Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            26  ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 12ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என்பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் எருசலேமைப் பாதுகாத்து விடுவிப்பேன்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 19: 9-11,14-21, 31-35, 36

அந்நாள்களில் அசீரிய மன்னன், எத்தியோப்பிய மன்னனான திராக்கா தனக்கு எதிராய்ப் படை திரட்டிக்கொண்டு வருவதாகக் கேள்வியுற்று, எசேக்கி யாவிடம் மீண்டும் தூதரை அனுப்பி, "யூதா அரசன் எசேக்கியாவிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: "எருசலேம் அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்பட மாட்டாது என்று கூறும் உன் கடவுளை நம்பி ஏமாந்து விடாதே. இதோ! அசீரிய மன்னர்கள் எல்லா நாடுகளுக்கும் செய்திருப்பதையும், அவற்றை முற்றிலும் அழித்ததையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ மட்டும் தப்பிவிட முடியுமா?'' எசேக்கியா தூதரின் கையிலிருந்த மடலை வாங்கி வாசித்தபின் கோவிலினுள் சென்று ஆண்டவர் திருமுன் மடலை விரித்து வைத்தார்.

மேலும் எசேக்கியா ஆண்டவரை மன்றாடிக் கூறியது: " கெருபுகள் மேல் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! ஆண்டவரே! நீர் செவிசாய்த்துக் கேட்டருளும். ஆண்டவரே! உம் விழிகளைத் திறந்து என்னை நோக்கியருளும். தூதனுப்பி என்றுமுள கடவுளைப் பழித்துரைக்கும் சனகெரிபின் சொற்களைக் கேட்பீராக! ஆண்டவரே! அசீரிய மன்னர்கள் வேற்றினத்தாரையும், அவர்கள் நாடுகளையும் அழித்தது உண்மைதான்! அவர்கள் வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளை நெருப்பிலிட்டு எரித்தனர். ஏனெனில் அவை உண்மைக் கடவுளல்ல; மரத்தாலும் கல்லாலும் மனிதன் செய்தவையே; எனவே அவற்றை அழிக்க முடிந்தது. எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும்."

அப்பொழுது ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவிடம் ஆளனுப்பிச் சொன்னது: "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னன் சனகெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டேன். அவனுக்கு எதிராக ஆண்டவர் கூறிய வார்த்தை இதுவே: கன்னிமகள் சீயோன் உன்னை இகழ்கிறாள்; உன்னைப் பார்த்து நகைக்கிறாள்; மகள் எருசலேம் பின் நின்று தலையசைக்கிறாள். ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்து வெளியேறுவர். உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று புறப்படுவர். படைகளின் ஆண்டவரது ஆர்வமே இதை நிறைவேற்றும்! ஆதலால் ஆண்டவர் அசீரிய மன்னனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்: இந்நகருக்குள் அவன் நுழைய மாட்டான்; அதில் அம்பு எய்ய மாட்டான்; அதை எதிர்த்துக் கேடயத்துடன் வரமாட்டான். அதற்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்ப மாட்டான். அவன் வந்த வழியே திரும்பிப் போவான்; இந்நகருக்குள் நுழையவே மாட்டான் என்கிறார் ஆண்டவர்.

இந்நகரை நான் பாதுகாப்பேன்; என்பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் அதை விடுவிப்பேன்." அன்றிரவு ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச் சென்று அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். மக்கள் காலையில் எழுந்தபோது அங்கு அனைவரும் செத்துப் பிணமாய்க் கிடந்ததைக் கண்டனர். எனவே அசீரிய மன்னன் சனகெரிபு திரும்பிச் சென்று நினிவேயில் தங்கியிருந்தான்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 48: 1-2a. 2b-3. 9-10 (பல்லவி: 8d)
=================================================================================
 பல்லவி: கடவுள் தம் நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார்.

1 ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர். 2a தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய் இலங்குகின்றது. பல்லவி

2b மாவேந்தரின் நகரும் அதுவே. 3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார். பல்லவி

9 கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம். 10 கடவுளே! உமது பெயரைப்போலவே, உமது புகழும் பூவுலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6,12-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும்.

மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.

ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே. இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

சிலவற்றை கண்டு பிடிப்பது என்பது பலருக்கு இயலாததாகின்றது.

ஒவ்வொரு வார்த்தைக்கும், சட்டத்திற்கும் அர்த்தங்கள் பலவுண்டு. அவற்றை கண்டறிவது என்பது இயலாததாகின்றது. சிலர் மட்டுமே கண்டறிந்து கொள்கின்றனர்.

இதற்கு ஞானம் வேண்டும். இந்த ஞானத்தை அருள்பவர் இறைவனே. ஞானத்தோடு இவற்றை அறிந்து கொள்பவர்களே வாழ்வை கை கொள்வார்கள்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"பிறர் உங்களுக்கு செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்"

ஓர் அபூர்வமான முனிவரிடம் பெண் ஒருத்தி வந்து, தன் கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக் கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள். முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல், அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்துவிட்டாள். மறுநாளும் சென்று புலியைக் கண்டாள். இன்றும் புலி உறுமியது. இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனால் அருகில் செல்ல பயமாக இருந்ததால் திரும்பி விட்டாள். அவள் தினந்தோறும் இப்படி வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக் கூடிய அளவிற்கு பழக்கம் வந்துவிட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள். அப்போது முனிவர் அந்தப் பெண்மணியிடம் கூறினார், "இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கிவிட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?''

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது. அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள். சில நாட்களிலே அவள் தன் கணவனின் உண்மையை அன்பைப் பெற்றாள்.

ஒருவரிடமிருந்து அன்பைப் பெறுவதற்கு முதலில் நீ அவரை அன்பு செலுத்து என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நம்முடைய சிந்தனைக் குரியதாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பொன்விதியை புதிய விதியைத் தருகின்றார். அதுதான், "பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" என்பதாகும்.

இயேசு சொல்லும் இந்தக் கட்டளை - விதி - ஏன் பொன்விதி என அழைக்கப்படுகின்றதென்றால் பழைய ஏற்பாட்டுக் காலத்தில், "உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே" (தோபி 4:10) என்பதுதான் உயர்ந்த கட்டளையையாகப் பார்க்கப்பட்டது. இந்தக் கட்டளையைப் பார்க்கின்றபோது எதிர்பதத்தில் அதாவது செய்யாதே என்கின்ற பதத்தில் இருப்பது நமக்குத் தெரியவரும். ஆனால் ஆண்டவர் இயேசுவோ இதை அப்படியே மாற்றி, செய் என்கின்ற பதத்தில் மாற்றித் தருகின்றார். இதனாலேயே இது பொன்விதி என அழைக்கப்படுகின்றது

இன்றைக்குப் பலர் மற்றவர் தங்களை அன்பு செய்யவேண்டும், மதிக்கவேண்டும், பாராட்டவேண்டும், உயர்வாக நினைக்கவேண்டும் என்று நினைக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் பிறரை அன்பு செய்யவோ, மதிக்கவோ, பாராட்டவோ, உயர்வாக நினைக்கவோ முன்வர மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களால் ஒருபோதும் மற்றவர்களுடைய அன்பையும் பாராட்டையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் உண்மையிலும் உண்மையான விடயம்.

அன்பு என்பது எதிரொலி போன்றது. எதிரொலியாக எது ஒலிக்கும்? நாம் என்ன பேசுகின்றோமோ அதுதான் ஒலிக்கும். அது போன்றுதான் நம்முடைய வாழ்க்கையும். அன்பையும் மன்னிப்பும் மனித நேயத்தையும் இந்த மண்ணகத்தில் விதையாக விதைத்தோம் என்றால் அதையே நாம் அறுவடை செய்யலாம். அதை விடுத்து பகைமையையும் வெறுப்பையும் விதைத்தோம் என்றால், அவற்றையே நாம் அறுவடை செய்ய முடியும். இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் வன்முறையும் கலவரமும் பெருகி இருப்பதற்கு யார் காரணம்? நம்மைத் தவிர வேறு யார் இருக்க முடியும்?

ஆகவே, தூய பிரான்சிஸ் அசிசியார் வேண்டிக்கொள்வது போல பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்த்து, வேதனை உள்ள இடத்தில் மன்னிப்பை விதைத்து இந்த உலகினை அன்பின் பூக்காடாக மாற்றுவோம். அது மட்டுமல்லாமல் பிறர்தான் நம்மிடத்தில் அன்பு காட்டவேண்டும் என்ற வரட்டுக் கர்வத்தில் இருக்காமல், நாமே முன்சென்று அன்பு செய்வோம், எங்கும் அன்பை மட்டுமே விதைப்போம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
பொன்விதி

ஒருமுறை நம்முடைய தேசத் தந்தை காந்தியடிகளைப் பார்க்க பிரபல ஆயூர்வேத மருத்துவர் ஒருவர் வந்திருந்தார். வந்தவர் காந்தியடிகளிடம் ஆயுர்வேத மருந்தின் சிறப்புகளையும், அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறினார்.

உடனே காந்தியடிகள், "இந்த மருந்தின் மூலம் மனிதருக்கு உண்டாகும் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியுமா?" என்று கேட்டார். அதற்கு அவர், ஓ! சிறப்பாகக் குணப்படுத்தலாமே" என்றார். அதற்கு காந்தியடிகள் அவரிடம், "அப்படியானால் தீண்டாமை என்ற நோயினைக் குணப்படுத்த முடியுமா?" என்று கேட்டார். இதைக் கேட்டதும் அந்த ஆயுர்வேத மருத்துவர் வாயடைத்து நின்றார்.

மனிதருக்கு ஏற்பட்டிருக்கும் எல்லா நோய்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் தீண்டாமை என்னும் கொடியநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாதது மிகவும் கசப்பான உண்மையாகும். இன்றைக்கு மனிதர்கள் இனத்தின் பெயரால், குலத்தின் பெயரில் (சாதியின் பெயரில்) பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் மதிக்காமல், அடித்துக்கொண்டு அழிந்துபோகும் நிலைதான் தொடர்கின்றது. இத்தகைய பின்னணில் இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நமக்குக் கற்றுத்தரும் போதனை மிகவும் பொருத்தமானதாகவும், பொருள் நிறைந்ததாகவும் இருக்கின்றது.

நற்செய்தியில் இயேசு, "பிறர் உங்களுக்கு செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும், திருச்சட்டமும் கூறுவது இதுவே" என்கிறார். அதாவது பிறரால் மதிக்கப்பட வேண்டும், அன்பு செய்யப்படவேண்டும், அக்கறைகாட்டப்பட வேண்டும் என்று விரும்பும் நாம், அதையே பிறருக்குச் செய்யவேண்டும் என்று ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்துக்கிறார்.

இங்கே வேதனை என்னவென்று பார்க்கும்போது மற்றவர் நம்மீது அன்புசெலுத்தவேண்டும், மற்றவர் நம்மை கவனித்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் நாம் பிறர்மீது அன்புசெலுத்தமாட்டோம். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறை இறைவனுக்கு உகந்ததாகாது.

விவேகானந்தர் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவன் செத்துக் கொண்டிருக்கிறான். ஏனெனில் வாழ்வைப் பற்றிய ஒரே விதி அன்பு மட்டுமே" என்று. இது உண்மை. நாம் அன்புமயமாக இருக்கும்போது வாழ்வை, எல்லா ஆசிரையும் கொடையாகப் பெறுகின்றோம்.

குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர். ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டுவந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.

அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன. அவன் மன்னனிடம், "அரசே! உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் கோவிலில் பொங்கல் படைத்தேன். அந்தப் உணவை உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். கடவுளுக்குப் படைத்த உணவைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்" என்றான். அவன் உணவை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, உணவைப் ஏற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.

மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், "அரசே, கெட்டுப் போன உணவிற்கா முத்து மாலை பரிசு?" என்று கேட்டார். மன்னனோ, "அது கெட்டிருந்தாலும் அந்த உணவை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து இரண்டு நாட்கள் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது" என்று கூறினான்.

நாம் ஒருவரிடம் அளவு கடந்த அன்புகாட்டும்போது அதற்கு ஈடாக நாம் பெரும் கைம்மாறு அதிகம். ஆகவே, பிறர் நம்மை அன்பு செய்யவேண்டும் என்று விரும்பும் நாம் நம்மோடு வாழும் சக மனிதர்களை அன்பு செய்வோம், அவர்களை மனிதர்களாக மதிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!