Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            29  ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 12ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
யோயாக்கினையும் வலிமை வாய்ந்த அனைவரையும் சிறைப்படுத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 8-17

யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. எருசலேமில் மூன்று மாதமே அவன் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த எல்நாத்தானின் மகள் நெகுஸ்தா என்பவளே அவனுடைய தாய். யோயாக்கின் தன் தந்தை செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அக்காலத்தில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் படைவீரர் எருசலேமின் மீது படையெடுத்து வந்து நகரை முற்றுகையிட்டனர்.

அப்பொழுது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும் வந்து நகரை முற்றுகையிட்டிருந்த வீரர்களோடு சேர்ந்து கொண்டான். எனவே யூதாவின் அரசன் யோயாக்கினும் அவன் தாயும் அவன் அலுவலர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் பாபிலோன் மன்னனிடம் சரணடைந்தனர். அவனைப் பாபிலோன் மன்னன் தான் ஆட்சியேற்ற எட்டாம் ஆண்டில் சிறைப்படுத்தினான்.

பின்பு அவன் ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களை எல்லாம் எடுத்துச் சென்றான். ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, ஆண்டவரின் இல்லத்தில் இஸ்ரயேலின் அரசர் சாலமோன் செய்து வைத்திருந்த எல்லாப் பொன்கலன்களையும் துண்டு துண்டாக்கினான்.

மேலும் அவன் எருசலேம் முழுவதையும், தலைவர்கள் அனைவரையும், ஆற்றல் வாய்ந்த பதினாயிரம் படை வீரர்களையும் சிற்பக் கலைஞர்களையும், கொல்லர்களையும் நாடு கடத்தினான். நாட்டில் ஏழை மக்களைத் தவிர எவரையும் விட்டுவைக்கவில்லை.

மேலும் அவன் யோயாக்கினையும், அரசனின் தாயையும், மனைவியரையும், அவனுடைய அதிகாரிகளையும், நாட்டின் தலைவர்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தினான்.

மேலும் வலிமை வாய்ந்த ஏழாயிரம் பேர்களைக் கொண்ட முழுப்படையையும், போர்த் திறனும் உடல் ஆற்றலும் கொண்ட ஆயிரம் தச்சர்களையும், கொத்தர்களையும் அவன் சிறைப்படுத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான். யோயாக்கினுக்குப் பதிலாக அவனுடைய சிறிய தந்தை மத்தனியாவை அரசனாக்கி, அவனது பெயரைச் "செதேக்கியா" என்று மாற்றினான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 79: 1-2. 3-5. 8-9 (பல்லவி: 9bc காண்க)
=================================================================================
 பல்லவி: உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களை விடுவியும் ஆண்டவரே.

1 கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்; உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர்; எருசலேமைப் பாழடையச் செய்தனர். 2 உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள் அளித்துள்ளார்கள். பல்லவி

3 அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்; அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை. 4 எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்; எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம். 5 ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா? உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ? பல்லவி

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். 9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கற்பாறை மீதும், மணல் மீதும் கட்டப்பட்ட வீடுகள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

அந்நாளில் பலர் என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?" என்பர்.

அதற்கு நான் அவர்களிடம், "உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்" என வெளிப்படையாக அறிவிப்பேன்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது."

இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இறைவார்த்தையை வாழ்வாக்குவோம்.

ஆங்கில இலக்கியத்தில் மிகப் பிரபலமான ஒரு கதை "Mutiny On The Bounty என்பதாகும். இதில் மியூடினி என்ற நகரைச் சேர்ந்த ஒருசில இளையோரும், பெண்களும் திருட்டுத்தனமானக மதுபானம் விற்றதால் பிட்கைர்ன் (Pitcairn) என்ற தீவில் கைதிகளாக அடைக்கப்படுகிறார்கள்.

அங்கே சென்றவர்கள் சும்மா இருக்கவில்லை. வழக்கம்போல தங்களுடைய சேட்டையைச் செய்யத் தொடங்கினார்கள். ஒருமுறை அவர்களாகவே மதுபானம் தயாரித்துக் குடித்ததில், அந்தக் குழுவில் இருந்த எல்லாருமே இறந்துபோனார்கள். அலெக்ஸ்சாண்டர் ஸ்மித் என்ற ஒரே ஒரு இளைஞன் மட்டுமே உயிர்பிழைத்தான்.

ஒருநாள் அவன் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது விவிலியம் ஒன்றைக் கண்டெடுத்தான். அதை முழுமையாக வாசிக்கத் தொடங்கினான். விவிலியம் தந்த உத்வேகத்தில் பிட்கைர்ன் என்ற தீவில் இருந்த மக்கள் யாவரையும் இறைவார்த்தைக்கு ஏற்ப கட்டியெழுப்பத் தொடங்கினான்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அமெரிக்கக் கப்பல் அங்கு வந்தது. அந்தக் கப்பலிலிருந்து இறங்கியவர்கள் அங்கு சிறைச்சாலை இருந்த அடையாளமே இல்லாதது கண்டு, திகைத்து நின்றார்கள். மேலும் அங்கே நோயாளிகள் என்றோ, படிக்காதவர் என்றோ யாரும் இல்லை. ஏனென்றால் அங்கே இருந்த யாவரும் கிறிஸ்துவை பற்றிய அறிவைப் பெற்றிருந்தார்கள். அந்த அறிவைப் பயன்படுத்தி தன்னுடைய வாழ்வையே மாற்றியமைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்தத் தீவே ஒரு சொர்க்கம் போன்று காட்சியளித்தது.

இறைவார்த்தையின்படி வாழும்போது ஒரு சமூகம் எப்படிப்பட்ட மாற்றம் அடைகிறது என்பதை இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, யார் விண்ணரசுக்குள் செல்வார்? என்பதைக் குறித்துப் பேசுகிறார். "என்னை நோக்கி (இயேசுவை நோக்கி) ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் திருவுளத்தின்படி நடப்பவரே செல்வார்" என்று ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாகக் கூறுகின்றார். ஜெபங்களும், வழிபாட்டுக் கொண்டாட்டங்களும் மட்டும் ஒரு மனிதனை இறைவன் தரும் விண்ணரசுக்குள் கூட்டிச் சேர்பதில்லை, மாறாக இறைவார்த்தையின்படி/ தந்தைக் கடவுளின் திருவுளப்படி யாராரெல்லாம் நடக்கிறார்களே அவர்களே விண்ணரசுக்குள் செல்வார்கள் என்பது இயேசுவின் மிகத் தெளிவான போதனையாக இருக்கின்றது.

பல நேரங்கில் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருசில ஜெபங்களைச் சொல்வதிலும், பக்தி முயற்சிகளில் ஈடுபடுவதிலும் மட்டுமே திருப்திப்பட்டுக் கொள்கிறோம். அதைக் கடந்து, வழிபாடு நம்முடைய வாழ்க்கையோடு ஒத்துப் போவதில்லை. அதனால்தான் தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுவார், "நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால், தன்னிலே உயிரற்றதாகும்" என்று (யாக் 2:17). நாம் நம்பியதை வாழ்வாக்கவில்லை என்றால், நமது நம்பிக்கை யாவும் வீணே. ஆதலால் இறைவார்த்தை நம்முடைய அன்றாட வாழ்வோடு ஒத்துப்போகும்படி வாழ்வோம்.

தொடர்ந்து ஆண்டவர் இயேசு கூறுவார், "நான் சொல்லும் இவ்வார்த்தையைக் கேட்டு, இவற்றின்படி செயல்படும் எவரும், பாறையின்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். அதேவேளையில் நான் சொல்லும் இவ்வார்த்தையைக் கேட்டு, இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவர்" என்று.

பாறையின் மீது கட்டப்பட்ட வீடு எப்போதும் உறுதியாக இருக்கும். மழையோ, புயலோ எதுவும் அதைத் தீண்டாது. ஆனால் மணல்மீது கட்டப்பட்ட வீடோ உறுதியற்று இருக்கும். அதற்கு எப்போது வேண்டுமானால் அழிவு ஏற்படும். இறைவார்த்தையைக் கேட்டு நடக்கும் யாவரும் பாறையின்மீது தன்னுடைய வீட்டைக் கட்டிய அளிவாளிக்கு ஒப்பானவர்களே. அவர்களை எந்த தீங்கும், துன்பமும் தீண்டாது.

ஆகையால் நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நமது அமைத்துக் கொள்வோம். அப்படி நடக்கும்போது நமது வாழ்வு பாறையின்மீது கட்டப்பட்ட வீட்டிற்கு ஒப்பாகும்; நாம் இறைவன் அளிக்கும் விண்ணரசை எளிதாகப் பெற முடியும்.

எனவே, இறைவார்த்தையின்படி நடப்போம். இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
கற்பாறையின்மீது தம் வீட்டைக் கட்டியவர் யார்?

ஓர் ஊரில் ஆனந்தன் என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஆன்மீக தாகம் அதிகமாகவே இருந்தது. எனவே அவன் தனக்கு ஒரு குரு வேண்டி பல இடங்களில் அலைந்தான், பல ஆசிரமங்களுக்கும் சென்றான். ஆனால் அங்கிருப்பவர்களுக்கும் இவனுக்கும் ஒத்து வரவில்லை. அதிகபட்சம் சில நாட்கள் மட்டுமே அவனால் அங்கிருக்க முடிந்தது. அதற்குள் மன ரீதியாக வித்தியாசம் ஏற்பட்டு வெளியேறி வந்தான்.

தனக்கு ஆன்மீக குரு கிடைப்பார் என்ற நம்பிக்கையே ஆனந்துனுக்கு போய்விட்டது. அந்த சமயம் நண்பன் ஒரு முனிவரை பற்றி சொன்னான். கடைசியாக முயற்சி செய்ய ஆனந்தன் புறப்பட்டான். அங்கு முனிவர் சாந்தமாக தியானத்தில் இருப்பார் என பார்த்தால் அவர் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு முன்பு சென்ற ஆனந்தன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். தனக்கு எங்கும் சரியான குரு கிடைக்காத தனது நிலையை சொல்லி வருந்தினான்.

ஒருபுறம் இதைக் கேட்டுகொண்டே தோட்டத்தில் களைகளை பறித்துகொண்டிருந்தார் முனிவர். தோட்டத்து கிணற்றுக்கு அருகில் ஆனந்தனை அழைத்து வந்து, ஒரு வாளியைக் கொடுத்து தண்ணீர் இரைக்க சொன்னார். பின்பு அவர் தனது களை பறிக்கும் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார். தண்ணீர் எடுக்க முயற்சித்தாலும் வாளியில் தண்ணீர் நிரம்பாததை உணர்த்த ஆனந்தன், வாளியை கிணற்றிலிருந்து வெளியே எடுத்து பார்த்தான். வாளியின் கீழ்புறத்தில் பெரிய ஓட்டை ஒன்று இருந்ததை உணர்ந்தான்.

நேரே முனிவரிடம் வந்து, "குருவே! ஓட்டை வாளியை கொடுத்தால் நீர் எப்படி இரைப்பது?" என கேட்டான் ஆனந்தன். மெல்லிய புன்னகையுடன் முனிவர் அருகில் வந்து, அந்த வாளியை வாங்கிகொண்டார். பின்பு தொடர்ந்தார், "ஆனந்தா, இங்கு அல்ல எங்கு தேடினாலும் உனது குரு கிடைக்க மாட்டார். குறை நீ சந்தித்த குருமார்களிடம் அல்ல உன்னிடம் தான். குருவை அடையவேண்டியவர்கள் முதலில் கிழ்படியும் தன்மையை வளர்த்து கொள்ள வேண்டும். வாளியில் உள்ள ஓட்டையை கண்டவுடன், உனது புத்திசாலித்தனம் வேலை செய்ததே தவிர, குருவை பற்றி நீ சிந்திக்கவில்லை. குருவின் செயலில் எதாவது ஒரு அர்த்தம் இருக்கும் என நீ செயல்பட்டிருந்தால், உனக்கு எப்பொழுதோ குரு கிடைத்து இருப்பார், உனது குருவின் தேடலை மீண்டும் தொடர். எனது ஆசிர்வாதங்கள்"

குருவின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவரே அல்லது குருவின் வார்த்தைகளுக்குக் கீழ்படிந்து நடப்பவரே உண்மையான சீடர் என்னும் உண்மையை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நம்முடைய சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, யாராரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வார் என்று கேட்டுவிட்டு, "என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" என்கின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்று சொன்னால், யாராரெல்லாம் கடவுளின் கட்டளைகளைக்கு கீழ்படிந்து, அதன்படி நடக்கிறார்களோ அவர்கள விண்ணரசுக்குள் செல்வது உறுதி.

ஆண்டவர் இயேசு இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போர் எத்தகையோராய் இருப்பர் என்பதை உருவகத்தின் வழியாக விளக்குகின்றார். இறைவார்த்தையை கேட்டு அதன்படி நடப்போரோ கற்பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார் என்கின்றார். மழை வந்தாலும் ஆறு பெருக்கெடுத்து ஓடினாலும், அது அவ்வீட்டை ஒன்றும் செய்யாது. அது போன்று இறைவார்த்தையைக் கேட்டு நடப்போருடைய வாழ்வில் துன்பங்கள், சவால்கள், பிரச்சனைகள் வந்தாலும் அவையெல்லாம் அவரை செய்யாது என்பது உண்மை.

அதே நேரத்தில் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்காதவரின் நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் ஆண்டவர் இயேசு சுட்டிக்கட்டத் தவறவில்லை. இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்காதோரின் நிலையானது மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார் என்கின்றார். ஏனென்றால் மணல்மீது காட்டப்படும் வீடு உறுதியில்லாமல் இருக்கும். அது ஒரு சாதாரண மழைக்கே ஒன்றுமில்லாமல் போய்விடும். இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடவாதவரும் வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு கஷ்டங்களுக்கே சுக்கு நூறாக உடைந்து போவார்கள். ஆகையால் நாம் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பதனால் கிடைக்கக்கூடிய பேறுபலனைகளை உணர்ந்து, அவ்வாறு நடப்பதே மிகவும் சாலச் சிறந்த ஒரு செயலாகும்.

ஆகவே, இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போம், அதன்மூலம் விண்ணகத்திற்குள் நுழைவதற்கான தகுதி பெறுவோம்; இறையருளை நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!