Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            22   ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 11ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அனைவரும் கைதட்டி, "அரசர் நீடுழி வாழ்க!" என்று முழங்கினர்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 9-18, 20

அந்நாள்களில் அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்துவிட்டதைக் கண்டு கிளர்ந்தெழுந்து அரச குடும்பத்தார் அனைவரையும் கொன்றாள். அரசன் யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யோசேபா அகசியாவின் மகன் யோவாசைத் தூக்கிக் கொண்டு போய் ஒளித்து வைத்தாள்.

அவன் கொல்லப்படவிருந்த அரசிளம் புதல்வர்களில் ஒருவன். அவனையும் அவன் செவிலித் தாயையும், தனது பள்ளியறையினுள் அத்தலியாவின் பார்வையிலிருந்து யோசேபா மறைத்து வைத்தாள். எனவே அவன் உயிர் தப்பினான். அவன் ஆறு ஆண்டுகள் அவளோடு ஆண்டவரின் இல்லத்தில் தலை மறைவாய் இருந்தான். அந்நாள்களில் அத்தலியாவே நாட்டை ஆண்டு வந்தாள்.

ஏழாம் ஆண்டில், அரச மெய்க்காப்பாளர், அரண்மனைக் காவலர் ஆகியோரின் நூற்றுவர் தலைவர்களை குரு யோயாதா வரவழைத்து ஆண்டவரின் இல்லத்திற்குள் கூட்டிச் சென்றார். அங்கு அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். அக்கோவிலில் அவர்களை ஆணையிடச் செய்து அரசனின் மகனை அவர்களுக்குக் காட்டினார். குரு யோயாதா கட்டளையிட்டுக் கூறிய அனைத்தையும் நூற்றுவர் தலைவர்கள் செய்தனர்.

ஓய்வு நாளில் விடுப்பில் செல்வோர், பணியேற்போர் ஆகிய தங்கள் வீரர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு குரு யோயாதாவிடம் வந்தனர். அவர் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த தாவீது அரசரின் ஈட்டிகளையும் கேடயங்களையும் நூற்றுவர் தலைவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார். காவலர், கையில் படைக்கலன் தாங்கி, திருக்கோவிலின் தென்புறம் தொடங்கி வடபுறம் வரை, பலிபீடத்தையும் திருக்கோவிலையும் அரசனையும் சூழ்ந்து நின்று கொண்டனர். பின்பு அவர் இளவரசனை வெளியே கூட்டி வந்து, அவனுக்கு முடி சூட்டி, உடன்படிக்கைச் சுருளை அளித்தார். இவ்வாறு அவன் திருப்பொழிவு பெற்று அரசனானான். அனைவரும் கைதட்டி "அரசர் நீடூழி வாழ்க!" என்று முழங்கினர்.

மக்களும், காவலரும் எழுப்பிய ஒலியை அத்தலியா கேட்டு ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் வந்தாள். மரபுக்கேற்ப, அரசன் தூணருகில் நிற்பதையும், படைத்தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்டாள். உடனே அவள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "சதி! சதி!" என்று கூக்குரலிட்டாள்.

அப்பொழுது குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நூற்றுவர் தலைவர்ளை நோக்கி, "படையணிகளுக்கு வெளியே அவளைக் கொண்டு செல்லுங்கள். அவளை எவனாவது பின்பற்றினால் அவனை வாளால் வெட்டி வீழ்த்துங்கள்" என்று கட்டளையிட்டார். "அவளை ஆண்டவரின் இல்லத்தினுள் கொல்லலாகாது" என்றும் கூறியிருந்தார். எனவே அவர்கள் அரண்மனையின் குதிரை நுழைவாயிலை அவள் அடைந்தபொழுது, அவளைப் பிடித்தனர்.

அங்கே அவள் கொல்லப்பட்டாள். பின்பு யோயாதா, ஆண்டவர் ஒரு பக்கமும், அரசன், மக்கள் மறுபக்கமுமாக அவர்களிடையே உடன்படிக்கை செய்து வைத்தார். இதன் மூலம் அரசனும் மக்களும் ஆண்டவரின் மக்களாய் இருப்பதாக ஏற்றுக் கொண்டனர். அவ்வாறே அவர் அரசனுக்கும் மக்களுக்கும் இடையே உடன்படிக்கை செய்து வைத்தார். பிறகு நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் பாகாலின் கோவிலுக்குச் சென்று பலிபீடங்களையும் சிலைகளையும் தகர்த்தெறிந்தனர்; பாகாலின் அர்ச்சகன் மத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொலை செய்தனர். பிறகு குரு ஆண்டவரின் இல்லத்தில் காவலரை நிறுத்தி வைத்தார். நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடினர். அத்தலியா வாளால் அரண்மனையில் கொல்லப்பட்டபின் நகரில் அமைதி நிலவியது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 132: 11. 12. 13-14. 17-18 (பல்லவி: 13)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் சீயோனைத் தம் உறைவிடமாக்க விரும்பினார்.

11 ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்; அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்க மாட்டார்: "உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன். பல்லவி

12 உன் மைந்தர் என் உடன்படிக்கையையும் நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால், அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர்." பல்லவி

13 ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார். 14 "இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். பல்லவி

17 இங்கே தாவீதின் மரபிலிருந்து ஒரு வல்லவனை எழச் செய்வேன்; நான் திருப்பொழிவு செய்தவனுக்காக ஓர் ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன். 18 அவனுடைய எதிரிகளுக்கு இகழ்ச்சியெனும் உடையை உடுத்துவேன்; அவன்மீதோ அவனது மணிமுடி ஒளிவீசும்." பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

தூயமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.

ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.

உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாய் இருந்தால் இருள் எப்படியிருக்கும்!"

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


சிந்தனை

மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.

இன்றைக்கு இது தான் பிரதானமாக நடைபெற்று வருகின்றது.

செல்வம் சேர்ப்பதில் இன்று போட்டா போட்டி. இதற்காக மண்ணுலகில் மனிதர்கள் விலங்குகளைப் போல நடந்து கொள்வதுண்டு. ஒருவர் ஒருவரை கடித்து குதறுகின்றனர். குழி வெட்டி விழத்தாட்டுகின்றனர். விவிலியத்தை அறிந்தவர்களும் இவ்வாறு நடந்து கொள்வதுண்டு. இதற்கு பல சாக்குப்போக்குகளை சொல்லி தங்களை நியாயப்படுத்திக் கொள்வதும் உண்டு.

திருடர்களுக்கு பறி கொடுத்து விட்டு திருட்டு முழி முழிப்பவரும் நம்மிடையே உண்டு.

வேதத்தை என்றைக்கு வாழ்வாக்கப் போகின்றோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

மண்ணுலகில் அல்ல, விண்ணுலகில் உங்கள் செல்வத்தை சேர்த்து வையுங்கள்

பிரான்சு தேசத்தை ஆண்ட மாவீரன் நெப்போலியனுடைய மனைவியைப் பற்றி சொல்லப்படும் உண்மை.

நெப்போலியனின் மனைவி ஜோசபின் ஆடை ஆபரணங்களை வாங்குவதில் அதிகமான நாட்டம் கொண்டவள். எந்தளவுக்கு என்றால் அரசாங்கக் கஜானாவில் இருந்த பாதிப்பணம் அதற்கே செலவழிந்தது. இதைப் பார்த்த மன்னன் நெப்போலியன், இனிமேல் ஆடை ஆபரணங்களை வாங்குவதற்கு பணமேதும் தரப்படமாட்டது" என்று அரசியிடம் உத்தரவிட்டான். ஆனாலும் அரசிக்கு ஆடை ஆபரணங்களின் மீது இருந்த மோகம் சிறிதும் குறையவில்லை.

அதனால் அரசனுக்குத் தெரியாமல் ஒரு பெரிய தொகைக்கு (பெரிய தொகை என்றால் மிகப்பெரிய தொகை) ஆடை ஆபரங்களை வாங்கிச் சேர்ந்தாள். அதற்கான பணத்தை யாரிடம் வாங்குவது என்று யோசித்தவள், மன்னனிடம் பணமேதும் வாங்கமுடியாது என்று அறிந்து, படைத்தளபதியிடம் போய்க் கேட்டாள்.

படைத்தளபதியோ ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டான். ஒருவேளை அரசி கேட்ட பணத்தைத் அவருக்குத் தராவிட்டால், அவள் ஏதாவது சதிசெய்து நம்மைக் கவிழ்த்து விடுவாள், பணத்தைத் தந்தால் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது. என்னசெய்வது என்று தீர யோசித்தார். பின்னர் அரசி கேட்ட பணத்தைத் தருவதுதான் நல்லது என்று முடிவுசெய்து, கேட்ட தொகையை அவளிடம் கொடுத்தான்.

படைத்தளபதி அரசி கேட்ட தொகையைத் தந்ததால், அவனால் படைபலத்தை வலுப்படுத்த முடியவில்லை, போதிய அளவு போர்க்கருவிகளை வாங்க முடியவில்லை. இதனால் பிரான்சுதேசம் தன்னிடம் இருந்த ஜெனோவா என்ற பகுதியை எதிரிகளிடம் இழந்தது.

பொருட்கள்மீது செல்வத்தின் மீது - ஒருவர் கொண்ட அதிகப்படியான மோகம் ஒரு நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பைத் தந்தது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "மண்ணுலகில் உங்களுக்கென செல்வத்தைச் சேமித்து வைக்கவேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ, துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை" என்கிறார்.

இன்றைக்கு மனிதர்களுடைய வாழ்வைப் பார்க்கும்போது, ஏதோ இன்றைக்கே உலகம் முடிந்துவிடுவது போன்று செல்வத்தைச் சேர்த்து வைக்கின்றனர். இன்னும் ஒருசிலர் பணம்தான் நிம்மதியை, வாழ்வைத் தந்துவிடும் என்ற நோக்கில் செல்வம் சேர்த்து வைக்கின்றனர். ஆனால் ஆயிரம் இருந்தும், அனைத்தும் இருந்தும் மன நிம்மதி கிடைப்பதில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

ஆண்டவர் இயேசு "விண்ணுலகில் செல்வம் சேர்த்து வையுங்கள்" என்கிறார். விண்ணுலகில் எப்படி செல்வம் சேர்த்து வைப்பது?. அது வேறொன்றுமில்லை இந்த மண்ணுலகில் நாம் வாழும்போது ஒருவர் மற்றவர் மீது காட்டும் பரிவு, இரக்கம், தேவையில் இருப்பவருக்கு கொடுப்பது, வறியவருக்கு உதவுவது இவைதான் நாம் விண்ணுலகில் சேர்த்து வைக்கும் செல்வமாகும். இவற்றையும், இதுபோன்ற அன்புச் செயல்களையும் நமது செய்துவாழும்போது விண்ணுலகில் நாம் செல்வம்சேர்த்து வைப்பவர்கள் ஆகின்றோம்.

யாரோ ஒருவர் சொன்னார், "மண்ணுலகில் கொடுத்து வாழ்பவர், விண்ணுலகில் வாழக் கொடுத்து வைத்திருக்கிறார்" என்று. இது உண்மை. இந்த மண்ணுலகில் எதை கொடுத்து வாழ்கின்றோமோ அதை விண்ணுலகில் பெற்றுக் கொள்கிறோம். மண்ணுலகில் எதை நமக்காக சேமித்து வைக்கின்றோமோ, அதை விண்ணுலகில் இழந்து போகின்றோம்.

ஆகவே, நமது இந்த மண்ணுலக வாழ்வை நமக்காக மட்டும் வாழாமல், பிறருக்காகவும் வாழ்வோம். நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுப்போம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"விண்ணுலகில் உங்கள் செல்வத்தை சேமித்து வையுங்கள்"

ஒரு பணக்காரன் தன் வீட்டுக்கு ஒரு குருவை அழைத்து வந்தான். பெரிய வீடு. இருவரும் மொட்டை மாடியில் நின்றிருந்தார்கள்.

தனக்கு மன நிம்மதியே இல்லை என்று குருவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். "குருவே, வடக்குப் பக்கம் பாருங்கள். அதோ அங்கே தூரத்தில் ஒரு பனைமரம் தெரிகிறதே, அதுவரை என்னோட நிலம்தான். நான்தான் கவனிச்சுக்கறேன். இதோ தெற்குப் பக்கம் தெரிகிறதே ஒரு மாமரம், அதுவரையும் என் இடம்தான். மேற்குப் பக்கம் பாருங்கள், தூரத்தில் ஒரு டிரான்ஸ்பார்மர் தெரியுதே, அதுவரைக்கும் என் இடம்தான். அப்புறம் வீட்டுக்கு எதிரில் கிழக்குப் பக்கம் அது முழுதும் எனதுதான்" என்று தன் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களைக் காட்டினான். இப்படிச் சொல்லிவிட்டு தொடர்ந்து பேசினான். "இந்தச் சொத்துக்கள் எல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தவை. இத்தனை வசதிகள் இருந்தும் எனக்கு நிம்மதி இல்லாமல் இருக்கு குருவே"

குரு அவனை அமைதியாகப் பார்த்தார். "எல்லா இடங்களிலேயும் சொத்து சேகரித்து வைத்திருக்கிறாய். இங்கே சொத்து சேர்த்து வைத்திருக்கிறாயா?" என்று அவன் நெஞ்சைச் சுட்டிக் காட்டினார். பணக்காரனுக்குப் புரியவில்லை. "அன்பு, பாசம், நட்பு போன்ற நல்ல சொத்துக்களை அங்கே சேர்க்க வேண்டும். அதுதான் நிம்மதி தரும்" என்றார் குரு.

அதன்பிறகு அவன் தன்னுடைய உள்ளத்தில் அன்பையும் பாசத்தையும் சேகரித்து வாழ்க்கையை மன நிம்மதியோடு வாழத் தொடங்கினான்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தை சேமித்து வைக்கவேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை" என்கின்றார். இயேசுவின் வார்த்தைகள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியவையாக இருக்கின்றது.

இன்றைக்கு மனிதர்கள் பணம் சேர்க்க வேண்டும், பொருளீட்ட வேண்டும். அதன்வழியாக நிம்மதியான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான். பணம் சேர்ப்பதனாலும் பொருளீட்டுவதனாலும் மட்டும் ஒருவனுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைத்து விடாது. ஏனென்றால் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்கின்றார், "மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது" என்று (லூக் 12:15). சரி, பணம் வைத்திருப்போர் எல்லாம் இன்றைக்கு நிம்மதியாக இருக்கவேண்டுமே. ஆனால் உண்மை அதற்கு முற்றிலும் வேறாக இருக்கின்றது. ஆகையால், பணத்திற்கும் நிம்மதிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அப்படியானால் உண்மையான மகிழ்ச்சியை அடைவதற்கு அல்லது விண்ணகத்தில் செல்வம் சேர்த்து வைப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசு தன்னைப் பின்தொடர விரும்பிய பணக்கார இளைஞனைப் பார்த்துச் சொல்வார், "நீ நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றால், உம் உடைமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடும். அப்போது நீர் விண்ணுலகில் செல்வராய் இருப்பீர். அதன்பின்னர் வந்து என்னைப் பின்தொடர்" என்று. ஆம், விண்ணுலகில் செல்வராய் இருக்கவும் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ளவும் நாம் செய்ய வேண்டியது, நம்மிடம் இருப்பதைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதாகும்.

வரிதண்டுபாரான சக்கேயு தன்னிடம் இருந்த செல்வத்தை - மக்களிடமிருந்து அநியாயமாக அபகரித்த செல்வத்தை அவர்களிடமே திருப்பிக் கொடுப்பதாகச் சொன்னபோது ஆண்டவர் இயேசு, "இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" என்று கூறுகின்றார். நாமும் நம்மிடத்தில் இருப்பதை பிறருக்குப் பகிர்ந்து கொடுக்கின்றபோது நமக்கும் மீட்பும் விண்ணகத்தில் இடமும் கிடைக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

பல நேரங்களில் நாம் இந்த மண்ணகத்தில் செல்வத்தை சேர்ப்பதற்கே நம்முடைய வாழ்வின் பாதி நாட்களை தொலைத்துவிடுகின்றோம். இத்தகைய சூழ்நிலையில் நாம் எப்படி விண்ணகத்தில் செல்வத்தை சேர்த்து வைப்பது என்று தெரியவில்லை. எவர் ஒருவர் இறைவன் கொடுத்த வாழ்க்கை அன்போடும் பகிருக்கின்ற நல்ல மனப்பான்மையோடும் தியாகச் சிந்தனையோடும் அடுத்தவர்மீதான அக்கறையோடும் வாழ்கின்றாரோ அவர் விண்ணகத்தில் செல்வத்தை சேர்த்து வைப்பவருக்குச் சமமானவராக இருப்பார்.

ஆகவே, அழிந்து போகின்ற செல்வத்திற்காக உழைத்து, கடைசியில் நாமும் அழிந்து போகாமால், உண்மையான செல்வத்திற்காக எப்போதும் உழைப்போம். அப்போது நாம் இறைவன் தரக்கூடிய மீட்பையும் நிம்மதியையும் இறையருளையும் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!