Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            25  ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 11ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவர் இஸ்ரயேலைத் தள்ளிவிட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 17: 5-8,13-15,18


அந்நாள்களில் அசீரியா மன்னன், நாடு முழுவதன் மேலும் படையெடுத்து, சமாரியாவுக்கு வந்து, அதை மூன்றாண்டு அளவு முற்றுகையிட்டான். ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான். அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக் கரையிலும், மேதியர் நகர்களிலும் குடியேற்றினான். ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும் அந்நாட்டு மன்னன் பார்வோனின் கையினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து வேற்றுத் தெய்வங்களைத் தொழுது வந்தனர். மேலும் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் விதிமுறைகளின்படியும், இஸ்ரயேல் அரசர்கள் புகுத்திய வழக்கங்களின் படியும் நடந்து வந்தனர்.
ஆயினும் ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர் மூலம் இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் விடுத்திருந்த எச்சரிக்கை இதுவே: "உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்கள் மூதாதையருக்கு நான் கட்டளையிட்டு என் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம் நான் அறிவித்த திருச்சட்டத்தின்படி என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள்." ஆனால் அவர்களோ செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்; ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்து, வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்; 'வேற்றினத் தாரைப் பின்பற்றலாகாது' என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர். எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளிவிட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 60: 1. 2-3. 10-12
=================================================================================
 பல்லவி: உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு, உமது வலதுக்கரத்தால் எங்களுக்குத் துணை செய்யும்;

1 கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டீர்; எங்களை நொறுக்கிவிட்டீர்; எங்கள்மீது சீற்றம் கொண்டீர்; இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும். பல்லவி

2 நிலத்தை நீர் அதிரச் செய்தீர்; அதில் பிளவு உண்டாகச் செய்தீர்; அதன் வெடிப்புகளைச் சீர்படுத்தும், அது ஆட்டம் கண்டுள்ளது; 3 உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்; மதியை மயக்கும் மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். பல்லவி

10 கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு விட்டீர் அன்றோ! கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ! 11 எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; மனிதர் தரும் உதவியோ வீண். 12 கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்; அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா!கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது.
அல்லேலூயா!
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள்.

தூயமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5


அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், `உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக் கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தீர்ப்பிடாதீர்கள்! அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள்!

காட்டில் துறவி ஒருவர் வசித்து வந்தார். ஒருநாள் அவரைச் சந்திக்க இளைஞன் ஒருவன் வந்தான். வந்தவன் துறவியின் காலில் முகங்குப்புற விழுந்து வணங்கினான். பின்னர் அவன் துறவியிடம், "சுவாமி! உங்களிடம் நான் பாடம் கற்க வந்திருக்கின்றேன். என்னை நீங்கள் உங்களுடைய சீடராக ஏற்றுக்கொண்டு, எனக்குப் பாடம் கற்றுத்தாருங்கள்" என்றான்.

உடனே துறவி அவனிடம், "சரி நான் உன்னை என்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு உனக்குப் பாடம் கற்பிக்கின்றேன். அதற்கு முன்னதாக, இவ்வளவு தூரத்தில் இருக்கும் என்னை எப்படி வந்து சந்தித்தாய்? என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்" என்றார். உடனே அந்த இளைஞன், "சுவாமி! நான் ஒரு குதிரை வைத்திருக்கிறேன். அதை வைத்துத்தான் இவ்வளவு தூரம் வந்தேன்" என்றான். "அப்படியா! இனிமேல் நீ குதிரையில் வரக்கூடாது, மாறாக இங்கே ஓர் ஆற்றுப்பாதை இருக்கின்றது. அதில் ஒரு படகு இருக்கின்றது. அதில்தான் நீ வரவேண்டும். அப்போதுதான் நான் உனக்குப் பாடம் கற்பிப்பான்" என்றார் துறவி. இளைஞனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டான்.

மறுநாள் காலை இளைஞன் துறவி சொன்னது போன்றே ஆற்றுப்பாதை வழியாக வரத் தொடங்கினான். ஆற்றில் ஒரு படகு இருந்தது, அந்தப் படகை வயது முதிர்ந்த படகோட்டி ஒருவர் ஓட்டி வந்தார். இளைஞன் அங்கு வந்த நேரத்தில் பெரியவர் ஒருவர் கிழிந்த ஆடைகளுடன், கையில் தான் பிடித்த மீன்களை வைத்துக்கொண்டு அதில் அமர்ந்திருந்தார். அந்தப் பெரியவரிடமிருந்து வந்த துர்நாற்றத்தை அவனால் அடக்கமுடியவில்லை. இருந்தாலும் துறவி சொன்னதற்கிணங்க படகில் ஏறி, ஆற்றுப்பாதை வழியாக துறவியை சென்றடைந்தான்.

துறவியைச் சென்றடைந்ததும் அவன் நடந்தது அனைத்தையும் அவரிடத்தில் கூறி, "தயவுசெய்து நான் வேறுவழியில் வர என்னை அனுமதியுங்கள். படகில் வரும் அந்தக் கிழவனிடமிருந்து வெளிவரும் துர்நாற்றத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை" என்றான். அதற்குத் துறவி அவனிடம், "அப்படியெல்லாம் முடியாது. நீ கற்றுக்கொள்ள வேண்டிய பாடமே படகில் உன்னோடு வரக்கூடிய அந்தப் பெரியவரிடதிலிருந்துதான். ஆதலால் நாளைய தினத்தில் அவரிடத்தில், என்ன வேலை பார்க்கிறீர்கள்? என்று கேள்" என்று சொல்லி அனுப்பி வைத்தார். இளைஞனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.

மறுநாள் அவன் ஆற்றங்கரைக்கு வந்தபோது படகு இருந்தது. அதில் படகோட்டியும் அந்த மீன்பிடிக்கின்ற பெரியவரும் இருந்தனர். இளைஞன் அதில் ஏற, படகு மெல்ல நகரத் தொடங்கியது. அப்போது அவன் அந்தப் பெரியவரிடம், "ஐயா! நீங்கள் யார்? என்ன வேலை பார்க்கின்றீர்கள்? என்று கேட்டான். அதற்கு அந்தப் பெரியவர், "தம்பி நான் ஒரு அனாதை, எனக்கு குடும்பமோ குழந்தைகளோ கிடையாது. நான் இங்கே மீன்படித்து அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு, என்னைப் போன்று அனாதைகளாக இருக்கின்ற மூன்று பையன்களைப் பராமரித்து வருகின்றேன்" என்றார், அந்தப் பெரியவர் இவ்வாறு சொல்லச் சொல்ல, அந்த இளைஞனுடைய உள்ளத்தில் அவரைக் குறித்த தவறான எண்ணம் படிப்படியாக மறையத் தொடங்கியது.

அவன் படகிலிருந்து இறங்கி நேராக துறவியிடத்தில் வந்து, நடந்தது அனைத்தையும் கூறினான். அப்போது துறவி அவனிடத்தில் சொன்னார், யாரையும் தவறாக எடைபோட்டுவிடக் கூடாது. மாறாக அவர்களை அவர்கள் இருக்கின்ற நிலையிலே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் நான் உனக்குக் கற்றுத் தரும் முதன்மையான மற்றும் தலையாய பாடம்" என்றார். இளைஞனும் துறவி சொன்னதை வேதவாக்காக எல்லாரையும் நிறைகுறைகளோடு ஏற்று வாழ்ந்து வந்தான்.

ஒருவரை மேம்போக்காகப் பார்த்து இவர் இப்படித்தான் என்று தீர்ப்பிடுவது தவறானது. மாறாக யாவரையும் அவர் இருக்கின்ற நிலையிலே ஏற்றுகொள்ள வேண்டும் என்ற உண்மையைச் சொல்லும் இந்த கதை நமத் சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர், "தீர்ப்பிடாதீர்கள், அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்" என்கின்றார். நாம் ஏன் தீர்ப்பிடக்கூடாது என்றால், நாமே குறைவுள்ளவர்கள். இப்படி நம்மிடத்தில் குறையை வைத்துக்கொண்டு பிறரைத் தீர்ப்பிடுவது எந்தவிதத்தில் நியாயம் என்பதால்தான் இயேசு தீர்ப்பிடவேண்டாம் என்கின்றார்.

ஆகவே, நம்முடைய குடும்ப மற்றும் சமூக வாழ்வில் ஒருவர் மற்றவரைத் தீர்ப்பிடாமல், அவர் இருக்கின்ற நிலையிலே ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
தீர்ப்பிடாது வாழ்வோம்

நியூயார்க் நகரில் ஆயராக இருந்த போட்டர் (Pottar) என்பவர் மறைப்பணிக்காக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல நேர்ந்தது. அப்போதெல்லாம் விமான வசதி கிடையாது. கப்பல் போக்குவரத்து மட்டுமே இருந்தது. எனவே அவர் தன்னுடைய பயணத்தை கப்பலில் அமைத்துக் கொண்டார்.

கப்பலில் அவர் தங்கக்கூடிய அறையை இன்னொருவரோடு பகிர்ந்துகொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருந்தார். அப்போது ஆயருக்குள்ளே ஒருவிதமான யோசனை ஓடியது. இந்த மனிதரைப் பார்ப்பதற்கு ஒரு திருடன் போன்று அல்லவா இருக்கிறது. ஒருவேளை நாம் அசந்து தூங்கும்வேளையில் இந்த மனிதர் நம்மிடம் இருக்கும் விலையுயர்ந்த பொருளை எடுத்துக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது?, ஆதலால் நம்மிடம் இருக்கும் பொருட்களை பொருட்கள் காப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு, போகும்போது வாங்கிக்கொள்வது நல்லது என்று யோசித்தார். அதன்படியே தன்னோடு கொண்டுவந்த பொருட்களை பொருட்கள் காப்பாளரிடம் கொண்டுபோய் ஒப்படைத்தார்.

அப்போது ஆயர் அவரிடத்தில் சொன்னார். "வழக்கமாக நான் எங்காவது வெளியே சென்றால், பொருட்களை என்னோடுதான் வைத்துக்கொள்வேன். ஆனால் இன்றைக்கு என்னோடு பயணம்செய்யும் மனிதர் பார்ப்பதற்கு ஒரு திருடன் போன்று இருக்கிறார். அதனால்தான் இப்படிச் செய்கிறேன்" என்றார். பொருட்கள் காப்பாளரும் சரி என்று சொல்லிவிட்டு, பொருட்களை வாங்கி உள்ளே வைத்தார்.

பின்னர் அவர் ஆயரிடத்தில் சொன்னார், "ஆயர் அவர்களே! உங்களிடம் நான் ஒன்று சொல்லிக்கொள்ளலாமா? என்று கேட்டார். அதற்கு ஆயர், "என்ன?" என்று கேட்டார். அதற்கு பொருட்கள் காப்பாளர் மறுமொழியாக, "சிறுது நேரத்திற்கு முன்பாக உங்களோடு அறையைப் பகிர்ந்துகொள்ளும் மனிதர் என்னிடத்தில் வந்து, தன்னிடத்தில் இருந்த பொருட்களை எல்லாம் ஒப்படைத்துவிட்டு இந்த பொருட்களை எல்லாம் பத்திரமாக வைத்திருங்கள், ஏனென்றால் என்னோடு பயணம் செய்யும் மனிதர் அதாவது நீங்கள் பார்ப்பது ஒரு திருடன் போன்று இருக்கிறார் என்று சொல்லிவிட்டுச் சென்றார்" என்றார்.

இதைக் கேட்ட ஆயருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

பிறரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கிறோம். ஆனால் நம்மிடத்தில் ஆயிரம் குறைகள் இருக்கிறது என்பதுதான் வேடிக்கையான உண்மையாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள், அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள்" என்கிறார். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை தேவையில்லாமல் தீர்ப்பிடுகின்றோம். இவன் திருடன், கொலைகாரன், பாவி... என்று பலவாறாகத் தீர்ப்பிடுகின்றோம். ஆனால் நாம் நல்லவர்களா?, குற்றமற்றவர்களாக என்று சிந்தித்துப் பார்த்தால் அங்கே வேதனை மட்டுமே மிஞ்சுகிறது.

யோவான் நற்செய்தி எட்டாம் அதிகாரத்தில், யூதர்கள் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டுவந்து இவளுக்கு நீர் என்ன தீர்ப்பளிக்கிறீர்? என்று கேட்டபோது, இயேசு அவர்களிடம், "உங்களில் பாவம் செய்யாதவர் முதலில் இப்பெண்ணின்மீது கல் எறியட்டும்" என்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது பாவம் செய்யாத ஒருவரே இன்னொருவர்மீது தீர்பளிக்கமுடியும் என்பது தெளிவாகப் புரிகிறது. ஆனால் நாமோ பாவிகள், குற்றவாளிகள்.

இன்னும் ஒருசில நேரங்களில் நமது தீர்ப்புகள் யாவும் ஒருதலைபட்சமாக, முன்சார்பு எண்ணத்தோடு இருக்கிறது. ஆதலால் ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமலும், முன்சார்பு எண்ணத்தோடும் தீர்ப்பிடுவதும் சரியானதல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

திருப்பாடல் 9: 8 ல் வாசிக்கின்றோம், "உலகிற்கு அவர் (கடவுள்) நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார்" என்று. ஆகவே, கடவுள் ஒருவரால் மட்டுமே நேர்மையான, நீதியான தீர்ப்பு வழங்க முடியும். நாம் வழங்கும் தீர்ப்பு அநீதியானது, தகுதியற்றது. எனவே, இத்தகைய உண்மையை நாம் உணர்ந்துகொண்டு ஒருவர் மற்றவரைத் தீர்ப்பிடாது வாழ்வோம். அடுத்தவரைப் பற்றிய நல்ல எண்ணத்தை நம்முடைய உள்ளத்தில் வளர்த்துக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் நிறைவான வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!