கி வாழ்த்திடும் நன்னாள் இன்று.

உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது என்ற தூய பவுலின் கூற்று தொடக்க திருச்சபை உழைப்பிற்குக் கொடுத்த மேன்மையை எடுத்துரைக்கிறது. கடவுள் அமைத்த நியதி, மனிதன் நெற்றி வேர்வை நிலத்திலே சிந்த, பாடுபட்டு உழைத்திட வேண்டும் என்பது. இதற்கு திருக்குடும்பமும் விதிவிலக்கல்ல. புனித சூசையப்பர் தச்சுத்தொழில் செய்துஇ அந்த உழைப்பை மூலதனமாக வைத்து திருகுடும்பத்தைக் காப்பாற்றகிறார்.

நாம் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அதில் திறமைதான் நம் செல்வம், என்ற மனநிலை வேண்டும். தொழிலை இழிவாக கருதாமல் தொழில் செய்வோரின் நேர்மைஇ அதை செய்யும் நேர்த்தி, மேலும் அவர்கள் அளிக்கும் உழைப்பையும் போற்றிட வேண்டும்.
இன்று சிறப்பாக நாம் சமுதாயத்தின் அடிமட்டத்திலே நமக்காக ஒவ்வொரு நாளும் எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராது உழைக்கும் ஒவ்வொருவரையும் நன்றியோடு நினைவு கூறுவோம். எவ்வாறு புனித சூசையப்பர், அன்னையாம் மரியாளுக்கும், இயேசுவுக்கும் உறுதுணையாக இருந்தாரோ அதே போல் நம் உழைப்பால் மற்றவர்களுக்கு நன்மை செய்வோம்.

எனவே மனித உழைப்பை ஒரு வியாபார பொருளாக கருதுவதும்இ மனிதனை உற்பத்தி செய்யும் இயந்திரமாக கருதுவதும், முற்றிலும் தவறானதாகும். நாம் செய்கின்ற தொழிலை மதிப்போம். அதனை அளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். நாம் செய்கின்ற தொழிலை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும் உலகிலுள்ள தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படவும், உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவும் வேலையின்றியிருப்போர்க்கு நல்ல வேலை கிடைக்குபடியாகவும் தொடரும் திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை (தொடக்கநூல் 1: 26 2:3)

இன்றைய முதல் வாசககம் கடவுளை ஒரு தொழிலாளியாகச் சித்தரிக்கிறது. உலகையும்இ அதில் வாழும் அனைத்தையும் படைத்துஇ அவற்றின் வாழ்விற்கும்இ வளர்ச்சிக்கும் தொடர்ந்து உழைப்பவர் கடவுள். கடவுளோடு இணைந்துஇ உடன் உழைப்பாளியாக வாழ உழைப்பின் மேன்மையை நாம் உணர அழைக்கும் இவ்வாசத்திற்கு செவிகக் கொடுப்போம்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்:

1) அன்பே உருவான இறைவா, திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர, தேவையான ஆர்வத்தையும், உற்சாகத்தையும் அளிக்குமாறு, எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உமது அன்பில் வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

2) உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது என்பதற்கேற்ப உழைக்கும் எண்ணம் எங்கள் ஒவ்வொருவருக்கும் அடிப்படையிலே உருவாக வேண்டுமென்றும், உழைப்பு கடவுளால் தரப்பட்ட கொடை என்பதை உணர்ந்து, அதை நல்ல முறையிலே நற்செயல்களுக்காகப் பயன்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

3) என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என்றுரைத்த தந்தையே இறைவா! கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர்கள், முதலாளிகளின் முரண்பாடுகளில் சிக்குண்டவர்கள், கூலித் தொழிலாளர்கள் இவர்களின், உரிமைக்காய், விடுதலைக்காய் நாங்கள் அனைவரும் குரல் கொடுக்கவும், அவர்களின் வாழ்வு மேம்படவும், உரிமைகள் மதிக்கப்படவும் வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்

4) என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே! புனித சூசையப்பரின் குனநலன்களான நேர்மை, வாய்மை, பகிர்வு மனப்பான்மை, முழு ஆர்வம், கடின உழைப்பு போன்ற பண்புகளால் தொழிலாளர்களாகிய நாங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாயத் திகழ வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

5) மனநிறைவின் ஊற்றே இறைவா, மனித உழைப்பை ஒரு வியாபார பொருளாக கருதாமல், மனிதனை உற்பத்தி செய்யும் இயந்திரமாக கருதாமல், நாம் செய்கின்ற தொழிலை மதிக்கவும், அத்தொழிலை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும், உலகிலுள்ள தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவும், வேலையின்றியிருப்போர்க்கு நல்ல வேலை கிடைக்குபடியாகவும் வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.
 
அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!