Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     24 சூன் 2018  
                                         புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழ
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6

தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள் போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக் கொண்டார்.

அவர் என்னிடம், "நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். நானோ, "வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது' என்றேன்.

யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 139: 1-3. 13-14. 15 (பல்லவி: 14A)
=================================================================================
பல்லவி: வியத்தகு முறையில் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்.

1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. பல்லவி

13 ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! 14 அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். பல்லவி

15 என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
இயேசுவின் வருகைக்கு முன்பே யோவான் போதித்து வந்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 22-26


அந்நாள்களில் பவுல் கூறியது: கடவுள் சவுலை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து "ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.

அவருடைய வருகைக்கு முன்பே யோவான், "மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார்.

யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில், "நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப் பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை' என்று கூறினார்.

சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 1: 76

காண்க அல்லேலூயா, அல்லேலூயா! குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இக்குழந்தையின் பெயர் யோவான்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66, 80

எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.

எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார்.

அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி, "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.

அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.

கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது. குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து மன வலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

குழந்ழைதகள் ஆண்டவருடைய கைவன்மையை பெற்றிருக்குமா? இந்த குழந்தை மட்டும் ஆண்டவருடைய கைவன்மையை பெற்றிருந்ததா?

எல்லா குழந்தைகளும் ஆண்டவருடைய குழந்தைகள் தான் என்றாலும் சில குழந்தைகள் ஆண்டவருடைய சிறப்பான கைவன்மையை பெற்றிருக்கிறது என்பதிலே மாற்றுக் கருத்து இல்லை.

இந்த குழந்தை சிறப்பு பெற்றது. மெசியாவை அறிவிக்க வந்ந இறுதி இறைவாக்கினர்.

அவரை சுட்டிக் காட்டும் பாக்கியம் பெற்றது.

சம காலத்தில் வாழும் பாக்கியம் பெற்றது.

இறையாட்சிக்காக இரத்தம் சிந்தி சாட்சியம் பகர வாய்ப்பு பெற்றது.

ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றதாலே இத்தகைய வாய்ப்பபுக்கள்.

பிறப்பிலே அவர் முன் கூறிக்கப்பட்டதாலே இத்தகைய சிறப்பு.

நாமும் பிறப்பதற்கு முன்பாகவே முன் கூறிக்கப்பட்டதாலேஈ பிறந்த பின்னர் அவரை அறியும் பாக்கியம் பெற்றோம்.

அவரையே உணவாக பெறும் பாக்கியம் பெற்றோம்.

நம்மோடு கூடவே வாழும் அவருக்கு சாட்சியாக இரத்தம் சிந்தாவிட்டாலும் பாவத்திற்கான போராட்டத்தில் தீவிரமாக உள்ளோமா? சுய ஆய்வு காலத்தின் கட்டாயம். எபி 12: 04


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழா


இன்று திருச்சபையானது திருமுழுக்கு யோவானின் பிறப்புவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. ஆண்டவர் இயேசு, அன்னை மரியாள், ஆகியோருக்கு அடுத்து திருமுழுக்கு யோவானின் பிறப்புவிழாவைத்தான் திருச்சபையானது சிறப்பாக நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றது. இதை வைத்துப்பார்க்கும் திருச்சபை வரலாற்றில் திருமுழுக்கு யோவான் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இறுதி இறைவாக்கினர், ஆண்டவர் இயேசுவின் முன்னோடி, ஆண்டவருக்காக மக்களைத் தயாரித்தவர் என பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் பெண்களுள் பிறந்தவர்களுள் பெரியவர் (மத் 11:11) என்ற சிறப்புப் பெயரால் அவரை அழைப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

திருமுழுக்கு யோவானின் வாழ்வைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கும்போது அவருடைய வாழ்வே வியப்புகளாலும், அதிசயங்களாலும் நிறைந்திருக்கின்ற ஒன்று என்பதை நம்மால் மறுக்கமுடியாது. இவர் எலிசபெத்து, செக்கரியா என்ற வயதான பெற்றோருக்கு மகனாகப் பிறக்கின்றார். இவரது வாழ்வும்கூட மற்ற மனிதர்களைப் போன்று அல்லாமல், வித்தியாசமாகவே இருக்கின்றது. வெட்டுக்கிளியையும், காட்டுத் தேனையும் உணவாக உட்கொள்கிறார்; ஒட்டக மயிராடையை ஆடையாக உடுத்துகிறார். அப்படியிருந்தும் அவர் ஆற்றிய பணிதான் நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

திருமுழுக்கு யோவான் இறைவாக்கினர் எலியாவின் உளப்பாங்கையும், ஆண்டவருடைய கைவன்மையையும் பெற்றிருந்தார். அதனால்தான் அவரால் மெசியாவின் வருகையைப் பற்றி மக்களுக்கு துணிவுடன் நற்செய்தி அறிவிக்க முடிந்தது. அதோடு மட்டுமல்லாமல், மக்கள் தங்களுடைய பாவ வாழ்விலிருந்து விலகி, புது வாழ்வு வாழவும் அழைக்க முடிந்தது. இதன் உச்சம்தான் தன்னுடைய சகோதரனின் மனைவியோடு வாழ்ந்த ஏரோதை எச்சரிக்க முடிந்தது, அதற்கு ஈடாக தன்னுடைய உயிரையும் விலையாகத் தரமுடிந்தது.

திருமுழுக்கு யோவானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான பாடம் அவர் மிகப்பெரிய இறைவாக்கினராக இருந்தாலும், "நான் மெசியா அல்ல, மெசியாவைக் குறித்து சான்று பகரவே வந்தேன்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவன் என்று சொல்லி தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதுதான். இவரது விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் தாழ்ச்சியுள்ளவர்களாக வாழ முயல்வதே மிகச் சிறந்த சாட்சிய வாழ்வாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுள்ளமில்லை.

ஒருமுறை உலகப் பணக்காரர்கள் எல்லாம் ஒன்றுகூடிய ஒரு கூட்டத்தில் திடிரென்று ஜெபம் பற்றிய பேச்சு எழுந்தது. அப்போது ஒரு பணக்காரர் எழுந்து, "நான் மற்ற மனிதர்கள், பணக்காரார்கள் போன்று அல்ல, என்னுடைய சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவன். அதனால் நான் எதற்காகவும் இறைவனிடம் ஜெபதில்லை, ஜெபம் எனக்குத் தேவையுமில்லை என்று ஆணவத்தோடு பேசினார்.

அதற்கு அந்த பணக்காரருக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு பணக்காரார் இவ்வாறு பதிலளித்தார், "நான் எதற்காகவும் இறைவனிடம் ஜெபித்ததில்லை நீ என்று ஆணவத்தில் பேசாதே, பணம் இன்று போகும், நாளை வரும். ஆனால் இறைவனின் பராமரிப்பு நமக்கு எப்போதும் உண்டு. ஆகவே உன்னுடைய உள்ளத்தில் இருக்கும் ஆணவம் விலகி, தாழ்ச்சி பெருக வேண்டுமாய் ஜெபி. கடவுள் உனக்கு எல்லாவிதமான ஆசிரையும் தருவார் என்றார்.

என்னிடம் பணம், பொருள் செல்வம் எல்லாம் இருக்கிறது. அதனால் நான் எதற்கு இறைவனிடம் ஜெபிக்கவேண்டும் என்று நினைக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு எண்ணம் நமக்கு அழிவைத்தான் தரும். மாறாக தாழ்ச்சியோடு நாம் வாழும்போது இறைவனின் அருள் நமக்கு நிரம்பக் கிடக்கும்.

நீதிமொழிகள் புத்தகம் 14:34 ல் வாசிக்கின்றோம் "மேன்மையடைய தாழ்மையே வழி என்று. ஆகவே, திருமுழுக்கு யோவானைப் போன்று தாழ்ச்சி என்ற புண்ணியத்தில் வளர்வோம். தாயின் கருவில் முன்குறித்து வைக்கப்பட்டு, இறைவனுடைய நெஞ்சத்திற்கு நெருக்கமாக இருக்கும் நாம் எல்லா மக்களுக்கும் ஒளியாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
==================================================================================================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இக்குழந்தையின் பெயர் யோவான்!

எசாயா 49:1-6
திருத்தூதர் பணிகள் 13:22-26
லூக்கா 1:57-66,80

இயேசு, அன்னை கன்னி மரியாள் ஆகியோரைத் தொடர்ந்து திருஅவை வழிபாட்டு ஆண்டில் பிறந்தநாள் கொண்டாடப்படுவது திருமுழுக்கு யோவானுக்கு. 'மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை' (லூக் 7:28) என்று இயேசுவால் புகழாரம் சூட்டப்பட்ட இவரின் பிறப்பு இன்று நமக்குச் சொல்வது என்ன என்பதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தின் ஒரு வரியாக வருவதை எடுத்து அதையே மையக்கருத்தாக்கிக் கொள்வோம்: 'இக்குழந்தையின் பெயர் யோவான்!' வாய்பேச முடியாத தந்தை சக்கரியா சிலேட்டில் எழுதுகுச்சி கொண்டு எழுதிய முதல் மற்றும் இறுதிச் சொற்றொடர் இதுவே.

லூக்கா நற்செய்தியாளரின் நிகழ்வுகள் பதிவின்படி மனித வரலாற்றில் கடவுள் எழுதிய முதல் மூன்றுவார்த்தைகள்தாம் இவை: 'இக்குழந்தையின் பெயர் யோவான்!' கடவுள் இம்மூன்று வார்த்தைகளை எழுதுவதற்கு முன் சமூகமும் மூன்று வார்த்தைகளை எழுதி வைத்திருந்தது: 'இவர்களுக்குக் குழந்தை இல்லை!' 'இவர்களுக்குக் குழந்தை இல்லை' என்னும் மூன்று வார்த்தைகளை, 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என அழித்து எழுதுகின்றார் கடவுள். 'இல்லை' என்ற இடத்தில் 'கடவுளின் அருள்' பொங்கி வருகிறது.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலம் 'செயற்கை கருத்தரித்தல் காலம்' என்று சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன் வெறும் ஆராய்ச்சி வடிவத்திலும், இலைமறை காயாகவும் ஒளிந்திருந்த செயற்கை கருத்தரித்தல் இன்று மூலைக்கு மூலை மருத்துவமனைகளாக, விளம்பரப் பதாகைகளாக மண்டிக்கிடக்கின்றன. தமிழகத்தில் 10க்கு 4 குழந்தைகள் 'செயற்கை கருத்தரித்தல் வழியாக' பிறந்தவை என்று சொல்லப்படுகின்றன. குழந்தை இல்லாதவர்களுக்கு அல்லது இயலாதவர்களுக்கு இது அறிவியலின் கொடை என்றாலும், இவ்வகை கருத்தரித்தலில் இருக்கின்ற செயற்கைத்தனமும், தாய்-சேய், தந்தை-செய் அந்நியமயமாதலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. 'பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம். மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்' (திபா 127:3) என்பதுதான் விவிலிய மரபின் புரிதலாக இருக்கிறது. குழந்தைப்பேறு இல்லாத சக்கரியாவும், எலிசபெத்தும் குழந்தைப் பேறு அடைகின்றனர்.

திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்வு என்பது முதல் ஏற்பாட்டின் 'மலடி பிள்ளைப்பேறு அடைதல்' என்னும் இலக்கிய யுக்தியைப் பின்பற்றியே அமைந்திருக்கிறது. நீதித்தலைவர் சிம்சோனின் பிறப்பு, இறைவாக்கினர் சாமுவேலின் பிறப்பு போன்ற பிறப்பு நிகழ்வுகளின் பின்புலத்தில் உருவானதே 'திருமுழுக்கு யோவான் கதையாடல்' என்பது விவிலிய ஆசிரியர்களின் கருத்து. இந்த யுக்தியின்படி, 'ஒருவர் பிள்ளைப்பேறு இல்லாமல் இருப்பார். சுற்றத்தார் அவரைக் கேலி பேசுவர். அவர் கடவுளிடம் முறையிடுவார். கடவுள் அவரின் விண்ணப்பத்தைக் கேட்பார். கருவுற இயலாதவர் கருத்தாங்கி குழந்தை பெறுவார். அந்தக் குழந்தை மீண்டும் கடவுளுக்கே அர்ப்பணம் செய்யப்படும்' - இந்த ஃபார்முலாவை நாம் சிம்சோன், சாமுவேல், திருமுழுக்கு யோவான் கதையாடல்களில் பார்க்கிறோம். இந்தப் பின்புலத்தில் பார்த்தால் திருமுழுக்கு யோவானின் பிறப்பு என்பது விவிலிய ஆசிரியரின் கற்பனைப் படைப்பு என்று நாம் சுருக்கிவிட வாய்ப்பு இருக்கிறது. இங்கே ஆசிரியர் தன் கதையாடல் வழியாக எதைச் சொல்ல விரும்புகிறார் என்பதை நாம் கவனித்தல் அவசியம்.

குழந்தையற்று இருந்த சக்கரியாவும், எலிசபெத்தும் குழந்தை பெற்றெடுக்கின்றனர்.

'இல்லை' என்ற நிலை மாறி, 'இருக்கு' என்ற நிலை உருவாகிறது.

ஊராரின் கேலிப்பேச்சு அடங்குகிறது.

சுற்றத்தாரின் பார்வையில் எலிசபெத்து உயர்த்தப்படுகிறார்.

அழுகை மறைந்து மகிழ்ச்சி பிறக்கிறது.

மூடியிருந்த வாய் கட்டவிழ்க்கப்படுகிறது.

திருமுழுக்கு யோவானின் பிறப்பை நாம் மனித பார்வையில் பார்த்தோமென்றால் மேற்காணும் சிந்தனைகள் நம்மில் எழுகின்றன. ஆனால், கடவுளின் பார்வையில் திருமுழுக்கு யோவானி; பிறப்பு இவற்றையெல்லாம் கடந்த செய்தியைக் கொண்டுவருகிறது. அது என்ன? 'இக்குழந்தையின் பெயர் யோவான்'

இதை நாம் எப்படி புரிந்துகொள்வது?

எலிசபெத்தின் சுற்றத்தார் தந்தையின் பெயரான 'செக்கரியா' என்ற பெயரைக் குழந்தைக்குச் சூட்ட நினைக்கின்றனர். (எலிசபெத்தும் இதற்கு மறுப்பு தெரிவிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. 'யோவான்' என்ற பெயரை சக்கரியா எலிசபெத்துக்கு எப்படிச் சொல்லியிருப்பார்?) 'செக்கரியா' என்றால் 'ஆண்டவர் நினைகூறுகின்றார்' அல்லது 'ஆண்டவர் நினைவுகூர்ந்தார்' என்பது பொருள். இந்தப் பெயரை எலிசபெத்து மறுக்கக் காரணம் 'ஆண்டவர் நினைவுகூர்வதோடு' நில்லாமல் 'ஆண்டவர் செயலாற்றினார்' என்று அவர் உணர்ந்ததே. 'இன்று மாலை நான் மாத்திரை எடுக்க வேண்டும்' என்பது 'நினைவுகூர்தல்' என்றால், 'இன்று மாலை நான் மாத்திரை எடுப்பது' செயல். ஆக, கடவுள் நினைவுகூர்பவர் மட்டுமல்ல. மாறாக, அவர் செயலாற்றுபவர். அவரின் செயல் எப்படி இருக்கிறது? 'யோவான்' என்ற பெயரில் இக்கேள்விக்கான பதில் இருக்கிறது.

'யோவான்' என்றால் 'ஆண்டவர் இரக்கம் காட்டினர்' அல்லது 'ஆண்டவர் இரக்கமுடையவர்' அல்லது 'ஆண்டவர் இரங்கினார்' என்பது பொருள். 'ஹனான்' என்றால் வயிறு. இரக்கம், கனிவு, பரிவு போன்ற உணர்வுகள் வயிற்றில் பிறப்பதாக எண்ணியது எபிரேய இலக்கியம். நம் உடலில் நாம் குனிந்து பார்க்கும்போது நம் கண்களில் தெரிவது வயிறு. ஆக, 'கடவுள் மனுக்குலத்தின்மேல் குனிந்து பார்க்கும்போது அந்த வயிற்றில் பிறப்பது இரக்கம்.' விவிலிய எடுத்துக்காட்டுக்களிலும் இதைப் பார்க்கலாம். நல்ல சமாரியன் அடிபட்டுக் கிடந்தவனைக் 'குனிந்து பார்க்கிறான்' - 'இரக்கம் பிறக்கிறது.' ஊதாரி மகன் எடுத்துக்காட்டில் தந்தை தன் இளைய மகனைக் 'குனிந்து பார்க்கிறார்' - 'இரக்கம் பிறக்கிறது.'

கடவுள் குனிந்து பார்த்தல் கடவுளுக்குக் தாழ்ச்சி. ஆகையால்தான், தாழ்ச்சி என்ற மதிப்பீட்டை தன் மேலாடையாக அணிந்துகொள்கிறார் யோவான். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். திப 13:22-26) தூய பவுலின் போதனையின் ஒரு பகுதியாக நாம் பார்க்கிறோம்: 'நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ எனக்குப்பின் ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை.'

இரண்டாவதாக, சக்கரியாவின் வாய் கட்டவிழ்வதிலும் ஒரு உருவகம் இருப்பதை நாம் பார்க்கிறோம். 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று சக்கரியா எழுதியவுடன், அவரின் நா கட்டவிழ்கிறது. இங்கே கட்டவிழ்வது சக்கரியாவின் நா மட்டுமல்ல. யோவானின் நாவும்தான். ஏனெனில் ஆண்டவரின் வருகைக்காக பாலைநிலத்தில் ஒலிக்கப்போகும் 'குரல்'தான் யோவான். தான் யோவான் என்ற பெயர் ஏற்கும்போதே தன் பணியும், வாழ்வும் என்ன என்பதை உணர்ந்துகொள்கிறார் யோவான். ஆக, 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்பது சக்கரியா மற்றவர்களுக்குச் சொன்ன வார்த்தைகள் அல்ல. மாறாக, அவை குழந்தைக்குச் சொன்ன வார்த்தைகள். இவ்வாறாக, தன் பணியின் அழைப்பு பெயர்சூட்டும் விழாவில் பெறுகிறார் யோவான். வரவிருக்கும் மெசியா இன்றைய முதல்வாசகத்தில் (காண். எசா 49:1-6) முன்னுரைக்கும் இறைவாக்கினர் எசாயா, 'கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார். என் தாய் வயிற்றில் இருக்கும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்' என்று சொல்வது இத்தகைய அழைப்பைத்தான். ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்டவரின் மேலான நிலையை தொடர்ந்து இறைவாக்கினர் இப்படி எழுதுகிறார்:

'தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்' - பேருந்துக்காக காத்திருக்கும் நிறுத்தத்தின் மேற்கூரை ஓட்டை வழியும் வரும் சூரியக் கதிர் தன் குழந்தையின் முகத்திற்கு நேரே விழும்போது அதைத் தடுக்க தன் உள்ளங்கையைக் குடையாக விரித்துக் குழந்தைக்கு நிழல்தரும் அன்னை போல. கொஞ்ச வெயில்கூட நம்மைச் சுட்டுவிடக்கூடாது என்பது கடவுளின் ஆதங்கமாக இருக்கிறது.

'என்னைப் பளபளபாக்கும் அம்பாக்கினார்' - பளபளப்பான அம்பு கூர்மையாக இருக்கும். தான் எதற்காக செய்யப்பட்டதோ அந்த வேலையைச் செய்து முடிக்கும். அந்த அம்பை அவர் 'அம்பறாத் தூணியில் மறைத்துக்கொண்டார்'. 'அம்பறாத் தூணி' என்பது அம்புகள் ஒன்றாக வைக்கப்பட்டு தோளில் தொங்கவிடப்படும் ஒரு நீள்குடுவை. எதிரியை இறுதியாகவும், ஒரேயடியாகவும் அழிக்கப் பயன்படும் அம்பு இங்கேதான் மறைத்துவைக்கப்படும். இவ்வாறாக, 'தேர்ந்தெடுக்கப்பட்டவரின் மதிப்பு' (காண். 49:3) இங்கே சொல்லப்படுகிறது.

இவ்வாறாக, கடவுளின் பார்வையில் திருமுழுக்கு யோவானின் பிறப்பு ஓர் அழைத்தல் நிகழ்வாகவும், தன் ஒரே மகனின் வருகைக்கான தயாரிப்பு நிகழ்வாகவும் இருக்கிறது.

இன்றைய பிறந்தநாள் நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

'இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், கடவுள் இந்த உலகை இன்னும் வெறுத்துவிடவில்லை' என்று காட்டுகிறது என்கிறார் தாகூர். திருமுழுக்கு யோவான் பிறந்தபோது, 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று சொல்லப்பட்டது. நீங்களும், நானும் பிறக்கும்போதும் 'இக்குழந்தையின் பெயர் ....' என்று சொல்லப்பட்டது. 'யோவான்' என்ற பெயர் உருவகமாக உங்களுக்கும், எனக்கும் பொருந்துகிறது. ஏனெனில் நீங்களும், நானும் இருக்கக் காரணம் 'கடவுளின் இரக்கமே.' நாம் நம் வாழ்வில் நகர்த்தும் ஒவ்வொரு தருணமும் அவரின் இரக்கத்தின் கொடையே.

1. ஆண்டவரின் கைவன்மை

'அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது' என்கிறார் லூக்கா. ஒரு அழகிய ஓவியத்தை அல்லது புத்தகத்தை அல்லது தோட்டத்தைப் பார்க்கும்போது, 'இது யாருடைய கைவண்ணம்?' என நாம் கேட்கின்றோம். உருவாக்குபவரின் கைவண்ணம் உருவாக்கப்பட்ட பொருளில் பதிகிறது. குறைகளுள்ள கைகளே நிறைவான பொருள்களைப் படைக்க முடிகிறது என்றால், குறைகளற்ற கடவுளின் கைகள் எவ்வளவு அழகான பொருளை உருவாக்கும்? 'ஆண்டவரின் கைவன்மை' யோவானோடு இருந்ததுபோல நம்மிடமும் இருக்கிறது. இதை நாம் இரண்டு வார்த்தைகளில் புரிந்துகொள்வோம்: முதலில், 'இலக்கு' ('goal'). 'இலக்கு' என்பது நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் நாமே தேர்ந்துகொள்வது. நாம் செய்யும் பணிகள் பெரும்பாலும் நம்முடைய இலக்குகள் ஆகின்றன. 'நல்ல ஆசிரியராக இருப்பது,' 'நல்ல அருள்பணியாளராக துறவியாக இருப்பது,' 'நல்ல மருத்துவராக இருப்பது,' 'நல்ல மனையாளாக இருப்பது' என நாம் இலக்குகள் நிர்ணயம் செய்கிறோம். இந்த இலக்குகளை நோக்கி நாம் பயணம் செய்கிறோம். ஆனால், இலக்கையும் தாண்டிய ஒன்று இருக்கிறது. அதுதான் இரண்டாவது வார்த்தை: 'நோக்கம்' ('purpose'). இது கடவுளின் பார்வையில் நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த நோக்கத்தை நாம் 'அழைத்தல்' ('vocation') என்றும் சொல்லலாம். யோவான் தன் பிறப்பின் இலக்கையும், நோக்கத்தையும் அறிந்திருந்தார். பல நேரங்களில் நம் வாழ்க்கையில் நமக்கு இலக்கு தெளிவாக இருக்கும் அளவிற்கு நோக்கம் தெளிவாக இருப்பதில்லை. நோக்கம் தெளிவாக இருக்க வேண்டுமெனில் ஆண்டவரின் கைவன்மையை நான் உணர வேண்டும். ஆக, என்னோடு இருக்கும் ஆண்டரின் கைவன்மைக்கு நன்றி கூறவும், அவரின் கைவன்மையில் நான் தொடர்ந்து வழிநடத்தப்படவும் என்னை அழைக்கிறது யோவானின் பிறப்பு பெருவிழா.

2. மனவலிமை

நாம் குழந்தையாக இருக்கும்போது நம் உடல் வலுவற்று இருப்பதுபோல நம் மனமும் வலுவற்று இருக்கிறது. வளர வளர நாம் உண்ணும் உணவும், நாம் செய்யும் உடற்பயிற்சிகளும், மேற்கொள்ளும் உழைப்பும் நம் உடலுக்கு வலுசேர்க்கின்றன. அதுபோல நம் மனதை வலிமையாக்கவது நம் வாழ்வியல் அனுபவங்கள். மனம் வலிமையாவது என்பது நேர்முகமானது. ஆனால் மனம் கடினமாவது என்பது எதிர்மறையானது. விடுதலைப்பயண நூலில் எகிப்தில் பாரவோனின் மனம் கடினமாகிறது. கடினமாகும் மனம் கண்டிக்கப்பட வேண்டியது. மனவலிமை என்பதை நாம் உளத்திடம் என்று சொல்லலாம். அதாவது, 'ஆம் என்றால் ஆம் என்று சொல்லவும், இல்லை இல்லை என்றால் இல்லை' என்று சொல்லவும் தயங்காத பக்குவம்தான் மனவலிமை. காலையில் வைக்கும் 5 மணி அலார்முக்குக்கூட சரியா எழ முடியாத மனவலிமை கொண்டவன் நான் என்று சில நேரங்களில் என்னையே நினைத்ததுண்டு. யோவானின் இந்த மனவலிமையே அவரை ஏரோதிடம் நேருக்கு நேர் நின்று பேச துணிவைத் தருகிறது. இன்று நான் எந்த நேரங்களில் எல்லாம் மனவலிமை குன்றியுள்ளேன்?

3. பாலைநிலத்தில் வாழ்தல்

'ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு' என்பதை உணர்ந்தவர் திருமுழுக்கு யோவான். திடீர்னு வந்து திடீர்னு மறைய அவர் மின்மினிப்பூச்சி அல்ல. மாறாக, நின்று ஒளிரும் விண்மீன். ஆகையால்தான் தன்னையே பாலைநிலத்தில் மறைத்துக்கொள்கின்றார். இன்று சின்ன சின்ன விடயங்களுக்கெல்லாம் நாம் பதாகையைத் தூக்கிக்கொண்டு, 'இதுதான் நான்' என முன் நிற்கின்றோம். ஆனால், 'இது நானல்ல' என்று தெரிந்து வாழ்வதுதான் ஞானம். 'இது நானல்ல. எது நானோ அதுவரை நான் காத்திருக்கிறேன்' என்கிறார் யோவான். இன்று நம்மில் வேகமாக மறைந்துவருவது பொறுமை. ஒன்றைப் பார்த்தவுடன், 'இதுதான் அது' என்று சொல்லி முத்திரையிட்டு அதை மூடிவிடுகிறோம். நம் உள்ளத்தின் பாலைநிலம், வெறுமை, தனிமை, விரக்தி நம்மைத் தீண்டும்போது நாம் சினிமா, போதை, நண்பர்கள் என ஓடிப்போகின்றோம். ஆனால், பாலைநிலத்தின் வெறுமை, தனிமை, விரக்திதான் நாம் 'இதுவல்ல' என்பதை நமக்குக் காட்டுகிறது.

'இக்குழந்தையின் பெயர் யோவான்'

ஆம். அவர், நீங்கள், நான் என எல்லாரின் பெயரும் 'யோவான்'தான். 'ஆண்டவர் நமக்கு இரக்கம் காட்டியதால்' நாம் இன்று இருக்கிறோம். இந்த இருப்பிற்காக நன்றி கூறுகின்ற வேளையில் இந்த இருப்பில் இறைவனின் பெயரைப் பதிய வைப்போம்.

ஆண்டவரின் இரக்கம்தான் நான் என எண்ணும் நான், ஒருவர் மற்றவரை கொஞ்சம் குனிந்து இரக்கத்தோடு பார்த்தால் எத்துணை நலம்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Teaching Faculty - Saint Paul's Seminary - Tiruchirappalli - 620 001

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!