Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            23  ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 11ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார்.

குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 17-25

யோயாதா இறந்தபின், அரசர் தம்மைப் பணிந்து நின்ற தலைவர்களின் சொற்களுக்கு இணங்கினார். அதனால் அவர்கள் தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் வழிபட்டனர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார். அவர்கள் தம்மிடம் மீண்டும் வருவதற்கு ஆண்டவர் அவர்களிடம் இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்களும் மக்களைக் கண்டித்தனர். ஆனால் அவர்கள் செவி கொடுக்கவில்லை.

அப்போது கடவுளின் ஆவி குரு யோயாதாவின் மகன் செக்கரியாவின் மேல் இறங்கியது; அவர் மக்கள் முன் நின்று அவர்களை நோக்கி: "இதோ, கடவுள் கூறுகிறார்: ஆண்டவரின் கட்டளைகளை மீறுவதேன்? அதனால் நீங்கள் வாழ்வில் முன்னேற மாட்டீர்களே! ஆண்டவரை நீங்கள் புறக்கணித்ததால், அவரும் உங்களைப் புறக்கணித்துள்ளார்" என்று கூறினார். அவர்கள் அவருக்கு எதிராகச் சதி செய்து, அரசரின் ஆணைக்கேற்ப ஆண்டவரின் இல்லத்து மண்டபத்தில் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர். அவர் தந்தை யோயாதா காட்டிய பேரன்பை மறந்து, அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார்.

அவர் இறக்கும்போது, "ஆண்டவர் இதைக் கண்டு பழிவாங்குவாராக!" என்றார். அடுத்த ஆண்டு, சிரியாப் படையினர் அவருக்கு எதிராக வந்து, யூதாவிலும் எருசலேமிலும் புகுந்து மக்களின் எல்லாத் தலைவர்களையும் கொன்று அழித்தனர். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தமஸ்கு மன்னனிடம் அனுப்பி வைத்தனர். சிரியர் மிகச் சிறு படையுடன்தான் வந்தனர்; இருப்பினும், தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரை இஸ்ரயேலர் புறக்கணித்ததால், ஆண்டவர் அவர்களது பெரும் படையைச் சிரியரின் கையில் ஒப்புவித்தார். அவர்கள் யோவாசைத் தண்டித்தனர். கடும் காயமுற்ற நிலையில் யோவாசைச் சிரியர் விட்டுச் சென்றனர். அவருடைய அலுவலர்களோ அவருக்கு எதிராகச் சதி செய்து, குரு யோயாதாவின் மகனின் இரத்தப் பழியின் பொருட்டு அவரது படுக்கையிலேயே அவரைக் கொன்றனர். தாவீதின் நகரத்தில் அவர் சடலத்தை அடக்கம் செய்தனர்; ஆனால் அரசர்களின் கல்லறைகளில் அவரை அடக்கம் செய்யவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 89: 3-4. 28-29. 30-32. 33 (பல்லவி: 28a)
=================================================================================
பல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.

3 நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன். பல்லவி

28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். 29 அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன். பல்லவி

30 அவன் புதல்வர் என் திருச்சட்டத்தைக் கைவிட்டாலோ, என் நீதி நெறிகளின்படி நடக்காவிடிலோ, 31 என் விதிகளை மீறினாலோ, என் கட்டளைகளைக் கடைப் பிடிக்காவிடிலோ, 32 அவர்களது குற்றத்திற்காக அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்; அவர்களின் தீச்செயலுக்காக அவர்களைக் கசையால் அடிப்பேன் பல்லவி

33 ஆயினும், என் பேரன்பை தாவீதை விட்டு விலக்க மாட்டேன்; என் வாக்குப் பிறழாமையினின்று வழுவ மாட்டேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராய் இருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வர் ஆகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-34

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: "எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதும் இல்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!

கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூற்பதும் இல்லை. ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப்போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாய்ச் செய்ய மாட்டாரா?

ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றை எல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.

ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதீர்கள்.

ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

இரு வேலைகளை ஒரு நேரத்தில் செய்வது என்பது வேறு, இரு தலைவர்களுக்கு ஒரே நேரத்தில் வேலை செய்வது என்பது நம்முடைய பிரமாணிக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் என்பதை தெளிவுபடுத்துகின்றார்.

உண்மையுள்ளவர்களாய் நாம் வாழ்ந்திட வேண்டுமேயானால், ஒருவருக்கு பணிவிடை செய்தலே சிறப்பானதாக அமையும்.

தன்னுடைய தந்தையின் பணியை மட்டுமே செய்வதில் அக்கரை காட்டினார்.

பல வேலைகளை செய்வது போல காட்டிக் கொண்டு ஒரு வேலையும் செய்யாது இருப்பது இன்றைக்கு கலாச்சாரமாக, பெரிய மனித தன்மையாக படம் காட்டப்பட்டு வருகின்றது. மாயச் சிந்தனைக்கு மயங்கிட வேண்டாம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
கவலைப்படாதே!

ஒருவன் தன் வேலையில் இடமாற்றம் காரணமாக, இருந்த வீட்டைக் காலி செய்துகொண்டு வேறொரு ஊருக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த ஊருக்குப் போகவேண்டுமானால், வழியில் உள்ள ஒரு பெரிய ஆற்றைக் கடந்தாகவேண்டும்.

ஆறு நிறைய தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு, ஒரு படகை வாடகைக்குப் பேசி, ஏற்பாடு செய்துகொண்டான். வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் படகில் ஏற்றினான். மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் படகில் ஏறி அமர்ந்துகொண்டான்.

படகு ஆற்றில் சிறிதுதூரம் சென்றவுடன், ஆடத் தொடங்கியது. படகில் அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றியதன் காரணமாக, படகு மெல்ல மெல்ல ஆற்றில் அமிழத் தொடங்கியது. ஆற்றுநீர் கொஞ்சம் கொஞ்சமாக படகின் உள்ளே வரத் தொடங்கியது. நிலைமையின் ஆபத்தைப் புரிந்துகொண்ட அவன், விரைந்து செயலாற்றத் தொடங்கினான்.

பாரத்தைக் குறைப்பதற்காக, ஒவ்வொரு பொருளாக எடுத்து ஆற்றில் வீசினான். இவ்வாறு கட்டில், பீரோ, கிரைண்டர், மிக்சி, குளிர்சாதனப் பெட்டி என்று ஒவ்வொன்றாக ஆற்றிலே தள்ளிவிட்டான். ஓரளவு பாரம் குறைந்தவுடன், படகு, மெல்ல மெல்ல மேலே எழும்பி வந்தது. படகில் நீர் நுழைவதும் நின்றுவிட்டது. படகு பாதுகாப்பாக மறுகரையை வந்து அடைந்தது.
அப்போது கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருட்கள் இப்படி ஆற்றோடு போய்விட்டதே என்று மனைவி மிகவும் கவலையுடன் இருந்தாள். அதைப் பார்த்துக் கணவன் தன்னுடைய மனையிடம், கவலைப்படாதே, இந்தப் பொருட்கள் எல்லாம் நம்மைவிட்டுப் போகாதிருந்தால், நம்முடைய உயிர் நம்மைவிட்டுப் போயிருக்கும். நம்முடைய குழந்தைகளையும் நாம் இழந்திருப்போம். நம்மைவிட்டுப் போன இப்பொருட்களை எல்லாம் நாம் திரும்பப் பெறமுடியும். ஆகையால் நீ கவலைப்படாதே என்று ஆறுதல் கூறினான்.

மனிதர்களாப் பிறந்த நாம் எது எதற்கெல்லாமோ கவலைப்படுகின்றோம். பிரிந்து போன உறவுகளை நினைத்து கவலைப்படுகின்றோம். இழந்துபோன பொருள், பதவி, அதிகாரம் இன்ன பிற காரியங்களை நினைத்துக் கவலைப்படுகின்றோம். கவலைப் படாத மனிதர் என்று யாருமே இல்லை. ஆனால் இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கவலைப்படாமல் இருக்க அறிவுரை தருகின்றார்.

பெரும்பாலான நமது கவலைகள் உணவு, உடை, உறைவிடம் இவைபற்றியதாக இருக்கின்றது. இன்னும் ஒருசிலர் நினைத்தது நடக்கவில்லையே என்று கவலைப்படுவதுண்டு. ஆனால் இயேசு, உணவுக்காக, உடைக்காகக் கவலைப்படவேண்டாம். ஏனென்றால் வானத்துப் பறவைகளையும், காட்டு மலர்செடிகளையும் அணிசெய்கின்ற கடவுள் நம்மையும் பராமரிப்பார் என்கிறார் அவர். எனவே யாராரெல்லாம் கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கிறார்களோ, அவர்கள் எதைக் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை என்பது இயேசுவின் ஆழமான போதனையாக இருக்கின்றது.

1பேதுரு 5:7 ல் வாசிக்கின்றோம், உங்கள் கவலையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள், ஏனெனில் அவர் உங்கள்மேல் கவலையாக இருக்கின்றார் என்று. ஆகவே நாம் நமது கவலையெல்லாம் அவரிடம் விட்டுவிட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்வோம்.

அடுத்ததாக நாம், கடந்த காலத்தில் இப்படியாக நடந்துவிட்டதே அல்லது எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நடந்துவிடுமோ என்றுதான் கவலைப்படுகின்றோம். அதாவது இறந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் நிகழ்காலத்தில் வாழ்வதில்லை. இது வேதனையான ஒரு காரியம். ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார், ஆகையால் நாளைக்காக கவலைப்படாதீர்கள், ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும் என்று. எனவே இந்த நொடியில், நிகழ்காலத்தில் வாழ்வோம்.

நமது கவலைகளில் எண்பது சதவீதம் உண்மையான கவலைகள் அல்ல, மனமே அவற்றைப் பூதாகரமாக கற்பனை செய்துகொள்கிறது. ஒரு கவலை பல கவலைகளை உருவாக்கும் என்பார் மகரிஷி.

ஆதலால், கவலைகளை நமது மனத்திலிருந்து அகற்றுவோம். ஆண்டவரின் பராமரிப்பில் உறுதியான நம்பிக்கை கொண்டுவாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
கவலை கொள்ள வேண்டாம்!

காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. காட்டு ராஜாவான அந்த சிங்கத்தைக் கண்டு எல்லா விலங்குகளும் பயந்து நடுங்கின. ஆனால் அது மட்டும் சேவல் கூவும் சத்தம் கேட்டு அச்சமும் நடுக்கமும் கொள்ளத் தொடங்கியது. இதனால் அது நிம்மதி இழந்து கவலை கொள்ளத் தொடங்கியது.

இப்படி அந்தச் சிங்கம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற தருணத்தில் அந்த வழியாக கவலை தோய்ந்த முகத்துடன் யானை ஒன்று வந்தது. அதுவும் கவலை தோய்ந்த முகத்துடன் வந்தது. அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட சிங்கம் யானையிடம், ஏன் யானையாரே! நீங்கள்தான் இந்தக் காட்டில் இருக்கக்கூடிய எல்லா விலங்குகளிலும் பெரிய விலங்கு. அப்படியிருக்கும்போது எதற்காக இப்படிக் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுகின்றீர்கள்? என்று கேட்டது.

உடனே யானை தன்னுடைய கதையைச் சொல்லத் தொடங்கியது. சிங்க ராஜாவே! ஊருக்கும் உங்களுக்கும்தான் நான் பெரிய விலங்கு. ஆனால், என்னுடைய காதுக்குள்ளே ஒரு குளவி போய்விட்டால் என் கதை அவ்வளவுதான். இதோ ஒரு குளவி என் காதுப் பக்கமாய் ரிங்காரமிட்டுக் கொண்டு வருகிறதே, அது மட்டும் என் காதுக்குள் நுழைந்துவிட்டால், என்னாகுமோ என்ற கவலையில்தான் என்னுடைய காதுகளை அங்குமிங்கும் ஆட்டிக்கொண்டு வருகிறேன் என்றது.

இதைக் கேட்ட சிங்க ராஜாவுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. உலகத்தில் நாம்தான் கவலையோடு இருக்கின்றோம் என்றால், இவ்வளவு பெரிய யானையும் ஒரு கவலையோடு இருக்கின்றதே. அப்படியானால் இந்த உலகத்தில் இருக்கின்ற எல்லாருக்கும் ஏதோ ஒரு கவலை இருக்கின்றது போலும் என்று யோசித்த சிங்கம், வாழ்க்கையில் மகிழ்ச்சி கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றபோது ஒரு சிறிய விசயத்தை நினைத்து ஏன் கவலை கொள்வானேன் என்று ஆறுதல் கொள்ளத் தொடங்கியது.

ஆம், உலகத்தில் மகிழ்ச்சி கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றபோது, சிறு சிறு விசயங்களை நினைத்து எதற்கு கவலை கொள்ளவேண்டும் என்னும் உண்மையை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நமது சிந்தனைக் குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, நாம் நம்முடைய கவலையை மறந்து மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான வழிகளைச் சொல்கின்றார். மனிதர்கள் பல நேரங்களில் எதை உண்பது, எதை உடுத்துவது என்பது பற்றியே கவலை கொள்கிறார்கள். இதை அறிகின்ற இயேசு கிறிஸ்து  இயற்கையிலிருந்தே பாடத்தைக் கற்பிக்கின்றார். வானத்துப் பறவைப் பாருங்கள் அதை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. ஆனாலும்கூட விண்ணகத்தை தந்தை அவற்றுக்கு உணவளிக்கின்றார். வயல்வெளி மலர்களைப் பாருங்கள். அவை எப்படி வளர்கின்றன என்று. இப்படிச் சொல்கின்ற இயேசு, சாதாரண வானத்துப் பறவைகளையும் வயலவெளி மலர்களையும் பராமரிக்க இறைவன், உங்களைப் பராமரிக்கமாட்டாரா?. ஆதலால் கவலை கொள்ளவேண்டாம் என்று சொல்கின்றார்.

அடுத்ததாக நாம் கவலை கொள்வதனால் எந்தவொரு பலனும் விளையப்போவதில்லை. மாறாக தீமைக்கு மேல் தீமைதான் விளையும். இதை உணர்ந்த இயேசு கிறிஸ்து, நாளைக்காக கவலை கொள்ளவேண்டாம், அன்றன்றைய தொல்லை அன்றைக்குப் போதும் போதும் என்கின்றார்.

ஆம், இன்றைக்கு நிறையப் பேர், ஒன்று கடந்த காலத்தை நினைத்து நினைத்து செத்துக்கொண்டிருக்கின்றார்கள், இல்லையென்றால் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி கடந்த காலத்திலும்  எதிர்காலத்திலும் வாழ்கின்ற மனிதர்கள் நிகழ்காலத்தில் வாழாதது மிகவும் வேதனைக்குரிய ஒரு விசயமாக இருக்கின்றது. நாம் நிகழ்காலத்தில் வாழத் தொடங்குகின்றபோது நமக்கு வரக்கூடிய பாதிக் கவலைகள் வராமலே போகும் என்பதுதான் உண்மையிலும் உண்மையாக இருக்கின்றது.

ஆண்டவராகிய கடவுள் மோசேக்கு தன்னை முட்புதரில் வெளிப்படுத்துகின்றபோது இருக்கின்றவராக இருக்கின்றவர் என்றுதான் சொல்வார். அப்படியானால் நம் கடவுள் இறந்த காலத்தின் கடவுளோ அல்லது எதிர்காலத்தின் கடவுளோ அல்ல, மாறாக நிகழ்காலத்தின் கடவுள். எனவே நம் கடவுள் நிகழ்காலத்தின் கடவுளாக இருக்கின்றபோது நாம் இறந்த காலத்தின் அல்லது எதிர்காலத்தின் மனிதர்களாக இருப்பது எந்தவிதத்தில் நியாயம். ஆகவே, நம்முடைய கவலையை மறந்து மகிழ்வோடு வாழ, நிகழ்காலத்தில் வாழ்வதே சிறப்பான ஒரு காரியமாகும்.

தூய பேதுரு தன்னுடைய திருமுகத்தில் கூறுவார், உங்கள் கவலைகளை எல்லாம் அவரிடத்தில் விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர் உங்கள் மேல் கவலையாய் இருக்கின்றார் என்று (5:7). ஆம், நம்மைப் பற்றிக் கவலைப் பட நம் இறைவன் இருக்க நாம் ஏன் கவலைப்பட்டுக் கொண்டிருக்கவேண்டும்.

ஆகவே, இறைவனிடத்தில் நம்முடைய கவலைகளையெல்லாம் இறக்கி வைத்துவிடுவோம். எப்போதும் இறைவனின் பராமரிப்பை உணர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!