Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            21   ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 11ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 எலியாவினுடைய ஆவியால் எலிசா நிறைவு பெற்றார்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-15

இறைவாக்கினர் எலியா நெருப்புபோல் எழுந்தார்; தீவட்டி போல் அவருடைய சொல் பற்றி எரிந்தது. மக்கள் மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார்.

எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்? இறந்தவரை உன்னத இறைவனின் சொல்லால் இறப்பினின்றும் பாதாளத்தினின்றும் எழச் செய்தீர். மன்னர்களை அழிவுக்கு உட்படுத்தினீர்; மேன்மைமிக்கவர்களைப் படுத்த படுக்கையாக்கி வீழ்த்தினீர்.

கடுஞ் சொல்லைச் சீனாய் மலைமீதும், பழி வாங்கும் தீர்ப்பை ஓரேபு மலைமீதும் கேட்டீர். பழி தீர்க்கும்படி மன்னர்களைத் திருப்பொழிவு செய்தீர்; உம் வழித்தோன்றல்களாக இறைவாக்கினர்களை ஏற்படுத்தினீர். தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக் கொள்ளப்பட்டீர்.

ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்து கொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில்கொண்டவர்களும் பேறுபெற்றோர்.

நாமும் வாழ்வது உறுதி. எலியா சூறாவளி சூழ மறைந்தார்; எலிசா அவருடைய ஆவியால் நிறைவு பெற்றார்; எலிசா தம் வாழ்நாளில் எந்தத் தலைவருக்கும் அஞ்சவில்லை; அவரை அடிபணிய வைக்க எவராலும் முடியவில்லை. அவரால் முடியாதது ஒன்றுமில்லை; இறந்த பிறகும் அவரது உடல் இறைவாக்கு உரைத்தது. அவர் தம் வாழ்நாளில் அரியன செய்தார்; இறப்பில் அவருடைய செயல்கள் வியப்புக்குரியனவாய் இருந்தன. இவை யாவும் கண்டும் மக்கள் மனம் மாறவில்லை. அவர்கள் கைதிகளாக நாடு கடத்தப்பட்டு, மண்ணுலகெங்கும் சிதறடிக்கப்பட்ட வரையிலும் தங்கள் பாவங்களை விட்டு விலகவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 97: 1-2. 3-4. 5-6. 7 (பல்லவி: 12a)
=================================================================================
 பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

3 நெருப்பு அவர் முன் செல்கின்றது; சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது. 4 அவர்தம் மின்னல்கள் பூவுலகை ஒளிர்விக்கின்றன; மண்ணுலகம் அதைக் கண்டு நடுங்குகின்றது. பல்லவி

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி

7 உருவங்களை வழிபடுவோரும் சிலைகள் பற்றிப் பெருமையடித்துக் கொள்வோரும் வெட்கத்துக்கு உள்ளாவர்; அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
உரோ 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.

மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


சிந்தனை

செபத்தில் போற்றுதலோடு, வேண்டுதல் இருந்திடல் வேண்டும்.

வேண்டுதல் மட்டுமே செபமாகிடாது என்பதை கற்றுக் கொடுக்கின்றார்.

லாசரை உயிர்ப்பிக்கச் செய்த நிகழ்வினிலும், தந்தையை போற்றிய பின்னரே தன் வேண்டுதலை வைக்கின்றார்.

எப்பொமுது செபித்தாலும், பெற்றவைகளை எண்ணி நன்றி கூறி அவரை போற்றிய பின்னர் நம்முடைய வேண்டுதல்களை ஒப்புக் கொடுத்து மன்றாட முன்வருதல் சிறப்புடையது.

போற்றுதலும், நன்றி தெரிவிப்பதுவும் செபமே.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கின்றார்"

ஓர் ஆசிரமத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அவன் ஒருநாள் மரக்கன்று ஒன்றை நட்டுவிட்டு, "ஆண்டவனே இம்மரக்கன்று சீக்கிரம் வளரவேண்டும், எனவே நிறைய மழை பெய்யட்டும்" என்று வேண்டினான். அவ்வாறே மழை அதிகம் பெய்தது.
அதிக மழை நீரில் ஊறிப்போன மரக்கன்று அழுகிவிடுமோ என பயந்தான் சீடன். "இறைவா, மழையை நிறுத்தி நல்ல வெயில் அடிக்கும்படி செய்!" என்று வேண்டினான். அப்படியே வெயில் அடித்ததில் செடி வாட ஆரம்பித்தது.

அதைக் கண்டு பதறிப்போன சீடன், "வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம், பனி பொழியட்டும்!" என்று பிரார்த்தித்தான். இப்படி ஏகத்துக்கு தட்பவெப்பம் அடிக்கடி மாறியதில் தாக்குப் பிடிக்காமல் செடி பட்டுப்போனது. "இறைவனுக்கு கருணையே இல்லை" என குருவிடம் முறையிட்டான் சீடன். நடந்தது எல்லாம் கேட்டபின் குரு சொன்னார், "தன் படைப்பில் எதற்கு எப்போது என்ன தேவை என்பது இறைவனுக்குத் தெரியும். சுயநலத்திற்காக அதனை மாற்ற நினைத்து வேண்டினால் இப்படித்தான் ஆகும்!

இதை உணர்ந்த சீடன், மற்றொரு மரக்கன்றை நட்டுவிட்டு, " இறைவா, இதை நீயே பார்த்துக் கொள்! " என வேண்ட ஆரம்பித்தான். இறைவனும் அந்த மரக்கன்று நன்றாக வளர்ந்து பலன்தர அருள்பாலித்தார்.

நமக்கு என்ன தேவை என்பது நம் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். அப்படியிருக்கும்போது, ஜெபம் செய்கின்றோம் என்று இறைவனை நச்சரிப்பது அர்த்தமற்றதாகும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நமக்கு ஜெபிக்கக் கற்றுத் தருகின்றார். அதற்கு முன்னதாக அவர் எப்படி எல்லாம் ஜெபிக்கக்கூடாது என்கின்ற உண்மையையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றார். பலர் மிகுதியான வார்த்தைகளைச் சொல்லி ஜெபிப்பதுதான் ஜெபம் என நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் அதுவல்ல ஜெபம். வார்த்தைகள் இன்றியும் நாம் ஜெபிக்கலாம். நமது வேண்டுதல் இறைவனுக்கு விருப்பமானதாக இருக்கும் பட்சத்தில், அது நிச்சயமாக நிறைவேறும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

எப்படி ஜெபிக்கக்கூடாது என்று எடுத்துச்சொன்ன இயேசு இப்படித்தான் ஜெபிக்கவேண்டும் என்று ஓர் உன்னதமான ஜெபத்தை நமகுக் கற்றுத்தருகின்றார். அப்படி இயேசு கற்றுத்தருகின்ற ஜெபத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று இறைவனைப் போற்றிப் புகழ்வது, இன்னொன்று நம்முடைய தேவைகளுக்காக மன்றாவது.

முதலில் இறைவனைப் போற்றிப்புகழ்வது/ துதிப்பது தொடர்பாக வரக்கூடிய முதல் பகுதியைக் குறித்துப் பார்ப்போம். ஆண்டவராகிய கடவுளை தந்தையென அழைக்கும் இயேசு கிறிஸ்து, அவருடைய ஆட்சி இந்த மண்ணுலகத்தில் வரவேண்டும் என்றும் அவரது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகில் நிறைவேறவேண்டும் என்பதற்காக மன்றாடச் சொல்கின்றார். இறைவனின் ஆட்சி இந்த மண்ணுலகில் நடக்கும் பட்சத்தில் எல்லாரும் எல்லா நலன்களையும் பெற்று நிறைமகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்பதுதான் உண்மை.

ஜெபிக்கின்றபோது இறைவனுக்கு முன்னுரிமை அல்லது முதலிடம் தரச் சொல்கின்ற இயேசு கிறிஸ்து அதன்பிறகே நம்முடைய தேவைகளுக்காக மன்றாடச் சொல்கின்றார். நம்முடைய அன்றாட உணவுக்காகவும் நம்முடைய குற்றங்களை இறைவன் மன்னிக்கவும் வேண்டச் சொல்கின்ற இயேசு கிறிஸ்து, தீயோனிடமிருந்து நம்மை விடுவிக்கவேண்டும் என்றும் வேண்டச் சொல்கின்றார்.

இயேசு கற்றுத்தரும் இந்த உன்னத ஜெபத்தில் இன்னொரு ஆழமான உண்மையை நாம் கண்டுகொள்ளலாம். அது என்னவெனில் "எங்கள்" என்ற வார்த்தைதான் அதிகமாக இடம்பெறுகின்றதே அன்றி, "எனது" என்ற வார்த்தை காணக் கிடைக்கவில்லை. இதை வைத்துப் பார்க்கும்போது நாம் ஜெபிக்கின்ற போது நம்முடைய குடும்பம், நமது நலன் இவற்றுக்காக மட்டும் ஜெபிக்காமல் எல்லாருக்காகவும் எல்லாருடைய நலனுக்காகவும் ஜெபிக்கவேண்டும். அதை ஆண்டவர் இயேசு தான் கற்றுத்தரும் ஜெபத்தில் வலியுறுத்திக் கூறுகின்றார்.

பல நேரங்களில் நாம் ஜெபிக்கின்றபோது பிறர்மீது எந்தவொரு அக்கறையும் இல்லாமல் நம்முடைய தேவைகளை முன்னிலைப் படுத்தகூடியவர்களாக இருக்கின்றோம். இத்தகைய ஒரு சுயநல போக்கைத் தவிர்த்துவிட்டு, ஜெபத்தில் எல்லாருக்கும் இடம் தந்து ஜெபிப்பதே சிறப்பான ஒரு ஜெபமாக இருக்கும்.

ஆகவே, நம்முடைய தேவையை இறைவன் ஏற்கனவே அறிந்து இருக்கின்றார் என்பதை உணர்ந்தவர்களாய் அவருக்கு நம்முடைய ஜெபத்தில் முன்னுரிமை தந்து, நமக்காக மட்டுமல்லாமல் எல்லாருக்காகவும் ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நமது ஜெபங்களைக் கேட்கும் இறைவன்

லண்டன் நகரில் இருக்கும் தூய பவுல் பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் சிறப்பு என்னவென்றால் ஆலயத்தின் ஒரு மூலையில் ஒருவர் மெதுவாகப் பேசினாலும்கூட அதை ஆலயத்தின் மறுமுனையில் இருக்கும் ஒருவரவால் மிகத் தெளிவாகக் கேட்கமுடியும். அந்தளவுக்கு பேராலயமானது வடிவமைக்கப் பட்டிருந்தது.

ஒருநாள் பேராலயத்திற்கு வந்த இளைஞன் ஒருவன், தான் செய்துவரும் தொழில் சரிவரப் போகாததால், குடும்பத்தில் பெரிய கஷ்டம் நிலவுவதாகவும், தான் அதிகமாக அன்பு செய்யும் பெண்ணை திருமணம் செய்யப் போதிய பணமில்லாமல் தவிப்பதாகும் கண்ணீர் விட்டு மன்றாடினான். இது ஆலயத்தின் மறு மூலையில் உட்கார்ந்து ஜெபித்துக்கொண்டிருந்த ஒரு பெரியவரின் காதில் விழுந்தது.

அந்த இளைஞன் ஆலயத்தைவிட்டு, வெளியே வந்ததும் பெரியவர் அவனைப் பின்தொடர்ந்து சென்றார். இளைஞன் நடந்துகொண்டே சென்று தன்னுடைய வீட்டை அடைந்தான். அவனுக்குப் பின்னால் வந்த பெரியவர் அவனது வீட்டுக்குள் சென்று, "தம்பி! நீ ஆலயத்தில் ஜெபித்தது என்னுடைய காதில் விழுந்தது. இந்தப் பணப்பையை வைத்துக்கொள். இதில் உனக்குத் தேவையான அளவு பணம் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு நொடிந்து கிடக்கும் உன்னுடைய தொழிலை வளர்த்தெடு. நீ விரும்பிய பெண்ணை மணந்துகொள்" என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

சில நாட்களுக்குப்பின்தான் அந்த இளைஞனுக்குத் தெரிந்தது தனக்கு உதவி செய்தவர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த வில்லியம் கிளாட்ஸ்டோன் என்று.

இறைவனிடம் நாம் கேட்கும் ஜெபங்கள் கேட்கப்படும், அதற்கு மிகுதியான வார்த்தைகள் தேவையில்லை, நம்முடைய கண்ணீரே போதும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, இறைவனிடம் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை நமக்குக் கற்றுத் திருக்கிறார். முதலில் எது ஜெபமில்லை என்பதை விலக்கிவிட்டு, ஜெபம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை இயேசு நமக்குக் கற்றுத் தருகிறார்.

முதலில் எது ஜெபமில்லை என்று பார்ப்போம். யூதர்கள் குறிப்பாக பரிசேயர்கள் மிகுதியான வார்த்தைகளைப் பயன்படுத்திச் ஜெபித்தார்கள். அப்படி ஜெபிப்பதனால் மட்டுமே இறைவன் தங்களுடைய ஜெபத்தைக் கேட்பார் என்று நம்பினார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம்/ தன் போதனையைக் கேட்டவர்களிடம் "நீங்கள் அவர்களைப் போன்று இருக்கவேண்டாம்" என்று அறிவுறுத்துகிறார். ஆக, மிகுதியான வார்த்தைகளைப் பயன்படுத்தி, ஜெபப்பதனால் நமது ஜெபம் கேட்பதும் என்ற தவறான எண்ணத்தை நம்மிடமிருந்து அகற்றுவோம்.

அடுத்து "ஜெபம்" என்றால் என்ன என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். ஆண்டவர் இயேசு கற்றுத்தரும் ஜெபத்தில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. முதலாவது பகுதி இறைவனைப் போற்றுவதாககும், இரண்டாவது பகுதி நமது தேவைகளுக்காக வேண்டுவதாககும் இருக்கின்றது. அதாவது நமது ஜெபம் முழுமை பெறவேண்டுமென்றால் அதில் இறைபுகழ்ச்சி இருக்கவேண்டும் (உமது பெயர் தூயதெனப் போற்றப் பெருக). வெறுமனே மன்றாட்டுகள், வேண்டுதல்கள் இருக்கும் ஜெபம் முழுமையான ஜெபமாக இருக்காது என்பதே இயேசு கூற விரும்பும் செய்தியாக இருக்கின்றது. ஆகவே நமது ஜெபத்தில் முதலில் இறைவனைப் புகழ்ந்தேற்றுவோம், அதன்பிறகு நமது வேண்டுதலுக்காகச் ஜெபிப்போம்.

பல நேரங்களில் ஜெபம் என்ற பெயரில் நம்முடைய விண்ணப்பங்கள் இருக்கிறதே ஒழிய அதில் இறைப்புகழ்ச்சி இல்லை, இறைவனுக்கு நன்றி செலுத்துவது இல்லை. ஆனால் ஆண்டவர் இயேசு ஜெபிக்கும்போது முதலில் இறைவனைப் புகழ்ந்தார், அவருக்கு நன்றி செலுத்தினார் (மத் 11: 25, யோவா 11:41).

ஆகவே, இயேசுவைப் பின்பற்றி நடக்கும் நாம் அவரைப் போன்று ஜெபிப்போம்; அவர் நமக்குக் கற்பித்த ஜெபத்தின் வழியாக இறைவனிடம் ஜெபிப்போம். ஜெபம் குறித்த தவறான புரிதல்களை நம்மிடமிருந்து அகற்றுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!