Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            20   ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 11ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ! நெருப்புத் தேரில் எலியா விண்ணகத்துக்குச் சென்றார்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 2: 1, 6-14

ஆண்டவர் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக் கொள்ள இருந்த பொழுது, எலியாவும் எலிசாவும் கில்காலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். மீண்டும் எலியா எலிசாவை நோக்கி, "ஆண்டவர் என்னை யோர்தானுக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு" என்றார். அதற்கு அவர், "வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்" என்றார்.

ஆகவே அவர்கள் இருவரும் தொடர்ந்து பயணம் செய்தனர். அவர்கள் யோர்தான் நதிக் கரையை அடைந்து அங்கே நின்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இறைவாக்கினர் குழுவினர் ஐம்பது பேரும் சற்றுத் தொலையில் நின்று கொண்டனர்.

அப்பொழுது, எலியா தம் போர்வையை எடுத்துச் சுருட்டி அதைக் கொண்டு நீரை அடித்தார். தண்ணீர் இருபுறமும் பிரிந்துகொள்ள, இருவரும் உலர்ந்த தரைமீது நடந்து நதியைக் கடந்தனர். அவர்கள் அக்கரைக்குச் சென்றவுடன் எலியா எலிசாவை நோக்கி, "உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுமுன் நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்" என்று கேட்டார்.

அதற்கு எலிசா, "உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக!" என்றார். எலியா அவரை நோக்கி, "நீ கேட்பது கடினமான காரியம். உன்னிடமிருந்து நான் எடுத்துக் கொள்ளப்படும் போது, நீ என்னைக் காண்பாயாகில், அது உனக்குக் கிடைக்கும்; இல்லையெனில் கிடைக்காது" என்றார். இவர்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டு வழிநடந்து செல்கையில், இதோ! நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார். எலிசா அதைக் கண்டு, "என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே!" என்று கதறினார். அதற்கு மேல் அவரால் அவரைக் காண முடியவில்லை. எனவே அவர் தம் உடைகளைப் பிடித்து இரண்டாகக் கிழித்துக் கொண்டார்.

மேலும் அவர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எடுத்துக் கொண்டு, திரும்பிச் சென்று யோர்தான் கரையில் நின்றார். பின்பு அவர், "எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்?" என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 31: 19. 20. 23 (பல்லவி: 24)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரை நம்புவோரே, உள்ளத்தில் உறுதி கொண்டிருங்கள்.

19 உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! பல்லவி

20 மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! பல்லவி

23 ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்; ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்; ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6,16-18

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.

நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக் கை செய்வது இடக் கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள், அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

சிந்தனை

நோன்பு, தர்மம், செபம், தன்னை நேசித்தல், பிறரை நேசித்தல், இறைவனை நேசித்தல்.

அன்பு ஆடம்பரம் இல்லாத, வெளிவேடமில்லாத, ஆதாயம் இல்லாததாக இருந்திடல் வேண்டும்.

அன்பு அடக்கம், பணிவு, தாழ்ச்சி கொண்டதாக இருந்திடல் வேண்டும்.

இதுவே இன்றைய நற்செய்தி போதிக்கின்ற அன்பு நெறி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்"

ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். மிகவும் இரக்க குணம் உடையவர். தன் செல்வத்தையெல்லாம் தானே அனுபவிக்காமல், மற்றவர்களுக்கும் கொடுத்தார். அதனால் அவரைத் தேடி தினமும் ஏராளமான ஏழைகள், அவர் இல்லத்திற்கு வந்தனர். இப்படி யார் வந்து உதவி கேட்டாலும் இல்லையென மறுக்காததால், செல்வந்தருடைய புகழ், எல்லா ஊர்களுக்கும் பரவியது. அதே நேரத்தில், தன்னுடைய செல்வங்களை எல்லாம் இழந்து வறுமை நிலைக்கு ஆளானார்.

இந்நிலையில் தன் மனைவி, மக்கள் எல்லாம் மிகவும் வறுமையில் வாடுகின்றனரே, ஏதாவது ஒரு வேலைத் தேடி வறுமையைப் போக்க வேண்டும் என்ற முடிவோடு புறப்பட்டார். அந்த நேரத்தில், அந்நாட்டு மன்னர், மாறு வேடத்தில் நகர் வலம் வந்து கொண்டிருந்தார். மாறுவேடத்தில் வந்த மன்னர், எதிரே வந்து கொண்டிருக்கும் செல்வந்தரைப் பார்த்தார். "ஐயா! நான் இந்த ஊருக்குப் புதியவன், இந்த ஊரில் எனக்கு யாருமே பழக்கமில்லை. தாகம் வாட்டி எடுக்கிறது. குடிக்க தண்ணீர் கிடைத்தால் உதவியாக இருக்கும்!" என்றார் மன்னர்.

"ஐயா! இதே இடத்திலேயே நில்லுங்கள், தண்ணீர் எடுத்து வருகிறேன்" என்று கூறி ஓட்டமெடுத்தார் செல்வந்தர். அருகில் இருந்த ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டார். அவர்கள் மண் குவளை நிறைய தண்ணீர் கொடுத்தனர். அதை வாங்கிக் கொண்டு, மன்னரை நோக்கி ஓடி வந்தார். "ஐயா! வெயிலுக்கு இதமாக மண் குவளைத் தண்ணீர் கிடைத்துள்ளது. வேண்டுமளவுக்கு குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்," என்றார்.  மன்னரும், அந்த தண்ணீரைக் குடித்தார். "ஐயா! தங்களுக்கு இந்த ஊர்தானா, நான் கேட்ட மறுநொடியே தண்ணீர் கொண்டு வந்து விட்டீர்களே!" என்று வியப்புடன் கேட்டார் மன்னர். "ஐயா! நானும் இந்த ஊருக்குப் புதியவன் தான். தங்களுக்கு உதவ நினைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்" என்றார் செல்வந்தர்.

"ஐயா! நீர் யார் பழக்கமில்லாத இந்த ஊருக்கு எப்படி வந்தீர்?" என்று கேட்டார் மன்னர். "ஐயா! என்னுடைய குடும்பம் வறுமையில் வாடுகிறது. ஏதாவது வேலைத் தேடிக் கொள்ள வேண்டும். அதனால்தான் இந்த ஊருக்கு வந்தேன்," என்றார் செல்வந்தர். "முன்பின் அறிமுகம் இல்லாத இந்த ஊரில், நீர் எப்படி வேலை தேடிக்கொள்ள முடியும்," என்று கேட்டார் மன்னர். "என்ன செய்வது. சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் வேலைத் தேட வேண்டுமே!" என்று கவலையுடன் கூறினார் செல்வந்தர். அதைக் கேட்ட மன்னரும், பதில் எதுவும் பேசாமல் அவரோடு சிறிது தூரம் நடந்தார். "ஐயா! நீங்கள் யார்?. இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்? உங்களைப் பற்றி எதுவுமே சொல்லாமல் வருகிறீர்களே!" என்று கேட்டார் செல்வந்தர்.

"நானும் உங்களை மாதிரி வேலை தேடி வந்தேன். வந்த இடத்தில் ஒரு நண்பரை சந்தித்தேன். அந்த நண்பர் என்னை ஒரு இடத்திற்கு வரும்படி கூறினார். நாம் அங்கு சென்றால் நம் இருவருக்குமே வேலை கிடைத்து விடும்" என்று கூறினார். அதைக் கேட்ட செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மன்னர் செல்வந்தரை அழைத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து புறப்பட்டார். இருவரும் நாட்டில் உள்ள தலைநகருக்குள் புகுந்து, அரண்மனையை வந்தடைந்தனர். அரண்மனையைக் கண்ட செல்வந்தர்  வியப்புற்றார். "நண்பரே! நாம் இருவரும் இந்த இடத்திலா வேலை செய்யப் போகிறோம், இந்த இடத்தில் நாம் நுழைய முடியுமா? அப்படி நுழைந்தாலும் நமக்கு வேலை கிடைக்குமா?" என்று சந்தேகத்துடன் கேட்டார் செல்வந்தர். "ஐயா! நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அரண்மனையில் எனக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. நான் எது சொன்னாலும், எல்லாரும் கேட்பர். மந்திரி, ராணி, தளபதி, அமைச்சர்கள், காவலர்கள் எல்லாருமே என் கட்டளைக்கு கீழ் படிந்துதான் நடப்பர். எனவே, உங்களுக்கு இங்கே வேலை கிடைப்பது உறுதி" என்று கூறினார் மன்னர்.

"அரண்மனையில் உமக்கு இந்த அளவுக்கு செல்வாக்கு இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. நீர் யார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாகயிருக்கிறேன்," என்றார் செல்வந்தர். "ஐயா! அவசரப்படாதீர்! நாம் இருவரும் அரண்மனையின் உள்ளே செல்வோம். அங்கு சென்றதும் நான் யார் என்பதை உமக்குத் தெரியப்படுத்துகிறேன்," என்று கூறினார் மன்னர். இருவரும் அரண்மனையின் உள்ளே நுழைந்தனர். வாயிற்காவலர்களின் முன்னே தன்னுடைய மாறு வேடத்தைக் கலைத்தார் மன்னர். வாயிற் காவலர்கள் மன்னரை வணங்கியபடி வழி விட்டனர். அக்காட்சியைக் கண்டதும் திடுக்கிட்டார் செல்வந்தர் "அரசே! என்னோடு வந்தது நீங்கள்தானா?. நான் உங்களோடு சேர்ந்து வருவதற்கு எந்தத் தகுதியும் இல்லையே, தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்" என்றார் செல்வந்தர். " ஐயா! நீர் என்னை விடவும் தகுதி மிக்கவர் என்பதை நான் அறிந்தேன். அதனால்தான் உம்மை அரண்மனைக்கு அழைத்து வந்தேன்," என்று கூறினார். அதைக் கேட்டு குழப்பமடைந்தார் செல்வந்தர்.

"ஐயா! நீர் தண்ணீர் வாங்கச் சென்றபோது, நானும் உம்மைப் பின் தொடர்ந்து வந்தேன். அந்த வீட்டுக்காரர், உம்மைப் பார்த்ததும், 'நீர் செல்வந்தர் சுந்தரேசன் தானே' என்று சொல்லி உம் காலில் விழுந்து வணங்கினார். நீர் செய்த உதவியால்தான் இன்று கவலையின்று வாழ்வதாகவும் கூறினார். உம்மை அவர் விருந்துக்கு அழைக்க, நீரோ அடக்கத்துடன் குவளைத் தண்ணீரை வாங்கியபடி வந்து விட்டீர், உம் தான தர்மங்கள் பற்றிய பெருமைகளை என்னிடம் வாய் திறக்கவே இல்லை. அப்போதே உம்மை அரண்மனைக்கு அழைத்து வந்து சிறப்புச் செய்ய நினைத்தேன். ஆனால், உமது வறுமை நிலையைப் பார்த்த வேளையில், நிரந்தரமாகவே உதவி செய்ய முடிவு செய்தேன்.  அதன் காரணமாகவே அரண்மனைக்கு அழைத்து வந்தேன். இனி உமக்கு எந்த குறையும் ஏற்படாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார் அரசர். கண்ணீர் பெருக்கோடு மன்னருக்கு நன்றி கூறினார் செல்வந்தர்.

கைம்மாறு கருதாமல், வலக்கை செய்வது இடக் கைக்குத் தெரியாத அளவில் செய்யப்படுகின்ற உதவிக்கு இறைவன் எப்போதும் தகுந்த மதிப்பளிப்பார் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு.


நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நீங்கள் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். மாறாக நீங்கள் தர்மம் செய்யும்போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்" என்கின்றார். ஆகவே எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தர்மம் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
வெளிவேடத்தனமில்லா வாழ்வு வாழ்வோம்

ஒரு நகரில் வயதான பெண்மணி ஒருத்தி இருந்தாள். அவள் அந்நகரில் செயல்பட்டு வந்த ஒரு சமூக நிறுவனத்திற்கு தன்னுடைய பெரும்பாலான தொகையைத் தானமாகக் கொடுத்திருந்தாள். ஆனாலும் அதையெல்லாம் வெளியே காட்டிக்கொள்ளாமல், அந்த அமைப்பில் மாலைநேரத்தில் நடக்கும் கூட்டத்திற்கு தவறாது சென்று, வாசல் அருகே நின்றுகொண்டு, உள்ளே போவோர், வருவோரையெல்லாம் இன்முகத்தோடு வரவேற்று வந்தாள்.

ஒருநாள் அந்த சமூக அமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நகரில் முக்கியமான பிரமுகராக இருந்தவர் ஒருவர் அங்கே வந்திருந்தார். அங்கே இருந்தவர்கள் வந்தவரை எல்லா இடத்திற்கும் அழைத்துச் சென்று, சுற்றிக்காட்டினார்கள். அப்போது வாசல் பக்கம் நின்றுக்கொண்டிருந்த அந்த பெண்மணியைக் கவனித்த அவர், "நீங்கள் இந்த அமைப்பில் எல்லா வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த பெண்மணி, தான் இவ்வளவு பணம் தானமாக கொடுத்திறேன் என்று எல்லாம் சொல்லாமல், தான் இங்கே வருவோர் போவோரையெல்லாம் இன்முகத்தோடு வரவேற்றுக் கொண்டிருப்பதாகப் பதில் கூறினார்.

அந்த வயதான பெண்மணியின் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போன அவர், "எல்லாரும் இந்த பணியை இன்முகத்தோடு செய்யமாட்டார்கள். நிறையப்பேர் முகத்தை கீழே போட்டுக்கொண்டுதான் வரவேற்பார்கள். ஆனால் நீங்கள் அப்படியல்ல, எல்லாரையும் இன்முகத்தோடு வரவேற்கிறீர்கள். உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

நாம் செய்யக்கூடிய சேவையை விளம்பரத்திற்காகச் செய்யாமல், மறைவாகச் செய்யவேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நாம் செய்யும் எந்தவொரு செயலையும் மக்கள் பாராட்டவேண்டும் என்ற வெளிவேடத்தனத்தோடு செய்யாமல், உள்ளார்ந்த விதத்தில் செய்யவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார்.

யூதர்களின் சமய வாழ்வில் மூன்று முக்கியமான தூண்களாகக் கருதப்பட்ட அறச்செயல்கள் அல்லது தர்மம், ஜெபம், நோன்பு ஆகியவற்றைக் குறித்துப் பேசும் இயேசு அவற்றை மறைவாகச் செய்யவேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறார்.

பெரும்பாலான நேரங்களில் நமது வாழ்வில் நாம் செய்யும் தர்மம், ஜெபம், நோன்பு இவற்றை விளம்பரப்படுத்தி அதிலிருந்து ஆதாயம் தேடப் பார்க்கின்றோம். யூதர்கள் அப்படி நடந்துகொண்டார்கள். அதனால்தான் இயேசு அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறார். லூக்கா நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்லும் "பரிசேயர் - வரிதண்டுபவன்" உவமையில் (லூக் 18: 9-14) பரிசேயன் கடவுளுக்கு முன்பாக தான் செய்ததையெல்லாம் தம்பட்டம் அடித்து ஜெபித்துக்கொண்டிருக்கிறான். அதனால்தான் என்னவோ இறைவன் அவனுடைய ஜெபத்திற்கு செவிசாய்க்காமல் போகிறார்.

ஆக, நாம் செய்யும் எந்த செயலாக இருந்தாலும் அது அறச் செயலாகவோ அல்லது ஆன்மீகச் செயலாகவோ இருந்தாலும் நாம் தம்பட்டம் அடிக்காமல், செய்வதை விளம்பரப்படுத்தாமல் செய்யவேண்டும் என்பதே இயேசு கூறவிரும்பும் செய்தியாக இருக்கின்றது.

நாம் செய்யும் ஜெபம் நம்மைக் கடவுளோடும், நாம் ஆற்றும் அறச்செயல்கள் நம்மை சக மனிதர்களோடும், நாம் புரியும் நோன்பு நம்மை நம்மோடும் இணைக்க வல்லது. ஆகவே நாம் இத்தகைய செயல்களை மறைவாய் செய்வது கூடுதலாகப் பலனளிக்கக்கூடியது.

திருவள்ளுவர் கூறுவார், "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது (அதிகாரம்: செய்ந்நன்றியறிதல் குறள் எண்:103). அதாவது இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல்/ கைம்மாறு கருதாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும். நாம் பிரதிபலன் பாராமல் செய்யும் உதவிக்கு கடலளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை வள்ளுவர் மிக அழகாக எடுத்துரைக்கிறார். ஆண்டவர் இயேசுவும் மறைவாய் செய்யப்படும் உதவிக்கு ஜெபத்திற்கு, நோன்பிற்கு அதற்கேற்ற கைம்மாறு அளிப்பார் என்கிறார்.

எனவே, நாம் செய்யும் அறப்பணியை, ஆன்மீகப் பணியை கைம்மாறு கருதாமல் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
பக்தி முயற்சிகள்

நோன்பு என்பது உன்னதமான ஒன்று. கடவுளோடு இணைந்திருக்க நம்மையே அடக்கி ஆள்வதற்கு உந்துசக்தியாக இருக்கிறது. நோன்பு என்பது பக்தியின் அடையாளம். அது வெளிவேடமாக, பக்தியின் பெயரால் நடத்தப்படும் நாடகமாக்கப்படுவதை இன்றைய நற்செய்தியில் இயேசு கண்டிக்கிறார். ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாளன்று, அனைத்து யூதர்களும் நோன்பிருக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இது தவிர, சில பாரம்பரிய யூதர்கள் வாரத்திற்கு இரண்டுமுறை, திங்களும், வியாழனும் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும்தான் சந்தை கூடும் நாள். எனவே, கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் யெருசலேமுக்கு மக்கள் அனைவரும் கூடும் நாட்கள், இந்த இரண்டு நாட்களாகும். பக்தியின் பெயரால் பகல் வேடம் போடும், ஒரு சில யூதர்கள் இந்த நாட்களை தங்களின் பக்தியை தம்பட்டம் அடிப்பதற்கு இந்த நாட்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். மற்றவர்கள் முன்னிலையில் தாங்கள் நோன்பிருக்கக்கூடியவர்கள் என்பதையும், அதனால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் பெருமைப்பாராட்டிக்கொண்டனர்.

தாங்கள் நோன்பிருப்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, தங்களது தலைமுடியை சீவாமல் வாட்டமாக முகத்தை வைத்துக்கொண்டனர். அழுக்கடைந்த ஆடைகளை உடுத்தினர். தாங்கள் சோகமாக இருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ள முகத்தில் வெள்ளை வண்ணம் பூசிக்கொண்டனர். இது அப்பட்டமான பக்தியின் வெளிவேடம். நோன்பு என்பது ஒறுத்தல் முயற்சி. தற்பெருமைக்காக அல்ல, மாறாக, உணர்வுகளை அடக்கி ஆளவும், அதன் வழியாக கடவுளோடு நெருங்கி வரவும்தான். தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும், தங்களை முன்னிறுத்தவும், தங்களை பெருமைப்பாராட்டிக்கொள்ளவும் செய்கின்ற அனைத்துமே, அது வெளிப்புறத்தில் மக்களால் பாராட்டப்பட்டாலும், கடவுள் முன்னிலையில் அருவருக்கத்தக்கவை.

இன்றைய நவீன உலகில், ஒவ்வொருவருமே தங்களது பெருமைபாராட்டுகின்ற செயல்பாடுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆண்டவரின் மகிமையைப் பறைசாற்றவும், கடவுளோடு நெருங்கி வரவும் நாம் எடுக்கும் முயற்சிகள் மிகவும் சொற்பமாக இருக்கின்றன. கடவுளைப் புகழ்ந்தேத்துவதும், அவரோடு நெருங்கிவரவும், நமது பக்தி முயற்சிகள் உதவியாக இருக்கட்டும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!