Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            30  ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 12ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
சீயோன் மகளே! ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுக!

புலம்பல் நூலிலிருந்து வாசகம் 2: 2,10-14,18-19

ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்; அவர் சீற்றமடைந்து மகள் யூதாவின் அரண்களைத் தகர்த்தார்; அவற்றைத் தரைமட்டமாக்கினார். அவரது நாட்டையும் அதன் தலைவர்களையும் மேன்மை குலையச் செய்தார். மகள் சீயோனின் பெரியோர் தரையில் மௌனமாய் அமர்ந்துள்ளனர்; அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியைத் தூவிக் கொண்டுள்ளனர்; சாக்கு உடை உடுத்தியுள்ளனர்;

எருசலேமின் கன்னிப் பெண்கள் தங்கள் தலைகளைத் தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர். என் கண்கள் கண்ணீர் சொரிந்து சோர்ந்துள்ளன! என் குலை நடுங்குகின்றது! என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத் தரையில் சிதறுகின்றது! என் மக்களாகிய மகள் நசுக்கப்பட்டுள்ளாள்! நகர் வீதிகளில் குழந்தைகளும் மழலைகளும் மயங்கிக் கிடக்கின்றனர்!

அவர்கள் தங்கள் அன்னையரிடம், "அப்பம், திராட்சை இரசம் எங்கே?" என்று கேட்கின்றனர்! படுகாயமுற்றோரைப் போல, நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்! தாய் மடியில் உயிர் விட்டவர் போல் ஆகின்றனர்! மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப் போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்? உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர்; நீ நாடுகடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் சொல்லவில்லை; அவர்கள் பொய்யையும் அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு, உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்! அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது; மகள் சீயோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்! எழு! இரவில் முதற் சாமத்தில் குரலெழுப்பு! உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன் தண்ணீரைப் போல் ஊற்றிவிடு! தெரு முனையில் பசியால் மயங்கி விழும் குழந்தைகளின் உயிருக்காக, அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  திபா 74: 1-2. 3-4. 5-7. 20-21 (பல்லவி: 19b
=================================================================================
 பல்லவி: சிறுமைப்படும் உம் மக்களின் உயிரை மறந்துவிடாதீர் ஆண்டவரே!

1 கடவுளே! நீர் ஏன் எங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்? உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல் உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது? 2 பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபைக்கூட்டத்தை நினைத்தருளும்; நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட இனத்தாரை மறந்துவிடாதேயும்; நீர் கோவில் கொண்டிருந்த சீயோன் மலையையும் நினைவுகூர்ந்தருளும். பல்லவி

3 நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவீராக! எதிரிகள் உமது தூயகத்தில் அனைத்தையும் பாழ்படுத்தி விட்டார்கள். 4 உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில் வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்; தங்கள் கொடிகளை வெற்றிக்கு அடையாளமாக நாட்டுகின்றார்கள். பல்லவி

5 அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட மரப் பின்னல் வேலைப்பாடுகளைக் கோடரிகளால் சிதைத்தார்கள். 6 மேலும் அங்கிருந்த மர வேலைப்பாடுகள் அனைத்தையும் சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு தகர்த்தெறிந்தார்கள்; 7 அவர்கள் உமது தூயகத்திற்கு தீ வைத்தார்கள்; அவர்கள் உமது பெயருக்குரிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். பல்லவி

20 உமது உடன்படிக்கையை நினைத்தருளும்! நாட்டின் இருளான இடங்களில் கொடுமை நடக்கும் குடியிருப்புகள் நிறைந்திருக்கின்றன. 21 சிறுமையுற்றோர் மீண்டும் வெட்கமுறாதபடி செய்யும்; எளியோரும் வறியோரும் உமது பெயரைப் புகழ்வராக! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 8: 17

அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17

அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். "ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்" என்றார். இயேசு அவரிடம், "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.

நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் "செல்க" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் "வருக" என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து "இதைச் செய்க" என்றால் அவர் செய்கிறார்" என்றார்.

இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்றார்.

பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, "நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்" என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான்.

இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்.

பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார்.

இவ்வாறு, "அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்" என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.


சிந்தனை

நாம் இயேசுவை வரவேற்க தகுதி பெற்றிருக்கின்றோமா?

இதை நாம் சோதித்து பார்த்திருக்கின்றோமா?

நூற்றுவர் தலைவர் தனக்கு தகுதியில்லை என்பதை உணர்ந்து வெளிப்படுத்தி பாராட்டு பெறுகின்றார்.

நம்முடைய தகுதியை நாம் சோதித்து பார்த்து, நம்மை அவர் தரும் அருளால் தகுதிப்படுத்திக் கொள்வது நம்மை உயர்த்தும். வாழ்வில் வளமை காணச் செய்யும்.

நாம் கிறிஸ்தவர்கள் என்பதால் தகுதியை சோதித்தறியாது, நம்மை சுத்தப்படுத்திக் கொள்ள முற்படாது, கோயில் பூனை சாமிக்கு அஞ்சாது என்பது போல நட்நது கொள்வது நமக்கே நாம் கேட்டினை வருவித்துக் கொள்வது போலாகாது.
 01 கொரி 11: 26 தொடர்ச்சி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நீர் போகலாம். நீர் நம்பிய வண்ணமே உமக்கு நிகழும்!"

அமெரிக்காவில் டெஸ் என்ற எட்டு வயது சிறுமி தனது தந்தை, தாய் தம்பி ஆன்ட்ருவுடன் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தாள்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் டெஸின் தம்பிக்கு மூளையில் கட்டி வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவளுடைய தந்தை தன்னிடத்தில் இருந்த பணம் அத்தனையையும் செலவழித்து அவனைக் குணப்படுத்த முயற்சி செய்து பார்த்தார். ஆனால், பணம் செலவானதே ஒழிய, பையன் குணமாகவில்லை. ஒருகட்டத்தில் டெஸின் தந்தை இருந்த வீட்டைக் கூட விற்று ஆன்ட்ருவுக்கு மருத்துவம் செய்து பார்த்தார். ஆனால், யாதொரும் பலனும் கிடைக்கவில்லை. இதனால் அவர் மனமுடைந்து போய் தன்னுடைய மனைவி மற்றும் டெஸிடமும், "ஏதாவது ஓர் அதிசயம் நடந்தால்தான் தம்பி பிழைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது" என்று சொன்னார்.

இதைக் கேட்ட டெஸ் "அதிசயம் நிச்சயம் நடக்கும் என்று நம்பிக்கையோடு தன்னுடைய வீட்டில் இருந்த சிலுவையின் முன்பாக முழந்தாள்படியிட்டு தன்னுடைய தம்பிக்காக வேண்டத் தொடங்கினாள். பின்னர் ஏதோ யோசித்தவளாய், தான் பணம் சேர்த்து வைக்கும் உண்டியலை உடைத்து அதிலிருந்த காசினை எடுத்தார். உண்டியிலிருந்து ஒரு டாலர் பதினேழு சென்ட் பணம் கிடைத்தது. உடனே அதனை எடுத்துக்கொண்டு, தெருவில் இருந்த கடைக்கு ஓடினார். அவள் அந்த கடைக்குச் சென்றபோது கடையின் உரிமையாளர் யாரோ ஒருவரோடு டெஸ் அங்கு வந்ததுகூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார். அதனால் டெஸ் கடைக்காரின் கவனத்தை ஈர்க்கின்ற அளவுக்கு, "என்னுடைய தம்பிக்கு மூளையில் கட்டி வளர்ந்து, சாகும் தருவாயில் இருக்கின்றான். அவன் உயிர் பிழைக்க வைக்கும் மருந்து தாருங்கள்" என்று கத்தினாள்.

அவளுடைய சத்தத்தைக் கேட்ட கடைக்காரர், "கொஞ்சம் பொறம்மா, நான் என்னுடைய தம்பியிடம்தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். பேசி முடித்ததும் நீ கேட்ட மருந்து தருகிறேன்" என்றார். சிறிது நேரம் கடைக்காரரும் அவருடைய தம்பியும் பேசி முடித்தபின்பு டெஸின் பக்கம் திரும்பி, "சொல்லுமா, உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்டார். அவளோ எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, தன்னிடம் இருந்த ஒரு டாலர் பதினேழு சென்ட் பணத்தை அவரிடத்தில் கொடுத்துவிட்டு, "இந்தப் பணத்திற்கு மருந்து தாருங்கள். பணம் தேவைப்பட்டால் சில நாட்களில் தந்துவிடுகிறேன்" என்றாள்.

இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கடைக்காரருடைய தம்பி கார்ல்டன் ஆம்ஸ்ட்ராங் (பிரபல நரம்பியல் நிபுணர்) டெஸிடம், "உன் தம்பிக்கு நான் சிகிச்சை அளிக்கிறேன். அதற்கு இந்த ஒரு டாலர் பதினேழு சென்ட் ஊதியமாகப் போதும்" என்றார். பின்னர் அவர் டெஸிடம், "உன்னுடைய வீடு எங்கிருக்கிறது என்று சொல். அங்கு வந்து உன் தம்பியைக் குணப்படுத்துகிறேன்" என்றார். டேசும் அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, தம்பியின் முன்பாகப் போய் நிறுத்தினாள். அவரும் அவனை சோதித்துப் பார்த்துவிட்டு ஒருசில நாட்களில் அவனுக்குச் சிகிச்சையும் கொடுத்து, அவனை சாவிலிருந்து காப்பாற்றினார்.

டெஸ் தன் தம்பி உயிர்பிழைப்பான் என்று மிக உறுதியாக நம்பினாள். அவள் நம்பியது போலவே அவளுடைய தம்பி உயிர்பிழைத்துக் கொண்டான். மட்டுமல்லாமல், அவளுடைய தந்தை சொன்ன அதிசயமும் அவளுடைய தம்பிக்கு நடந்தது.

நம்பினால் நல்லது நடக்கும் என்ற வார்த்தைக்கு ஏற்ப டெஸ் நம்பியது போல அவளுடைய தம்பி உயிர் பிழைத்துக் கொண்டான்.

நற்செய்தி வாசகத்தில் நம்பிக்கையினால் நலம் ஒருவரைக் குறித்துப் படிக்கின்றோம். அவர் வேறு யாருமல்ல நூற்றுவத் தலைவர்தான். நூற்றுவத் தலைவர் இயேசுவிடம் வந்து, "ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்" என்று சொல்ல, இயேசு அவரிடம், "நான் வந்து அவனைக் குணமாக்குகிறேன்" என்கின்றார். அப்போது நூற்றுவத் தலைவர் இயேசுவிடம், "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்" என்கின்றார். இதைக் கேட்ட இயேசு, "இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையைக் கண்டதில்லை" என்று சொல்லி பாராட்டுகின்றார்.

இங்கே நூற்றுவத் தலைவர் கொண்டிருந்த நம்பிக்கை ஆழமானதாகும் அசைக்க முடியாததாகவும் இருக்கின்றது. நாமும் அவரைப் போன்று ஆண்டவரும் நம்பிக்கை கொண்டிருக்கும்போது நாம் அளவு கடந்த ஆசிரைப் பெறுவது உறுதி.

ஆகவே, இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
வாழ்வளிக்கும் நம்பிக்கை

ஒருமுறை நியூயார்க் யங்கிஸ் (New York Yankees) endஎன்ற பேஸ்பால் அணியில் விளையாடும் லோ ஜெக்ரிக் (Lou Gehrig) என்ற விளையாட்டு வீரர், தான் வசிக்கும் இடத்திற்கு அருகே இருந்த உடல் ஊனமுற்றோர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

நிகழ்ச்சியில் பேசும்போது அவர் தனக்கு முன்பாக கூடியிருந்த உடல் ஊனமுற்ற குழந்தைகளைப் பார்த்து, "அன்பார்ந்த குழந்தைகளே!, வாழ்வில் நீங்கள் எதைச் செய்தாலும், என்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது நீங்கள் நினைத்த காரியம் நடக்கும்" என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்த ஒரு குழந்தை (போலியோவால் இரு கால்களும் பாதிக்கப்பட்ட குழந்தை) "லோ ஜெக்ரிக் அவர்களே!, "நீங்கள் எதைச் செய்தாலும் நம்பிக்கையோடு செய்தால், அடையமுடியும் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் இன்னும் ஒருசில நாட்களில் நம்முடைய நாட்டில் நடக்கக்போகும் உலகக்கோப்பை பேஸ்பால் போட்டியில், நீங்கள் ஒரே ஆட்டத்தில் இரண்டு கோல்கள் போடவேண்டும்" என்றது.

இதைக் கேட்டதும் அவருக்கு உள்ளுக்குள் திக்கென்றது. ஏனென்றால் பேஸ்பால் போட்டியில் ஒரே ஆட்டத்தில் இரண்டு கோல்கள் போடுவது என்பது அவ்வளவு எளிதல்ல. உடனே அவர் அக்குழந்தையிடம், "நான் ஒரே ஆட்டத்தில் இரண்டு கோல்களைப் போடத் தயார். ஆனால் உன்னால் எழுந்து நடக்க முடியுமா?" என்று சவால்விட்டார். அதற்கு அந்தக் குழந்தையும் சரி என்று சொன்னது.

லோ ஜெக்ரிக் தான் சொன்னதுபோன்றே உலகக்கோப்பை பேஸ்பால் போட்டியில் நடந்த ஓர் ஆட்டத்தில் இரண்டு கோல்கள் போட்டார். ஆனால் உலகக் கோப்பையை எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற பரபரப்பில் இருந்ததால், அவர் உடல் ஊனமுற்ற பள்ளியில் இருந்த அந்த குழந்தையைப் பார்ப்பதற்கு அவர் மறந்தே போய்விட்டார்.

ஆண்டுகள் பல உருண்டோடின. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமாக உலகக் கோப்பை பேஸ்பால் போட்டி வந்தது. நியூயார்க் யங்கிஸ் அணியைச் சேர்ந்த லோ ஜெக்ரிக் போட்டியில் விளையாட வந்திருந்தார். அப்போது ஓர் இளைஞன் அவரது தோளைத் தட்டி, "லோ ஜெக்ரிக்! என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டார். லோ ஜெக்ரிக் ஒன்றும் தெரியாமல் விழித்தார். அப்போது அந்த இளைஞன், "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக நீங்கள் ஓர் உடல்ஊனமுற்ற பள்ளிக்கூடத்திற்கு வந்து, ஒரு குழந்தையிடம் எழுந்து நடக்க முடியுமா? என்று சவால் விட்டீர்களே, அந்தக் குழந்தை வேறு யாருமல்ல நான்தான். இந்த ஐந்து ஆண்டுகளாக என்னால் எழுந்து நடக்க முடியும் என்று நம்பிக்கையோடு செயல்பட்டேன். இப்போது என்னால் எழுந்து நடக்க முடிகிறது" என்றான்.

இதைக் கேட்டு லோ ஜெக்ரிக் வியந்து நின்றார். என்னால் இதை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கைதான் நடக்க முடியாத அந்தக்குழந்தையை எழுந்து நடக்கச் செய்தது.

நற்செய்தி வாசகத்தில் நம்பிக்கையால் நலம்பெற்ற ஒரு மனிதரைக் குறித்துப் படிக்கின்றோம். அவர் வேறு யாருமல்ல, நூற்றுவத் தலைவரே. நூற்றுவத் தலைவர் ஆண்டவர் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டு, அவரிடம், "ஐயா! என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்" என்கிறார். அதற்கு இயேசு, "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்கிறார். உடனே நூற்றவத் தலைவர், "ஐயா, நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் குனமடைவான்" என்கிறார். இயேசு அவருடைய நம்பிக்கையைக் கண்டு அவருடைய பையனுக்கு நலமாளிக்கின்றார். இங்கே நம்பிக்கைதான் நூற்றுவத் தலைவரின் மகனுக்கு நலமளித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. நம்மிடத்தில் இத்தகைய நம்பிக்கை இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

"நம்பிக்கையோடு உன் முதல் அடியை எடுத்துவை; முழு படிக்கட்டையும் நீ பார்க்கவேண்டிய அவசியமில்லை; முதல் படியில் ஏறு" என்பார் மார்டின் லூதர் கிங் என்பவர். நாம் நம்பிக்கையோடு ஒரு செயலைத் தொடங்கினாலே போதும், அது வெற்றியைக் கொண்டுவந்து தரும் என்பது அவரின் கருத்தாக இருக்கின்றது.

ஆகவே, நூற்றவத் தலைவனைப் போன்று இறைவன்மீது ஆழமான நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக அவர் அளிக்கும் எல்லா ஆசிரையும் பெற்று மகிழ்வோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!